ஒரு மிதிவண்டியின் பயணம் - 7. மீண்டும் வசந்தம்

முந்தைய பகுதிகளை படிக்க...

முன்னுரை

 7. மீண்டும் வசந்தம்

இன்று


நான் புண்ணியம் செய்தவன். ஆம்! இவ்வுலகில் தான் வந்த காரியம் முடிந்ததும், மண்ணிற்கு பாரமாய் விட்டு செல்லும் அற்ப மனித உடல் போல அல்லாமல், ஒவ்வொரு பிறவி முடிந்ததும் ஒரு கூட்டில் இருந்து மற்றொரு கூட்டிற்கு செல்லும் ஆன்மாவிற்கு ஈடானவன்.  எனவே என்னை  மறுசுழற்சி செய்யும் படியான உலோகமாய் படைத்த அந்த இறைவனுக்கு நன்றி சொன்னேன்.    


இன்பமோ துன்பமோ அதை பொருட்படுத்தாமல், ஓட்டுபவரின் விருப்பத்திற்கேற்ப தனக்கான தடத்தில் தொடர்ந்து ஓடிக் கொண்டிருப்பது வாகனங்களின் கடமை.  அது போல நானும் எனது கடமையை செய்ய தயாரானேன். எனது கடந்தகால நினைவுகளை பற்றி எண்ணி எண்ணி மேலும் குழம்பாமல், எனது அடுத்த பணியை செய்ய தயாரானேன். ஆம்! தேவையான பதத்திற்கு நான் தயாரானதும், என்னை எடுத்து ஒரு அச்சு இயந்திரத்தில் ஊற்றினர். நானும் ஒரு சிறிய நதி போல அந்த அச்சில் உள்ள வழியில் பாய்ந்து ஓட ஆரம்பித்தேன். ஒரு அச்சு நிரம்பியதும், அடுத்த அச்சில் என தொடர்ந்து பயணித்தேன். இறுதியாக அனைத்து அச்சுகளும் நிரம்பிய பின், அதில் இரும்பு குழம்பு ஊற்றுவது நிறுத்தப்பட்டது. 


அச்சில் ஊற்றப்பட்ட இரும்பு குழம்பு காய்ந்து, இறுகி, உறுதியாக சிறிது அவகாசம் வழங்கப்பட்டது. இரும்பு பிரித்தெடுக்கும் இடத்திலும், கொதிக்கும் உலையிலும் நான் பட்ட கஷ்டங்களை சற்று மறந்து எனது மறுபிறவியின் புதிய வடிவத்தை காண நான் ஆவலுடன் தயாரானேன்.   



அன்று


உற்சாகமான திருமண பந்தத்தின் பின் என்னை உதாசினப்படுத்திய அவர்கள் வாழ்வு ஒரு ஆண்டில் அடுத்த கட்டத்தை அடைந்தது. ஆம்! அவர்களை பெற்றோர் ஆக்க ஒரு மகன் பிறந்தான். அவர்கள் காதலை மடியில் சுமந்த நான், அவர்களின் வாரிசையும் சுமக்க ஆசை கொண்டேன் ஆனால் என்னால் என்ன செய்ய முடியும்? நான்தான் அவர்களின் வாழ்வில் இருந்து நீக்கப்பட்டு, ஒரு ஓரமாக கிடக்கிறேனே… எப்படி அந்த இளம் பிஞ்சை என் மேல் ஏற்றுவார்கள்?  இப்படியெல்லாம் நான் எண்ணியிருக்க… அந்த குழந்தை கொஞ்சம் வளர்ந்ததும் சில சமயம் என்மேல் அமர வைத்து அதற்கு சாதம் ஊட்டிய எனது சகோதரியின் அன்புக்கு ஈடு இணை ஏதுமில்லை. 


அவள் தனது குழந்தைக்கு உணவு ஊட்டும்போதெல்லாம் பல பல கதைகளை சொல்வாள். அப்போதெல்லாம் நானும் அந்த அறியாச்  சிறுவனுடன் இணைந்து அவற்றையெல்லாம் அக்கறையுடன் கேட்பேன். அக்கதைகளில் அவர்களது கடந்தகால நினைவுகள், எதிர்கால கனவுகள் எல்லாம் இருக்கும். அவற்றையெல்லாம் கேட்க கேட்க, நானும் அவர்களின் எதிர்கால வாழ்வில் தொடர்ந்து பங்கேற்க ஒரு நல்வாய்ப்பை தரும்படி அந்த இறைவனிடம் மனமார வேண்டினேன். 


நான் வேண்டிய தெய்வம் என்னை கைவிடவில்லை, எனது வேண்டுதல் வீண் போகவில்லை என்பது போல் இந்த ஆண்டில் (1990-91) ஈராக் - அமெரிக்கா இடையே ஏற்பட்ட வளைகுடாப் போர் காரணமாக சர்வதேச சந்தையில் ஏற்பட்ட கச்சா விலை உயர்வும் அதன் தொடர்ச்சியாக பெட்ரோல் விலை உயர்வும் ஏற்பட்டு என் நெஞ்சில் பாலை வார்த்தது.


பிள்ளை பிறந்ததால் ஏற்கனவே எகிறிய குடும்ப செலவுகள் ஒருபுறம், அதனுடன் இணைந்த விலைவாசி உயர்வு ஒருபுறம் என குடும்ப பாரம் அவனின் கழுத்தை சுற்றியது. அன்றாட செலவுகளை கூட சமாளிக்க முடியாமல் திண்டாடி போனான். சிலநாட்கள் என் மேல் லேசாக கை வைத்து சாய்ந்தபடி சிந்தனை வசப்பட்டபடியே காணப்பட்டான். அப்போதெல்லாம் அவனின் தொடுதலின் வழியே அவனது  உணர்வுகளை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. 


“கவலைப்படாதே நண்பா… உனக்கு தோள் கொடுக்க நானிருக்கிறேன். நானும் உன் குடும்பத்தில் ஒரு அங்கமல்லவா? இருவரும் இணைந்து நமது குடும்பத்தை காக்கலாம்” என நான் கூறிய வார்த்தைகள் அவன் செவிகளுக்கு எட்டியது போலும்.


நீண்ட நாட்களுக்கு பிறகு என்னை ஒருமுறை சர்வீஸ் செய்து,  லேசாக துருவேறிய எனது பாகங்களை சுத்தம் செய்து, இரு டயர்களையும் மாற்றி புதிப்பித்தான். எனக்கு இரண்டாம் முறையாக வாழ்வளித்தான். அதன்பின் என் சக்களத்தி அதுதான் அந்த டிவிஎஸ் 50யை சற்று ஓரம் கட்டி, தினமும் என்னை அழைத்துக் கொண்டு அலுவலகம் செல்ல ஆரம்பித்தான். அதுமட்டுமின்றி குடும்ப செலவுகளை ஈடுகட்ட மீண்டும் பகுதி நேர வேலைக்கு செல்ல முடிவு செய்தான். என்னை மீண்டும் அவன் வாழ்வுக்கு பயன்படுத்திக் கொண்டான் என்பதே நிதர்சனமான உண்மை… 


என்னதான் அவன் முடிவு செய்தாலும், நான் ஒத்துழைத்தாலும் சூழ்நிலை அவனுக்கு சாதகமாக இல்லை. மீண்டும் ஒரு பகுதிநேர வேலை கிடைப்பது அவ்வளவு எளிதாக இல்லை. என்னுடன் இணைந்து பல இடங்களை சுற்றித் திரிந்து இறுதியாக ஒரு கடையில் மாலை நேரத்தில் கணக்கெழுதும் வேலையில் சேர்ந்தான். நல்லவேளை! பழையபடி பொதி சுமக்க வேண்டிய தேவையில்லை என எனக்கு நானே ஆறுதல் கூறிக் கொண்டேன். 


தினமும் மாலை அலுவலக வேலை முடிந்ததும், அரக்கப்பரக்க இருவரும் ஓடி வருவோம். வீட்டிற்கு சென்றதும் உடனே முகம் அலம்பி, உடை மாற்றி, சுடச்சுட ஒரு கோப்பை காபியை அவசர அவசரமாய் பருகிவிட்டு, குழந்தையை ஒருமுறை தூக்கி கொஞ்சி விட்டு மீண்டும் என்னிடம் வருவான். அதற்குள் நானும் அந்த இடைவெளியில் சிறிது நேரம் இளைப்பாறி விட்டு அவனுக்காக காத்திருப்பேன். இருவரும் இணைந்து அடுத்த வேலையை நோக்கி ஓடுவோம். அவன் வேலை செய்து கொண்டிருக்கும் நேரத்தில் எல்லாம் இப்படி குடும்பத்திற்காக ஓடி ஓடி உழைக்கும் அவனை பற்றியே பெருமையாக எண்ணியபடியே நான் காத்திருப்பேன். ஆனால் அவனுக்கு என்னைப் பற்றி எல்லாம் சிந்திக்க நேரம் ஏதும் இருப்பதில்லை.  

   

முன்பு போல் என்னை அடிக்கடி துடைக்கும் பழக்கம் இப்போதெல்லாம் அவனிடம் இல்லை. நானும் அதைப் பற்றி எண்ணி கவலை கொள்ளவில்லை. எது எப்படியோ? அவனுடன் இணைந்து மீண்டும் எனது பயணத்தை துவங்கியதே எனக்கு ஓரளவு திருப்தியாக இருந்தது. என்னதான் வாரநாட்களில் இருவரும் இப்படி ஓடி ஓடி உழைத்தாலும், ஞாயிற்றுக்கிழமை அன்று மட்டும் எனக்கு ஓய்வு தர ஆரம்பித்தான். அன்று மட்டும் குடும்பத்துடன் உற்சாகமாக ஊரை சுற்ற அவளை (டிவிஎஸ் 50) அழைத்துக்கொண்டு செல்வான்.  


அவனுக்காக உழைத்து ஓடாய் தேய மட்டும் நான். உற்சாகமாக ஊரை சுற்ற மட்டும் அவளா? என நான் பொறாமை பட்டாலும், எனக்கும் வயதாகிறதல்லவா? அவர்களின் முழு குடும்பத்தையும் சுமக்கும் தெம்பும் என் உடலில் இப்போது இல்லையே… எனவே குறைந்தபட்சம் அன்று ஒரு நாளாவது எனக்கு ஓய்வு கிடைப்பதை எண்ணி அமைதி அடைந்தேன். ஒருவழியாக மீண்டும் என்னை அவன் வாழ்வில் இணைத்த இறைவனுக்கு நன்றி சொன்னேன். 


எங்கள் சந்தோச பயணம் என்றென்றும் தொடர ஆவல் கொண்டேன்.


அடுத்த பகுதியை படிக்க...

Comments