ஒரு மிதிவண்டியின் பயணம் - 2. எதிர்பாரா திருப்பம்

முந்தைய பகுதிகளை படிக்க...

முன்னுரை


2. எதிர்பாரா திருப்பம்


இன்று 


    அமைதியாய் உங்களுக்கு எனது கதையை சொல்ல ஆரம்பித்த சிறிது நேரத்தில், அந்த அமைதியை குலைக்கும் வண்ணம், சரசரவென ஒரு சிலர் வேகவேகமாக வருகின்றனர். மன்னிக்கவும். அவர்கள் யார்? எதற்காக வருகிறார்கள்? என சிறிது கவனித்துவிட்டு எனது கதையை தொடர்கிறேன். 


     கறை படிந்த இடத்திற்கு கரை போட்ட வெள்ளை வேட்டி சட்டையுடன் ஒருவன் முன்னால் வர, அவனை தொடர்ந்து அழுக்கு படிந்த உடைகளுடன் சிலர் தங்கள் கைகளில் பல வித ஆயுதங்களுடன் வருகின்றனர். 


    கரைவேட்டி கட்டியவன் தனது தொண்டையை கனைத்தபடி பேச ஆரம்பித்தான். “சாயங்காலம் வண்டி வந்துடும். வெறும் இரும்பை மட்டும்தான் ஏத்தனும். போன முறை மாதிரி குப்பை எல்லாம் இருக்கக் கூடாது. வேல சுத்தமா இருக்கனும். புரியுதா?”


    கர்ஜித்த கரை வேட்டி வெளியேறிய பின், அவர்கள் தங்கள் வேலையை ஆரம்பித்தனர். முதலில் எனது அருகில் இருந்த பொருட்களை எல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து, இரும்பை தவிர அதில் இணைத்திருந்த பாகங்களை எல்லாம் கழற்றி எறிந்தனர். அதில் சில பொருட்கள் அவர்களுக்கு ஒத்துழைக்க மறுக்க, கையில் உள்ள சுத்தியல் போன்ற கொடூர ஆயுதங்களை கொண்டு அவற்றை தாக்கி உடைத்தனர். “டமார் டமார்” என அந்த இடமே அதிரும்படி அங்கு எழுந்த அந்த சத்தம் ஒரு பூகம்பம் போல் எனது நெஞ்சை நடுங்கச் செய்தது.  


    உடைக்க முடியாதவற்றை எல்லாம் நெஞ்சில் சற்றும் இரக்கம் இல்லாமல் அறுக்கும் இயந்திரம் (Saw machine) மற்றும் பற்றவைக்கும் இயந்திரம் (Welding cum cutting machine) கொண்டு அறுத்தெடுத்த அவர்களின் அடுத்தக்கட்ட கொடுஞ்செயலை கண்டு என் நெஞ்சம் பதைபதைத்தது. அதுவரை என் அருகில் அமைதியாய் இருந்த ஒவ்வொரு பொருளும் வலியுடன் கதறும் ஈனக் குரல், என்னையும் அவர்களோடு இணைந்து கதறச் செய்தது. அடுத்ததாக  என்னை நோக்கி அவர்களில் ஒருவன் திரும்ப, ஏற்கனவே பயத்தால் வெளிறிப் போயிருந்த எனது சப்த நாடியும் ஒரு கணம் அடங்கிப் போனது.  

  

அன்று 


    என்னதான் உயிர் நண்பர்களாக விளங்கினாலும், ஒருவரின் இன்பமும் துன்பமும் எப்போதும் கண்ணாடி போல் மற்றவருக்கு அப்படியே பிரதிபலிப்பதில்லை என்ற உண்மையை நான் உணரும் தருணமும் வந்தது, அவன் இன்று அவளை பார்த்த போது... 


    இன்று வழக்கம் போல அவன் என் மீது பொருட்களை எல்லாம் ஏற்றி வைத்தான். வழக்கத்தை விட சற்று பாரம் அதிகம்தான். கொஞ்சம் பெரிய ஆர்டர் போல… பொருட்களை தூக்கி வைக்கவே பெரும் சிரமப்பட்டு போனான். அவனுக்கு மேல் மூச்சு வாங்கியது. ஒருவழியாக பொருட்களை எல்லாம் ஏற்றிய பின் என்னை ஓட்டாமல் சற்று தூரம் தள்ளிக் கொண்டே சென்றான். 


    செல்ல வேண்டிய தூரமோ அதிகம். “இன்னும்  எவ்வளவு தூரம்தான் இப்படியே என்னை தள்ளிச் செல்வான்? அது அவனுக்கும் சிரமம் அல்லவா? ஓடுவதற்கு நான் தயாராக இருக்கிறேன். என் மேல் ஏறி ஓட்டு நண்பா” என நான் கொடுத்த மனக்குரல் அவனுக்கு கேட்டது போலும்.  சாலையின் ஓரமாக இருந்த ஒரு சிறிய மேட்டை கண்டதும் ஒருவழியாக முடிவெடுத்தான். அந்த மேட்டின் மேல் நின்று, என்னை சிறிதும் சாய்க்காமல் என் மேலேறி ஓட்ட ஆரம்பித்தான். அவன் என்னை மிதித்ததற்கு சற்று அதிகமான வேகத்தில் ஓடி, நானும் என் பங்கிற்கு அவனின் சிரமத்தை குறைத்தேன். இப்படி ஒருவருக்கு ஒருவர் உதவி, எங்களின் இலக்கை நோக்கி செல்லுகையில்தான், எதிர்வந்த ஒரு திருப்பத்தில் எதிர்பாராமல் எங்கள் வாழ்வில் நுழைந்தாள் அவள்…


    திடீரென ஒரு திருப்பத்தில் இருந்து சாலையை கடக்க முயற்சித்த அவளின் மேல் மோதாமல் தவிர்க்கும் பொருட்டு, அவன் உடனடியாக வேகவேகமாய் ப்ரேக்கை பிடிக்க, இருவரும் தடுமாறி தரையில் விழுந்தோம். என்மேல் அடுக்கி வைத்திருந்த பொருட்கள் எல்லாம் சாலையில் சிதறிக் விழுந்தன.   


    சாலையின் ஒரு திருப்பத்தில் முட்டாள்தனமாக அவள் செய்த காரியத்தால் ஏற்பட்ட விளைவை எண்ணி அவன் திகைக்க; நான் முறைக்க… தவறை உணர்ந்த அவளோ அவனிடம் மன்னிப்பு கோரியபடியே சிதறிய பொருட்களை எல்லாம் மீண்டும் எடுத்து வைக்க உதவ ஆரம்பித்தாள்.  நானோ என்னை கீழே தள்ளிய அவளின் மேல் அளவு கடந்த கோபம் கொண்டேன். ஆம்! நான் இதுவரை அவனுடன் இணைந்து மேற்கொண்ட எண்ணிலடங்கா பயணங்களில் இதுவரை ஒருமுறை கூட அவன் என்னை கீழே போட்டதில்லை. ஒருமுறை நிறுத்தி வைத்திருந்த என்னை ஒரு மாடு தள்ளிவிட, வாயில்லா ஜீவன் என்றும் பாராமல் அதை விரட்டி அடித்தவன் அவன். அதுமட்டுமின்றி பொதுவாகவே பெண்களை கண்டால் அவனுக்கு பிடிப்பதில்லை என்பது எனது எண்ணம். ஆகவே எங்கள் பாதையில் குறுக்கிட்ட அவளுக்கு இன்று நல்ல அர்ச்சனை உள்ளது என நான் எண்ணிக் கொண்டிருக்கையில், அவன் ஒரு வார்த்தை கூட அவளை திட்டாமல் இருந்தது எனக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது.


    ஒரு வழியாக பொருட்களை மீண்டும் ஏற்றி, கட்டி,  சற்று தாமதமாக டெலிவரி செய்துவிட்டு கடைக்கு  திரும்பினோம். பிறகு இரவு வீடு திரும்பிய பின் முதல் முறையாக என்னை துடைக்காமல் அவன் படுக்கைக்குச் சென்றது எனக்கு லேசான அதிர்ச்சியை தந்தது. இருந்தபோதும் இன்று அவன் மிகவும் சோர்வடைந்திருக்கிறான். அதனால்தான் என்னை கவனிக்க இயலவில்லை என எனக்கு நானே ஆறுதல் கூறிக்கொண்டேன். 


    மறுநாள் உறங்கா விழிகளுடன் சற்று தாமதமாகவே எழுந்து வந்து தூக்க கலக்கத்துடன் என்னை ஓட்டி அலுவலகம் சென்ற அவனின் செயல் எனக்கு மிகவும் ஆச்சர்யம் அளித்தது. ஆம்! அவனுடன் இருந்த  நாட்களில் இவ்வளவு இப்படி ஒரு நிலையில் ஒருபோதும் அவனை நான் கண்டதில்லை. 


    என்ன ஆயிற்று இவனுக்கு? எங்கு போயிற்று அவனது வழக்கமான உற்சாகம்? அவன் உடல்நலத்தில் ஏதேனும் பிரச்சனையா? ஏன் இவ்வளவு சோர்வாக இருக்கிறான்? என எண்ணி நான் தவிக்க, மாலையில் வேலை முடிந்தவுடன்  வழக்கம் போல பகுதிநேர டெலிவரி வேலைக்கு செல்லாமல் நேராக வீட்டிற்கு என்னை ஓட்டி சென்றான். என்ன? ஏது? என எனக்கு புரியாவிட்டாலும் அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் நிச்சயம் அவன் கடற்கரைக்கு செல்வான். அங்கு சென்று கடல் அலையில்  கால்களை நனைத்ததும் எங்கள் கவலைகள் எல்லாம் காற்றோடு காற்றாய் பறந்துவிடும் என எண்ணி நான் அமைதியாக நின்றேன். 


    விடியலை எதிர்நோக்கி…

அடுத்த பகுதியை படிக்க...


Comments