முந்தைய பகுதிகளை படிக்க...
முந்தைய பகுதிகளை படிக்க...
முன்னுரை
9. திசை மாறிய பாதை
இன்று
அந்த வார்ப்பகத்தின் கிடங்கில் (store room) சில நாட்கள் அமைதியுடன் கூடிய ஓய்வுக்கு பின், புதிதாய் வார்க்கப்பட்ட இரும்புக் குழாய்கள் எல்லாம் ஒரு வண்டியில் ஏற்றப்பட்டு, அவை அருகிலிருந்த மற்றொரு தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டன. சில நாட்களுக்கு முன்பு ஒரு குப்பையை போல பழைய இரும்பாய் இங்கு வந்த நான், இன்று ஒரு கரும்பை போல உருவம் கொண்ட புதிய இரும்புக் குழாயாக வெளியேறினேன்.
இது போன்ற தொழிற்சாலையை எங்கேயோ எப்போதோ பார்த்தது போல தோன்றினாலும் அது என்ன இடம் என்று எனக்கு சரியாக தெரியவில்லை. அந்த இடத்தை அடைந்ததும் இதற்காகவே காத்திருந்தது போல அவசர அவசரமாய் இறக்கிவிட்டு, சொல்லாமல் கொள்ளாமல் அங்கிருந்து புறப்பட்டது, எங்களை அங்கு அழைத்து வந்த வண்டி. அது புறப்பட்டதும் அங்கிருந்த இயந்திரங்களையும், அவர்கள் வைத்திருந்த ஆயுதங்களையும் பார்த்து நான் பதறிப் போனேன்.
ஆம்! அங்கிருந்த அறுக்கும் இயந்திரமும் (Saw machine), பற்றவைக்கும் இயந்திரமும் (Welding cum cutting machine) நான் மறந்திருந்த அந்த பழைய இரும்பு பிரித்தெடுக்கும் இடத்தையும், அதில் அக்குவேறு ஆணிவேராய் பிறித்தெரியப்பட்ட கொடூர நினைவுகளும் என் கண் முன் தோன்றியது. மீண்டும் ஒரு மரண பீதி என்னை சூழ்ந்தது.
அன்று
ஒரு சிறு தீப்பொறியே மிகப்பெரிய காட்டின் அழிவின் ஆரம்பம் என்பது போல் அன்று அவர்கள் குடும்பத்தில் ஆரம்பித்த விரிசல் மெல்ல மெல்ல விரிவடைந்து கொண்டே சென்றது. அதுவரை அன்பும் ஆசையும் கரைபுரண்டு ஓடிய அந்த வீட்டில், அடிக்கடி வார்த்தைகள் முட்டிக்கொள்ளும் சத்தம் வீட்டின் வெளியே வரை கேட்க ஆரம்பித்தது. என்னால் ஆரம்பித்த அவர்களின் சந்தோச பயணம், என் கண்ணெதிரே சிதறிப் போனது கண்டு என் மனம் பதறிப் போனது. அவனை போலவே நானும் பல இரவுகள் தூங்க முடியாமல் தவித்தேன். என்னதான் நான் சமாதானம் கூறினாலும் எனது வார்த்தைகள் எதுவும் அவளின் செவிகளுக்கு எட்டவில்லை. அவனோ நான் கூறும் மொழிகளை கேட்கக்கூட மனமில்லாதது போல் எப்போதும் எதையோ இழந்தது போல மௌனம் காக்க ஆரம்பித்தான். மனம் விட்டு பேச நானிருந்தும் அவன் பேசாமல் மௌனம் காத்தது என்னை புறக்கணிப்பது போல் இருந்தது. எனது உயிர் நண்பனின் வாழ்வில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றத்தை எண்ணி நான் வருந்தியிருக்க, அதை விட கொடிய செயல் ஒன்றை என் மூலமே நிறைவேற்றினான் அவன்.
இன்று நாங்கள் சென்ற இடத்திற்கு இதற்கு முன்பு வந்ததில்லை. இங்குதான் வருவான் என முன்பே தெரிந்து இருந்தால் வரும் வழியிலேயே நிச்சயம் பழுதாகி நின்றிருப்பேன். ஆனால் என்ன செய்வது? விதி வலியது என்பது போல் அவனும் அந்த சாக்கடைக்குள், அதுதான் அந்த மதுபான கடைக்குள் நுழைந்தான். அதுவரை அவன் மேல் நான் கொண்டிருந்த நம்பிக்கை கீழே விழுந்து சுக்குநூறாக சிதறியது. “நண்பா! இந்த இடம் நமக்கானது அல்ல, வெளியே வா” என உரக்க கத்தினேன். ஆனால் அதனால் பயன் ஏதும் இல்லை. வழக்கம் போல் எனது குரலை அவன் சட்டை செய்யவில்லை. என் கண்முன்னே அந்த பாழும் கிணற்றில் குதிக்க (குடிக்க) ஆரம்பித்தான்.
ஒவ்வொரு முறையும் நான் பலவிதங்களில் தடை செய்தும் அன்று ஆரம்பித்த அந்த பயணத்தை மட்டும் அவனால் நிறுத்த முடியவில்லை. முதலில் எனது நட்புக்கும் பின்பு அவளின் காதலுக்கும் அடிமையான அவன், எனது கண்ணெதிரே மெல்ல மெல்ல அந்த பாழாய் போன குடிக்கும் அடிமையாகி போனான். அதுவரை இலைமறைகாயாய் இருந்த அவர்கள் குடும்ப சண்டை, அதன் பின் நேரிடையாக தெருவிற்கே வந்தது. எனது நண்பனின் குடி, குடியால் குடி மூழ்க ஆரம்பித்து விட்டது. நான் சேர்த்து வைத்த காதல் என் கண் முன்னே சில்லு சில்லாய் சிதறிப் போனது.
அதன்பின் தினமும் மாலை நேரம் ஆனதும் அவனின் கைகளில் ஏற்படும் நடுக்கத்தை நான் உணர ஆரம்பித்தேன். ஆனால் அந்த பாவ கடைக்கு அவனை அழைத்துச் செல்லும் போது எனக்குள் ஏற்படும் மன நடுக்கத்தை அவன் உணரவில்லை. முதலில் “வேண்டாம் வேண்டாம்” என தடுத்த நான், பிறகு அவனுக்கு ஆறுதல் கூற எண்ணி, வேறு வழியின்றி நடுங்கியபடியே நானே அவனை தினமும் அந்த மதுபான கடைக்கு அழைத்துச் செல்ல ஆரம்பித்தேன். நாளடைவில் அங்கு அவன் குடித்த அந்த மருந்து அவன் உடலில் நன்றாய் வேலை செய்ய ஆரம்பித்தது. ஆம்! போகும் போது என்னை ஓட்டிச் செல்லும் அவன், திரும்பும் போது பெரும்பாலும் தள்ளாடியபடியே வருவதை கண்டேன். நான் தயாராக இருந்தும் அவனால் என்னை ஓட்ட முடியவில்லை என்பதால் பெரும்பாலும் என்னை தள்ளிக்கொண்டே செல்வான். போதையின் பிடியால் அவன் பிடி நழுவி, என்னை அடிக்கடி கீழே போடவும் ஆரம்பித்தான்.
அதன்பின் எங்கள் சந்தோச பயணம், சங்கட பயணமாய் மாறியது. ஒவ்வொரு முறை அவன் என்னை கீழே போடும் போதெல்லாம் நாங்கள் உற்சாகமாக கடற்கரைக்குச் சென்று துள்ளித்திரிந்த நாட்களும், அவன் என்னைக் துணை கொண்டு தனது காதலை தேடிய நாட்களும், நாங்கள் இருவரும் சேர்ந்து அவன் குடும்பத்திற்காக உழைத்த நாட்களும் என் நினைவுக்கு வந்தது. ஆனால் என்ன செய்வது? எங்கள் பயணம் திசை மாறி வெகுநாள் ஆகிவிட்டதல்லவா?
இலக்கில்லா எங்களின் அந்த பயணம் அடுத்த கட்டத்தை விரைவிலேயே அடைந்தது. ஆம்! நாங்கள் இருவரும் இணைந்து மேற்கொண்ட அந்த ஆபத்தான பயணம் வெறும் மதுபான கடைக்கு மட்டுமல்ல… அதன் தொடச்சியான வட்டி கடைக்கும் தான். ஏற்கனவே குடும்ப செலவுகள் ஏறிய நிலையில், பகுதி நேர வேலைக்கும் செல்லாமல் பகுதி நேர குடிகாரன் ஆனதால் எங்கள் பயணத்தை போலவே அவன் குடும்பமும் தள்ளாடியது. செலவை சமாளிக்கும் பொருட்டு அடுத்த வழியை நோக்கி எங்கள் பயணம் சென்றது.
முதலில் கைமாற்றாய் சிறு சிறு தொகைகளை வாங்க ஆரம்பித்த அவனது அந்த பழக்கம் அடுத்ததாக கடன்களில் போய் முடிந்தது. ஒவ்வொருமுறை அவன் கடன் வாங்க என்னை எடுத்து செல்லும்போதும் “இதெல்லாம் நமக்கு தேவையா நண்பா? அனைத்தையும் விட்டுவிட்டு பழையபடி நமது உழைப்பை தொடரலாம்” என நான் கூறியது அவன் காதுகளில் ஏறவில்லை. அவனுக்காக ஓடி ஓடி நான் தேய்ந்து கொண்டிருக்க, அவன் வாங்கிய கடன்கள் வேக வேகமாக வளர்ந்து பெரிதாக மாறியது. அவர்களும் குடும்ப செலவுகளை சமாளிக்கும் பொருட்டு வீட்டில் இருந்த ஒவ்வொரு பொருட்களாய் விற்க ஆரம்பித்தனர். கடன்காரர்களிடம் பதில் சொல்ல முடியாததால் அடிக்கடி பதுங்கியும், ஒளிந்தும் செல்ல வேண்டியிருந்தது மனதிற்கு கடினமாய் இருந்தது. இதற்கெல்லாம் விடிவு காலம் வராதா? இழந்த எங்கள் பொற்காலம் மீண்டும் திரும்பாதா? என ஏங்க ஆரம்பித்தேன்.
இறுதியாக திசைமாறிய எங்களின் அந்த தள்ளாட்ட பயணம் இன்று முடிவுக்கு வந்தது. ஆம்! வாங்கிய கடனுக்கு வட்டி கட்டாததால், கடன் கொடுத்த அந்த வட்டிக்காரனின் ஆட்கள் வீட்டு வாசலுக்கு வந்து பெரும் சத்தம் போட்டனர். அக்கம்பக்கத்தில் உள்ளோர் எல்லாம் கூடி நின்று வேடிக்கை பார்த்தாலும் அவர்களை எதிர்த்து யாரும் கேள்வி கேட்க முடியவில்லை. ஆனால் மற்றவர்கள் போல் என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை. நானும் அவனும் இணைந்து உழைத்து அந்த கடனை விரைவில் அடைத்து விடுவோம் என நான் கூறிய வார்த்தைகள் அவர்களுக்கு கேட்டது போலும். அதுவரை அவனிடம் பேசிக்கொண்டிருந்த அவர்களின் பார்வை என் மீது விழுந்தது. ஆனால் அந்த பார்வையின் அர்த்தம் முதலில் எனக்கு புரியவில்லை. அது புரிந்தபோது என் மனதில் ஏற்பட்ட வலிகளை கூற வார்த்தைகளும் இல்லை.
கொடுக்க வேண்டிய வட்டிக்கு ஈடாக அவர்கள் என்னை எடுத்து செல்ல அவர்கள் முடிவு செய்ததும் அதிர்ந்து போனேன். அவன் எவ்வளவு தடுத்தும் அவர்கள் கேட்பதாய் இல்லை. அவளும் தன் பங்கிற்கு அழுது பிரண்டும் அதனால் பயனேதும் இல்லை. யார் தடுத்தும் கேளாத அவர்கள், இறுதியாக அவனின் வாழ்வின் ஒரு அங்கமாய் விளங்கிய என்னை அவ்வாழ்வில் இருந்து நீக்கி, இணைபிரியா எங்கள் நட்பை உடைத்தெறிந்து, தரதரவென என்னை அங்கிருந்து இழுத்து அழைத்துச் சென்றனர்.
இனியொருமுறை நான் அவனை பார்ப்பேனா என தெரியவில்லை.
Comments
Post a Comment