எகிப்தின் அற்புதங்கள்... 2. மரணம் கடந்த பெருவாழ்வு (Life after death)

முந்தைய பகுதியை படிக்க...


2. மரணம் கடந்த பெருவாழ்வு (Life after death)


ராணி அஹ்மோஸ் மேரிடாமுன் (கி.மு. 1552-1504)

9 செப்டம்பர் 2022

   மலை போல் மேடான பகுதியில் அமைந்திருந்த கெய்ரோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, இடதுபுறம் ஓட்டுநர் (Left side driving) கொண்ட வாகனத்தில், சிறப்பாக அமைக்கப்பட்ட சாலைகளின் வலதுபுறம் பயணித்து, சுமார் 34 கி.மீ. தொலைவில், நைல் நதியின் எதிர்புறம் அமைந்திருந்த ஹோட்டல் ஹாலிடே இன் (Holiday Inn & Suites Cairo Maadi, an IHG Hotel) ஐந்து நட்சத்திர ஹோட்டலை அடைந்தோம். பயணக் களைப்பால் சிறிது நேரம் அசந்து தூங்கிய பின், ஹோட்டல் வளாகத்தில் உள்ள உணவு விடுதியில் இரவு உணவருந்த சென்ற போது, அங்கு உற்சாகமாக நடந்த ஆட்டம் பாட்டத்துடன் ஒரு திருமண உற்சவம் என்னை மிகவும் கவர்ந்தது என்றபோதும் நாகரிகம் கருதி அங்கு புகைப்படம் எடுப்பதை தவிர்த்தேன். அந்நிகழ்வை காணக் காண, அதைப்போலவே இன்னும் கொண்டாட வேண்டிய விஷயங்களும், தருணங்களும் அந்நாட்டில் இன்னும் பல எனக்காக காத்திருப்பது போல் தோன்றியது.


10 செப்டம்பர் 2022

எகிப்து அருங்காட்சியகம் (Egyptian museum)

இந்நாட்டில் மேற்கொண்ட எனது முதல் முயற்சியே திருவினையாக்கியது என்பது போல், நான் ஏற்கனவே செய்து வைத்திருந்த முன்கூட்டிய திட்டமிடல் இன்று சிறப்பாக வேலை செய்தது. ஆம்! யாரிடமும் வழி கேட்காமல், பொது போக்குவரத்தான கெய்ரோ மெட்ரோ மூலம் நாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள El Maadi நிலையத்தில் இருந்து ஏழு நிலையங்கள் தள்ளியுள்ள Sadat ரயில் நிலையத்தை அடைந்து, அப்பகுதியில் (Tahrir Square) உள்ள எகிப்து அருங்காட்சியகத்திற்க்கு   (Egyptian museum) உடன் வந்த நண்பர்களை அழைத்துச் செல்ல முடிந்தது.  அங்கு சென்ற பின்னே மரணம் கடந்தும் பெருவாழ்வு வாழ முயன்ற பழங்கால எகிப்தியர்களின் பெருமையை அறிய முடிந்தது. 


எகிப்து அருங்காட்சியகம் வாயிலில்


அருங்காட்சியகத்திற்குள் நுழைந்ததும் எதிர்ப்பட்ட பிரமாண்ட சிலைகளும், அடுக்கி வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டிகளும் (coffins) அதிகம் இருந்தன. அப்பெட்டிகளில்தான் முற்காலத்தில் மம்மிகள் வைக்கப்பட்டிருந்தன.  அதுமட்டுமில்லாமல் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பழங்கால மக்கள் பயன்படுத்திய, அவர்களின் வாழ்வியலை பறைசாற்றும் பொருட்களும், சிற்பங்களும் இருந்தன. மேலும் சிறப்பு அம்சமாக பாம்பிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்று பறவையாகி பின்பு மனிதன் தோன்றியது (?!) போல் செதுக்கப்பட்ட ஓவியங்களும் அற்புதமாக இருந்தது. 

அருங்காட்சியகத்தில் உள்ள கி.மு. 3200-3000 காலத்திய நார்மெர் கற்பலகை (Narmer palette) என்னை மிகவும் கவர்ந்தது. அதில் ஒருபுறம் மாமன்னர் நார்மெர் பிற மன்னர்களை வீழ்த்தியதையும் மறுபுறம் சண்டையிடும் இரு விலங்குகளை, கயிறு கொண்டு கட்டுப்படுத்துவது போலவும் காட்சிகள் அமைக்கப் பெற்றிருந்தன. இது அவர், மேல் மற்றும் கீழ் எகிப்தை ஒருங்கிணைத்ததை குறிப்பிடுவதாகும்.  சுமார் 5100 ஆண்டுகளுக்கு முந்தைய இப்பலகையே, இவ்வுலகில் கண்டுபிடிக்கப்பட்ட பழமையான வரலாற்று ஆவணம் எனக் கூறப்படுகிறது. இது எகிப்தின் வரலாற்றை இன்னும் அறியவேண்டும் என்ற ஆர்வத்தையும் தூண்டியது.  




நார்மெர் கற்பலகை


பழங்கால எகிப்தியர்கள் இறந்த பின் உடலை விட்டு நீங்கிய ஆன்மா மீண்டும் அந்த உடலை தேடிவரும் மற்றும் மரணத்திற்கு பின்பு உள்ள மறுவாழ்விற்க்கு அந்த உடல் மீண்டும் பயன்படும் என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தனர். அதனால்தான் இறந்த உடலை பத்திரப்படுத்தும் முயற்சியாக அதை மம்மியாக்கி (Mummified) பாதுகாத்தனர் என கூறப்படுகிறது. வாழும் போதே தங்கள் உடலை சரியாக பராமரிக்காத மக்கள் வாழும் இக்கால அவரச உலகிற்கும், வாழ்க்கைக்கு பின்னும் தேவைப்படும் என எண்ணி உடலை போற்றி பாதுகாத்த அக்கால மக்கள் வாழ்ந்த பெரு வாழ்விற்கும் உள்ள வேறுபாட்டை என்னால் உணர முடிந்தது. 

அருங்காட்சியகத்தில் எகிப்தின் நீண்ட நெடிய வரலாறும், அதை முற்காலத்தில் ஆண்ட 26 வம்சத்தின் காலங்களும் விரிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக 18ம் தலைமுறையை சேர்ந்த யுயா மற்றும் துயாவின் (Yuya and Thuya) கல்லறைகள் (Tomb), மம்மிகள் பற்றி விரிவாக அறிந்துகொள்ள உதவியது போல் தோன்றுகிறது. மேலும் கல்லறைகளில் இருந்து மம்மிகள் எடுக்கப்படும் முறைகளும் ஓவியமாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

மனிதர்கள், விலங்குகள் வேறுபாடின்றி, அனைத்து உயிர்களையும் மம்மிப்படுத்திய அவர்களின் வழக்கம் அவர்களின் பெருந்தன்மையை எடுத்துரைத்தது. இவ்வளவு இருந்த போதும் அங்கு பதப்படுத்தப்பட்ட மம்மிகள் எதுவும் இல்லை. அது குறித்து விசாரிக்கும் போது மற்றொரு இடத்தில் (The National Museum of Egyptian Civilization) அவை பத்திரமாக பாதுகாக்கபடுவதாக கூறினர். விரைவில் அங்கும் சென்று மம்மி உருவில் உள்ள மன்னர்களை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணத்துடனே புறப்பட்டேன்.  

அருங்காட்சியகம் என்றாலே பார்க்க பார்க்க சலிப்பு (boring) என்ற எண்ணத்தை உடைத்து, ஆர்வத்தை தூண்டிய கலை பொக்கிஷம்.    


கெய்ரோ டவர் (Cairo Tower)

எகிப்து அருங்காட்சியகத்தை கண்ணார கண்டுகளித்ததும், அருகில் உள்ள ஹில்டன் (Hilton) ஹோட்டலில் உள்ள அற்புத சுவை தந்த "நமஸ்தே இந்திய உணவகத்தில்" மதிய உணவை முடித்துக்கொண்டு கெய்ரோ டவரை நோக்கி சென்றோம்.


கெய்ரோ டவர்

எகிப்தின் உயிர்நாடியான நைல் நதி இரண்டாக பிரிந்து மீண்டும் ஒன்று சேரும் இடத்தின் நடுவே உள்ள கெசீரா தீவுப் பகுதியில் கட்டப்பட்ட 62 மாடி கட்டிடமே கெய்ரோ டவர். 1956-61ல் கட்டப்பட்ட 187 மீட்டர் உயரம் கொண்ட இக்கோபுரம் அக்காலத்தில் (1971 வரை) ஆப்பிரிக்காவின் உயர்ந்த கோபுரமாக விளங்கி வந்துள்ளது.  கெய்ரோ நகரின் பிரம்மாண்டத்தையும், நைல் நதியின் அற்புத அழகையும், நதியின் மேல் கட்டப்பட்ட “அக்டோபர் 6” (October 6 bridge) பாலத்தையும், அதனடியில் செல்லும் அழகான படகுகளையும் காண இதுவே மிகச்சிறந்த இடமாகும். 

எகிப்து உட்பட ஆப்பிரிக்காவின் பதினோரு நாடுகளை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கும்  நைல் தேவதையின் அற்புத அழகு, அந்த உயரத்தில் இருந்து பார்க்கும் போது, பல மடங்காக பெருகி, நமது கண்களுக்கு திகட்டாத விருந்தளித்தது. அந்த விருந்தை கண்ணார ரசித்து சுவைத்து அதில் என் மனதை பறிகொடுத்த பின், அந்நதியின் அடியில் அமைக்கப்பட்ட M2 மெட்ரோ வழித்தடம் மூலம் Sadat நிலையம் சென்று அங்கிருந்து M1 வழித்தடத்தில் மாறி எங்கள் ஹோட்டலை அடைந்தோம்.

மொத்தத்தில்  அருமையான முதல் நாள்…



மேலும் சில புகைப்படங்கள்


எகிப்து அருங்காட்சியகம்










































கெய்ரோ டவர்


















கெய்ரோ டவரின் மேலிருந்து




அடுத்த பகுதி...

Comments