24 செப்டம்பர் 2022
எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் பிரேவேசித்து கிட்டதட்ட இரு வாரங்கள் கடந்துவிட்டன. ஒவ்வொரு முறையும் நான் வசிக்கும் நைல் கரையோர Maadi பகுதியில் இருந்து நகரின் மையப்பகுதிக்கு செல்லும் போதெல்லாம் விண்ணைமுட்டும் கட்டிடங்கள், பிரம்மாண்ட பாலங்கள், சிறப்பான சாலைகள் என நகருக்கு பெருமை சேர்க்கும் விஷயங்களையே பார்த்த எனக்கு, அந்த பரந்து விரிந்த மாநகரின் மறுப்பக்கத்தை தோலுரித்து காட்டிய ஒரு நிகழ்வு இன்று நடந்தது.
The Cave Church
வார இறுதிநாளான இன்று வழக்கம்போல நண்பர்கள் ஓய்வெடுக்க, நான் மட்டும் தன்னந்தனியே அந்த கெய்ரோ மாநகரை எனது பாதங்களால் அளக்க புறப்பட்டேன். El Maadi மெட்ரோ நிலையத்தில் இருந்து Sadat நிலையம் அடைந்து அங்கியிருந்து உபேர் ஸ்கூட்டர் மூலம் எட்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள குகை தேவாலயத்தை பார்வையிட திட்டமிட்டேன். கிட்டத்தட்ட ஆறு கிலோமீட்டர் தூரம் கடந்த பின் எதிரே தெரிந்த மலையை கண்டதும் அதன்மேல் தான் நான் தேடிச்செல்லும் தேவாலயம் உள்ளது என்பதை அறிந்தேன் ஆனால் மலையேறும் சாலை அவ்வளவு சரியானதாக இல்லை. குப்பையும், கூளமுமாக நெரிசலாக காணப்பட்டது. அவ்விடம் கெய்ரோ நகரில் சேரும் குப்பையில் இருந்து பிளாஸ்டிக், இரும்பு போன்றவற்றை பிரிக்கும் பகுதியாகும். அதிக நாற்றம் வீசிய அப்பகுதியில் உள்ளே செல்ல செல்ல மூச்சு முட்டியது போல் இருந்தது. ஒருவழியாக அனைத்தையும் கடந்து உச்சிக்கு சென்ற பின்னே அங்கு சேற்றில் முளைத்த செந்தாமரை போல் இருந்த குகை தேவாலயத்தை கண்டேன்.
Cave church prayer hall
மலையை குடைந்து, ஒரு குகைக்குள் அமைக்கப்பட்ட புனித மார்கஸ் தேவாலயத்தில் (Church of Saint Marcus), பலநூறு பேர் ஒரே நேரத்தில் பிரார்த்தனை மேற்கொள்ளும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்த பெரிய அரங்கு உண்மையிலேயே அற்புதமாக இருந்தது. அதுமட்டுமின்றி மலைமேல் காணப்பட்ட ஏசுநாதரின் சிலையும் மிகச் சிறப்பாக செதுக்கப்பட்டு அழகாய் காட்சியளித்தது. அவ்வளவு கடினப்பட்டு மலையேறி வந்ததின் உண்மையான பலனை அடைந்தது போல் உணர்ந்தேன்.
குப்பை பிரிக்கும் பகுதி
புனித மார்கஸ் தேவாலயத்தில் இருந்து மீண்டும் புறப்பட்டபோது வாகனம் எதுவும் கிடைக்காததால் கூகிள் வரைபடத்தை நம்பி நடந்து செல்ல, அது தவறுதலாக மீண்டும் நான் வந்த அந்த குப்பை பிரிக்கும் பகுதி வழியே சந்து சந்தாக அழைத்து சென்றது. அந்த சந்துகளில் சேகரித்து பிரிக்கப்படும் குப்பைகளும், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை தரமும் பிரம்மாண்ட கெய்ரோ நகரின் மறு பக்கத்தை வெளிச்சமிட்டு காட்டியது. அந்த உழைக்கும் வர்க்கத்தின் பங்கில்லாமல் அந்த மாபெரும் நகரில் ஓர் அணுவும் அசையாது என்ற உண்மையை உணர்த்தியது.
மயான பாதை
இறுதியாக கடின முயற்சிக்கு பின் சாலையை அடைந்ததும் மீண்டும் கூகுள் வரைபடத்தை பார்க்க அது அடுத்து நான் செல்லவேண்டிய எதிரே Al Azhar Park சுமார் நான்கு கிலோமீட்டர் தூரம் இருப்பதாகவும் ஆனால் நடந்து செல்ல வெறும் ஒரே கிலோமீட்டர் தூரமே கொண்ட குறுக்குவழி இருப்பதாகவும் காட்டியது. “தன் கையே காலே தனக்குதவி” என எண்ணம் மேலோங்கியதால் தொடர்ந்து கூகுள் காட்டிய பாதையில் நடக்க ஆரம்பிதேன். அந்த பாதையில் உள்ள வில்லங்கம் தெரியாததால்…
ஆள் அரவமில்லா சாலை
அமைதியான சிறுதெருக்கள் வழியே சிறிது நேரம் சென்ற பின்பே நான் செல்லும் அந்த வழி ஆள் அரவமற்றதாக விளங்கியதை உணர்ந்தேன். நேரம் ஆக ஆக அங்கு நிலவிய பெரும் அமைதி சற்று திகிலூட்டுவதாக இருந்தது. சிறிது சுதாரித்து சுற்றும் முற்றும் உள்ள வீடுகளை உற்று பார்க்க, அப்போதே அந்த கட்டிடங்களில் வெறும் சுற்றுச்சுவர் மட்டுமே உள்ளதை கவனித்தேன். அதன் பின்பு தான், நான் சென்று கொண்டிருந்த பாதை ஒரு மயானம் என்பதும், அங்குள்ள கட்டிடங்கள் அனைத்தும் கல்லறைகள் என்றும் அறிந்தேன். என்னையறியாமல் எனது பாதங்களின் வேகம், பயத்தின் காரணமாக பலமடங்கு கூடியதை உணர்ந்தேன்…
Al Azhar Park
திகிலூட்டிய சுடுகாட்டுப் பாதையை கடந்து எதிரே தெரிந்த அல் அசார் பூங்காவை கண்டதும்தான் மீண்டும் மூச்சுவிட முடிந்தது ஆனால் புயல் வேகத்தில், இடைவெளி இல்லாது வாகனங்கள் அணிவகுத்து வரும் அந்த நெடுஞ்சாலையை கடந்து பூங்காவை அடைவது என்பது கடந்து வந்த பாதையை விட சவாலான ஒரு விஷயமாக தோன்றியது. ஒரு வழியாக பல சவால்களை கடந்து அல் அசார் பூங்காவை அடைந்தேன்.
அல் அசார் பூங்கா, வார இறுதியில் குழந்தைகள் மற்றும் குடும்பத்துடனும், காதலர்கள் தங்கள் துணைவர்களோடும் நேரம் செலவிட உதவும் ஒரு அற்புதமான இடம். திருமண புகைப்படங்கள் (Wedding photoshoot) எடுக்கவே கட்டிவிடப்பட்டது போல பல தம்பதிகளும், அவர்களோடு புகைப்பட கலைஞர்களும் ஆங்காங்கே இருப்பதை கண்டேன். ஒவ்வொரு ஜோடியும் ஒவ்வொரு தங்கள் வாழ்க்கையின் உன்னதமான தருணத்தில் எடுக்கப்படும் அந்த புகைப்படங்களுக்காக விதவிதமாக காட்சி (Pose) அளித்து, அழகான அந்த பூங்காவிற்கு மேலும் அழகு சேர்த்துக் கொண்டிருந்தனர்.
அல் அசார் பூங்கா வாயில் அருகே
அல் அசார் பூங்கா, கிட்டத்தட்ட நமது ஊட்டி சிம்ஸ் பூங்காவை போல் அடுக்கடுக்காக அமைக்கப்பட்டிருந்தது. பூங்காவின் உள்ளே வலதுபுறம் ஒரு சிறிய செயற்கை ஏரியும், இடது புற மூலையில் ஒரு கோட்டையும் அதனுள் அமைக்கப்பட்ட உணவகமும் உள்ளது. இரண்டையும் இணைக்கும் பாதை, ஒரு மலைமேல் அமைந்துள்ள சாலை போல் தோன்றியது. அந்த மலையில் ஏறி பூங்காவின் பின்புறம் உள்ள நகரத்தை பார்க்க, அடடா! என்ன அழகு! என சொல்ல தோன்றியது போல் நகரின் காட்சி அவ்வளவு அற்புதமாக அமைந்திருந்தது. Al Azhar Park கெய்ரோவில் நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று.
இரு பாரம்பரிய நாடுகள்
எகிப்தில் இருந்த ஒரு மாத காலத்தில் நான் தங்கிய அறை, அலுவலகம், சந்தித்த மக்களை தவிர பெரும்பாலும் அயல்நாட்டில் இருப்பது போல் உணரவில்லை. இரு பாரம்பரியமிக்க நாடுகளுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை இங்கே பதிவு செய்ய முயலுகிறேன். இது எனது தனிப்பட்ட கருத்தே அன்றி வேறில்லை.
1. வரலாறு மற்றும் கலாச்சாரம்
உலகின் இரு புராதான நாடுகளான எகிப்தும், இந்தியாவும் நீண்ட நெடிய வரலாறுகள் கொண்டவை என்றபோதும், எகிப்தின் வரலாறு சற்று விரிவாகவும், விளக்கமாகவும் (கிமு 3150 முதல்) ஆதாரங்களுடன் ஆவணப்படுத்தப்பட்டது போல் தோன்றுகிறது. மேலும் இருநாடுகளிலும் பல்வேறு காலகட்டங்களில் ஏற்பட்ட, பல்வேறு படையெடுப்புகள் மற்றும் கலாச்சார கலப்பால், பல்வேறு மாற்றங்களை எதிர்கொண்ட போதும், குறிப்பாக எகிப்து தற்காலத்தில் ஒரு முழு அரபு நாடாகவே காட்சியளிக்கிறது. விருந்தினர்களை போற்றுவதில் இருநாடுகளும் சிறப்பாகவே செயல்படுகின்றன என்றபோதும், குறிப்பாக இந்தியர்களுக்கு எகிப்தில் நல்ல மரியாதை உள்ளது போல் தோன்றுகிறது.
2. பொருளாதாரம் மற்றும் விலைவாசி
இந்திய பணத்தை ஒப்பிடும் போது எகிப்தின் பணமதிப்பு சற்று அதிகமாக உள்ளதாக (1 EGP = 4.20 Rupees, செப்டம்பர் 2022) தோற்றமளித்தாலும், பொதுவான மதிப்பு கிட்டத்தட்ட இரண்டும் சமமாக உள்ளது போலவே தோன்றுகிறது. இன்னும் கூறினால் அமெரிக்க டாலருக்கு நிகரான எகிப்திய பவுண்டின் மதிப்பு இந்திய ரூபாயயை விட வேகமாக குறைந்து வருகிறது. எகிப்தின் வருமானம் பெரும்பாலும் சூயஸ் கால்வாய் மற்றும் சுற்றுலாவை நம்பியே உள்ளது ஆனால் இந்தியா தொழில் துறையில் அபார வளர்ச்சி அடைந்து, அடுத்த கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
விலைவாசியை பொறுத்தமட்டில் எரிபொருட்களின் விலை எகிப்தில் மிகவும் குறைவாகவே (1 லிட்டர் = 7.50 EGP = ரூபாய் 32 மட்டுமே) இருந்தாலும், மளிகை மற்றும் பிற பொருள்களின் விலை இரு நாடுகளிலும் கிட்டத்தட்ட சமமாகவே உள்ளது. பழங்களை பொறுத்தமட்டில் எகிப்தில் வாழைப்பழத்தை விட (1 கிலோ 25-35 EGP), மாதுளம் பழத்தின் விலை (8.5 EGP) ஆச்சர்யம் அளிக்கும் விதமாக மிகவும் குறைவாக உள்ளது.
டிஜிட்டல் மயமாக்கபட்ட இந்தியாவில் மொபைல் மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனைகளில் முன்னோடியாக விளங்குகிறது என்ற போதும் எகிப்து உட்பட பிற நாடுகளில் கூகுள்பே போன்ற செயலிகள் இருப்பது போல தெரியவில்லை.
3. வாழ்வியல்
இஸ்லாமிய நாடான எகிப்திலும், இந்தியாவை போலவே வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மக்கள் அதிகம் என்பதால், ஆடம்பரத்தை தவிர்த்து பெரும்பாலான மக்கள் சாதாரண வாழ்க்கையையே வாழ்கின்றனர். அவர்கள் அணியும் உடைகளும் மிகவும் நாகரீகமாகவே உள்ளது. கூடுதல் வரி செலுத்த வேண்டும் என்பதால் எகிப்தில் தனிநபர் வீடுகள் பெரும்பாலும் பூசப்படாமல் செங்கற்களாகவே காட்சியளிக்கின்றன.
எகிப்தின் அதிபர் திரு. அப்துல் பத்தா அல்-சிசி
4. போக்குவரத்து வசதி
பொது போக்குவரத்து அதிகமாக இருப்பினும், முக்கியசாலைகள் சிறப்பாக பராமரிக்கப்பட்டாலும், புறநகர் பகுதிகளில் சேதமான சாலைகள் இருநாடுகளிலும் ஒன்று போலவே உள்ளது. பெட்ரோல் விலை குறைவு என்பதால், கார்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை எகிப்தில் சற்று அதிகமாக உள்ளது ஆனால் போதிய வாகன நிறுத்த வசதி (Parking) இல்லாததால் அவற்றின் பராமரிப்பு மிகவும் மோசமாக உள்ளது.
5. இயற்கை வளம்
கடல் வளத்தில் இரு நாடுகளும் சிறப்பாக விளங்கினாலும், பல்வேறு நதிகள் கொண்ட இந்தியாவை போலின்றி பாலைவன பூமியான எகிப்தின் விவசாயம் முழுக்க முழுக்க நைலை மட்டுமே நம்பியுள்ளது. அதே நேரத்தில் சினாய் தீபகற்ப பகுதியில் பல்வேறு கனிம சுரங்கங்கள் உள்ளதாக கேள்வியுற்றேன்.
6. அரசியல்
2013ல் அரசியல் புரட்சி மற்றும் மாற்றத்தை சந்தித்த எகிப்தின் அரசியலில், தற்போது சற்று அமைத்து திரும்பியுள்ளது போல் தோன்றுகிறது. திரு. அப்துல் பத்தா அல்-சிசி தற்போது எகிப்தின் அதிபராக உள்ளார்.
மேலும் சில புகைப்படங்கள்
The Cave Church
Cave church
Cave church entrance
Cave church
Cave church entrance
Near to Cave church
Near to Cave church
Inside prayer hall
The Other side of Cairo
குப்பை பிரிக்கும் பகுதி
குப்பை பிரிக்கும் பகுதி
சுடுகாட்டு வழி
கல்லறை ஒன்று
மயானத்தின் உள்ளே கல்லறைகள்
Al Azhar Park
பூங்காவின் உள்ளே சிறிய ஏரி
பூங்காவின் உள்ளே சிறிய ஏரி
பூங்காவின் உள்ளே சிறிய ஏரி
திருமண போட்டோஷூட்
பூங்காவின் பின்புறம் நகர காட்சி
பூங்காவின் பின்புறம் நகர காட்சி
பூங்காவின் பின்புறம் நகர காட்சி
பூங்காவின் உள்ளே கோட்டை
பூங்காவின் உள்ளே கோட்டை
பூங்காவின் உள்ளே கோட்டை உணவகம்
Comments
Post a Comment