எகிப்தின் அற்புதங்கள்... 11. எனது முன்னேற்பாடுகளும் பயிற்சிகளும் (My plans and execution)

முந்தைய பகுதிகளை படிக்க...

அடுத்த பகுதி...


11. எனது முன்னேற்பாடுகளும் பயிற்சிகளும் (My plans and execution)



    இரண்டாம் அனுபவம் என்பதால் புறப்படும் முன்பே பல முன்னேற்பாடுகளை செய்ததாக முதல் அத்தியாயத்தில் கூறியிருந்தேன் ஆனால் அதற்குண்டான பயிற்சிகள், நான் எகிப்து சென்ற பின்பும் தொடர்ந்தது. அந்த திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை பற்றிய இறுதி பதிவே இது...


கெய்ரோ மெட்ரோ

    

எகிப்து பயணம் உறுதியானவுடன் நான் திட்டமிட்ட முதல் விஷயம் நான் அங்கு பார்க்க வேண்டிய இடங்கள் மற்றும் தங்கப்போகும் இடத்தில் இருந்து அவற்றிற்கு இடையே உள்ள பொதுப்போக்குவரத்து வழிகள். பொதுவாக பேருந்தை விட ரயில் பயணத்தில் குழப்பங்கள் குறைவு என்பதால் ஒவ்வொரு இடத்திற்கும் அருகில் உள்ள ரயில் நிலையங்கள், அதன் திசை மற்றும் தொலைவை குறித்துக்கொண்டேன். இது மிகவும் பயனளித்த ஒரு விஷயம். கெய்ரோவில் மூன்று வழித்தடங்களில் இயங்கும் மெட்ரோ சேவை சிறப்பாகவும், சிக்கனமாகவும் இருந்தது. 7 நிறுத்தங்கள் வரை கட்டணம் EGP 5 மட்டுமே. ரயில் சேவையின் எண்ணிக்கையும் அதிகமாகவும், உடனுக்குடனும் இருந்ததால் காத்திருப்பதில் இருந்து எனது நேரம் பெருமளவில் சேமிக்கப்பட்டது.  கெய்ரோ மெட்ரோவிற்கு ஒரு சல்யூட்…


மைக்ரோ பஸ்

மெட்ரோவிற்கு அடுத்து எகிப்தில் எனக்கு அதிகம் கைகொடுத்தது மைக்ரோ பஸ் எனப்படும் ஷேர் ஆட்டோ சேவை. கிட்டத்தட்ட பெரிய ஆம்னி  வேன் போல காட்சியளிக்கும் மைக்ரோ பஸ்கள் சுமார் 12-14 பேர் வரை ஒரே நேரத்தில் பயணிக்க கூடியது. கட்டணமும் மிக மிக குறைவாக 3 கி.மீ.க்கு EGP 3 முதல் 20 கி.மீ.க்கு EGP 6 வரை செலுத்தினேன். 

மெட்ரோ, மைக்ரோ பஸ் மட்டுமின்றி, உபேர் சேவையும் பயன்படுத்த எளிதாகவும், அலுவலகம் சென்று வர வசதியாகவும் இருந்தது.    


இது தவிர அந்நாட்டில் உள்ள இந்திய உணவகங்கள் மட்டுமின்றி எகிப்திய உணவுகளை பற்றியும் கிடைத்த தகவல்கள் மிகவும் பயனுள்ளவையாக இருந்தது (நன்றி: இணையம், கூகுள்)  


எகிப்து மொழி (அரபு)

எகிப்து சென்றபின் நான் உடனடியாக செய்ய ஆரம்பித்த ஒரு விஷயம், நாம் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகளை அந்நாட்டின் மொழியில் கற்க ஆரம்பித்தது. இது பிறருடன் பேசவும், பணியிடத்தில் எளிதாக பழகவும் உதவியது. இதோ அந்த அரபு மொழி வார்த்தைகள் உங்களுக்காக…   

  • Sabah El Kher     - Good morning
  • Sabah El Fol     - Good morning
  • Sabah El Nor     - Reply to Good morning
  • Amel Eh?     - How are you?
  • Tamam     - Good
  • Meya Meya     - Perfect, Excellent, Good
  • Shukran - Thank you
  • Motshaker Awy    - Thank you very much
  • Ashofak Bokra     - See you tomorrow (To Gents)
  • Ashofik Bokra     - See you tomorrow (To Ladies)

எகிப்து வார்த்தைகளை மட்டுமின்றி அரபு எண்களையும் ஒன்று முதல் பத்து வரை படிக்க கற்றுக்கொண்டேன். இது பேருந்து, கார் எண்களை அடையாளம் காண மட்டுமின்றி அந்நாட்டின் பணத்தை (அதில் ஆங்கிலம் இருந்தால் கூட) கையாளவும் எளிதாக இருந்தது.   


  அரபு எண்கள்


எகிப்திய சைவ உணவுகள்


        எகிப்தில் இந்திய உணவகங்கள் அதிகம் உள்ளன. குறிப்பாக மகாராஜா உணவகம் எகிப்து முழுவதும் பல்வேறு கிளைகளை கொண்டு சிறப்பாக செயல்படுகிறது. டோர் டெலிவரி வசதியும் உண்டு. சுவையிலும் குறை ஏதும் இல்லை. அதே போல் ஹில்டன் ஹோட்டலின் உள்ளே அமைந்துள்ள நமஸ்தே உணவகம் சுவையில் சிறப்பான ஒன்று. அங்கு சூப் போல் தரப்படும் தக்காளி ரசம், நமது நாவின் சுவை அரும்புகளை நிச்சயம் தூண்டும் தன்மையுடையது. 


    இவ்வளவு இருந்த போதும் இங்கிருக்கும் இந்திய உணவகங்களில் பெரும்பாலும் பிரியாணியும், ரொட்டி வகைகள் மற்றும் வட இந்திய குழம்புகள் மட்டுமே கிடைக்கின்றன. மேலும் அந்த உணவகங்களும் மதியத்திற்கு மேல் தான் இயங்கும் என்பதால் பிற உணவுகளை சுவைப்பது நிச்சயம் தவிர்க்க இயலாது என்பதை முன்கூட்டியே உணர்ந்ததால், இம்முறை சற்று முன்னதாகவே எகிப்திய சைவ உணவுகளை அறிந்துகொள்ள முயற்சியும், அங்கு சென்ற பின் அதற்கான பயிற்சியும் செய்தேன். ஆம்! நான் மட்டுமின்றி உடன் வந்த நண்பர்களுக்கும் ஒரு சில எகிப்திய சைவ உணவு வகைகளை அறிமுகம் செய்தேன். அப்படி நான் புசித்த உணவு வகைகளை உங்களுக்கும் அறிமுகம் செய்ய விரும்புகிறேன்.




கோஷாரி (Koshari)



கோஷாரி


    இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் எகிப்தின் தேசிய உணவான கோஷாரி ஒரு சைவ உணவு என்பது ஆச்சர்யமான தகவல். இது வேகவைத்த பருப்பு, அரிசி, மக்ரோனி மற்றும் கொண்டைக்கடலை ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு எளிய உணவாகும், மேலும் வறுத்த வெங்காய தூளை அதன் மேல் தூவி, வினிகர் மற்றும் தக்காளி சாஸுடன் சேர்த்து உண்ணவேண்டும். கூடுதல் சுவைக்காக மிளகாய் அல்லது பூண்டு சாஸும் சேர்க்கலாம்.


    ஒரு காலத்தில் ஏழைகளின் உணவாகக் கருதப்பட்ட கோஷாரி இப்போது எகிப்தில் மிகவும் பிரபலமான பொருளாக உள்ளது என்ற போதும் அதை சாஸ் எதுவும் இல்லாமல் தனித்து சாப்பிடுவதே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. குறிப்பாக வயிற்றை பதம் பார்க்காத ஒரு பாதுகாப்பான உணவாக தோன்றியதால் பலமுறைக்கு மேல் இவ்வுணவை சுவைத்தேன்.    




தாமேயா சாண்ட்விச் (Tamya sandwich) 



தாமேயா சாண்ட்விச்



    இது எகிப்தின் பிரபலமான சைவ உணவாகும். ஃபாவா பீன்ஸ் (Fava beans) எனப்படும் ஒருவகை கடலைப்பயறு மற்றும் மூலிகைகளை வறுத்து அரைத்து வடை போல் செய்து அதை சப்பாத்திக்குள் வைத்து சாண்ட்விச் ஆக பரிமாறப்படுகிறது. சுருக்கமாக சொன்னால் சப்பாத்திக்குள்  ஒளித்து வைத்த மசால் வடை.   


    என்னதான் கிண்டல் செய்தாலும் எனக்கு மிகவும் பிடித்த ஒரு உணவு வகை என்பதால் வேண்டி விரும்பி பலமுறை உண்டு மகிழ்ந்தேன். 




ஹம்முஸ் (Hummus) 



ஹம்முஸ் (Hummus) 


    வெள்ளை மூக்கடைலையை (Chickpeas) அரைத்து ஒரு சட்டினியாக்கினால் அதுவே ஹம்முஸ். இது Tameyaவுக்கு தொட்டுக்கொள்ள உதவும் ஒரு பக்க உணவு (Side dish)   




ஃபிட்டீர் பெலாடி (Fiteer Baladi)  



ஃபிட்டீர் பெலாடி (Fiteer Baladi)


    கடவுள் பாதி மிருகம் பாதி என்பது போல், இது பீட்ஸா மற்றும் பப்ஸ் (Pizza and puffs) கலந்த கலவையாகும். பப்ஸ் போல பல அடுக்கு (Layers) கொண்டதாக இருந்தது.    

    எகிப்திய பீஸ்ஸா என்றும் அழைக்கப்படும், ஃபிட்டீர் பெலாடியின் உள்ளே மக்களின் விருப்பப்படி சீஸ், இனிப்பு, காரம் மற்றும் பிற பொருட்கள் உள்ளே வைத்து (Stuffed) அடுமனையில் (Bakkery) தயாரிக்கப்படுகிறது. சுவை நன்றாக இருந்தாலும் லேசாக திகட்டியதால் அதிகம் சாப்பிட இயலவில்லை.    




Ful Mudammas sandwich (Egyptian Fava Beans) 



Ful Mudammas sandwich


    இதுவும் சப்பாத்திக்குள் ஃபாவா பீன்ஸ் துவையல் மற்றும் எள்ளு துவையலை தடவி வைத்தது போல் தரப்பட்ட ஒரு சாண்ட்விச். சுவை சுமாராக இருந்தது. என்னை பெரிதும் கவரவில்லை என்றபோதும் மோசமில்லை. 




குனாஃபா (Kunafa)



குனாஃபா (Kunafa)


    'எகிப்திய இனிப்புகளின் ராணி' என்று கொண்டாடப்படும் குனாஃபா அற்புதமான சுவை கொண்டது. பொதுவாக ரம்ஜானின் கொண்டாட்டத்தில் நிச்சயம் இடம்பெறும் தகுதி பெற்றது. மெல்லிய சேமியா போன்றவற்றால் அடுக்கடுக்காக தயாரிக்கப்படும் இதனுள் கிரீம் சீஸ் மற்றும் பருப்புகள் (Nuts) கொண்டு நிரப்பப்படுகிறது. இனிப்பு விரும்பிகளுக்கு இது ஒரு உண்மையான விருந்தாகும். எகிப்தில் நிச்சயம் சுவைக்க வேண்டிய இனிப்பு. ஒருமுறை சுவைத்தால் போதும்…  எகிப்திய இனிப்புகளின் ராணி என்றென்றும் நம் மனதில் நீங்கா இடம் பெறுவாள்..  


        இத்தகைய சிறப்புமிக்க குனாஃபா தற்போது சென்னை அண்ணாநகர் மற்றும் நுங்கம்பாக்கத்தில் கிடைக்கிறது என நண்பர் ஒருவர் சொல்ல அறிந்துகொண்டேன். விரைவில் சென்னையிலும் குனாஃபாவை ஒரு பிடி பிடிக்க வேண்டும் என உறுதி கொண்டேன்.



உம் அலி (Umm Ali)



உம் அலி (Umm Ali)


    உம் அலி எகிப்தின் பாரம்பரிய இனிப்பு வகைகளில் ஒன்று. பாலில் சர்க்கரை, தேங்காய், திராட்சை ஆகியவற்றை கலந்து அடுக்கடுக்காக (Layers) செய்யப்படும் உணவு, அளவாய் இனிப்பு சேர்க்கப்பட்டதால்  மிகவும் விரும்பி உண்டேன். நாவில் எளிதாய் கரைந்து, மனதிலும் விரைவாய் இடம் பிடித்தது. ஐஸ்கிரீமுடன் கலந்து அல்லது குளிர்சாதன பெட்டியில் வைத்து உண்ண சிறந்தது.




அரிசி பாயசம் (Rice pudding)



அரிசி பாயசம் (Rice pudding)


    பால் சேர்க்கப்பட்ட திக்கான நமது ஊரின் அவல் அல்லது அரிசி பாயாசமே Rice pudding என்ற பெயரில் எகிப்து மட்டுமின்றி ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா மற்றும் கிழக்காசிய நாடுகளில் கிடைக்கிறது. சுவைக்காக வனிலா அல்லது இலவங்கப்பட்டை போடப்படுகிறது. இனிப்பு குறைவாக சேர்த்ததால் எனக்கு பிடித்தாக இருந்தது.




துருக்கிய காபி (Turkish coffee) 

    


துருக்கிய காபி (Turkish coffee) 


    துருக்கிய காபியின் தாயகம் எகிப்து இல்லை என்றபோதும், அரபு நாடுகளில் பிரபலமான ஒரு பானம். எகிப்து அலுவலக நண்பர் ஒருவரின் அறிமுகத்தால் அதை சுவைக்கும் பேறு பெற்றேன். நன்றாக வறுத்து அரைத்த திக்கான கருப்பு காபி  போல் இருந்தது. இதில் சேர்க்கப்பட்ட ஏலக்காயின் வாசனை இதன் நறுமணத்தை கூட்டி சுவைக்க தூண்டியது. தேவையான சர்க்கரை சேர்த்து பருக, நல்ல சுவையாக இருந்தாலும் அடியில் காப்பிக் கொட்டையின் கசடுகள் தேங்கி முழுவதும் குடிக்க இயலாத ஒன்றாக விளங்கியது.

        

        இது முதன்முதலில் ஒட்டோமான் பேரரசில் (அந்நாளைய துருக்கி) 16 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. குர்ஆனின் படி இது ஒரு மருந்தாகக் கருதப்பட்டு ஆரம்பகாலத்தில் தடை செய்யப்பட்டது என்ற போதும், பானத்தின் புகழ் காரணமாக, சுல்தான்கள் ஆட்சியில் தடை நீக்கப்பட்டது என இணையத்தில் தேடி அறிந்துகொண்டேன். பிறகு 17ம் நூற்றாண்டில் துருக்கியில் தங்கம் அல்லது வெள்ளி கோப்பைகளில் விருந்தினர்களுக்கு வழங்கும் அளவுக்கு பிரபலமான ஒன்றாக விளங்கியது. 


    துருக்கி திருமண நிகழ்வுகளில் இதற்கு பெரும் பங்கு உண்டு என்றபோதும், என்னை பொறுத்தவரை பால் கலக்காத திக்கான, வாசனையான காபி. அவ்வளவே… 



முடிவுரை 


எந்த ஒரு செயலுக்கும், சரியான திட்டமிடலே பாதி வெற்றி என்பர். இந்த உண்மையை மனமார உணர்த்திய இந்த அற்புத பயணத்திற்கு நன்றி.


நன்றிகள்

  • பயணத்தை ஏற்பாடு செய்த அலுவலகத்திற்கு

  • என்னை அனுமதித்த எகிப்து மற்றும் இந்திய அரசாங்கத்திற்கு

  • உடன் பயணித்த நண்பர்களுக்கு

  • அன்பாய் பழகிய எகிப்து மக்களுக்கு

  • புகைப்படங்கள் எடுக்க உதவிய ரெட்மி 7Sக்கு

  • இந்த நீண்ட நெடிய பதிவுகளை பொறுமையாய் படிக்கும் உங்கள் ஆர்வத்திற்கு…


மீண்டும் ஒரு பயணத்தில் சந்திப்போம். 


பிற பதிவுகளை படிக்க...

ஒரு பயணியின் வழித்தடம் (உள்ளடக்கம்)

Comments