ஒரு மிதிவண்டியின் பயணம் - 4. நண்பனின் காதலி

முந்தைய பகுதிகளை படிக்க...

முன்னுரை

4. நண்பனின் காதலி

இன்று


கை-கால்களற்ற வெறும் உடலை போல நான் மல்லாந்து விழுந்து கிடந்தேன். அக்குவேறு ஆணிவேறாய் கழட்டப்பட்ட நானும், அந்த இடத்தில இருந்த பிற இரும்புப்  பொருட்களும் ஒன்றாக குவிக்கப்பட்டு இருந்த அந்த தருணத்திலும் எனது இதயம் மட்டும் என்னுள் துடித்து கொண்டிருப்பதை போல தோன்றியது. 


அதன் பிறகுதான் அடுத்தக்கட்ட கொடுமை நிகழ்ந்தது. இவ்வளவு நேரம் தனித்தனியே பிரிக்கப்பட்ட இரும்பு பொருட்கள் எல்லாம் ஒன்றன்மேல் ஒன்றாக குவிக்கப்பட்டு, ஒரு பெரிய இயந்திரம் மூலம் நசுக்கப்பட்டது. நான் மூச்சு திணறியபடி பிற பொருள்களுடன் சேர்ந்து நசுங்கி போய் அலங்கோலமான வடிவை அடைந்தேன். சிறிது நேரத்தில் அங்கு வந்த ஒரு லாரியில் குப்பையை போல அனைவரும் அள்ளி வீசப்பட்டோம். பழைய இரும்பு பொருட்களை எல்லாம் ஏற்றிய பின் கரும்புகையை கக்கியபடி அந்த லாரி அங்கிருந்து புறப்பட்டது.


உடலில் உள்ள பாகங்களை எல்லாம் கழற்றிய பின் வெறும் உடைந்துப் போன எலும்புகள் போல் காட்சியளிக்கும் (Frame) என்னை எங்கே கொண்டு செல்ல போகிறார்கள்? மாயனத்திற்கா? மனிதர்களைதான் அங்கு எரிப்பார்கள் அல்லது புதைப்பர்கள். எங்களை என்னை செய்யப் போகிறார்கள்? என்ற கேள்விக்கு இப்போது என்னிடம் விடை இல்லை. இப்படியாக பல கேள்விகளுடன் தொடந்த எனது  புதிர் பயணம் சென்னை அம்பத்தூரில் உள்ள ஒரு தொழிற்சாலையின் வார்பகத்திற்கு (Foundry) சென்று முடிந்தது. இப்போது எல்லாம் எனக்கு புரிந்து விட்டது. ஆம்! எங்களை எரிக்கவோ புதைக்கவோ போவது இல்லை, உருக்க போகிறார்கள் என்ற உண்மைதான் அது.  


உருக்கினால் என்ன ஆகும்? நான் கரையலாம். என் மனதில் உள்ள நினைவுகள் மறையுமா? அல்லது எனது உயிரோடு கலந்த அவன் நினைவுகள்தான் மறக்குமா? என்ற சிந்தனை எல்லாம் என்னுள் பொங்கி எழுந்தது. ஆனால் நான் எதிர்பார்த்தபடி அவர்கள் முதலில் என்னை உருக்கவில்லை. 


ஏற்கனவே நசுக்கப்பட்டு அலங்கோலமான வடிவங்கள் அடைந்த எங்களை ஒரு பெரிய இயந்திரத்தில் தூக்கிப்  போட்டனர். ராட்சசன் போல காட்சியளித்த அந்த இயந்திரத்தை ஆன் செய்தவுடன்  அது பயங்கர சத்தத்துடன் எங்கள் உடல்களை எல்லாம் நாறுநாராய் கிழிப்பது போல கண்டம் துண்டமாய் வெட்டி தள்ளியது. எனது மனதில் எஞ்சியிருந்த நினைவுகளும் அப்போது கொஞ்சம் கொஞ்சமாக சிதைய ஆரம்பித்தது.   

          

    இரும்பு போன்ற நெஞ்சம் கொண்ட மனிதர் மனதையும் தூள் தூளாக்க வல்லது காதல் என்பர். ஆனால் அந்த அற்புத உணர்வை அனுபவிக்கும் கொடுப்பினையை அந்த இறைவன் என்னைப் போன்ற ஜடப் பொருட்களுக்கு அளித்ததில்லை. இருந்தபோதும் இன்று நான் இந்த இயந்திரத்தில் சிக்கி தூளாவது போலவே அன்று என் நண்பன் காதலில் சிக்கி கரைந்த அனுபவங்களை நேரில் காணும் பேறு எனக்கு கிடைத்தது. 


அன்று


மிதிவண்டி செல்லும் வேகத்தை விட நாட்கள் விரைவாக கடந்து சென்றது. வெகுநாள் கழித்து மீண்டும் என்னை இன்று கடற்கரைக்கு அழைத்து வந்தான். ஆனால் கடற்கரைக்கு வரும்போதெல்லாம் எப்போதும் எங்களுடன் உடன் வரும் உற்சாகம் இன்று இல்லை. கடந்த பல மாதங்களாக அவள் பின் சுற்றித் திரிந்த பின்பும் அவன் காதலுக்கு, அவள் சம்மதம் தரவில்லை என்பதால் ஏற்பட்ட விரக்தியின் வெளிப்பாடே இது. என் நண்பனுக்கு ஏற்பட்ட இந்த ஏமாற்றம் எனக்கும் லேசாக வலித்தது. அவனோ பழைய உற்சாகத்தை இழந்து எப்போதும் சிந்தனை வயப்பட்டவன் போல இருக்க, அவனை அந்நிலையில் காணக்காண எனக்கோ என் வாழ்வே சூனியமாய் தோன்ற ஆரம்பித்தது. அவன் இந்த காதல் வலையில் இருந்து விடுபட்டு மீண்டும் பழையபடி திரும்பி வர வேண்டும் என என் மனது ஏங்க ஆரம்பித்தது.


கடற்கரை சாலையோர கடையில் அவன் வழக்கமாக சாப்பிடும் மிளகாய் பஜ்ஜிகள் சுடச்சுட இருந்தது. ஆனால் அவனது சிந்தனை அதில் இல்லை. என்னை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு மனதில் கொந்தளிக்கும் சிந்தனை அலைகளுடன் நேராக கடல் அலைகளை நோக்கி அமைதியாக சென்றான். அவனது இந்த மௌனமே அவன் மனதில் உள்ள வலிகளை எனக்கு சொல்லாமல் சொல்லியது. 


கடல் அலையில் கால் நனைக்க சென்ற அவன் வழக்கத்தை விட அதிக நேரம் ஆகியும் திரும்பி வராமல் இருந்தது என்னை, என் மனதை ஏதோ செய்தது. எது எப்படியோ கடந்த பல மாதங்களாக அவள் பின்னால் வெட்டியாக சுற்றித் திரிந்து பல பொன்னான பொழுதுகளை வீணாக்கிய அவன் இன்று திருந்தி விட்டான். இனி எங்கள் வாழ்வில் குறுக்கிட அவள் இல்லை. எங்கள் சந்தோஷ பயணம் மீண்டும் தொடர தடை ஏதும் இல்லை. கடல் அலையில் கால் நனைத்து அவன் திரும்பி வருகையில் நிச்சயம் ஒரு தெளிவும்,  அவனது பழைய உற்சாகமும் உடன் வரும். நாங்கள் மீண்டும் விண்ணைத் தாண்டி உற்சாகமாக பறப்போம். ‌ இனி அதற்குத் தடை ஏதுமில்லை என்றெல்லாம் நான் எண்ணிக்கொண்டு இருக்கையில்தான், எனது எண்ணத்தில் அந்த கடற்கரை மணல் மொத்தமும் விழுந்தது போல் இருந்தது, எதிரில் தெரிந்த  அந்த காட்சியை கண்டதும்…  


ஆம்! வெகுநேரம் கழித்து திரும்பி வந்த அவனோடு கரம் கோர்த்து அவளும் உடன் வந்தாள். 


அவளே தான்! அவன் வாழ்வில் வந்த முதல் காதலி. என் வாழ்வில் நான் எதிர்கொண்ட முதல் எதிரி. அவள் பெயர் மீனாட்சி. அவள் நமக்கு ஏற்கனவே பரிச்சியமானவள்தான். அதுதான் அந்த வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் குடியிருப்பவள். பல மாதங்களாக அவனை தன் பின்னால் அலைய வைத்த‌ அவள், அவன் தன்னை பின் தொடர்வதை நிறுத்திய பின்னரே அவனது காதலை உணர்ந்தாள். இன்று  அவனை தேடி கடற்கரைக்கு வந்தது மட்டுமில்லாமல் மனதில் உணர்ந்த அவன் காதலை ஏற்றுக்கொண்டு அவனது கரம் பிடித்து என் எதிரில் வந்தாள். எனது எதிரியாகவும் தான் வந்தாள்... 


அவனை மட்டும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நான், கடற்கரையில் கைகோர்த்து ஜோடியாக வந்த அவர்களை சற்றும் எதிர்பாராததால் அதிர்ச்சி அடைந்தேன். தனித்தனியாக கடற்கரைக்கு வந்த அந்த இருவரையும் ஒருங்கிணைந்தது அந்த மாயக்கடலே என அதை என் மனதால் சபித்தேன். எனது எதிர்பார்ப்புக்கு துரோகம் செய்து, எனது எதிரியுடன் கரம் கோர்த்து வரும் என் நண்பனை ஏறெடுத்துப் பார்க்கவும் பிடிக்காமல் எனது கைப்பிடியையும், முன் சக்கரத்தையும் ஒரு பக்கமாக திருப்பிக் கொண்டேன். 


ஆனால் அவன் என்னை, எனது எதிர்பார்ப்பை சிறிதும் சட்டை செய்யவில்லை. ஏற்கனவே எரிந்து போன மரத்தை வேரோடு பிடுங்குவது போல எனக்கு அடுத்த தண்டணையை வழங்க தயாரானான். ஆம்! எனது வேதனையை சிறிதும் பொருட்படுத்தாமல் அவளையும் என் மேல் அமரச் செய்தான். அவளும் வெட்கத்துடன் என் மேல் ஏறி அமர, எனது நாடி நரம்புகள் எல்லாம் ஒருகணம் அடங்கிப் போனது.


முதன்முறையாக அவனது அந்த செயல் எனக்கு அவன் மேல் தாங்கமுடியாத ஒரு ஆத்திரத்தை வரவழைத்தது. ஆனால் என்னால் என்ன செய்ய இயலும்? மிதிப்பது அவனல்லவா? நான் ஓடித்தானே ஆக வேண்டும்? இருந்தபோதிலும் எனது வேகத்தை முடிந்த அளவு குறைத்து எனது எதிர்ப்பை வெளிப்படுத்த முயற்சித்தேன். இருப்பினும் எனது கோபத்தை விட அவனது உற்சாகம் அதிகமாக இருந்ததால் எனது தடையை பொருட்படுத்தாமல் அவன் நன்றாக ஏறி மிதக்க… என்னையும் மீறி எனது சக்கரங்கள் வேகமாக சுழன்றன. 


என்ன செய்வது? முதன்முறையாக காதலியை தனது வண்டியில் அதுவும் சைக்கிளின் முன்பகுதியில் ஏற்றி வருவதால் உண்டான காதலின் வேகம் அது… அதற்கு ஈடு கொடுக்க முடியாமல் நான் சற்று திணறித்தான் போனேன். இறுதியாக எனது எதிர்ப்பை அவனுக்கு தெரிவிக்கவும், அவளை என்மேல் இருந்து கீழே இறக்கவும் எண்ணி, வேறுவழியின்றி என் வாழ்வில் முதன்முறையாக அந்த தீய செயல் புரியவும் துணிந்தேன்.  


“டமார்” என்ற சத்ததுடன் எனது பின் சக்கரத்தின் டயரை வெடிக்கச் செய்தேன்.     



அடுத்த பகுதியை படிக்க...

Comments