ஒரு மிதிவண்டியின் பயணம் - 10. இறுதி பயணம்

முந்தைய பகுதிகளை படிக்க...

முன்னுரை

10. இறுதி பயணம் 


இன்று


மனிதர்கள் பிறரின் புறத் தோற்றத்தை கொண்டே அவர்களை அளவிடுவது போல அங்கிருந்த ஆயுதங்கள் மற்றும் இயந்திரங்களை கண்டதால் ஏற்பட்ட எனது  பயம் அர்த்தமற்றது என விரைவில் நான் உணர்ந்தேன். ஆம்! வெறும் எலும்பு போல இரும்புக் குழாயாய் இருந்த எனக்கு உடல் கொடுக்கவே அவர்கள் அந்த ஆயுதங்களையும், இயந்திரங்களையும் அங்கு  வைத்திருக்கின்றனர் என்பதை விரைவாய் உணர்ந்து கொண்டேன். 


அன்று பழைய காயிலான் கடையில் நடந்தது போல எங்களை கண்டபடி தாக்காமல், வார்ப்பகத்தை போல எங்களை உலையிலிட்டு உருக்காமல், இந்த தொழிற்சாலையில் எங்களை சற்று மென்மையாக கையாண்டனர். அளவுகோல் (measuring tape) கொண்டு அளந்த பின், தேவைக்கு அதிகமாக இருந்த எங்களின் ஓரங்கள் மட்டும் வெட்டப்பட்டன. வெட்டும் போது வலித்தாலும், எனது புதிய உருவத்தை காணும் ஆவலில் அவ்வலியை சற்று பொறுத்துக் கொண்டேன். தேவையான அளவுகளில் வெட்டியபின் குறுக்கும் நெடுக்குமாக வைக்கப்பட்டு வெல்டிங் மூலம் ஒட்டவைக்கப் பட்டோம். 


கால்களை போன்ற நான்கு குழாய்களை சேர்த்து வைத்து, அவற்றை இணைக்கும் செவ்வக வடிவம் போல் தோன்றிய எனது புதிய உருவை அடைந்தேன். அனைத்து பாகங்களும் நன்றாக வெல்டிங் மூலம் இணைக்கப்பட்ட பின், கூரான முனைகள் மற்றும் சற்று அதிகமாக உலோகம் உள்ள இடங்கள் மட்டும் லேசாக தேய்த்து (Grinding) மழுங்கடிக்கப்பட்டது. பக்கவாட்டில் ஒரு சில இடங்களில் துளைகளும் இடப்பட்டு, அதன் பின் அடுத்த கட்ட செயல்முறைக்காக காத்திருக்க ஆரம்பித்தேன் .     

 

அன்று


செலுத்த வேண்டிய வட்டிக்கு ஈடாக என்னை எடுத்து வந்த பணியாட்களின் சாமர்த்தியத்தை அவர்களின் முதலாளி மெச்சவில்லை. மாறாக ஒரு ஓட்டை சைக்கிளை எடுத்து வந்ததாக கூறி அவர்களை வசை பாடினான். “எதற்கும் உதவாதது” என அவன் என்னை பற்றி கூறிய வார்த்தைகள் என் காதில் ரீங்காரமிட்டு கொண்டிருந்தது. "நானா எதற்கும் உதவாதவன்? என்னை பற்றி அவனுக்கு என்ன தெரியும்? எனது நட்பை, உழைப்பை பற்றி எல்லாம் அவனுக்கு என்ன தெரியும்? ஏதோ எனது போதாத காலம் இப்படி நேர்ந்து விட்டது. அதற்காக அவன் என்னவேண்டுமானாலும் பேசலாமா?" என  நான் பதில் கூறியதை அவன் சிறிதும் மதிக்கவில்லை. கோபமாக என்னை ஒரு மூலையில் தூக்கி போடும்படி அவன் ஆணையிட்டதை அவனது பணியாளர்கள் நிறைவேற்ற துணிந்தனர்.

ஆம், அந்த வட்டிக்கடையின் வெளியே ஒரு ஓரமாய் தூக்கியெறியப்பட்டேன். முன்பொருமுறை ஒரு பழைய சைக்கிள் கடையில் முடங்கி இருந்த நிகழ்வு என் நினைவுக்கு வந்தது. அப்போது என்னை உயிர்ப்பிக்க அவன் வந்தது, என்னுடன் நட்பு பாராட்டியது, பகுதிநேர வேலை, கடற்கரை என பல இடங்களுக்கு அவனோடு சுற்றி திரிந்தது, பிறகு அவள் எங்கள் வாழ்வில் வந்தது. அனைவரும் இணைந்து ஒரு குடும்பமாய் மகிழ்ச்சியில் திளைத்தது, அந்த டிவிஎஸ் 50 வந்தாலும் அவர்கள் என்னை தூக்கியெரியாமல் பாதுகாத்தது, அதன் பிறகு மதுக்கடைக்கு திசைமாறிய எங்கள் பயணத்தை  மீண்டுமொருமுறை என் மனம் அசை போட்டது. என் வாழ்வில் நீக்கமற நிறைந்த என் நண்பனை சந்திக்க எண்ணி துடித்தது. 


ஆம்! அவன் மீண்டும் வருவான், என்னை இந்த இக்கட்டில் இருந்து நிச்சயம் மீட்பான். அன்று போலவே இன்றும் என்னை உயிர்ப்பிப்பான். இருவரும் இணைந்து பல இடங்களுக்கு பயணிப்போம். மீண்டும் எங்கள் வாழ்வை புதிதாய் துவங்குவோம். இவ்வாறெல்லாம் எண்ணி நான் அவனுக்காக காத்திருக்க ஆரம்பித்தேன். 


நாட்கள் வாரங்கள் ஆனது. வாரங்கள் மாதங்கள் ஆனது. ஆனால் அன்று போல் அவன் வரவில்லை. கவனிப்பாரின்றி கிடந்த எனது பாகங்களில் துருவேறி ஒவ்வொரு பாகமாக செயலிழக்க. எனது உயிர் ஊசலாட ஆரம்பித்தது.        

கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கடந்த பின்பு தான் அந்த சம்பவம் நிகழ்ந்தது. நான் வைக்கப்பட்டிருந்த இடத்தை நோக்கி ஒரு மூன்று சக்கர ட்ரை சைக்கிள் வந்தது. அதில் என்னை மட்டுமின்றி என் அருகில் இருந்த பிற பொருட்களையும் ஒரு குப்பையை போல் அள்ளிப் போட்டனர். என்னை விட்டுவிடுங்கள் என் நண்பன் எனக்காக காத்திருப்பான். விரைவில் என்னை தேடி வருவான் என்ற எனது கூக்குரல் அவர்களின் காதுகளில் விழவில்லை. என்னை ஏற்றிய அந்த வண்டி பழைய பொருட்களை பிரித்தெடுக்கும் ஒரு காயிலான் கடையை நோக்கிச் சென்றது. 


அதன் பிறகு நேர்ந்த பல்வேறு கட்ட சோதனைகளால் எனது நினைவுகளை முற்றிலும் இழந்தேன். 



அடுத்த பகுதியை படிக்க...

Comments