ஒரு மிதிவண்டியின் பயணம் - 12. இரும்பில் கசிந்த ஈரம்

முந்தைய பகுதிகளை படிக்க...

முன்னுரை

12. இரும்பில் கசிந்த ஈரம் 


இன்று

    அமைதியான என் மனதில் நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று காலையில் இருந்தே திடீரென ஒரு படபடப்பு ஆரம்பமானது. என் இதயம் பல மடங்கு வேகமாக துடித்தது. இதுவரை நான் இப்படி உணர்ந்ததில்லை. என்ன இது? என் உடலில் உயிர் ஒன்று புகுவது போல தோன்றுகிறதே… என்ன ஆயிற்று எனக்கு? என்ன நடக்கிறது இங்கே? என நான் உணர்வதற்குள் வேகவேகமாக ஒரு ஸ்டெர்ச்சர் என்னை நோக்கி வந்தது. அதில் இருந்த ஒரு நோயாளியை அவசர அவசரமாக என் மேல் படுக்க வைத்தனர். பிறகு மருத்துவர் ஒருவர் வந்து அந்த நோயாளியை பரிசோதனை செய்து சில அறிவுரைகளை வழங்கி சென்றார். அதன்பின் பக்கத்து வார்டிலிருந்த ஒருவரும், அந்த நோயாளியுடன் வந்தவர்களோடு பேசியது எனக்கு நன்றாக கேட்க ஆரம்பித்தது 

        

    “என்ன ஆச்சு இவருக்கு? ஏன் இப்படி இருக்கார்?”  பக்கத்து வார்டிலிருந்தவர் கேட்டார்: 


    “குடும்ப பிரச்சனை, குடிச்சி குடிச்சி ஒடம்ப கெடுத்துகிட்டார்.” உடன் வந்தவர் பதில் சொல்ல ஆரம்பித்தார்.  


    “டாக்டர் என்ன சொன்னார்? பொழச்சுக்குவாரா?”


    “தெரியல… நர்ஸ் கேட்டு சொல்றேன்னு சொல்லியிருக்காங்க…”


    “என்ன வேலை செஞ்சுட்டு இருந்தார்?”


    “ஒரு கம்பெனில வேல செஞ்சிட்டு இருந்தார். அதுமட்டுமில்லாம பார்ட் டைமா ஒரு கடைல கணக்கு எழுதிட்டு இருந்தார். பாவம், ஓடி ஓடி உழச்சவர், இப்படி சின்ன வயசுலேயே இப்படி ஆயிட்டார்.”      


    "அவரு பேரு?"


    "கிருஷ்ணன்"


எங்கேயோ கேட்ட பெயர் போல இருக்கிறதே என நான் சற்று உற்று கவனிக்க, அவர்கள் பேச்சை தொடர்ந்தனர்.


    “குடும்பத்துல யாரு இருக்காங்க?”


    “மனைவியும், அஞ்சு வயசு பையனும்”


    “அவங்க என்ன பன்றாங்க?” 


    “பாவம் இவர் இப்படி ஆயிட்டதால வேல போய்டுச்சு, அவரையே நம்பி வந்த பொண்ணு பேரு மீனாட்சி. அந்த பொண்ணு வீட்டு வேலை செஞ்சு தான் இப்போ அவருக்கு கஞ்சி ஊத்துது” 


    “நீங்க?” 


    “அவரு பக்கத்து வீட்டில இருக்கேன். அவங்களுக்கு உதவ வந்து இருக்கேன். அவங்க டாக்டர் கிட்ட பேசிட்டு இருக்காங்க. அவங்க வந்ததும் நான் கிளம்பனும்.”


அப்போது கண்ணீரும் கம்பலையுமாக, வாயிலும் வயிற்றிலும் அடித்து கொண்டு அவள் அங்கு ஓடிவந்தாள். அவளுடன் அந்த சிறுவனும் அழுதுக் கொண்டே உடன் வந்தான். அச்சிறுவன் யார் என எனக்கு அடையாளம் தெரியாவிட்டாலும், அவளை கண்டதும் ஏற்பட்ட அதிர்ச்சியில் எனது முன் ஜென்ம நினைவுகள் அனைத்தும் எனக்கு நினைவுக்கு வந்தது.    

  

ஆம்! முன்னொரு காலத்தில் எனக்கு வாழ்வளித்த எனது நண்பனை, என்னை தங்களின் அங்கமாக எண்ணிய  குடும்பத்தை நான் அடையாளம் கண்டு கொண்டேன். 


எங்கோ ஒரு பழைய சைக்கிள் கடையின் ஒரு ஓரமாக முடங்கி கிடந்த எனக்கு அவன் வாழ்வளித்ததும், நானும் அவனும் ஒன்று சேர்ந்தது ஓடி ஓடி உழைக்க ஆரம்பித்ததும், வாரம் தவறாமல் உற்சாகமாய் அவன் என்னை கடற்கரைக்கு அழைத்துச் சென்றதும், எங்கள் வாழ்வில் எதிர்பாராமல் அவள் குறிக்கிட்டதும், அவர்கள் ஒருவர் மீது ஒருவர் விருப்பம் கொண்டதையும், முதலில் அது எனக்கு பிடிக்காவிட்டாலும் பிறகு அவளின் நல் மனதை புரிந்து கொண்டு நான் அவளை சகோதரியாக ஏற்றதும், என்னை சாட்சியாய் வைத்து வளர்ந்த அவர்களின் காதல் வாழ்வும் எனக்கு நினைவுக்கு வந்தது.  


பிறகு அவர்கள் தங்கள் மண வாழ்வில் இணைந்த போது என் வாழ்வில் சக்களத்தியாய் வந்த அந்த டிவிஎஸ் 50யும், அது வந்த பின்பும் அவர்கள் எனக்கு அடைக்கலம் தந்ததும், அவர்களின் சந்தோச வாழ்வில் விளைந்த அந்த மகனை நான் மடியில் ஏந்தியதும், பிறகொரு நாள் தொலைந்த அந்த டிவிஎஸ்50யால் அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட விரிசலையும், அதனால் தடம் மாறிய அவனது பயணமும், அதன் விளைவாக நான் அவனை விட்டு பிரிய நேரிட்டதும், அவனுக்காக காத்திருந்து காலங்கள் பல கரைந்ததும் கண் முன் தோன்றும் கானல்நீராக எனக்கு காட்சியளித்தது.             


அவனை பிரிந்த பின் வட்டிக் கடை,  காயிலான் கடை, பழைய இரும்பு பிறித்தெடுக்கும் இடம், வார்ப்பகம், தொழிற்சாலை, கிடங்கு என பல இடங்களில் எனக்கு நேர்ந்த கொடுமைகளும், அங்கெல்லாம் நான் அனுபவித்த துயரங்களும், இறுதியாய் பல இன்னல்களுக்கு பிறகு நான் இங்கு வந்து சேர்ந்ததும், இந்த மருத்துவமனையில் சேவையாற்ற துவங்கியதும், நாளடைவில் என் மனம் இறுகி, உணர்வுகள் சுருங்கி, கனத்து போனதும் ஒரு குறும்படம் போல என் மனதில் ஓடியது.


எனக்கு இதுவரை நிகழ்ந்த சோதனைகள் எல்லாவற்றையும் விட இப்போது நான் அனுபவிக்கும் வேதனையே மிகவும் அதிகமாக தோன்றியது. ஆம்! என்னை பிரிந்த அந்த நாட்களில் அவன் திருந்தியிருப்பான். பழையபடி உற்சாகமாகவும் ஆரோக்கியமாகவும் தனது வாழ்வை தொடருவான். நிச்சயம் அவன் வாழ்வு மாறியிருக்கும் என்றல்லவா நான் எண்ணியிருந்தேன். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. இப்படி ஒரு நிலை வரும் என கனவிலும் நான் நினைக்கவில்லை.  


எவ்வளவு முயன்றும் என் மேல் மல்லாந்து படுத்திருந்த எனது நண்பனின் முகத்தை என்னால் ஏறெடுத்து பார்க்க முடியவில்லை. 


“அன்பு நண்பா, நானிருக்கிறேன். உனது வாழ்விலும் தாழ்விலும் உடன் இருந்த நான் மீண்டும் உன்னுடன் இருக்கிறேன். அன்று நீ மிதித்த ஒவ்வொரு மிதிக்கும் ஓடி ஓடி களைத்த நான், இப்போது உன்னை மடியில் ஏந்திக் கொண்டிருக்கிறேன். கவலைப்படாதே, விரைவில் சரியாகி விடுவாய். நான் இல்லை என்றாலும் என்னைப் போலவே வேறொரு சைக்கிளில் உனது பயணம் தொடரும்” என்ற  நம்பிக்கை வார்த்தைகளை எல்லாம் அவன் காதுகளில் கூற ஆரம்பித்தேன். 


ஆனால் நான் இவ்வளவு பேசியும் அவனிடம் ஒரு சிறு சலனமும் இல்லை என்பது எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.       


“உனக்காக இல்லாவிட்டாலும் உன்னையே நாடி வந்த எனது சகோதரிக்காக, உனது மனைவிக்காக, உன்னில் இருந்து தோன்றிய அந்த பிஞ்சு மகனுக்காகவாவது நீ பிழைக்கத்தான் வேண்டும். உன்னை விட அவன் தன் வாழ்வில் உயர்வதை நீ காண வேண்டும். என்னை போன்ற மிதிவண்டியோடு அவன் மல்லுக்கட்டாமல், அவன் தன் சொந்தக் காரில் உன்னை ஊரெங்கும் அழைத்துச் செல்வதை நீ காணத்தான் வேண்டும். முடிந்தால் நமது கடற்கரைக்கு ஒரு முறை சென்று வா. அது உனது பழைய உற்சாகத்தை திரும்ப அளிக்கும். நான் இல்லாவிட்டாலும் இவ்வுலகில் உனது பயணம் தொடரும்.” 

 

இப்படியெல்லாம் நான் அவனிடம் கூறிக்கொண்டிருக்கும் போது தான் மருத்துவர் அங்கு வந்தார். உடன் வந்த அவர்களை  எல்லாம் அந்த அறையிலிருந்து வெளியே அனுப்பிவிட்டு   மீண்டும் ஒருமுறை அவனை சோதிக்க ஆரம்பித்தார். 


அருகில் யாரும் இல்லாத நிலையில், நான் மட்டும் என் நண்பனை காப்பாற்றும் படி அவரிடம் மன்றாடி வேண்டி கேட்டுக் கொண்டேன். சிறிது நேரம் சோதித்த பின் “சொந்தக்காரங்களுக்கெல்லாம் சொல்லி அனுப்ப சொல்லிடுங்க. இன்னும் கொஞ்ச நேரம் தான்” என அவர் கூறிய வார்த்தைகள் இடியாய் என்னுள் இறங்கியது.


“அவன் ரொம்ப நல்லவன் சார், அவன் இன்னும் வாழனும், ப்ளீஸ், எனக்காக அவன காப்பாத்துங்க…” நான் கதறியது எதுவும் அவரின் காதுகளில் விழவில்லை. எங்களை படைத்த அந்த இறைவனுக்கும் கேட்கவில்லை.


செய்வதறியாது அப்படியே பிரமை பிடித்தபடி வெகுநேரம் நின்றிருந்தேன். பின்பு என்னுடன் இணைந்து தனது வாழ்க்கை பயணத்தை துவங்கிய அவனது பயணம் நிறைவுறும் காலம் நெருங்கியதை உணர்ந்தேன். அவளும், உடன் வந்த மற்றவர்களும் நீண்ட நேரம் அழுது பிரண்டு ஓய்ந்த பின், நானும் வேறு வழியின்றி எனது மனதை தேற்றிக் கொண்டேன். 


என்னுடன் இணைந்து தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கிய எனது நண்பனின் இறுதி மூச்சை எனது மடியில்  சுமக்க தயாரானேன்.


ஈரம் கசிந்த எனது இரும்பு இதயத்துடன் உங்களிடம் இருந்து விடை பெறுகிறேன்.


- ஒரு மிதிவண்டியின் பயணம் முடிவடைந்தது  - 


குடி குடியை கெடுக்கும். 



பிற பதிவுகளை படிக்க...

Comments

Post a Comment