எகிப்தின் அற்புதங்கள்... 6. நைலும் நானும் (Nile river)

   முந்தைய பகுதிகளை படிக்க...




6. நைலும் நானும் (Nile river)


நைல் நதியில் கப்பல் பயணம்


23 செப்டம்பர் 2022 மாலை

Nile Cruise - சொகுசு கப்பல்

இன்று எனது எகிப்து வாழ்வின் அதி அற்புதமான தினம். இவ்வளவு நாள் தூரத்தில் இருந்தே பார்த்து, ரசித்து, ஏங்கியிருந்த என்னை அந்த நைல் தேவதை தன்னுள் ஏந்திய திருநாள். ஆம்! என்னதான் நதிக்கரையின் எதிரிலேயே உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தாலும், நைல் நதி நீரை தொடுவது  என்பது எனக்கு கானல் நீராகவே இருந்தது. கரையோரங்களில் கட்டப்பட்ட பாதுகாப்பு சுவர்கள், மனிதர்களின் தீண்டுதலில் இருந்து அந்த புண்ணிய நதியை பாதுகாக்கிறது. போதாக்குறைக்கு கடலோர பாதுகாப்பு படைபோல, கெய்ரோவில் நதியோர பாதுகாப்பு படை உள்ளதால் நைல் நதியில் காலடி வைப்பது அவ்வளவு எளிதான காரியமாக இல்லை. இப்படி ஒருபுறம் சாலையோர மக்களிடம் இருந்து பாதுகாக்கப்படும் அந்நதியில் மறுபுறம் சுற்றுலா பயணிகளுக்காக பலவித உல்லாச கப்பல்கள் (Cruise) அதிகம் இயக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட கப்பலில், மாலை உணவுடன் உற்சாகமாக பொழுதை கழிக்க ஒரு வாய்ப்பும் அமைந்தது.   

கெய்ரோவின் பல இடங்களில் நைல் நதியில் சொகுசு கப்பலில் பயணம் செய்யும் இடங்கள் இருக்கின்றன. அவை உணவுடன் கூடிய மூன்று மணிநேர பயணத்திற்கு, தாங்கள் அளிக்கும் வசதிக்கேற்ப குறைந்தபட்சம் 250 எகிப்திய பவுண்டுகள் முதல் வசூலிக்கின்றன. மேலும் சில கப்பல்களில் இரவு நேரங்களில் பெல்லி நடனமும் (Belly dance) நடைபெறுகிறது. இரவு நடனத்தை விட பகல் பொழுதில் நதியின் காட்சிகளை பார்ப்பதிலேயே அதிக ஆர்வம் இருந்ததால், இரவு பயணத்தை (7-10 pm) தவிர்த்து மதிய (3-6 pm) நேரத்தில் கப்பலில் ஏறினோம்.  


நைல் நதியில் சொகுசு கப்பல் ஒன்று


முதலில் உணவு அறைக்கு சென்று அங்கிருந்த buffet உணவை ஒரு பிடி பிடித்த பின், கப்பலின் மேல்தளத்திற்கு சென்றோம். அங்கு அனைத்து திசைகளிலும் இயற்கை காட்சிகளை ரசிக்கும் வண்ணம் நாற்காலிகள் போடப்பட்டிருந்தது மட்டுமின்றி மேலும் தனிசிறப்பாக ஒரு சிறிய நீச்சல் குளமும் இருந்தது. குறுகிய குளத்தில் இறங்கி நேரத்தை கரைக்காமல் அகண்ட நைல் நதியின் அற்புத காட்சிகளை ரசிக்க ஆரம்பித்தோம்.     

அந்த இனிய மாலை பொழுதில் இதமாய் வீசிய தென்றல் காற்று, நைலின் நீரை தடவியபின் எனது மேனியை தழுவியது ஒரு சுகமான அனுபவம். ஒருபுறம் கெய்ரோவின் விண்ணை முட்டும் செயற்கை கட்டிடங்கள், மறுபுறம் அந்தி சாயும் சூரியனுக்கு தஞ்சம் தரும் அழகான இயற்கை சோலைகள் என இருபுறமும் மாறி மாறி போட்டி போட்டுக்கொண்டு என் கண்களுக்கு விருந்தளித்தது. நான் மட்டுமின்றி கிட்டத்தட்ட அந்த கப்பலில் இருந்த அனைவருமே ஒரு பரவச நிலையிலேயே இருந்தனர் என்பது போல் அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி வெள்ளம் கொப்பளித்தது. மாலை நேரத்தில் சூரிய ஒளியால் முதலில் வெள்ளி போல் மினுமினுத்த நைல் தேவதை, அந்தி சாய சாய தங்கம் போல் தகதகத்தாள். கிட்டத்தட்ட இரண்டு மணிநேரத்திற்கு  அந்த அற்புத நைலில் இருந்தது எனது பூர்வஜென்ம புண்ணியமே… இறுதியாக பிரிய மனமில்லாமல் வேறு வழியின்றி அங்கிருந்து புறப்பட்டோம், நதியின் நடுவே பெற்ற அற்புத அனுபவ மழையில் நனைந்த ஆத்ம திருப்தியோடு…   


நைல் நதி - சிறு குறிப்பு 



நைலின் அமைவிடம்

உகாண்டா - தான்சானியா எல்லையில் உள்ள விக்டோரியா ஏரியில் உருவாகி புரூண்டி, காங்கோ, கென்யா, எத்தியோப்பியா, எரித்திரியா, தெற்கு சூடான், சூடான் மற்றும் எகிப்து என பல நாடுகளை கடந்து, வடக்கு நோக்கி பாலைவனத்தில் பாம்பு போல ஊர்ந்து, மத்தியதரைக்கடலில் கலக்கும் உலகின் மிகநீளமான நதியாக விளங்குவது நைல். தொன்மையான எகிப்து கலாச்சாரம் பிறக்கவும், தழைக்கவும், சிறக்கவும் நைல் தான் மூலக்காரணம்.  காலநிலை மாற்றத்தால் வட ஆப்பிரிக்காவின் பெரும்பகுதி சகாரா பாலைவனத்தின் அங்கமாக மாறினாலும், எகிப்து உள்ளிட்ட வடகிழக்கு நாடுகளை உயிர்பிப்பவள் அந்த நைல் அன்னையே… ஆம்! நைல் மட்டும் இல்லாவிட்டால் எகிப்தும் மண்ணோடு மண்ணாக மாறியிருக்கும் என்பது முற்றிலும் உண்மையே…


நைலும் அமேசானும் 

உலகின் மிகப்பெரிய நதி எது என்பதில் நைலுக்கும் அமேசானுக்கும் ஒரு ஆரோக்கியமான போட்டி நிலவுகிறது என்றபோதும் நீளத்தில் பொறுத்தமட்டில் நைல் (சுமார் 6,650 கி.மீ.) அமேசானை (6,400 கி.மீ.) இந்த பூமியில் விட சில தூரம் அதிகம் பாய்கிறது ஆனால் வினாடிக்கு சராசரியாக 209,000 கன அடி நீரோட்டமுள்ள அமேசான், 2,830 கன அடி மட்டுமே நீரோட்டம் உள்ள நைல் நதியை விட பலமடங்கு பெரிய ஒன்று. அதனால்தான் அமேசானும், அதை சுற்றியுள்ள காடுகளும் உலகின் ஆக்சிஜன் தொழிற்சாலை என அழைக்கப்படுகிறது.   

     சுற்றுலாவை அடிப்படையாக கொண்ட எகிப்தில், அப்பயணிகளை கவரும் முக்கியமான பணியில் நைலின் பங்கு அளப்பரியது. மேலும் மழைக் குறைவான அந்நாட்டில், மக்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான நீர் மற்றும் விவசாயத்திற்கு நைல் மட்டுமே ஒரே ஆதாரமாக விளங்குகிறது.

என்னைப் பொறுத்தவரை அவரவர் இருக்குமிடத்தில், அவரவரே சிறப்பு வாய்ந்தவர் என்பது போல, பாலை நிலத்தில் பாம்பு போல ஊர்ந்து சென்று, ஆப்பிரிக்காவை வாழ்விக்கும் நைலின் சேவை மகத்தானதே… அது அந்த ஆக்சிஜன் தொழிற்சாலையான அமேசானுக்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல…


மேலும் சில புகைப்படங்கள்


சொகுசு கப்பல் நிறுவனம்


நைலில் சொகுசு கப்பல்


சொகுசு கப்பலில் நீச்சல் குளம்


கப்பலின் உணவறை


நைல் கப்பலில் இருந்து நகர காட்சி


நைல் கப்பலில் இருந்து நகர காட்சி


நைல் கப்பலில் இருந்து நகர காட்சி


நைல் கப்பலில் இருந்து நகர காட்சி


நைல் கப்பலில் இருந்து நகர காட்சி


நைல் கப்பலில் இருந்து நகர காட்சி


நைலின் மறுபுறம் இயற்கை காட்சி


அந்தி சாயும் நேரம்


சூரிய ஒளியில் ஜொலிக்கும் நைல் தேவதை


அந்தி சாயும் நேரம்


இயற்கையின் அற்புத தரிசனம்


நைல் தரிசனம் (
பிற இடங்களில்)


நைல் தரிசனம் (பிற இடங்களில்)


தலைமேல் பகலவன் தந்த ஒளிவட்டம்



அடுத்த பகுதி...

Comments