முந்தைய பகுதிகளை படிக்க...
1. புதிய நண்பன்
இன்று (கி.பி. 1995)
சென்னை புறநகர் பகுதியில் பழைய இரும்பு பொருட்கள் பிரிந்தெடுக்கும் ஒரு இடம்.
நான் இந்த இடத்திற்கு புதியவன். நேற்றுதான் இங்கு வந்தேன். இந்த இடம் அமைதியாய் ஒரு மயானம் போல காட்சி அளிக்கிறது. இங்கிருக்கும் மற்ற பொருட்களை எல்லாம் பார்க்கையில் என்னைப் போல் அல்லாமல், அவைகள் எல்லாம் பல நாட்களாய் ஒரே இடத்தில், இங்கேயே தங்கியிருப்பதை போல தோன்றுகிறது. அவைகளின் மேல் படிந்திருக்கும் துரு கறையும், அதில் இருந்து கிளம்பும் ஒரு மெல்லிய துர்நாற்றமும் எனக்கு லேசான குமட்டலை ஏற்படுத்துகிறது. இந்த பிரம்மாண்ட உலகத்தில் அங்கும், இங்கும், எங்கும் நகர முடியாமல் ஒரே இடத்தில் முடங்கி கிடக்கும் அவைகளை எல்லாம் பார்க்கையில் எனக்கு ஒருவித பரிதாபமே மேலோங்குகிறது.
ஆம்! நான் அவைகளை போல ஆண்டு கணக்கில் ஒரே இடத்தில் இருந்து, வாழ்ந்து, தேய்ந்து, அழிந்து போகக் கூடியவன் அல்ல… சிறகில்லா ஒரு பறவையை போல பரந்து விரிந்த இந்த சென்னையில், கிட்டதட்ட அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்த்தவன். ஏதோ எனது போதாத காலம் இவர்களுடன் நானும் இருக்க நேரிடுகிறது. இங்கு, இப்படி, இந்த அற்ப ஜடப் பொருட்களுடன் இருப்பது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இங்கிருந்து உடனே வெளியேறி, மீண்டும் அவனுடன் இணைந்து, இந்த அற்புத உலகை இறுதியாய் ஒருமுறை சுற்றிவர வேண்டும் என்ற ஆவல் என் சிந்தையில் மேலோங்குகிறது. ஆனால் என்ன செய்ய முடியும்? நான் எங்கிருக்கிறேன் என எனக்கே புரியவில்லை. அவன் எங்கிருக்கிறான்? எப்போது வருவான்? என்றும் தெரியவில்லை. ஒவ்வொரு மனிதனும் இறக்கும் முன் அவர்களின் கடந்த காலம் எல்லாம் ஒருமுறை நினைவுக்கு வருவதைப் போல எனக்கும் நான் உற்சாகமாய், உல்லாசமாய் சுற்றித் திரிந்த, அந்த அற்புத நிகழ்வுகள் எல்லாம் என் மனதில் கானல் நீர் போல காட்சி அளிக்கிறது. அந்த பொன்னான நாட்களின் நினைவுகளை எல்லாம் இக்கதையை படிக்கும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
தொடர்ந்து எனது கதையை கேளுங்கள்.
அன்று (1985)
இன்றுதான் அவனை முதன்முதலில் சந்தித்தேன். மிதிவண்டி பழுது பார்க்கும் கடையில் ஒரு ஓரமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பழைய சைக்கிளான என்னை விலை கொடுத்து வாங்கிய அவனின் பெயர் கிருஷ்ணன். 22 வயது நிரம்பிய துடிப்பான இளைஞன். ITI படித்த அவன், தனது படிப்பிற்கேற்ற வேலையை தேடிக்கொண்டு இருக்கிறான். மேலும் குடும்ப சூழ்நிலை காரணமாக தனது செலவுகளை தானே பார்த்துக் கொள்ளும் முயற்சியில் தற்காலிகமாக ஒரு கடையில் டெலிவரி வேலையில் சேரவே என்னை வாங்கினான். எனது முந்தைய முதலாளி என்னை கைவிட்ட நிலையில், ஒரு அனாதை போல் பெரும் மன உளைச்சலில் இருந்த என்னை அரவணைத்து எனது பழுதடைந்த பாகங்களை எல்லாம் சரி செய்து புத்துயிர் அளித்தான். குறிப்பாக என்னை ஓட்டி பார்த்து ஒவ்வொரு பாகமாக சரி செய்த அவனது அன்பும் அக்கறையும் எனக்கு மகிழ்ச்சியை தந்தது. இன்று துவங்கிய இவனது புதிய நட்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
வாங்கியவுடன் நேராக வீட்டிற்கு செல்லாமல் நண்பர்களிடம் சென்று, தான் முதன்முதலில் வாங்கிய சைக்கிள் என சற்று பெருமையுடன் என்னை அறிமுகம் செய்து வைத்தான். அவன் தன் நண்பர்களிடம் அறிமுகப்படுத்திய விதமே அவனும் எனது நட்பை மிகவும் விரும்புகிறான் என எண்ணத் தோன்றியது. அவர்களும் என்னை ஓட்டிப் பார்த்து, நான் மிகவும் நன்றாக உள்ளதாக கூறினர். இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் இருக்கும் உங்களுக்கெல்லாம் இக்காட்சியை பார்க்கையில் ஏளனச் சிரிப்பு வரலாம். ஆனால் உண்மையில் 1980களில் ஒரு சைக்கிள் வாங்குவது (அது பழையதாக இருந்தாலும் கூட) பெரிய விஷயமே... ஆம்! இன்றைய தேதியில் ஒரு கார் வைத்திருப்பதற்கு சமமான விஷயம் அது.
பழைய சைக்கிள் கடையின் ஒரு ஓரத்தில் முடங்கி கிடந்த என் வாழ்வில் அன்று முதல் சந்தோஷ பயணம் துவங்கியது என்று கூறும் வகையில் வெறும் வேலைக்காக மட்டுமில்லாமல் பல்வேறு இடங்களுக்கு என்னை அழைத்துச் சென்றான். நானும் அவனுடன் சேர்ந்து பல்வேறு இடங்களை சுற்றிப் பார்க்க ஆரம்பித்தேன். எங்கு சென்றாலும் என்னை பூட்டிவிட்டு செல்லும் அவனது அக்கறையும், அதுபோல் எப்போது ஓட்ட எடுத்தாலும் அல்லது எவ்வளவு நேரம் கழித்து, களைத்து வீடு திருப்பினாலும், என்னை துடைத்து வைக்கும் அன்பையும் கண்டு மெய்சிலிர்த்து போனேன். என்னால் முடிந்தவரை உண்மையாய் உழைத்து அவனுக்கு உற்ற நண்பனாய் இருக்க வேண்டுமென உளமார உறுதி பூண்டேன்.
நான் வந்த நேரம் உண்மையிலேயே அவனுக்கு அதிர்ஷ்டம் வந்தது போலும். ஆம்! ஒரு பெரிய நிறுவனத்தில் நல்ல வேலை கிடைத்தது. புதிய வேலை கிடைத்த போதும், பழைய பகுதி நேர டெலிவரி வேலையை மாலை நேரத்தில் தொடர்ந்து செய்தான். சில வீணர்களை போல வெட்டியாக பொழுதை கழிக்காமல் உண்மையாய் உழைக்கும் அவனது உயர்ந்த எண்ணம் எனக்கு மிகவும் பிடித்திருந்ததால், நானும் நேரம் காலம் பார்க்காமல் அவனது முன்னேற்றத்திற்காக பாடுபட துவங்கினேன். அவன் என்னை மிதித்த ஒவ்வொரு மிதியையும் மகிழ்ச்சியுடன் என் மார்பில் தாங்கி அவனை முன்னேற்றினேன். நாட்கள் செல்ல செல்ல அவனது வாழ்வில் நானும், எனது வாழ்வில் அவனும் இரண்டற கலந்து பிரிக்க முடியாத ஒரு பந்தத்தில் இணைந்துள்ளோம் என எண்ண ஆரம்பித்தேன்.
மற்றவர்கள் எல்லாம் தங்கள் குடும்பத்துடனும், இளைஞர்கள் எல்லாம் தங்கள் காதலிகளுடனும் சுற்றித் திரியும் கடற்கரைக்கு அவன் என்னை மட்டும் அழைத்துச் செல்வதன் காரணம் எனக்கு தெரியாவிட்டாலும், பொதுவாகவே பெண்களை கண்டால் அவனுக்கு பிடிப்பதில்லை என எண்ணினேன். பிற இளைஞர்களை போல பெண்கள் பின்னால் சுற்றாமல் இருக்கும் அவனது கண்ணியம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
எவ்வளவு பெரும் துன்பத்திற்கும் ஒரு முடிவு உண்டு என்பார்கள். அது துன்பத்திற்கு மட்டுமல்ல, இன்பத்திற்கும் பொருந்தும். ஆம்! யார் கண்பட்டதோ? தெரியவில்லை. இப்படியே எங்கள் நட்பு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்த நிலையில்தான் அந்த சம்பவம் நிகழ்ந்தது. என் வாழ்வில் வீசிய வசந்தம் சில ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. எங்களது சந்தோஷ பயணத்தில் எதிர்பாராத திருப்பம் ஒன்று வந்தது.
அவளது உருவத்தில்...
அடுத்த பகுதியை படிக்க...
Comments
Post a Comment