ஒரு மிதிவண்டியின் பயணம் - 11. புனர் ஜென்மம்

முந்தைய பகுதிகளை படிக்க...

முன்னுரை

11. புனர் ஜென்மம்


இன்று


மறுசுழற்சி செய்த இரும்பில் இருந்து தயாரிக்கப்பட்ட குழாய்கள் வளைக்கப்பட்டு வெல்டிங் மூலம் இணைக்கப்பட்டு,  அதில் ஒரு சில துளைகளும் இடப்பட்ட பின் இறுதியாக ஒரு பெரிய இரும்பு பலகையும் என் நடுவே வைக்கப்பட்டது. அப்பலகை, துளைகளின் வழியே போல்ட் மற்றும் நட்டுகள் துணைக் கொண்டு என்னுடன் இணைக்கப்பட்டு எனது இறுதி வடிவம் சரிபார்க்கப் பட்டது. அவ்வடிவம் என்னவென்று நான் உணரும் முன்னே மீண்டும் அப்பலகை என்னிடமிருந்து கழட்டப்பட்டு என் அருகே வைக்கப்பட்டது. அதுவும் என்னுடன் இணைந்த ஒரு அங்கம் தான் என நான் புரிந்துக் கொண்டேன் எல்லாம் நல்லபடியாக முடிந்ததும் இறுதியாக வண்ணம் பூசும் அறைக்கு (Painting workshop) எடுத்துச் செல்லப்பட்டேன். 


எனது இறுதி வடிவத்தின் மீது முதலில் சிவப்பு நிறமும் (Red oxide), அது நன்றாக காய்ந்த பின் அழகிய வெள்ளை நிறமும் பூசப்பட்டது. இவ்வளவு நாள் பல வகைகளில் துன்பப்பட்ட என் மனதிற்கு அந்த வெளிர் நிறம் ஒரு அமைதியை தந்தது போல தோன்றியது. இவ்வாறு எண்ணிலடங்கா பல இன்னல்களை தாங்கி, பல கட்ட செயல்முறைகளை கடந்த பின் பாலிதீன் கவர்களால் பேக்கிங் செய்யப்பட்டு ஒரு கிடங்கில் (Warehouse) வைக்கப்பட்டேன். 


என்னதான் நான் புதிய வடிவமும் நிறமும் பெற்றாலும், என் மேல் சுற்றிய அந்த பாலிதீன் கவர்கள் எனது உருவத்தை நான் முழுவதாக அறிந்துக் கொள்ள தடையாய் இருந்தது. தடையாய் இருந்தது மட்டுமல்லாமல் இறுக சுற்றிய அதனால் எனக்கு லேசாக மூச்சு முட்டவும் ஆரம்பித்தது.      


இப்போதெல்லாம் எனக்கு பழைய நினைவுகள் ஏதும் இல்லை. நான் யார்?, எனது புதிய வடிவம் என்ன? எதற்கு  பயன் பட போகிறேன்? என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தேன். அக்கிடங்கில் அவ்வப்போது சிலர் வந்து என்னை பார்த்து சென்றனர். அவர்கள் கூறிய அந்த எண் தான் எனது விலை என தெரிந்து கொண்டேன். தாங்கள் வாழும் குறுகிய வாழ்வில், இப்படி பூமியில் உள்ள பொருட்களுக்கு எல்லாம் விலை வைக்கும் மனிதர்களின் சுபாவம் கண்டு எனக்குள் நானே சிரித்துக் கொண்டேன்.   


சில நாட்களுக்கு பிறகு ஒருநாள் ஒரு பெரிய வண்டி வந்தது. அதில் நானும் என்னை போன்றே என்னுடன் தயாரான பலரும் ஏற்றப்பட்டோம். நாங்கள் அலுங்காமல் குலுங்காமல் பல தெருக்களின் வழியே பயணித்தோம். அந்த இடங்கள் எல்லாம் எனக்கு ஏற்கனவே பரிச்சியமானது போல் ஒரு உணர்வு எழுந்தது. சுமார் ஒருமணி நேர பயணத்திற்கு பின் இறுதியாக ஒரு கட்டிடத்தை அடைந்தோம். அங்குள்ள ஒரு பெரிய அறையில் இறக்கப்பட்டு என்னை சுற்றியிருந்த கவர்கள் எல்லாம் பிரிக்கப்பட்டு, என்மேல் ஒரு மெத்தையும் அதன்மேல் ஒரு போர்வையும் போர்த்தப்பட்ட பின்பே எனது புதிய அவதாரத்தை நான் உணர்ந்துகொண்டேன். 


ஆம்! சென்ற பிறவியில் ஊரெல்லாம் ஓடி ஓடி உழைத்த நான் இப்பிறவியில் ஒரே இடத்தில் நிலை கொண்டிருக்கும் ஒரு கட்டிலாகி போனேன். அதுவும் பல்லாயிரகணக்கான மக்கள் வந்து செல்லும் அரசு மருத்துவமனையில் ஒரு தீவிர சிகிச்சை பிரிவில் பள்ளி கொள்ள எனக்கு இடம் கிடைத்தது. எனது பழைய நினைவுகள் ஏதும் இல்லாததால் எனக்கு நானே புதிதாய் உணர்ந்தேன். நான் யார்? எதற்காக அங்கே இருக்கிறேன் என்றெல்லாம் ஒவ்வொன்றாக புரிய ஆரம்பித்தது. நோய்வாய்ப்பட்டும், உடலில் பல காயங்களோடும் போராடும் நோயாளிகள் பலரை தாங்கி அவர்களுக்கு பணிவிடை செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.  


முதலில் சில நாட்கள் அந்நோயாளிகளின் வலிகளையும், நோயாளிகளுடன் உடன் வரும் உறவினர்களின் கண்ணீரையும் கண்டு அவ்வப்போது மனம் இளகினேன். என் மேல் வைக்கப்பட்ட பலர் நன்றாக தேறி பிழைத்து கொண்டபோது மகிழ்ந்த நான், சிலர் சிகிச்சை பயனின்றி மரணத்தை தழுவிய போது வருந்தினேன். பிறகு நாட்கள் செல்ல செல்ல அதுவே எனக்கு பழகிவிட்டதால் ஒரு சிறு சலனமும் இல்லாமல் அவற்றை எதிர் கொள்ள ஆரம்பித்தேன். நாளடைவில் எதை பற்றியும் கவலை கொள்ளாமல், எவரது துக்கத்தையும் பொருட்படுத்தாமல், மொத்தத்தில் அவர்கள் யார் என கூட கண்டுகொள்ளாமல் மகிழ்வுடன் அந்த சேவையை செவ்வனே செய்து வந்தேன்.  


என்னதான் சேவை மனப்பான்மையோடு இப்பணியை நான் ஆரம்பித்தாலும், சில நாட்களுக்கு பிறகு என் இதயம் மரத்துப் போனதை போல உணர்ந்தேன் இப்போதெல்லாம் நோயாளிகளின் வலிகள், முணுவல்கள், அழுகை என எதையும் நான் பொருட்படுத்துவதில்லை. எவரது மகிழ்ச்சியும், துயரமும் என்னை வாட்டுவதில்லை. மொத்தத்தில் காலப்போக்கில் என்னைப் போலவே, என்னுள் உள்ள மனமும் இரும்பாகி போனதை உணர்ந்தேன். "என்னதான் இருந்தாலும் இவ்வுலகில் நானும் ஒரு ஜடப்பொருள் தானே… " என என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன். அப்படியே ஆண்டுகள் சில உருண்டோட ஆரம்பித்தது.


ஏற்கனவே பலமுறை உருகி, மருகி, இறுதியாய் இறுகிப் போன எனது மனதை மீண்டும் ஒருமுறை கரைக்கும் அந்த நாளும் வந்தது.    



இறுதிப் பகுதியை படிக்க...



Comments