முந்தைய பகுதிகளை படிக்க...
3. புதிர் பயணம்
இன்று
எதிர்பாரா திருப்பங்கள் ஒருவர் வாழும் போது மட்டுமல்ல, சாகும் தருவாயிலும் வருவதுண்டு என்பது போல் கையில் ரம்பத்துடன் என்னை நோக்கி வந்த அவன், திடீரென அதை கீழே வைத்ததும் கண்ணெதிரில் தோன்றிய எனது எமன் ஒரு நிமிடம் மறைந்தது போல் தோன்றியது. “ஆகா! இவன் மிகவும் நல்லவன் போலும், என்னை விட்டு விட்டான். என்ன இருந்தாலும் இவனும் தனது வாழ்வில் என்னைப் போல ஒரு மிதிவண்டியை வைத்திருப்பான் அல்லவா? இவன் நெஞ்சிலும் ஒரு ஈரம் இருக்கத்தானே செய்யும்? வாழ்க இவன் குலம்.” என நான் வாழ்த்த வாயெடுப்பதற்க்குள் அதே எமன் என்னை கண்டு ஏளனமாய் சிரிப்பது போல, அவன் தனது அடுத்த ஆயுதமான ஸ்பேனரை தன் கையில் எடுத்தான். ஏற்கனவே வாழ்வில் பல அடிகள் பட்டிருந்த என்னை மேலும் சுத்தியல் கொண்டு தாக்காமல், சற்று வலியில்லாமல் கொல்லலாம் என்ற அவனது அந்த எண்ணம் மட்டுமே இப்போது எனக்கு ஒரே ஆறுதலாக தோன்றியது.
ஸ்பேனர் கொண்டு முதலில் என் மேல் ஒட்டியிருந்த சீட்டை முதலில் கழட்ட ஆரம்பித்தான். என்னில் லேசாக படிந்திருந்த துருவை மீறி, நானும் ஓரளவு ஒத்துழைத்ததால் பெரிய அடி ஒன்றும் இல்லை. பிறகு மற்ற பாகங்களும் ஒவ்வொன்றாக கழற்றப்பட்டன. பெடல் போன்ற பொருட்களில் இணைந்திருந்த பிற ரப்பர் பாகங்கள் கழற்றி தூர எறியப்பட்டன. “வேண்டாம் என்னை விட்டு விடுங்கள், இங்கிருந்து ஓடி விடுகிறேன்” என நான் கதறியது அவன் காதில் விழுந்தது போலும். “சக்கரம் இருந்தால் தானே ஓடுவாய்?” என, அடுத்ததாக எனது சக்கரங்கள் ஒவ்வொன்றாக கழட்டி அதில் இருந்த டயர்களை கழட்டி எறிந்தான். கண் எதிரில் எனது கால்களான சக்கரங்கள் இரண்டையும் இழந்தேன்.
இறுதியாக மாறுகால் மாறுகை வாங்கப்பட்ட மதுரை வீரனைப் போல் சாய்ந்து விழுந்தேன். இனி என்னால் அங்கிருந்து ஓடவும் முடியாது, எங்கேயும் ஒளியவும் முடியாது. எனது இறுதிப் பயணம் துவங்கி விட்டது என நான் உணர்ந்த அந்த நிலையிலும், நான் அவனுடன் இணைந்து மேற்கொண்ட அந்த புதிர் பயணம் எனது நினைவுக்கு வந்தது ஆச்சர்யமே!
அன்று
அடுத்தநாள் சாதாரண ஞாயிறு அல்ல, ஈஸ்டர் ஞாயிறு. ஆம்! புனிதவெள்ளி அன்று சிலுவையில் அறையப்பட்ட இயேசுகிருஸ்து மீண்டும் உயிர்ந்தெழுந்த தினம். உயிர்ந்தெழுந்ததின் மூலம் தன்னை பின்பற்றுபவர்களுக்கு அந்த இறைதூதர் நம்பிக்கை அளித்த நன்னாள். அது போலவே நானும் அவனும் முன்தினம் இழந்த எங்கள் உற்சாகத்தை கடற்கரைக்கு சென்று மீட்டெடுக்கப் போகும் அந்த அற்புத நாளை எண்ணி என் நெஞ்சமெல்லாம் பூத்திருக்க, அவன் வழக்கத்தை விட சற்று முன்னதாகவே என்னை நோக்கி வந்தான். ஆனால் அவன் தோற்றத்தில் ஒரு மாறுதல்.
உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்தவன் என்பதால் எப்போதும் ஒருவித அழுக்கு நிறத்தில் உடை உடுத்தும் அவன் வழக்கத்திற்கு மாறாக சற்று பளிச்சென்ற வண்ணத்தில் உடையணிந்து வந்தான். அவனது இந்த புது வெள்ளை நிற பெல்பாட்டம் பேண்ட்டும் அதற்கு மேட்ச்சாக அந்த கால நடிகர்கள் போல் அவன் அணிந்த சிகப்பு சட்டையும் எனக்கு சிரிப்பை வரவழைத்த போதும், அதுவும் என் நண்பனின் நிறத்திற்கு எடுப்பாகதான் இருந்தது.
முன்தினம் என்னை துடைக்க மறந்த அவன், வழக்கத்தை விட என்னை அதிகநேரம் துடைத்தது, தனது தவறுக்கு அவன் பரிகாரம் செய்தது போல் தோன்றியது. நானும் அவனுக்கு இணையாக ஓரளவு பளப்பளப்பானதும், என்னை ஓட்ட துவங்கினான். தெருமுனையை தாண்டியதும் அவன் என்னை மிதிக்கும் விதத்தில் இருந்த ஒருவித படபடப்பை என்னால் உணர முடிந்தது. பெரும்பாலும் நிதானமாய், மென்மையாய் இருக்கும் அவனது மிதியில் ஏற்பட்ட இந்த மாற்றத்தை எண்ணி நான் சிந்தித்துக் கொண்டிருக்கும் போதுதான் நாங்கள் வழக்கமாக கடற்கரைக்கு செல்லும் பாதையில் செல்லாமல் வேறு எங்கோ அவன் என்னை ஓட்டிச் செல்வதை உணர்ந்தேன். என்ன ஆயிற்று இவனுக்கு? எங்கு அழைத்துச் செல்கிறான் என்னை? என என் மனதில் அடுக்கடுக்காக பல கேள்விகள் எழுந்தன. ஆனால் அக்கேள்விகள் எதுவும் அவன் காதில் விழவில்லை.
படபடப்புடனும் மனதில் பல கேள்விகளுடனும் துவங்கிய எங்கள் பயணத்தின் இறுதியில் ஒரு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு (Housing board quarters) பகுதிக்குள் நுழைந்தோம். அதுவரை ஓரளவு வேகமாக வந்த எங்கள் வேகம் லேசாக மட்டுப்பட்டது போல இருந்தது. எனக்கு தெரிந்து இப்பகுதியில் அவனுக்கு நண்பர்கள் யாரும் இல்லை. வேறு யாரைத் தேடி இங்கு வந்திருக்கிறான்? என எண்ணும் போதுதான் வெகுநேரமாய், ஒரே தெருவில் நாங்கள் திரும்பத் திரும்ப வட்டமிட்டுக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். குறுகலான அந்த தெருவில் உடனே உடனே திரும்பியதால் எனக்கு லேசாக தலை சுற்றுவது போல் தோன்ற, திடீரென எனது மணியை கணீரென சத்தமாக ஒலிக்க விட்டான் அவன்.
எங்கள் எதிரில் யாரும் குறுக்கிடாத நிலையில் ஏன் இவன் மணி அடிக்கிறான்? எதற்காக இந்த பயணம்? என்னதான் செய்கிறான் இவன்? என ஆச்சரியத்துடன் நான் அவனை பார்க்க, அவனோ அந்த குடியிருப்பு பகுதியின் இரண்டாம் மாடியையே அண்ணாந்து பார்த்து கொண்டு இருந்தான். அவன் பார்வை கொண்ட திசையில் நானும் சற்று உற்று நோக்க, எனது மனதில் இவ்வளவு நேரம் எழுந்த கேள்விகளுக்கு எல்லாம் விடை கிடைத்தது, அவள் வடிவத்தில்…
அதன்பின் எதிர் வந்த ஒவ்வொரு ஞாயிறும் எனக்கு ரணகளமாய் இருந்தது. ஆம்! எங்கள் சந்தோஷ பயணத்தில் தடையாய் வந்த அவளையே சுற்றி சுற்றி வர ஆரம்பித்தான். நான் அவன் மேல் கொண்டிருந்த உயர்ந்த எண்ணத்திற்கு மாறாக அவன் செயல்பட்டது எனக்கு சற்றும் பிடிக்கவில்லை என்றபோதும் வேறு வழி இன்றி நானும் அவனுடன் இணைந்து அவளை சுற்றி வர நேரிட்டது. விதியை நொந்து கொண்டு இதற்கு ஒரு விடிவு காலத்தை எதிர்பார்த்து காத்திருக்க ஆரம்பித்தேன்.
எவ்வளவு தைரியம் கொண்டவர்களாக இருந்தாலும், மனதில் ஏற்பட்ட காதலை ஒரு பெண்ணிடம் வெளிப்படுத்துவது என்பது அக்கால இளைஞர்களுக்கு (80s kids) குதிரைக் கொம்பை பிடிப்பதற்கு சமமான ஒரு விஷயம். இருந்தபோதும் எவ்வளவு நீண்ட இரவும் கதிரவனை கண்டால் விடிந்துதானே ஆக வேண்டும்? கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் அவளையே சுற்றி சுற்றி வந்த பின் இன்று அவளிடம் துணிந்து தன் காதலை வெளிப்படுத்தி விட்டான். ஆனால் முடிவு அவனுக்கு சாதகமாய் இல்லை. எனக்குதான் சாதகமாய் இருந்தது. ஆம்! அவனை நன்றாக திட்டி, அவமானப்படுத்தி, திருப்பி அனுப்பி விட்டாள் அவள்.
என்னதான் அவளை எனக்கு பிடிக்காது போனாலும் கண்ணியமாக காதலை வெளிப்படுத்திய என் நண்பனை அவள் திட்டி, புறக்கணித்த விதம் எனக்கு சரியில்லை என எனக்கு தோன்றியது. குறைந்தபட்சம் ஒரு மரியாதைக்காகவது சற்று நாசுக்காக மறுத்திருக்கலாம் அல்லவா? எது எப்படியோ? இது அவனுக்கு தேவைதானே? தானாக வலியச் சென்று அவமானத்தை தேடிக்கொண்டது மட்டுமில்லாமல் அதற்கு என்னையும் சாட்சியாக வைத்து விளையாடிய அவனது விளையாட்டு ஒரு வழியாக முடிவுக்கு வந்ததை எண்ணி நானும் அமைதி கொண்டேன்.
அதன் பின் அவள் இருக்கும் பக்கமே தலையெடுத்து வைக்காமல் இருந்த அவனது பண்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
ஆயிரம் இருந்த போதும் அவன் என் நண்பன் அல்லவா?
Comments
Post a Comment