வாசிமலை பயணம்

வாசிமலை


    பயணங்கள் எப்போதுமே மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கக் கூடியவை என்ற போதும் பல தடைகளை தாண்டி அப்பயணத்தை மேற்கொள்ளும் போது அந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் இரட்டிப்பாகிறது. எனது வாசிமலை பயணமும் அப்படியே... அந்த பயண அனுபவங்களின் தொகுப்பே இக்கட்டுரை.

    மதுரை உசிலம்பட்டியின் அருகிலுள்ள வாசிமலைக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு நண்பர்கள் சிலர் சென்று வந்தனர். அப்போது தவிர்க்க முடியாத காரணத்தினால் கடைசி நேரத்தில் என் பயணம் ரத்தாகி போனதால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதைத் தொடர முயற்சி செய்தேன். அந்தத் தொடர் முயற்சி கைகூடி வரும் நிலையில் மீண்டும் அலுவலகப் பணிகள் மற்றும் பிற பிரச்சனைகள் என அனைத்தும் ஒன்று சூழ்ந்த நிலையில் புறப்படும் நேரம் வரை அப்பயணம் நிச்சயமற்ற ஒன்றாகவே இருந்தது. இருப்பினும் இறைவனின் மீது பாரத்தை இறக்கி வைத்து விட்டு பயணத்தை துவக்கிய பின் அனைத்தும் தலைகீழாய் மாறியது. எனது நிகழ்கால சிந்தனைகள் அனைத்தையும் மறக்கடித்து என்னை வேறொரு உலகத்திற்கு கொண்டு சென்ற அற்புத இடமே வாசிமலை.

17.01.2025 வெள்ளிக்கிழமை 

    இன்று எம்.ஜி.ஆரின் பிறந்த தினம் என்பதால் அவரின் தொண்டரான எனது தந்தைக்கு  நான் செய்ய வேண்டிய கடமையின் காரணமாக தலைவரின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தி விட்டு மதியம் 12 மணி அளவில் சென்னையில் இருந்து புறப்பட்டேன். நண்பரின் காரில் வழியெங்கும் பாடல்களை ரசித்துக் கொண்டும், திருச்சியை கடக்கும் பொழுது கொள்ளிடம் மற்றும் காவிரியில் ஓடிக் கொண்டிருந்த நீரின் அழகையும் ரசித்தவாறும் பயணம் செய்து திண்டுக்கல் வழியாக உசிலம்பட்டியை கடந்து வாசிமலையின் அடிவாரமான ஏழுமலை என்ற ஊரை அடைந்தோம். எங்களுக்கு முன்பாகவே மற்றொரு காரில் அன்று அதிகாலையிலேயே புறப்பட்டு  சமயபுரம், திருவானைக்கால் மற்றும் கள்ளழகர் கோவில்களை தரிசித்துவிட்டு வந்த நண்பர்கள் சிலர் எங்களுக்காக அங்கு காத்திருந்தனர். 

    அந்த ஏழுமலை கிராமத்திலேயே எங்கள் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தி விட்டு உள்ளுர் வாடகை வாகனம் மூலம் (Tata ace) சுமார் நான்கு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அடிவாரத்தை அடைந்தோம். மலையின் மீதுள்ள அந்த வாசிமலையான் அடிவாரத்தில் உள்ள மற்றொரு கோவிலிலும் குடியிருந்த போதும் இரவு நேரம் என்பதால் அவரை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த இரவு நேர இருளிலேயே சுமார் அரை மணி நேரம் நடந்து, வழியெங்கும் மின்சார வேலிகள் அமைக்கப்பட்ட விளைநிலங்களைக் கடந்து, மேடான ஒரு பகுதியில் அமைந்துள்ள பலசுனை முருகன் கோவிலுக்கு சென்று அங்கேயே இரவு தங்கினோம். மறுநாள் காலையில் மலையேற முடிவு செய்தோம். 


பலசுனை முருகன் கோவில்


    ஒரு பெரும் பாறை மீது இயற்கையாகவே பல பள்ளங்கள் உருவாகி அதில் சுனைகள் பல இருப்பதால் அவ்விடம் பலசுனை என அழைக்கப்படுகிறது. அந்த சுனைகள் அனைத்தும் மிகவும் ஆழமானவை என்பதால் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கடும் பனியில் குறிஞ்சி கடவுள் முருகனின் பாதுகாப்பில் அந்த இரவை கழித்த பிறகு பொழுது விடிந்ததும் தெரிந்த இயற்கையின் தரிசனம் அற்புதமாக இருந்தது. 


18.01.2025 சனிக்கிழமை 

    தென் இந்தியாவின் மிகப்பெரிய பல்லுயிர் காப்பகமான மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியே வாசிமலை என்பதால் சுற்றிலும் எங்கு காணினும் மலைத்தொடர்கள் அடுக்கடுக்காக அழகாக அணிவகுத்து நின்றன. குறிப்பாக நாங்கள் செல்ல வேண்டிய வாசிமலை பாதையில் அமைந்திருந்த கூரான கத்திக்கல் என்ற ஒரு மலையும் அதன் பின்னால் இருந்த ஓங்கி உயர்ந்த மலைச்சிகரங்களும் பிரம்மாண்டமாக தோன்றின. காலை உணவை பலசுனை முருகன் கோவிலிலேயே முடித்துவிட்டு, மதிய உணவிற்கும் இரவு சமையல் மற்றும் தங்குவதற்கு தேவையான பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு காலை 9 மணி அளவில் மலையேற ஆரம்பித்தோம்.

    எடுத்த எடுப்பிலேயே அடர்ந்த காடுகளின் வழியாக துவங்கிய எங்கள் பயணம் சிற்சில நீரோடைகளை கடந்து வலதுபுறம் திரும்பி ஒரு பெரிய சரிவான பாறையில் ஏற ஆரம்பித்தது. அந்த இயற்கையின் சரிவில் மனதை பறித்து கொடுத்து விட்டு கத்திக்கல் மலையின் மறுபுறம் இருந்த ஒத்தையடி பாதையில் மலையேற ஆரம்பித்தோம். சுமார் இரண்டு மணி நேர பயணத்திற்கு பிறகு வலதுபுறம் தெரிந்த ஒரு காட்சி முனையில் (View point) இயற்கையின் பேரழகை சிறிது நேரம் தரிசித்து விட்டு பயணத்தை தொடர்ந்தோம். அங்கிருந்து பார்க்க பிரம்மாண்டமான கத்திக்கல் மலை கூட எனது கைக்கு அடக்கமாகவே தோன்றியது. 



கத்திக்கல் காட்சிமுனை    


    தொடர்ந்து சென்ற பயணத்தில் மேடான பகுதியில் அமைந்த ஒரு சமவெளியை அடைந்தோம். அங்கே பாறைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி உருவாக்கி வைக்கப்பட்டு இருந்த சில இயற்கை தெய்வங்கள் குடி கொண்டிருந்தன. நீண்ட பயணத்தின் நடுவே இளைப்பாற பொருத்தமான இடம் இது. விழாக் காலங்களில் ஒரு சிலர் இங்கு சங்கொலி எழுப்பி இறைவனை வழிபடுவர் என்பதால் அப்பகுதிக்கு சங்கூதி கல் என்று பெயர். இதற்கு மேல் ஆபத்தான காட்டுப்பகுதி இருப்பதால் உடன் வந்த அனைவரும் வரும் வரை சற்று காத்திருந்து பயணத்தை தொடர்ந்தோம். 

    சங்கூதி கல்லை கடந்து சென்ற பின் எதிர் வந்த சமவெளி எளிதாக தோன்றினாலும் அது ஒரு மிகப்பெரிய வனப்பகுதி ஆகும். இங்கு கடுக்காய்கள் அதிகம் விளைவதால் கடுக்காய் பண்ணை என்று ஊர் மக்களால் அழைக்கப்படுகிறது. மலை மேல் சுமார் 25 கிலோ மீட்டருக்கு மேல் பரப்பளவு கொண்ட மிகப்பெரிய வனப்பகுதி என்பதால் இது காட்டு விலங்குகளின் வாழ்விடமாக விளங்குகிறது. குறிப்பாக செந்நாய்கள், காட்டெருமைகள், காட்டு பன்றிகள் மற்றும் காட்டு பூனைகள் அதிகம் வசிப்பதாக உடன் வந்த வழிகாட்டி பாரதி கூறினார். மேலும் அவ்விடத்தில் காணப்பட்ட யானைகளின் சாணங்கள், அந்த பிரம்மாண்ட விலங்களும் அடிக்கடி அங்கு வந்து செல்வதை நமக்குத் தெரிவித்தது. 


காட்டு வழி பயணம்


    சமவெளி பகுதியில் நடப்பது எளிதாக தோன்றினாலும் இங்கே வழி மாறும் வாய்ப்புகள் மிகவும் அதிகம். நாங்களும் பாதை மாறி சென்றதால் ஏற்பட்ட சிறிய குழப்பத்திற்கு பிறகு மீண்டும் சரியான பாதையை அடைந்து உச்சியை நோக்கிச் செல்லும் வழுக்குப்பாறை மலையில் ஏறத் துவங்கினோம். இனிமேல் தான் உண்மையான பயணம் ஆரம்பம் என்பது போல் அந்த வழுக்குப்பாறை எங்களுக்கு பலவித அனுபவங்களை அள்ளித் தந்தது.

    வெள்ளியங்கிரி, பொதிகை மலை, கொண்டராங்கி மலை போன்ற சில மலைகளில் ஏற்கனவே வழுக்குப் பாறைகளில் சென்று இருந்தாலும் வாசிமலையில் உள்ள வழுக்குபாறையில் ஏறுவது ஒரு தனித்த அனுபவம் ஆகும். ஆம்! நிழலுக்கு கூட  ஒதுங்க இடமில்லாத அந்த மொட்டை மலையில் நாங்கள் ஏறத் துவங்கியதும் மெல்லிய சாரல் மழை பொழிந்து, சூழலை ரம்யமாக்கி எங்களை வரவேற்றது. தொடர்ந்து சென்ற பயணத்தில் எதிரே தெரிந்த யானைப் பாறையின் அருகில் இருந்த ஒரு மரத்தின் அடியில் இளைப்பாறி மதிய உணவை முடித்துக் கொண்டோம். வயிற்றுக்கு உணவளித்த அந்த சிறிய இடைவெளியில் ஒத்தக் கருத்துடைய வழிகாட்டி பாரதி மற்றும் நண்பர் ஆனந்த் அவர்களுடன் புத்தகங்களைப் பற்றி சிறிது நேரம் பேசி மகிழ்ந்தேன். பிறகு யானைப் பாறையின் அடியில் குடியிருக்கும் அழகான ஆஞ்சநேயரை வணங்கிய பின் பயணத்தை தொடர்ந்தோம். 


யானைப் பாறை ஆஞ்சநேயர்

    வழுக்கு பாறையில் ஆங்காங்கே அமைக்கப்பட்ட கம்பிகளை பிடித்துக் கொண்டே சரிவான பாதையில் சென்ற பயணத்தில், இடப்புறம் மலை உச்சியை நோக்கியவாறு இயற்கையாகவே அமைந்த சுயம்பு நந்தியின் அமைப்பு உண்மையிலேயே மெய்சிலிர்க்க வைத்தது. இறுதியாக சற்றே கடினமான பயணத்தின் முடிவில் மாலை 3.30 மணி அளவில் உச்சியை அடைந்தோம். வாசிமலையான் தரிசனம் கண்டோம்.

 சுமார் 4800 அடிக்கு மேல் உயரம் கொண்ட மலை உச்சியை அடைந்த பின் முதல் காரியமாக வாசிமலையானை வணங்கி விட்டு, பக்தர்கள் தங்கிச் செல்ல அமைக்கப்பட்ட அறைகளின் பின்னால் உள்ள சுனைகளை நோக்கி சென்றோம். வாசிமலை உச்சியில் பக்தர்களின் வசதிக்காக இயற்கையாகவே இரு சுனைகள் அமைந்துள்ளன. அதில் வலப்புறம் அமைந்துள்ள சுனை குடிநீர் மற்றும் பூஜை தேவைக்காகவும், இடப்புறம் அமைந்துள்ள மற்றொரு சுனை பிற தேவைகளுக்காகவும் பயன்படுகின்றன. கோடைகாலம் துவங்காத நிலையில் அந்த சுனைகளில் நீர் நிரம்பி காணப்பட்டது. எனவே ஏறி வந்த களைப்பு தீர நன்றாக குளித்துவிட்டு மாலைநேர பூஜைக்கு திட்டமிட்டோம்.

    ஒரு வழியாக குளித்து முடித்துவிட்டு, மீண்டும் கோவிலுக்கு சென்று பூஜையை துவங்க எண்ணிய தருணத்தில் திடீரென பக்தர் ஒருவர் மட்டும் தன்னந்தனியே மலையேறி வந்து எங்களுக்கு ஆச்சரியம் அளித்தார். ஆம்! நாங்கள் பத்து பேர் பங்கு கொண்ட பயணத்தில் அனைவரும் ஒருங்கிணைந்து, ஆபத்தான காட்டுப்பகுதியை கடந்து, சற்று எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் கடந்து வந்த நிலையில், மதியத்திற்கு மேல் புறப்பட்ட அவர் சில மணி நேரங்களிலேயே தனியாகவே பயணம் செய்து, விரைவாகவும் எளிதாகவும் மலை உச்சியை அடைந்தது எங்களுக்கு வியப்பாக இருந்தது. அவரது மன பக்தியையும், உடல் சக்தியையும் கண்டு வியந்த பின் அவர் நடத்திய அழகான பூஜையிலும் பங்கு கொண்டோம். 


வாசிமலை கண்ணன்


    முதலில் வாசிமலை கண்ணனுக்கும் பிறகு வெளியில் இருந்த காவல் தெய்வங்களுக்கும் அலங்காரம் முடித்து சூடம் காட்டிய பின் அருகில் இருந்த சாயாத் தூணிற்க்கும் சூடம் ஏற்றி வழிபட்டோம். ஒரு காலத்தில் வாசிமலையை சுற்றி இருந்த மூன்று ஜமீன்களும் ஒரே நேரத்தில் கோவிலுக்கு சொந்தம் கொண்டாட, மூவரும் தனித்தனியே விளக்கு தூண்கள் அமைத்ததாகவும் ஏழுமலை ஜமீன் அமைத்த தூண் மட்டுமே பலத்த காற்றை எதிர் தாங்கி சாயாமல் இருந்ததாக கேள்வியுற்றேன். விழாக் காலங்களில் சாயா தூணின் மீது ஒரு சட்டியில் ஏற்றி வைக்கப்படும் தீபத்தை வானம் தெளிவாக இருப்பின் அடிவாரத்தில் இருந்து கூட தரிசிக்கலாம் என கூறினார்கள்.

    வாசிமலைக்குச் செல்ல ஆண்டிப்பட்டி தடம் (எத்தக்கல்), தொட்டப்ப நாயக்கனூர் தடம் மற்றும் ஏழுமலை தடம் என மூன்று வழிகள் உள்ளது. இதில் நாங்கள் வந்த வழியான ஏழுமலை தடம் தான் சற்று கடினமானது என உடன் வந்த வழிகாட்டி கூறினார். மேலும் வாசிமலை ஒரு காலத்தில் சிவன் கோவிலாக இருந்ததாகவும் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சிவலிங்கம் அகற்றப்பட்டு அது கிருஷ்ணன் கோவிலாக மாற்றப்பட்டதாகவும் கூடுதல் தகவல் கிடைத்தது. உருவங்கள் வெவ்வேறானாலும் உணர்வுகள் ஒன்றுதான் என்பதால் மனம் உகந்து வாசிமலை கண்ணனை வழிபட்டோம். பிறகு கோவிலில் இருந்து வெளியேறி எதிரே உள்ள பள்ளத்தாக்கில் ஒரு சோலையின் நடுவே ஏகாந்தமாய் குடிக்கொண்டிருந்த ஈசனையும் கண்டு அகம் மகிழ்ந்தோம். 


பக்தர்கள் தங்கும் அறை


    பூஜை முடிந்த பின் பக்தர் மீண்டும் புறப்பட்டு செல்ல, பக்தர்கள் தங்கிச் செல்ல கட்டப்பட்டிருந்த அறைகளில் நாங்கள் தஞ்சம் புகுந்தோம். வாசிமலையின் மீது 1988 ஆம் ஆண்டு பக்தர்களால் கட்டப்பட்ட அந்த இரு அறைகளும் உண்மையிலேயே மிகவும் பயன் தரக்கூடியவை என்பது நாங்கள் அதில் நுழைந்த சிறிது நேரத்திலேயே நன்றாக உணரும் வண்ணம் வெளியே மழை பொழிய துவங்கியது. கடும் பனி மற்றும் மழையில் இருந்து பக்தர்களை காத்து, சற்று ஓய்வெடுக்கவும்,  தூங்குவதற்கும் உதவிய அந்த அறைகளை அமைத்த பக்தர்களை எங்கள் நெஞ்சம் மனமாற வாழ்த்தியது. அறையின் ஓரத்திலேயே சிறிது தீ மூட்டி, சுக்கு மல்லி காப்பியும் இரவு உணவாக உப்புமாவும் தயார் செய்து உண்ட பின் கடந்து வந்த பயணத்தின் நினைவுகளோடு உறங்கச் சென்றோம். வெளியே வான்மழை தொடர, கனவிலும் மகிழ்ச்சி மழை பொழிந்து அந்த இரவை மேலும் செம்மைப்படுத்தியது. 


19.01.2025 ஞாயிற்றுக்கிழமை 

    இரவு நேர உறக்கம் முடிந்து, அதில் வந்த கனவுகளை கடந்து, அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்த போதும் வெளியே இருந்த சாரல் மழையும் பனிப்பொழிவும் எங்களை எங்கேயும் நகர விடவில்லை. மழை நிற்கவும் சுக்கு மல்லி காபிக்காகவும் காத்திருந்த அந்த அதிகாலை வேளையில் நண்பர்கள் அனைவரும் ஒருவருடன் ஒருவர் கிண்டலும் கேலிமாக பேசி மகிழ்ந்தோம். இறுதியாக வானம் தெளிவாகவில்லை என்றபோதும் மலை இறங்கி தான் ஆக வேண்டும் என்ற உறுதியான முடிவை காலை 9 மணி அளவில் எடுத்தோம். மீண்டும் வாசிமலையானை வழிபட்ட பின் ஒருவர் பின் ஒருவராக வழுக்குப் பாறையில் அடி மேல் அடி வைத்து நடந்தும், ஓரி இடங்களில் அமர்ந்தபடி நகர்ந்தும் மெல்ல மெல்ல பாதுகாப்பாக இறங்க ஆரம்பித்தோம். 

   சூரிய உதயம் கூட சரியாக தெரியாத நாளில், இவ்வளவு நேரம் எங்களை மலை மேல் காக்க வைத்ததே இதற்காகத்தான் என எண்ணும் வகையில்  மேகங்கள் அனைத்தும் கீழே இறங்கி மலையை சூழ்ந்து கொண்டு எங்களை அதற்கும் மேலாக அமர வைத்து அழகு பார்த்தது. சொல்லில் அடங்கா அந்த இயற்கையின் பேரழகை ரசித்து மகிழ்ந்தோம். இறங்கும் வழியில் வலப்புறம் இருந்த தாமரைக் குளத்தையும், மீண்டும் நமக்கு பிடித்த சுயம்பு நந்தியையும் வழிபட்டு வழுக்குப் பாறையின் இறுதியில் அமர்ந்து நண்பர்கள் கொண்டு வந்திருந்த சிற்றுண்டிகளை (Snacks) காலை உணவாக உட்கொண்ட பின் பயணத்தை தொடர்ந்தோம். 


அழகான மேகங்கள்


    மீண்டும் வனப்பகுதியையும், சங்கூதி கல்லையும் கடந்து சரிவான ஒற்றையடி பாதையில் இறங்கிய போது ஒரு மரக்கிளையில் அமர்ந்திருந்த கட்டுவிரியனின் குஞ்சு சற்று நகர்ந்து எங்களுக்கு வழி விட்டது. மேலும் அதற்கு தொல்லை தராமல் நாங்களும் சற்று நகர்ந்து தொடர்ந்து சென்ற பயணத்தில் ஏறும்போது தவறவிட்ட  கத்திக்கல் மலையின் அடியில் குடியிருந்த மூங்கில் முத்தாலம்மனை தரிசித்தோம். இயற்கையாக வளர்ந்த ஒரு மூங்கில் மரத்தை கூட இறை வடிவமாக வழிபடும் மலை மக்களின் மாண்பு என்னை மெய் சிலிர்க்க வைத்தது. நிச்சயம் இந்த மூங்கில் முத்தாலம்மனுக்கு பின்னால் ஒரு பெரிய கதை இருக்கக்கூடும் என தோன்றியது. அதையும் தெரிந்து கொள்ள அடிமனதில் ஒரு ஆவல் தோன்றியது. 

    தொடர்ந்து சென்ற பாதையில் இரவில் பெய்த மழையின் காரணமாக வழக்கத்தை விட சற்று அதிகமான நீரோட்டம் காணப்பட்டது. உடன் வந்த நண்பர்களின் உதவியால் இடது புறம் சற்று பள்ளத்தில் அமைந்திருந்த ஒரு சிறிய நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்து பயணத்தை தொடர்ந்தோம். ஒரு வழியாக மதியம் 1.30 மணி அளவில் பலசுனை முருகன் கோவிலை அடைந்து சற்று ஓய்வெடுத்தோம். பிறகு திரும்பும் வழியெங்கும் எங்கள் பின்னால் கம்பீரமாய் ஒரு அரண் போல் காட்சியளித்த வாசிமலையை திரும்பத் திரும்ப திரும்பிப் பார்த்து அந்த அற்புத அனுபவங்களை எல்லாம் நினைவுகளாக மனதில் ஆழப் புதைத்தபடியே அடிவாரத்தை அடைந்து, மலையேற்றத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தோம்.

    அங்கு எங்களுக்காக காத்திருந்த வாகனத்தில் ஏறி ஏழுமலையை அடைந்து எங்கள் வழிகாட்டி பாரதிக்கு மனப்பூர்வமாக நன்றி கூறி, உணர்வுப்பூர்வமாக விடையளித்தோம். பிறகு மூன்று மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டு திரும்பும் வழியில் உசிலம்பட்டியில் இருந்த ஒரு சிறிய ஹோட்டலில் மதுரை பன் பரோட்டாவையும் அதற்கெனவே தயார் செய்த சைவ குருமாவையும் ஒரு பிடி பிடித்து விட்டு, அருகில் இருந்த கடையில் சில பலகாரங்களையும் வாங்கிக் கொண்டு நீங்கா நினைவுகளுடன் சென்னையை நோக்கி புறப்பட்டோம். 


மதுரை பன் பரோட்டா


    பொங்கல் தொடர் விடுமுறையின் இறுதி நாள் என்பதால் திரும்பும் வழி எங்கும் அதிக போக்குவரத்து நெரிசலை எதிர்பார்த்து தொடர்ந்த எங்கள் பயணத்தில் அதற்கு முற்றிலும் நேர்மாறாக நெரிசல் ஏதும் இன்றி காணப்பட்டது. அந்த அமைதியான நள்ளிரவில் பாடல்களை ரசித்தபடியே பத்திரமாக சென்னையை அடைந்தோம். மீண்டும் எங்கள் நகர வாழ்க்கைக்குள் தஞ்சம் புகுந்தோம். அந்த அனுபவங்களை எல்லாம் நினைவுகளாக மாற்றி வழக்கமான பணிகளில் மீண்டும் முழ்கினோம். 


நன்றிகள் 
  • இயற்கையை படைத்த இறைவனுக்கு மற்றும் இந்த அற்புத அனுபவங்களை பகிர உதவிய எனது தாய் மொழிக்கு.
  • எங்களை பத்திரமாகவும் அக்கறையாகவும் அன்புடன் அழைத்துச் சென்ற நண்பர் உள்ளூர் வழிகாட்டி திரு. பாரதி அவர்களுக்கு. 
  • பயணத்தை முன்னெடுத்த நண்பர் திரு. ராஜேஷ் மற்றும் உடன் வந்த நண்பர்கள் அனைவருக்கும். 
  • என்னை பத்திரமாக அழைத்துச் சென்றதுடன் வழியெங்கும் ஆரோக்கியமான பல உரையாடல்களுக்கு வித்திட்ட நண்பர் திரு. ஆனந்த் அவர்களுக்கு.
  • இந்தப் பயணத்தை கட்டுரை வடிவில் பதிவு செய்ய உதவிய என் நினைவுகள் மற்றும் ஆர்வத்திற்கு. 
  • இந்த நீண்ட பதிவை பொறுமையாக படிக்கும் உங்கள் ஆர்வம் மற்றும் பொறுமைக்கு. 


மீண்டும் ஒரு பயணத்தில் சந்திப்போம்.



 

Comments