எகிப்தின் அற்புதங்கள்... 1. அற்புத பயணம் (The second travel)

1. அற்புத பயணம் (The second travel)


எகிப்தின் அமைவிடம், வரைபடம் மற்றும் தேசியக்கொடி

8 செப்டம்பர் 2022

        முதல் அனுபவத்தை விட இரண்டாம் அனுபவமே எப்போதும் சிறப்பு வாய்ந்தது... காரணம் முதல் முறை பெற்ற அனுபவங்கள் நம்மிடம் உள்ள தேவையற்ற பயம், குழப்பம் போன்றவற்றை நீக்கி, சரியான திட்டமிடலுக்கு வழிவகுத்து,  நம்மையும் நமது மனதையும் அடுத்த அனுபவத்திற்கு ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும்  என்பதால்... ஆனால் என்னதான் முன்கூட்டிய திட்டமிடல் இருப்பினும், ஒவ்வொரு கணமும் புதுப்புது அனுபவங்களை அள்ளித்தரும் இந்த வாழ்க்கைப் பயணத்தில் எதிர்வரும் எந்த ஒரு நொடியும் அற்புதமே...

        அவ்வாறே பல அற்புத தருணங்களை அள்ளித் தந்த எனது எகிப்து தேச பயணக் குறிப்பே இக்கட்டுரை.



சென்னை டு அபுதாபி 

    ஏற்கனவே அலுவலக பயணமாக கடந்த ஆண்டு ஜெர்மனி சென்ற (ரைன் நதிக்கரையினிலே...) என்னை, இந்த ஆண்டு (2022), இரு கரம் நீட்டி அழைத்தது புராதன எகிப்து தேசம். அலுவலக நண்பர்கள் மூவருடன் (நான் உட்பட நான்கு பேர்) செப்டம்பர் 9ம் நாள் அதிகாலை 3:45 மணியளவில் சென்னையிலிருந்து புறப்பட்டேன். கொரோனா காலம் கிட்டத்தட்ட முடிந்து விட்டதால் அனைத்து விமான சேவைகளும் முழுவீச்சில் இயங்க, பயணிகள் கூட்டத்தால் விழிபிதுங்கியது சென்னை விமான நிலையம்.


Etihad Airways Flight (நன்றி: கூகுள்)


        ஐக்கிய அரபு நாட்டின் (United Arab Emirates) தேசிய விமான சேவை நிறுவனமான Ethiad ஏர்வேஸில் எங்கள் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால், அந்நாட்டின் தலைநகர் அபுதாபி சென்று (Transit) பிறகு அங்கிருந்து எகிப்தின் தலைநகரான கெய்ரோ செல்லும் வகையில் எங்கள் பயணத்திட்டம் இருந்தது. வேடிக்கை பார்ப்பதில் ஆர்வம் அதிகம் என்பதால் ஜன்னலோர இருக்கைக்கு தனிக்கட்டணம் செலுத்தி, எனது பயணத்தை உற்சாகமாக நான் ஆரம்பிக்க... இஸ்லாமிய நாட்டை சேர்ந்த விமானம் என்பதால் புறப்படும் முன் திரு-குர்-ஆனிலிருந்து பிரார்த்தனை ஓதிய பின் அமைதியாக புறப்பட்டது எங்களது போயிங் 787 விமானம்...

        அந்த அதிகாலை நேரத்தில் மின்விளக்குகளால் ஜொலித்த சென்னை நகரம், ஒளிவெள்ளத்துடன் என்னை வழியனுப்பி வைத்தது. இரவு முழுவதும் தூங்காததால், என்னையறியாமலே சில மணிநேரம் கண் அயர,  பிறகு உணவுக்காக எழுந்த போது கிழக்குப்புறம் கதிரவன் ஒளி தரும் அந்த அதிகாலை நேரத்தில், மேற்குப்புறம் மட்டும் இருளாக இருந்த வானம் அந்நாளின் முதல் அற்புதத்தை நிகழ்த்தி காட்டியது. அந்த கண்கொள்ளாக் காட்சியை ரசித்த பின், விடிந்ததும் தெரிந்த வெண்பஞ்சு மேகங்கள் என் செல்ல மகளை (விண்ணில் ஒரு தூதுவன் கட்டுரை) நினைவுபடுத்தியது.

 

அரபிக்கடலின் மேல் மேகக்கடல்


        அடுத்த சில மணித்துளிகளில் அரபிக்கடலின் மேல் திரண்டு வந்த மேகக் கடல் எங்கள் விமானத்தின் அடியில் கடந்து சென்று, அந்நாளின் இரண்டாம் அற்புதத்தை நிகழ்த்தியது. பிறகு சுமார் 38,000 அடி உயரத்தில் பறக்கும் போது, மேகங்களிடையே தெரிந்த இடைவெளியில் கண்களுக்கு சிறுபுள்ளி போல் புலப்பட்ட மிகப்பெரிய கப்பல் ஒன்றை புகைப்படம் எடுக்க முயன்று தோற்றுப்போனேன். இறுதியாக புயல் கரையை கடந்தது போல் விமானம் கடலை கடந்து, ஓமன் நாட்டின் மேல் பறந்து, ஓமன் வளைகுடா (Gulf of Oman) கரையில் உள்ள U.A.E. நாட்டில் நுழைந்தது. எங்கு காணினும் மணல்வெளியாய் தென்பட்ட அப்பாலைவன பூமியில் வெகு தூரத்தில் புலப்பட்ட ஓரிரு நகரங்களை கடந்து, மணல்மலைகள் மீது பறந்து, அபுதாபியை நெருங்கினோம்.  



அற்புத அபுதாபி


      நன்கு திட்டமிடப்பட்டு கட்டப்பட்ட அந்த கடலோர நகரில் தெரிந்த வானளாவிய கட்டிடங்களும், மணல்வெளி நடுவே அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைகளும், அழகான மேம்பாலங்களும், "பிரம்மாண்டத்தின் அர்த்தம் நானே" என மார்தட்டிய அதே நேரத்தில் அதன் பின்னால் உள்ள உழைக்கும் வர்க்கத்தினரின் வியர்வையும் என்னால் உணர முடிந்தது.  அந்த அபுதாபியின் அற்புத அழகில் நானும் சில மணித்துளிகள் சொக்கிப் போனேன். ஒருவழியாக, சுமார் மூன்றரை மணிநேர பயணத்தில் 1896 மைல்களை (3052 கி.மீ.)  கடந்து எனது பயணத்தின் பாதி வழியில் அரபு நாட்டை அடைந்தேன். 

       "அசால்ட்டு அரேபியாவில் காலடி எடுத்து வைத்துவிட்டான்" என மனம் கூக்குரலிட ஆரம்பித்தது...



அபுதாபி டு கெய்ரோ 

   அரபு மண்ணில் சில மணிநேர ஓய்விற்கு பிறகு அங்கிருந்து மீண்டும் ஒரு விமானத்தில் புறப்பட்டு, விண்ணில் உள்ள நீல நிறமே மண்ணில் விழுந்ததோ என எண்ண தோன்றிய அரேபிய வளைகுடா மேல் பறந்து, கத்தார் நாட்டை கடந்து, அரேபிய தீபகற்பத்தின் தனிப்பெரும் நாடான சவூதி அரேபியாவில் நுழைந்தோம். அப்போது சவூதி மண்ணில் தெரிந்த பல வட்ட வடிவ உருவங்கள், அவை எண்ணெய் கிணறுகளோ என என்ன தோன்றியது ஆனால் அவையெல்லாம் அந்த பாலை பூமியில் உள்ள பண்ணை நிலங்கள் என பின்பு வேறொருவர் சொல்ல அறிந்து கொண்டேன். Ethiad விமானத்தில் வழங்கப்பட்ட சைவ உணவு சுவையாக இருப்பினும் அது கடந்த முறை சென்ற கத்தார் ஏர்வேஸ் அளவுக்கு சிறப்பாக இல்லை என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும். 


அபுதாபி டு கெய்ரோ தடம்

அரேபியாவின் அழகான பாலைவன மலைகளையும், செங்கடலின் வட முனையில் உள்ள அகுபா வளைகுடாவையும் (Gulf of Aquba) கடந்து, முக்கோணம் போல் காணப்படும் எகிப்தின் கிழக்கு பகுதியான சினாய் தீபகற்ப எல்லையில் நுழையும் போது கடலும், நிலமும் ஒன்று கலக்கும் இடத்தை விண்ணிலிருந்து பார்த்த காட்சி மிகவும் ரம்மியமாக இருந்தது.  அதன்பின் சூயஸ் வளைகுடாவை கடக்கும் போது இரு திசையிலும் தென்பட்ட பல கப்பல்கள், சூயஸ் கால்வாயே எகிப்து பொருளாதாரத்தின் உயிர்நாடி என்ற உண்மையை பறைசாற்றியது. உலகை சுருக்கிய உன்னத சூயஸ் கால்வாயை பார்க்க முடியாவிட்டாலும், அதன் தொடர்ச்சியான சூயஸ் வளைகுடாவை பார்த்ததே மனதிற்கு பெரும் நிறைவை தந்தது. மிகப்பெரிய கப்பல்கள் கூட மிகச்சிறிய புள்ளிகள் போல் தெரிய... இறைவன் படைத்த உலகின் பிரம்மாண்டத்தை என்னவென்று சொல்ல…


நியூ கெய்ரோ கட்டிடங்கள்


சுமார் நான்கு மணிநேரத்திற்கும் மேல் நீண்ட பயணத்தின் முடிவில், கெய்ரோவில் தரையிறங்கும் முன் கடந்து சென்ற எகிப்தின் நிர்வாக தலைநகரான நியூ கெய்ரோ நகரம் வெகு நேர்த்தியாக திட்டமிட்டு கட்டப்பட்டது போல் தோன்றியது. அந்த கட்டிட குவியல்களையும், நேர்த்தியான சாலைகளும், எக்கச்சக்க மேம்பாலங்களையும் கடந்து, உலகப்புகழ்பெற்ற நைலையும் தரிசித்த பின் நான் எதிர் பார்த்ததை விட சிறப்பான துவக்கத்துடன், "வாழ்ந்தாலும் மறைந்தாலும் இப்புராதன மண்ணிலே..." (To live and die in ancient egypt) என புகழப் பெற்ற வரலாற்று சிறப்புமிக்க எகிப்து மண்ணில் பாதம் பதித்து அந்த வரலாற்றின் ஒரு அங்கமாக மாறினேன்…


மேலும் சில புகைப்படங்கள்



வெண் பஞ்சு மேகங்கள்


திரண்டுவரும் மேகக்கடல்


அரபுநாட்டின் மேல் சிதறிய மேகங்கள்


மிகப்பெரிய கப்பலும் மிகச்சிறிதாய்


அரேபிய பாலை பூமி


நன்கு திட்டமிட்டு கட்டப்பட்ட அபுதாபி


அபுதாபி உங்களை வரவேற்கிறது


கடல்சூழ் UAE (ஐக்கிய அரபு நாடு)


பாலைநிலத்தில் வட்டவடிவ அரேபிய பண்ணைகள்


கடலும் நிலமும் சங்கமித்தல்


அகுபா வளைகுடா (Gulf of Aquba) 


விமானம் கரையை கடக்கும் தருணம்


சினாய் தீபகற்பம்


எகிப்தின் பாலம் ஒன்று


நைலின் முதல் தரிசனம்


நியூ கெய்ரோவின் கட்டிடக் குவியல்




Comments

Post a Comment