முந்தைய பகுதிகளை படிக்க...
- அற்புத பயணம் (The second travel)
- மரணம் கடந்த பெருவாழ்வு (Life after death)
- கல்லறை எனும் கலைக்கோவில் (The Great Giza pyramids)
- பாலைநிலத்தின் வரலாறு (Saqqara and Memphis)
- ராஜபோக வாழ்கை (Palace and Coptic museum)
- நைலும் நானும் (Nile river)
- கெய்ரோவின் மறுமுகம் (The Other Side of Cairo)
- மம்மிகளின் தரிசனம் (Mummy museum))
- மத்தியதரைக்கடலின் மடியில் (Alexandra)
10. இன்னும் சில அற்புதங்கள் (Miracles continued…)
2-4 அக்டோபர் 2022
இதுவே நான் இந்த திருநாட்டில் இருக்கப்போகும் கடைசி வாரம். வேலைப்பளு அதிகம் இருந்ததால் வெளியே செல்வது பற்றி அதிகம் யோசிக்க முடியவில்லை என்றபோதும் ஏற்கனவே சென்ற இடங்களில் பெற்ற அனுபவங்களை அசை போடுவதிலும், தாய்நாடு திரும்பப்போகும் தருணத்தை எதிர்நோக்கி காத்திருப்பதிலும் காலத்தை கழித்தேன்.
5 அக்டோபர் 2022
மறுநாள் அரசு விடுமுறை தினம் என்பதால், இன்றே எங்கள் எகிப்திய அலுவலகத்தில் நான் இருக்க போகும் கடைசி நாள். அலுவலகத்தில் உள்ள சக பணியாளர்கள் அனைவருடனும் மீண்டுமொருமுறை அன்பு பாராட்டி, மறக்காமல் நினைவு புகைப்படங்களை எடுத்துக்கொண்டு நன்றி கூறி விடை பெற்றேன். அவர்களின் அன்புக்கு என்றும் நான் கடமைப்பட்டுள்ளேன்.
6 அக்டோபர் 2022
அக்டோபர் 6ம் நாள் எகிப்தின் வீர வரலாற்றில் ஒரு பொன் நாள். கி.பி. 1967ல் இஸ்ரேலிடம் இழந்த சினாய் தீபகற்பத்தையும், தனது தன்மானத்தையும் மீட்க சுமார் ஆறு ஆண்டுகால விடாமுயற்சிக்கு பின் எகிப்திய ராணுவம் போர் தொடுத்த நாள். புனித ரமலான் மாதத்தில் லட்சக்கணக்கான வீரர்கள் சூயஸ் கால்வாயை கடந்து சென்று வீரத்துடன் போராடி தாய்மண்ணை மீட்ட அந்த பொன்னான தருணத்தின் வெற்றியை போற்றும் வகையில் இன்று எகிப்தின் தேசிய விடுமுறை தினம். 1973ல் நடந்த இந்த நிகழ்வை போற்றும் வகையில் கெய்ரோ மாநகரின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு 6th October என்றும் அங்குள்ள நைல் நதியை கடக்கும் பாலத்திற்கு 6th October bridge என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
என்னதான் எகிப்தின் விடுமுறை நாள் என்றாலும், பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிவதால் எனது அறையிலிருந்தே சிறிதுநேரம் வேலை பார்த்துவிட்டு, மதிய உணவிற்காக அந்த 6th October பாலத்தின் அருகில் உள்ள நமஸ்தே உணவகத்திற்கு சென்றேன். அப்போதே மேற்கண்ட வரலாற்றை அறிந்துகொள்ளும் வாய்ப்பினையும் பெற்றேன்.
Cairo Festival City
பகல் முழுதும் இரை தேட சென்ற பறவைகள் தன் கூடு திரும்பும் வேளை என்பதால் மாலை நேரம் என்றாலே மனதில் ஒரு கொண்டாட்டம் எழுவது இயல்பு. அந்த கொண்டாட்டதை மேலும் சிறப்பாக்கும் வகையில் பழைய கெய்ரோவில் இருந்து புதிய கெய்ரோவிற்கு செல்லும் வழியில் அமைந்துள்ள கெய்ரோ கொண்டாட்ட நகரத்திற்கு செல்ல தீர்மானித்தேன். El Zaheera மெட்ரோ நிலையத்தில் இறங்கி அருகிலுள்ள ரிங் ரோடு பாலத்தின் மீது ஏறி மைக்ரோபஸ் மூலம் 20 கிலோமீட்டர் தூரமுள்ள கெய்ரோ கொண்டாட்ட நகரத்தை அடைந்தேன். பயணக்கட்டணம் வெறும் 6 எகிப்திய பவுண்டுகளே.
கெய்ரோ கொண்டாட்ட நகரம் ஒரு ரியல் எஸ்டேட் வளர்ச்சி பகுதி. பல்வேறு கடைகள், உணவகங்கள் கொண்ட மிகப்பெரிய வணிக வளாகம் (Shopping mall) மற்றும் குடியிப்புகள் நிறைந்த பகுதி. ஒருபுறம் சூரியன் விடைபெற்று, மறுபுறம் சந்திரன் ஒளிபெறும் மாலை நேரத்தில் அந்த வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாகனங்களின் எண்ணிக்கையே, உள்ளிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களின் எண்ணிக்கையை தெரிவித்தது.
சினிமா அரங்குகள், பிரபல துணிக்கடைகள், உலகத்தரமான உணவகங்கள், விளையாட்டு அரங்குகள் அனைத்தும் ஒரே இடத்தில் அணிவகுத்து நின்ற அந்த மாலில் ஒரு கடையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொம்மைகள் அழகாக இருந்தது என்றபோதும் விலை மிகவும் அதிகமாக இருந்தது. உணவகத்தின் அருகில் வண்ண விளக்குகளால் உள்ள ஜொலித்த செயற்கை ஊற்று அந்த பகுதியையே ரம்மியமாக்கியது போல் தோன்றியது.
மொத்தத்தில் வசதிப்படைத்தவர்கள் தங்கள் வாழ்வை கொண்டாட கட்டப்பட்ட கொண்டாட்ட நகரம்.
7 அக்டோபர் 2022 - கடைசி நாள்
இன்றே இந்நாட்டில் நான் இருக்க போகும் கடைசி நாள் என்பதால் அனைத்து மூட்டை முடிச்சிகளையும் நன்றாக கட்டிவிட்டு (Packing), காலாற கடைசியாய் நைல் கரையோரம் ஒரு நடை நடந்துவிட்டு, அதுநாள் வரை எங்கள் வயிற்றை வாழவைத்த மகாராஜா உணவகத்தில் இரவு உணவுடன் அருமையான மசாலா தேநீரை பருகிவிட்டு, அறையை அடைந்து இதுவரை அந்நாட்டில் பெற்ற அனுபவங்களை சுருக்கமாக பதிவு செய்துவிட்டு, அந்த கடைசி இரவை கரைக்க உறங்க சென்றேன்… அந்நாட்டில் எனது கடைசி விடியலை எதிர்நோக்கி…
8 அக்டோபர் 2022 - தாயகம் திரும்பும் நாள்
அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டதால், வழக்கத்தை விட சிறிது தாமதமாக எழுந்து காலை சிற்றுண்டியை முடித்தவுடன் விமான நிலையம் நோக்கி புறப்பட்டேன். சிற்றுண்டி எனது வயிற்றை நிரப்பினாலும், தாய் மண்ணை நோக்கி கிளம்பிய நேரத்தில் திடீரென மனதில் ஒரு வெறுமை நிரம்பியது போல் ஒரு உணர்வு எழுந்ததன் காரணம் புரியவில்லை. பாலைவனம் போல் காணப்பட்ட கெய்ரோ விமான நிலைய ஓடுபாதையும் எனது மன ஓட்டங்களை பிரதிபலிப்பது போல் தோன்றியது. அன்றைய தினம் வானில் மேகமூட்டம் அதிகம் இருப்பதாய் கூறிய விமானியின் அறிவிப்பு, என் மகள் அனுப்பிய வெண்பஞ்சு மேகங்கள் எனக்காக அவள் காத்திருப்பதை தெரிவித்தது போல் தோன்றியது.
விமானம் விண்ணில் பறக்க துவங்கியதும் வெளியே பூமியில் தெரிந்த மேகத்தின் நிழல், அந்த நிழல் மண்ணில் விழுந்தது போலவே எகிப்தின் நினைவுகளும் என் மனதில் என்றும் நிழலாடும் என எடுத்துரைத்தது. அப்போது திரண்டு வந்த மேகக் கடல் என்னை வாழ்த்தி வழியனுப்பி வைக்க… வரலாற்று பூமியில் இருந்து அமைதியாய் விடைபெற்றேன்.
சூயஸ் கால்வாய்
விமானம் புறப்பட்டு 15 நிமிடம் ஆன பின், நிலத்தோடு, கடல் சங்கமிக்கும் இடத்தில் கப்பல்கள் பல அணிவகுத்து வட்டமிட்டு கொண்டிருந்ததை கண்டேன். ஆம்! அங்குதான் எகிப்தின் அற்புதங்களில் ஒன்றான சூயஸ் கால்வாய் துவங்குகிறது. மனித முயற்சியால் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு (1869) பிரெஞ்சுப் பொறியியல் நிபுணர் ஃபெர்டினார்ட் டி லெஸ்ஸிப்ஸ் என்பவரால் கட்டப்பட்ட உலகை சுருக்கிய அற்புத கால்வாய், உதாரணமாக அமெரிக்காவில் இருந்து அரேபியா செல்லும் பயணத்தில் கிட்டதட்ட 4,345 கிலோமீட்டர்கள் குறைக்கின்றது.
தற்போது ஒரு நாளைக்கு 97 கப்பல்கள் வரை செல்லும் திறன் கொண்டதாக 2015ல் விரிவாக்கப்பட்ட இக்கால்வாயில், ஒரு நேரத்தில் ஒருவழியில் மட்டுமே கப்பல்கள் அனுமதிக்கப்படுவதால், காத்திருக்கும் கப்பல்கள் அந்த சூயஸ் வளைகுடாவில் சுற்றி திரியும் காட்சியை விண்ணில் இருந்து பார்க்க அற்புதமாய் இருந்தது.
எகிப்தின் வருவாயில் (6.3 பில்லியன் USD 2021ல்) பெரும் பங்காற்றும் இக்கால்வாயில், 2021 மார்ச் 23 அன்று புயல் காரணமாக ஒரு கப்பல் குறுக்கே சிக்கியதால், பல கோடி மதிப்புள்ள சரக்குகள் தேங்கி, உலக அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் அபாயமும் ஏற்பட்டது என்பதால் கிட்டத்தட்ட 8 நாட்கள் ஒட்டுமொத்த உலகமே பதறியது. அப்படிபட்ட சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றை எகிப்துக்கு செல்லும் போது பார்க்க முடியாவிட்டாலும், அங்கிருந்து திரும்பும் வழியில் தரிசனம் செய்தது எனது பாக்கியமே…
சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல் (நன்றி : கூகுள்)
அதுவரை அமைதியாய் இருந்த மனதில் சூயஸை நேரில் பார்த்த உற்சாகம் எதிரொலிக்க துவங்கியது. நேரம் ஆக ஆக தாய்நாட்டை நோக்கி செல்வதால் அந்த உற்சாகம் பலமடங்கு பெருகி, அடுத்து வந்த சினாய் தீபகற்பத்தில் தெரிந்த மணல்மேடுகளின் மீதேறி “நான் ஊருக்கு திரும்ப வருகிறேன்” என உரக்க கத்த வேண்டும் என்பது போல் தோன்றியது. சினாயை கடந்து அரேபிய மண்ணில் பறக்க துவங்கிய போது, வானில் அதே திசையில் தூரத்தில் பறந்த மற்றொரு விமானத்துடன் போட்டி போட்டு எனது விமானம் வென்ற தருணம் என் பயணம் சிறப்பாக முடிவடைவதை தெரிவித்தது. ஆம்! தாய்நாட்டை அடைய இன்னும் சில மணிநேரங்களே உள்ளது…
பாரசீக வளைகுடா மீது 34,000 அடி உயரத்தில் பறக்கும் போது கீழே மிகக்குறைந்த உயரத்தில் பறந்த மற்றொரு விமானத்தை காண, அது அங்குள்ள கத்தார் நாட்டில் தரையிறங்குவது போல் தோன்றியது. ஒருவழியாக சூரியன் அஸ்தமிக்கும் அந்தி மாலை நேரத்தில், செல்லும் போது பகலில் கண்ட அற்புத அபுதாபி விளக்கொளியில் ஜொலித்துக் கொண்டிருந்தபோது அங்கு தரையிறங்கியது உண்மையிலேயே பரவசமே…
அற்புத அபுதாபியில் சில மணி நேர ஓய்வுக்குப் பிறகு இறுதியாக இரவு 9:40 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு, அக்டோபர் 9ம் நாள் அதிகாலை 3:30 மணியளவில் சென்னையை அடைந்து, என்றென்றும் நினைவில் இருக்கும் எகிப்து தேச பயணத்தை இனிதாய் முடித்து கொண்டேன்…
அற்புத அனுபவங்களோடு…
Cairo Festival city
இறுதிப் பகுதியை படிக்க...
11. எனது முன்னேற்பாடுகளும் பயிற்சிகளும் (My plans and execution)
Comments
Post a Comment