முந்தைய பகுதிகளை படிக்க...
முன்னுரை
1. புதிய நண்பன்
3. புதிர் பயணம்
5. அன்பு சகோதரி
6. அற்புத பரிசு
இன்று
உருகிய இரும்பு குழம்பாக நான் இந்த உலையில் கொதித்துக் கொண்டிருக்கிறேன். இக்குழம்பில் நான் உருக துவங்கியதும், என்னுடன் உருகிய பிறப் பொருட்களின் நினைவுகளும் என் நினைவுகளும் ஒன்றோடு ஒன்றாக கலந்து என்னை குழப்ப ஆரம்பித்தது. மெல்ல மெல்ல என் கடந்தகால நினைவுகளை ஒவ்வொன்றாக மறைய துவங்கியது.
எனக்கு என்ன ஆயிற்று? ஏன் இப்படி கொதித்துக் கொண்டிருக்கிறேன் எனவும் புரியவில்லை. இது எனக்கு நிகழ்வது இரண்டாம் முறை. இரும்புத்தாதுவாக பூமியில் உறங்கிக் கொண்டிருந்த என்னை வெட்டியெடுத்து, ஒரு ஆலையில் இப்படி உலையில் கொதிக்க வைத்து முதன்முதலில் இரும்பாக மாற்றியது நினைவு மட்டுமே என் நெஞ்சில் உள்ளது. அதன் பிறகு என்ன ஆனது? நான் யாராக இருந்தேன்? என்ன செய்து கொண்டிருந்தேன்? எப்படி இங்கு வந்தேன்? என்ற நினைவுகள் எல்லாம் ஒரு திரையின் பின்னால் தெரியும் காட்சிகள் போல தெளிவற்று கிடக்கின்றன.
நான் யார்? என்பதை எனக்கு எடுத்துச் சொல்ல யாருமில்லை. கொதிக்கும் என் மனதிற்கு ஆறுதல் சொல்லவும் எவருமில்லை. ஒன்று மட்டும் நிச்சயம், காலங்காலமாக தங்களுக்காக உழைக்கும் என் போன்ற உலோகங்களுக்கு, இதுவே அந்த நன்றி கெட்ட மனிதர்கள் தரும் அற்புத பரிசு என உணர்ந்துகொண்டேன்.
அன்று
மாதங்கள் சில கழிந்தன. இப்போதெல்லாம் அவன் பகுதி நேர வேலைக்கு செல்வதில்லை. முழுநேர வேலை பார்க்கும் நிறுவனத்தில் பணி நிரந்தரம் பெற்றது ஒரு காரணம் என்றாலும் பிரதான காரணம் அவளே… ஆம்! அவளுடன் ஊரை சுற்றுவதையே தனது பகுதிநேர வேலையாக மாற்றிக் கொண்டான் அவன். பெரும்பாலான மாலை பொழுதுகளை அவளை சந்திக்கவும், அவளுடன் பூங்கா, கடற்கரை, கோவில் என பற்பல இடங்களுக்கு செல்லவும் ஆரம்பித்தான். ஒரு பொறுப்பான நண்பனாக அறிமுகம் ஆன அவன் இப்படி வீணாக ஊரை சுற்றுவது எனக்கு பிடிக்காவிட்டாலும், இதுவும் சாமானிய மனிதனின் வாழ்வில் ஒரு பகுதியே என உணர்ந்து அவனுடன் ஒத்துழைக்க ஆரம்பித்தேன். அவனுடன் சேர்ந்து அவன் வாழ்வில் இணைந்த அவளையும் மனமார சுமக்க ஆரம்பித்தேன், அது சுகமான சுமையாக இல்லாவிட்டாலும் கூட…
இது இப்படியே எவ்வளவு காலத்திற்கு தொடரும் என தெரியவில்லை. நாட்கள் செல்லச் செல்ல, பெரும்பாலான காதலர்களின் முதல் காதலைப் போலவே அவர்களுடைய காதலும் ஒன்று சேராமல் கானல்நீராக போய்விடுமோ என்று எண்ணி நான் அச்சம் கொண்டேன். நல்லவேளை அப்படி எதுவும் நிகழவில்லை. ஒருவழியாக அவர்களின் காதல் இருவரின் வீட்டிற்கும் தெரிந்து விட்டது. ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தாலும் பிறகு முழு சம்மதம் தந்து, திருமண ஏற்பாட்டை செய்தனர். எனக்கும், என்னால் ஆரம்பித்த அவர்களின் காதல் வாழ்க்கை, அடுத்த நிலைக்கு செல்வது கண்டு மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.
திருமணத்தில் கலந்துக் கொண்ட மற்றவரெல்லாம் தங்களால் முடிந்த பரிசுகளை அளித்து அவர்களை வாழ்த்திய நேரத்தில், அவர்களை ஒன்றிணைந்த என்னால் அவர்களுக்கு ஒரு சிறிய பரிசை கூட அளிக்க முடியவில்லையே என்பது எனக்கு வருத்தமாக இருந்தது. ஆனால் அந்த வருத்தத்தை பன்மடங்காகும் வகையில் அற்புத பரிசு ஒன்றை அவளது அப்பா அவனுக்கு வழங்கினார்.
தனது மகளின் கரம் பற்றிய மாப்பிள்ளைக்கு பரிசாக புத்தம் புதிய டிவிஎஸ் 50யை சீதனமாக தந்து சபையோரின் முன் தனது செல்வாக்கை உயர்த்திக் காட்டினார். அவர்களின் வாழ்வில் துணை நிற்க எண்ணிய எனது நம்பிக்கையை சுக்குநூறாக்கினார்.
அவர்கள் குடும்பத்தில் ஒரு அங்கமாக இருக்க எண்ணிய நான், அந்த சக்களத்தி புதிய டிவிஎஸ் 50ன் வரவால் அந்நியமானேன். எங்கோ பிறந்த அவர்களை சந்திக்க வைத்த நான், அந்த சந்திப்பு மூலம் அவர்களை ஒருங்கிணைத்த நான், அவர்களின் காதல் வாழ்க்கைக்கு துணையாக நின்ற நான் இப்போது வேண்டாத ஒன்றாய் ஆனேன். ஆம்! அந்த நன்றி கெட்ட மானிட ஜோடி, தாங்கள் செல்லும் இடங்களுக்கெல்லாம் எனக்கு பதில் அந்த புதிய வண்டியில் செல்ல ஆரம்பித்தனர்.
மாமனார் தந்த சீதனம், என்னை அனாதையாக்கவே அவர்களின் வாழ்வில் வந்தது போல தோன்றியது. அதன் பளபளப்பும், ஜொலிஜொலிப்பும் என்னிடம் அதன் மேல் பொறாமையை தோற்றுவித்தது. குறிப்பாக வாரயிறுதி நாட்களில் எனக்கு மிகவும் பிடித்த கடற்கரைக்கு செல்லும் போது கூட என்னை தவிர்த்த அவர்களின் கொடுஞ்செயல் என்னால் தாங்க முடியாத ஒன்றாய் இருந்தது. மொத்தத்தில் அவர்களின் அன்பான திருமண வாழ்க்கையில் தேவையற்ற ஒரு பொருளாக நான் மாறினேன்.
‘அலையில்லாமல் கடலில்லை. ஆறுதல் இல்லாமல் துன்பமில்லை’ என்பது போல் புதிதாய் அந்த சக்களத்தி வந்த பின்பும் என்னை தூக்கி எறியாமல் அவர்கள் இல்லத்தில் ஒரு ஓரமாக இடம் தந்தது மட்டுமே அந்நாட்களில் எனக்கு ஆறுதல் தந்தது. ஆம்! முதன்முதலில் அவன் உழைப்பில் வாங்கிய பொருள் நான் அல்லவா? அவன் அடிமனதில் என் மேல் பாசம் இருக்கத்தானே செய்யும்? அதனால் தான் என்னை அவன் கைவிடவில்லை என எனக்கு நானே ஆறுதல் கூறி எனது இந்த நிலை மாற இறைவனிடம் மனமார வேண்டினேன்.
நான் வேண்டிய தெய்வம் என்னை கைவிடவில்லை.
Comments
Post a Comment