ஒரு மிதிவண்டியின் பயணம் - 5. அன்பு சகோதரி

முந்தைய பகுதிகளை படிக்க...

முன்னுரை

5. அன்பு சகோதரி 


இன்று


உரு தெரியாமல் எங்களை அரைத்து தூள் தூளாக்கிய பின் காந்தத்தின் துணை கொண்டு மீண்டும் ஒருமுறை இரும்பு அல்லாத பொருட்கள் எல்லாம் பிரிந்தெடுக்கப்பட்டன. அவர்களுக்கு தேவையற்ற கழிவுகளை நீக்கிய பின், சிறிது நேரம் ஓய்வு கிடைத்தது போல் தோன்றியது. நானும் ஒருவழியாக என்னை இளைப்பாறத்தான் விட்டனர் என எண்ணி அமைதி கொண்டேன், அதுவரை நடந்ததெல்லாம் எனது தகனத்திற்கு முன்பான இறுதி சடங்குகள் என்பதை அறியாமல்…        


இறந்த மனித உடலுக்கு இறுதிச்சடங்குகள் செய்த பின், அதை  சிதையிலிட்டு, தகனம் செய்து, அதை முற்றிலும் அழித்து இவ்வுலகில் இருந்து நீக்குவதைப் போல எனக்கும்  அந்த நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது. ஆம்! கிட்டதட்ட 1600 டிகிரி சென்டிகிரேடுக்கும் அதிகமான வெப்பத்துடன் கொதிக்கும் அந்த உலையில் போடப்பட்டேன். எனது மூலக்கூறில் கலந்துள்ள அணுக்கள் ஒவ்வொன்றாக பிரிய ஆரம்பித்தன. நான் மட்டுமல்ல… என்னை போன்றே அந்த உலையில் போடப்பட்ட அனைவரும் உருக ஆரம்பித்தோம். ஏற்கனவே உடைத்ததும், தூளாக்கியதும் போக இறுதியாய் எஞ்சியிருந்த எங்களின் சுய உருவை மெல்ல மெல்ல இழக்க ஆரம்பித்தோம். நானும் மற்ற பொருட்களும் உருகி, ஒன்றோடு ஒன்றாய் கலந்து, ஒரே இரும்பு குழம்பாகி தனித்து பிரிக்க முடியாதபடி கலந்தோம், மனித மனங்களில் தோன்றும் காதலைப் போலவே…   


ஆனால் இது என்ன? எனது மரணத்தை பற்றி எண்ணாமல், இப்போது ஏன் அந்த நினைவுகள் எல்லாம் ஏன் இப்போது நினைவுக்கு வருகின்றது? இது எனது இறுதி நொடிகள் என்பதாலா? இந்த உலகை, அதில் அவனை, அவனை விட அதிகமாய் என்னிடம் அன்பு செலுத்திய அவளை இனி காணப் போவதில்லை என்பதாலா?  இனி எப்போதும் அதை உணர நான் உயிரோடு இருக்கப் போவதில்லை என்பதாலா? 


உயிர் பிரிந்தாலும் ஆன்மாவில் கலந்த உணர்வுகள் பிரியாது. நிஜம் தொலைந்தாலும் மனதில் இருக்கும் நினைவுகள் மறையாது என்பது போல் அந்த இறுதி தருணத்திலும், என் மேல் அவர்கள் செலுத்திய அன்பு என் நெஞ்சில் நிழலாடியபடியே இருந்தது.  


அன்று


அவரவர் செய்த பாவத்திற்கு அவரவர்தானே பரிகாரம் தேட வேண்டும் என்பது போல் டயரை வெடிக்கச் செய்த  எனது தவறை நானே உணரும் தருணமும் வந்தது. ஆம்! வெண்ணை திரண்டுவரும் நேரத்தில் உடைந்த தாழியை போல முதன்முறை தனது காதலியை ஏற்றி ஆசை ஆசையாய் சென்ற கனவு பயணத்தில் எதிர்பாராமல் நான் செய்த அந்த துரோகத்தால் அவன் திகைத்துப் போனான். ஏமாற்றமும் கோபமும் ஒன்று சேர, விரக்தியின் காரணமாக அவன் வாயில் இருந்து அந்த கொடூர வார்த்தைகள் வெளிப்பட்டு எனது நெஞ்சை பிளந்தது.


“சனியன் பிடித்த சைக்கிள். இன்னிக்கு தான் இப்படி ஆகணுமா?” அவனது வார்த்தைகளை கேட்ட நான் அதிர்ந்து போனேன்.


“இப்ப என்ன பண்றது?” இது அவள். 


“வேற என்ன பன்றது? இன்னிக்கு ஞாயிற்றுக் கிழமை வேற… ஒரு கடையும் இருக்காது. தள்ளிட்டுதான் போகணும். உனக்கு நேரம் ஆச்சா?”


“அப்படியெல்லாம் இல்ல… கொஞ்ச தூரம் தானே? அப்படியே பேசிக்கிட்டே போகலாம்” 


நான் ஏற்படுத்திய சங்கடத்தை நல்வாய்ப்பாக மாற்றிய அவளின் நேர்மறை எண்ணம் எனக்கு ஆச்சர்யம் அளித்தது. மேற்கொண்டு என்னை ஓட்ட முடியாததால் தள்ளிக் கொண்டே சென்றனர்.   

 

முதலில் மெதுவாக அவன்தான் பேச்சை ஆரம்பித்தான். அவனின் பேச்சில் காதல் ரசம் அதிகம் இருந்தது கண்டு எனது மனதின் ரணம் அதிகமானது. ஆனால் அவளது பேச்சிலோ அவளின் ஆசைகள், கனவுகள், எதிர்காலம் என அனைத்தும் கலந்து ஒரு தெளிவு இருந்தது. என்னதான் என் காதில் இவை அனைத்தும் விழுந்தாலும் நாகரிகம் கருதி, அவர்களின் அந்த அந்தரங்க உரையாடலை அப்படியே உங்களிடம் கூற இயலவில்லை என்பதால் இக்கதையை படிக்கும் உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன்.


பிறகு அவர்கள் பேச்சு பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்து, இறுதியாக என்னை நோக்கி வந்தது. அவர்களின் இந்த உரையாடலுக்கு நானும் ஒரு காரணம் அல்லவா? எனவே அதை மட்டும் சற்று கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன்.   


“ஏற்கனவே பழைய சைக்கிள். இப்போ இன்னும் பழசாயிடுச்சி. நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் இத மாத்திடனும்” என்றான் அவன்.   


எனக்கு பலத்த அதிர்ச்சி. “அடப்பாவி” என நான் வாயெடுப்பதற்குள்… 


“புது வண்டி வந்தாலும் இத பத்திரமா வெச்சுக்கணும்” என்றாள் அவள்.


சற்றே ஆச்சர்யத்துடன் நான். 


“ஆமா, இந்த சைக்கிள் தானே நம்மள சேர்த்து வெச்சது. புதுசா எந்த வண்டி வாங்கினாலும் கடைசி வரை இந்த சைக்கிள ஒரு ஓரமா வெச்சுக்கலாம்” என அவள் கூறிய வார்த்தைகள் என் நெஞ்சில் பாலை வார்த்தது.


டயர் வெடித்த பின்னும் என்னை பற்றி சிறிதும் கவலை படாமல் தங்களுக்குள் காதல் பேசிக்கொண்டே தள்ளிச் சென்ற அவர்களின் செயல் முதலில் எனக்கு பிடிக்கவில்லை என்றபோதும் அவளின் நெஞ்சின் ஓரம் என் மீது இருந்த சிறிய அக்கறை என்னை நெகிழ செய்தது. அவன் எனது நண்பன் என்றால் நண்பனின் காதலி எனக்கு சகோதரி அல்லவா? அவளின் அன்பும், அக்கறையும் நான் அவர்களுக்கு செய்த துரோகத்தை எண்ணி என்னை நாணச் செய்தது. இனி அவனுக்காக இல்லாவிட்டாலும் அவளுக்காகவாவது நான் தொடர்ந்து ஓடத்தான் வேண்டும். அவர்களின் எதிர்கால குடும்பத்தில் நானும் ஒரு அங்கமாக விளங்க வேண்டும். எனது பணியை செவ்வனே செய்ய வேண்டும் என்றெல்லாம் உறுதி பூண்டேன். 


எதிர்வரப் போகும் சோதனைகளை அறியாததால்…


அடுத்த பகுதியை படிக்க...

Comments

  1. ஏனோ இதயம் கனக்கிறது.உயிரற்ற பொருளே ஆயினும், உங்கள் எழுத்துக்களால் உயிர் பெற்றுருக்கிறது மிதிவண்டி

    ReplyDelete

Post a Comment