முந்தைய பகுதிகளை படிக்க...
10-15 செப்டம்பர் 2022
வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளை வார இறுதி நாட்களாக கொண்ட எகிப்து மற்றும் அரபு நாடுகளில், ஞாயிற்று கிழமை அன்றே வாரத்தின் வேலை நாட்கள் துவங்கி விடுகிறது. அலுவலகம் சென்றுவர உதவும் உபேர் கால் டாக்ஸி சேவை பயன்படுத்த மிகவும் எளிதாக உள்ளது. அலுவலக பணிகள் அதிகம் இருந்ததால் வெளியில் எங்கும் செல்ல முடியாவிட்டாலும், அருகிலுள்ள சூப்பர் மார்க்கெட்டிற்கும், எதிரே உள்ள நைல் கரை ஓரத்தில் ஓரிரு முறை நடைப்பயணமும் மேற்கொண்டேன். வார இறுதி நாட்களை எதிர்நோக்கியபடி…
16 செப்டம்பர் 2022
வெகுநாளாய் எதிர்பார்த்த ஒரு அற்புதமான பயணத்திற்கு இன்று தயாரானேன். பழங்கால உலக அதிசயங்களில் ஒன்றான, அன்று முதல் இன்று வரை நிலைத்திருக்கும் தி கிரேட் கிசா பிரமிடை (The Great Giza Pyramid) காண நண்பர்களுடன் புறப்பட்டேன். கிசா (Giza), கெய்ரோவின் மேற்குப்புறம் நைல் நதியின் மறுகரையில் சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள அற்புத நகரம். எக்கச்சக்க சுற்றுலா பயணிகள் வந்து செல்வதால் சாலைகள் அருமையாக அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக குறிப்பிட்ட சில தூரத்திற்கு அமைக்கப்பட்ட 16 வழி சாலை என்னை மிகவும் கவர்ந்தது.
வார இறுதி நாள் என்றாலும், வெள்ளிக்கிழமை என்பதால் கூட்டம் ஓரளவு கட்டுக்குள் இருந்தது. நகரை நெருங்க நெருங்க எதிரே தெரிந்த ஓங்கி உயர்ந்த அந்த பிரமாண்ட கல்லறை கட்டிடம் எங்கள் ஆவலை அதிகரிக்க செய்தது. அங்கு சென்ற பின்னே அது வெறும் கல்லறை மட்டுமல்ல... பழங்கால எகிப்தியர்களின் நம்பிக்கையை வெளிப்படுத்தும் கலைக்கோவில் எனப் புரிந்தது.
உலக அதிசயத்தின் அடியில்
இயற்கையை பெரிதும் நேசித்த பண்டைய கால எகிப்து மக்கள் சூரியனையும், நதியையும் அடிப்படையாக கொண்டே தங்கள் வாழ்வியலை வடிவமைத்திருந்தனர். நைல் நதிக்கு கிழக்கே உள்ள சூரியன் உதிக்கும் பகுதியை தங்களது வாழ்விற்கும், மேற்கே உள்ள சூரியன் மறையும் பகுதியை மரணத்திற்கும் தேர்ந்தெடுத்துள்ளனர். அதனால் தான் அனைத்து பிரமிடுகளும் நைல் நதியின் மேற்குப் புறத்திலேயே அமைந்திருக்கின்றன. சுமார் 130 பிரமிடுகள் உள்ள எகிப்தில், கிசா வளாகத்தில் மட்டும் 9 பிரமிடுகள் இருப்பதாக தெரிகிறது. அதில் சுமார் 4500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மூன்று மட்டும் மிகப்பெரியவை. அவை தந்தை, மகன் மற்றும் பேரன் என்ற மூன்று தலைமுறைகளை சேர்ந்த மாமன்னர்களான கூபு, காப்ரா மற்றும் மென்கௌரே (Khufu or Cheops, Khafre and Menkaure) ஆகியோரின் பிரமிடுகள் ஆகும். குறிப்பாக அதில் முன்னரான கூபுவின் பிரமிடே உலகின் மிகப்பெரியதும் உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகும்.
கிமு 2560ல் கட்டப்பட்ட கூபுவின் பிரமிடு (Pyramid of Khufu) சுமார் 2.3 மில்லியன் (2,300,000) பாறைகள் கொண்டு 13.5 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டது. அவ்வளவு பெரிதாக இருந்தாலும் பக்க அளவு 235 மீட்டர் கொண்ட சதுர வடிவில், அளவுகளில் உள்ள வித்தியாசம் வெறும் அரை அங்குலம் மற்றும் கோண அளவுகளின் வித்தியாசம் வெறும் 12 செகண்ட் (1 degree = 3600 second) மட்டுமே என்பது அதன் துல்லியத்தை எடுத்துரைக்கிறது. இக்காரணங்களால் தான் அது மனிதனால் உருவாக்கப்பட்ட உலக அதிசயங்களுள் நீங்கா இடம் பிடித்துள்ளது என உணர முடிந்தது.
கடலளவு கற்களை எப்படி இங்கு கொண்டுவந்து, எவ்வாறு கட்டியிருப்பார்கள் என கற்பனை செய்ய, அது எனது கற்பனைக்கும் எட்டாத ஒரு அதிசயமாகவே தோன்றியது. சுமார் 10,000 தொழிலார்களை கொண்டு அக்காலத்தில் இதை கட்ட சுமார் 20 ஆண்டுகள் ஆகியிருக்கும் என்று அவர்கள் கூறிய கணக்கு தலைசுற்ற வைத்தது. 148 மீட்டர் உயரம் கொண்ட கிரேட் கிசா பிரமிடு பல்வேறு இயற்கை சீற்றங்கள், காற்று மற்றும் மணல் அரிப்புக்களை கடந்து தற்போது 137 மீட்டர் மட்டுமே எஞ்சியுள்ளது என்ற போதும் இன்றும் உலகளவில் இதுவே உயர்ந்த கல்லறை ஆகும்.
கிசாவின் மூன்று பெரிய பிரமிடுகள்
ஓங்கி உயர்ந்த கூபுவின் பிரமிடுக்குள் செல்ல தனி வழி ஒன்று உள்ளது என்ற போதும் அதில் நுழைவு கட்டணம் (440 EGP) மிகவும் அதிகமாக இருந்தது. பிரமிடுகள் பெரும்பாலும் மன்னர்கள் உயிரோடு இருக்கும் போதே, அவர்களால் தங்களுடைய விருப்பப்படி கட்டப்பட்டிருக்கக் கூடும் என்ற கருத்து நிலவுகிறது. எது எப்படியோ தங்களின் முன்னவரின் பெருமையை விட தங்களின் புகழ் சற்று தாழ்ந்தே இருக்கவேண்டும் என்ற மாமன்னர் கூபுவின் வழிவந்த பரம்பரையின் பணிவு என்னை பூரிப்படைய செய்தது.
கம்பீர பெண் தெய்வம் (The Great Sphinx of Giza)
இறந்த பின்னரும் தங்கள் எஜமானரை பிரிய மனமில்லாததால், மாமன்னர்களின் பிரமிடுகளை சுற்றி அவர்களின் மெய்க்காப்பாளர்கள் மற்றும் தளபதிகளின் கல்லறைகளும், சற்று தூரத்தில் குவியலாய் தொழிலாளர்களுக்கு கட்டப்பட்ட சிறு சிறு கல்லறைகளும் அந்த பரந்து விரிந்த பாலைவன பூமியில் காணப்பட்டன. ஒவ்வொரு பிரமிடுக்கும் முன்பு அதன் உரிமையாளர்களின் இறுதிச் சடங்குகள் செய்வதற்காகவே கட்டப்பட்ட தனிக் கோவில்கள் (Funernary temple) உள்ளன. இங்குதான் மம்மி ஆக்கப்பட்ட அவர்களின் உடலுக்கு இறுதி மரியாதை மற்றும் சடங்குகள் செய்யப்பட்டு பிரமிடுக்குள் கொண்டு சென்றிருக்க வேண்டும்.
காப்ராவின் (Khafre) பிரமிடின் முன் கட்டப்பட்ட கோவில் வளாகத்தில் உள்ள ஸ்பினிக்ஸ் (Sphinx) எனும் எனும் சிங்க உடலும், பெண் முகமும் கொண்ட சிலை அற்புதமாக வடிவமைக்கபட்டிருந்தாலும், காலங்கள் பல கடந்து விட்டதால், முகப்பகுதி தற்போது லேசாக சிதைந்து காணப்படுகிறது. ஸ்பினிக்ஸ் எகிப்தியர்களின் காவல் தெய்வமாக கருதப்படுகிறாள். சிங்கத்தின் உடல் மற்றும் மனித தலையின் கலவையானது வலிமை மற்றும் புத்திசாலித்தனத்தின் அடையாளமாக விளக்கப்படுகிறது. ஸ்பினிக்ஸ் சிலை கிரேக்கத்தில் ஆண் முகம் கொண்டும், எகிப்தில் பெண் முகம் கொண்டதாக உள்ளது. பெண் முகம் கொண்டதாக இருந்தாலும், பிற்காலத்தில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்ட பிற ஸ்பினிக்ஸ் சிலைகளில் கம்பீரத்திற்காக பொய்த்தாடிகள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது, அந்த போலித்தனம் எதுவும் இல்லாமல் அந்த பாலைவன மணற்காட்டில் குடியிருந்த கிசாவின் ஸ்பினிக்ஸ் தெய்வம் கம்பீரமாகவே காட்சியளித்தாள்.
கிசா பிரமிடுகளையும், பெண்ணின் பெருமை பேசும் ஸ்பினிக்ஸ் தெய்வத்தையும் பார்வையிட்ட பின், அருகிலிருந்த கடல்போல் இருந்த பாலைவன மணலில், பாலைவன கப்பலான ஒட்டகத்தின் முதுகில் முதன் முதலில் ஒரு சிறு பயணம் மேற்கொண்டேன். சிறிது நேர பயணமே என்றபோதும், சாகசங்கள் நிறைந்த அந்த முதல் அனுபவம் என்றும் மறக்கமுடியாத ஒரு அற்புத நினைவாக மனதில் நின்றது.
மரணம் கடந்த பெரு வாழ்வை பெற முயற்சித்த மாமன்னர்களுக்காக பெரும் உழைப்பால் உருவாக்கப்பட்ட அந்த கல்லறை கோவில்கள், பிற்காலத்தில் அதில் உள்ள பொக்கிஷங்களுக்காக கொள்ளையடிக்கப்பட்டும், அறியாமையால் உழன்ற பேதை மக்கள் அதிலுள்ள கற்களை பெயர்த்து தங்கள் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் கட்டவும் சிதைக்கப்பட்டன என்பது பெரும் வருத்தம் தரக்கூடிய ஒரு விஷயமாகும்.
பிரம்மாண்ட கிசா பெரிய பிரமிடின் கம்பீரத்திலேயே பெரும்பாலான மக்கள் தங்கள் மெய்மறந்து நின்றிருக்க, கிசாவின் தெற்கில் 18 கிலோமீட்டர்கள் தள்ளியுள்ள, அதை விட முக்கியமான ஒரு கலை பொக்கிஷமான சக்காராவை (Saqqara) நோக்கி சத்தமின்றி புறப்பட்டோம். அங்கு இருக்கும் வரலாற்று புதையல்களை பற்றி சிறிதும் அறியாமலேயே…
Comments
Post a Comment