முந்தைய பகுதிகளை படிக்க...
முன்னுரை
8. தொலைந்த இதயம்
இன்று
நான் இளைப்பாறி முடித்ததும், ஒருவழியாக அந்த அச்சில் இருந்து வெளியே வந்தேன். அங்கிருந்த ஒருவன் எனது புதிய உருவத்தையும், உறுதியையும் தர பரிசோதனை செய்தான். அவனது அனுமதி கிடைத்ததும் என்னையும் என்னுடன் உருவான அனைவரையும் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி வைத்தனர். இப்போது தான் நான் எனது புதிய உருவத்தை காண்கிறேன். ஆ! இது என்ன!? வெறும் இரும்பு குழாயை போல அல்லவா இருக்கிறேன்? இது எனது இறுதி உருவமாக இருக்க இயலாதே? இந்த இரும்பு குழாயை கொண்டு என்ன செய்வார்கள்? என நான் எண்ணிக் கொண்டிருக்கும் போதே எனது மனக்கண்ணில் ஒரு திரைக்கு பின்னால் ஒரு மிதிவண்டியின் உருவம் தோன்றியதன் காரணம் எனக்கு புரியவில்லை. அதுவே எனது பூர்வஜென்மம் என்பதையும் நான் அறியவில்லை.
உலகிலேயே மிகவும் ஒரு கொடுமையான விஷயம் எதுவென்றால், தான் யார்? என்றே தெரியாமலும், எதற்காக இவ்வுலகிற்கு வந்தோம்? என அறியாமலும் இருப்பது தான். பெரும்பாலான மனிதர்கள் இப்படித்தான் உள்ளனர். தான் எதற்காக பிறந்திருக்கிறோம் என அறியாமலே, தனது வாழ்வு சிறக்கும்படியான எந்த ஒரு சிறு செயலையும் செய்யாமலே ஏதோ கடமைக்கு இவ்வுலகில் தோன்றி, வாழ்ந்து மறைந்து விடுகின்றனர். ஆனால் நான் அப்படி அல்ல… எனது இந்த பிறவிக்கு நிச்சயம் ஒரு காரணம் இருக்கும் என எண்ணினேன். எவ்வடிவம் எடுத்தாலும் மீண்டும் இவ்வுலகில் எனது பணியை தொடர்ந்து செய்ய வேண்டும் என உறுதி கொண்டேன்.
அன்று
இன்று ஞாயிற்றுக் கிழமை. வழக்கம்போல் எனக்கு ஓய்வு தந்து விட்டு TVS50யுடன் குடும்பத்தோடு கடற்கரைக்கு புறப்பட்டனர். அவர்கள் சென்று வெகுநேரம் ஆனதால் நானும் சற்று ஓய்வெடுத்தபடியே அவர்களின் வரவை எதிர்நோக்கி காத்திருந்தேன். ஆனால் வழக்கத்தை விட அதிக நேரம் ஆகியும் அவர்கள் வீட்டிற்கு திரும்பாதது எனக்கு ஆச்சர்யம் அளித்தது. கிட்டத்தட்ட இரவும் நெருங்கிவிட்டது. மறுதினம் வேலைநாள் அல்லவா? இவ்வளவு தாமதமாக வந்தால் எப்படி அவன் தூங்கி எழுவான்? வழக்கமாக இப்படி நடக்காதே? ஒருவேளை அந்த சக்களத்தியின் சதியால் விபத்து ஏதும் ஏற்பட்டு விட்டதோ? ஐயையோ! அவர்களுக்கு என்ன ஆயிற்றோ? என்றெல்லாம் எனது மனம் பதைபதைக்க ஆரம்பித்தது. உடனடியாக அந்த கடற்கரை வரை ஓடிச் சென்று பார்க்க வேண்டும் என தோன்றியது.
இப்படியெல்லாம் நான் தவியாய் தவித்திருந்த போது தான் அதோ, தூரத்தில் அவர்கள் வரும் ஓசை கேட்டது. தவித்த என் மனதில் ஒரு அமைதி திரும்பியது போல் தோன்றியது. ஆனால் என்ன இது? டிவிஎஸ்50ல் சென்ற அவர்கள் ஏன் நடந்து வருகின்றனர்? என்ன ஆயிற்று என் சக்களத்திக்கு? வழியில் பழுதானதால் அதை எங்கேயும் நிறுத்திவிட்டு இவர்கள் மட்டும் வந்துவிட்டனரா? அது சரி! அவள் எப்படி போனால் எனக்கென்ன? என் நண்பனின் குடும்பம்தான் பத்திரமாக வீடு திரும்பி விட்டதே! இறைவனுக்கு நன்றி! என்றெல்லாம் நான் எண்ணிக் கொண்டிருக்கும் போதே அவர்கள் என்னை கடந்து வீட்டிற்குள் அமைதியாக நுழைந்தனர்.
என்ன ஆயிற்று அவனுக்கு? எப்போதும் கடற்கரையில் இருந்து திரும்பும் போது அவனுடன் வரும் உற்சாகம் எங்கே? ஏன் இப்படி அவன் முகம் வெளிறி போயிருக்கிறது? என்ன பிரச்சனை இவனுக்கு? என்றெல்லாம் எண்ணியபடியே, அவர்கள் தூங்க சென்ற அந்த இரவில் நான் மட்டும் தூங்காமல் சிந்தனை செய்து கொண்டிருந்தேன்.
இரவில் துவங்கிய எனது அந்த சிந்தனை விடிந்த பின்னும் தொடர்ந்தாலும், எனது மனதில் எழுந்த வினாக்களுக்கு விடை ஏதும் கிடைக்கவில்லை. விடிந்ததும் விடியாததுமாக பரபரப்பாய் அவன் என்னை நோக்கி வரும் போதே, அவனும் என்னைப் போலவே இரவு முழுதும் உறங்கவில்லை என்ற உண்மையை உணர்ந்தேன். அவன் வேலைக்கு செல்லும் நேரம் வரவில்லை. அவனது அந்த தோற்றமும் வேலைக்கு புறப்பட்டது போல தோன்றவில்லை. எதற்காக இப்படி அவசர அவசரமாய் வருகிறான் என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதே என்னை எடுத்து ஓட்ட ஆரம்பித்தான்.
அந்த அதிகாலை நேரத்தில் எதை நோக்கி பயணிக்கிறோம் என்று எனக்கு புரியாவிட்டாலும், விடிந்ததும் விடியாததுமாக அவன் என்னை நோக்கி வந்ததே எனக்கு ஒரு உற்சாகத்தை தந்தது. எனது சக்கரங்கள் வேகமாக சுழல ஆரம்பித்தது. சந்தோச வானில் மீண்டும் சிறகடித்து பறப்பது போல் தோன்றியது. அந்த வேகத்திற்கும் உற்சாகத்திற்கும் திடீரென தடை போட்டது போல் அதிர்ச்சி தந்தது, அவன் என்னை அழைத்துச் சென்ற அந்த இடம். ஆம்! நாங்கள் சென்றது இடம் அருகிலுள்ள காவல் நிலையம்.
இப்போது தான் எனக்கு எல்லாம் புரிந்தது. ஆம்! முன்தினம் அவர்கள் கடற்கரைக்கு எடுத்துச் சென்ற அந்த டிவிஎஸ் 50 களவு போனதால் புகாரளிக்கவே நாங்கள் காவல் நிலையத்திற்கு வந்துள்ளோம் என்ற உண்மையை அறிந்தேன். அந்த செய்தியை கேள்விப்பட்டதும் முதலில் நான் சந்தோஷத்தில் திக்குமுக்காடி போனேன். இனி அந்த சக்களத்தி எங்கள் வாழ்வில் இல்லை என்ற செய்தி என் காதில் தேனாக பாய ஆரம்பித்தது. மகிழ்ச்சியில் ஆனந்த கூத்தாடினேன். ஆனால் அதன்பின் அதற்காக வருத்தப்படவும் செய்தேன்.
ஆம்! என் எண்ணம் தவறல்லவா? என்ன இருந்த போதும் அது என் சகோதரி கொண்டு வந்த சீதனமல்லவா? அது வந்த பின்பும் எனக்கான இடம் அந்த வீட்டில் இருந்ததே… அப்படி என்றால் நானும் அதை எனது நண்பணாகத்தானே எண்ணியிருக்க வேண்டும்? அது வந்த பின்பு தானே உழைத்து ஓடாய் தேய்ந்து கொண்டிருந்த எனக்கு ஓரளவு ஓய்வு கிடைக்க ஆரம்பித்தது. இன்னும் சொல்லப் போனால் நான் தற்போது இருக்கும் நிலையில் அந்த டிவிஎஸ் 50யை போல் அவர்களின் மொத்த குடும்பத்தையும் சுமந்து ஓட இயலுமா? என்றெல்லாம் ஒரு போராட்டம் என் மனதில் வெடித்தது. ஆனால் எனது அந்த மனப் போராட்டத்தை விட மிகப்பெரிய ஒரு போராட்டம் அவனது வாழ்வில் வெடித்ததை அப்போது நான் அறியவில்லை.
மனித மனம் மிகவும் விசித்திரமானது. அது இன்பம் வரும் வேளையில் அனைவரையும் அரவணைத்து உறவு கொண்டாட வைக்கும் ஆனால் துன்பம் வரும் நேரத்தில் பிறர் மீது பழிச் சொல்லி அவர்களிடையே பிரிவினையை உண்டாக்கும் என்ற உண்மையை நான் உணர்ந்தேன். ஆம்! அவனுடன் இன்பமாய் கடற்கரைக்குச் சென்ற அவள், அவனது அஜாக்கிரதையின் காரணமாக பூட்டாமல் விட்டதால் தான் அந்த டிவிஎஸ் 50 தொலைந்ததாக குற்றம் சொல்ல ஆரம்பித்தாள்.
அவளின் அப்பா தந்த அன்பு பரிசு என்பதால் அதன் இழப்பை அவளால் தாங்க முடியவில்லை என்பது அவளின் வார்த்தைகளில் இருந்து எனக்கு புரிந்தாலும், அவன் அப்படிப்பட்டவன் அல்லவே? எங்கேயும் எப்போதும் சற்று எச்சரிக்கையாய் இருப்பவன் ஆயிற்றே? ஒருபோதும் என்னை அவன் பூட்டாமல் சென்றதில்லையே? பிறகெப்படி அவ்வாறு நடந்திருக்கும்? என என் மனதை போட்டு குழப்பிக் கொண்டேன். என் நண்பனின் மனம் என்னை விட அதிகமாய் குழம்பி இருந்ததையும் அப்போது நான் உணரவில்லை.
அதனால் ஏற்படப்போகும் விபரீத விளைவுகளையும் அப்போது நான் அறியவில்லை.
Comments
Post a Comment