முந்தைய பகுதிகளை படிக்க...
- அற்புத பயணம் (The second travel)
- மரணம் கடந்த பெருவாழ்வு (Life after death)
- கல்லறை எனும் கலைக்கோவில் (The Great Giza pyramids)
- பாலைநிலத்தின் வரலாறு (Saqqara and Memphis)
- ராஜபோக வாழ்கை (Palace and Coptic museum)
- நைலும் நானும் (Nile river)
- கெய்ரோவின் மறுமுகம் (The Other Side of Cairo)
- மம்மிகளின் தரிசனம் (Mummy museum)
நைல் நதி கரையில் உள்ள வரலாற்று பொக்கிஷங்களான லக்ஸர் (Luxor), அஸ்வான் (Aswan), செங்கடல் பகுதியில் உள்ள சூயஸ் (Suez), சினாய் தீபகற்பம் மற்றும் மத்தியதரைக்கடலின் மடியில் உள்ள அலெக்ஸாண்ட்ரியா (Alexandrea) ஆகியவை எகிப்தில் சுற்றுலா பயணிகள் பார்க்க வேண்டிய முக்கிய பகுதிகளாகும். இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் இருப்பதாலும், அதற்கு தேவையான காலமும், பொருளும் இல்லாததாலும் இவை எதுவும் எனது பயணத்திட்டத்தில் இல்லை. முழுக்க முழுக்க நானிருந்த கெய்ரோ, அதன் அருகில் இருந்த கீசா (Giza) மற்றும் அதன் சுற்றுப்புறங்களை மட்டுமே பார்ப்பது என கொள்கை முடிவு செய்திருந்தேன்… ஆனால் அடிமனதில் குறைந்தபட்சம் மேற்கண்ட பட்டியலில் உள்ள ஒரு பகுதிக்காவது செல்ல வேண்டும் என்ற எண்ணம் மனதில் அரித்து கொண்டே இருந்தது. குறிப்பாக பள்ளி நாட்களில் படித்த மத்தியதரைக்கடலும், அதன் மடியில் உள்ள எகிப்தின் தலையெழுத்தை மாற்றிய அலெக்ஸாண்ட்ரியாவும் என்னை மீண்டும் மீண்டும் அழைக்க, கொள்கையை சிறிது தளர்த்திக் கொண்டு முயற்சி செய்து தான் பார்ப்போமே என்ற எண்ணம் மேலோங்கியது… அவ்வாறே அந்த அயல்நாட்டில் உள்ள அலெக்சாண்டரியாவிற்கு நான் மேற்கொண்ட ஒரு தொலைதூர பயணமே இப்பதிவு.
1 அக்டோபர் 2022
கெய்ரோவில் இருந்து சுமார் 225 கிலோமீட்டர் கொண்ட தொலைதூர பயணம் என்பதால் அதிகாலை 4 மணிக்கே எழுந்து, கிளம்பி 5 மணியளவில் El Maadi ரயில் நிலையத்தை அடைந்தாலும், அங்கு சென்ற பின்னே மெட்ரோ ரயில் சேவை 5:30 மணிக்கு பிறகு தான் துவங்கும் என அறிந்தேன். மெட்ரோ ஏற்படுத்திய தாமதம், கெய்ரோ ரயில்நிலையத்தை அடையும் நேரத்தை தாமதப்படுத்த, நான் செல்லவிருந்த 6 மணி விரைவு ரயிலை தவறவிட்டு, கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் காத்திருக்க நேரிட்டது. அதுவும் நல்லதுதான். அந்த இடைவெளியில் கெய்ரோ ரயில்நிலையத்தை நன்கு அறிந்துகொள்ளவும், திரும்பிவர return ticketம் முன்பதிவு செய்ய முடிந்தது. ரயில் நிலையத்தில் சராசரியான கூட்டமே இருந்தது. அங்கிருந்த உணவகத்தில் உள்ள கட்டண கழிப்பறை (1 EGP), நமது நாட்டை நினைவுபடுத்தியது.
எகிப்தின் ரயில்கள் இன்னும் மீட்டர்கேஜ் (Meter gauge) ரயில் பாதையை தான் பயன்படுத்துகின்றன. இந்திய திருநாட்டின் அளவுக்கு மக்கள்தொகை இல்லாததால் பெட்டிகளின் எண்ணிக்கையும் 10-11 என்ற அளவிலேயே உள்ளது. டீசல் விலை குறைவாக இருப்பதால் தொலைதூர ரயில்கள் இன்னும் மின்மயமாக்கப்படவில்லை என தோன்றுகிறது. முதல் வகுப்பு AC பெட்டியில் 2+1 என ஒரு வரிசையில் மூன்று இருக்கைகள் மட்டுமே கொண்டு அதிக இடவசதியுடன் சிறப்பாய் விளங்கியது. பயணக்கட்டணமும் விரைவு ரயில்களில் முதல் வகுப்பு AC பெட்டியில் 70-90 EGP என்ற அளவில் இருந்தது ஓரளவு சரியாகவே தோன்றியது. இக்கட்டணம் VIP என்ற சொகுசு ரயில்களில் இன்னும் சற்று அதிகமாகவும், ORD என்ற சாதாரண ரயில்களில் சற்று குறைவாகவும் இருக்கும். .
காலை 8:10 மணியளவில் கெய்ரோவில் இருந்து புறப்பட்ட ரயில், 9 மணியளவில் Banha நிலையம் மற்றும் நைல் நதியை கடந்ததும், வழியெங்கும் இருந்த வயல்வெளிகள் கண்களுக்கு புலப்பட ஆரம்பித்தன. அவற்றில் மக்காச்சோளம் மற்றும் முட்டைகோஸ் பயிரிடப்பட்டுள்ளது போல் தோன்றுகிறது. தூரம் செல்ல செல்ல சில இடங்களில் வாழையும், அதன்பின் நெற்பயிர்களும் கண்களுக்கு புலப்பட்டன. அக்காட்சிகள் எகிப்து ஒரு வறண்ட பூமி எனும் பிம்பத்தை உடைப்பது போல் இருந்தது. ஆம்! நைல் நதி பாயும் டெல்டா பகுதி வளமானதாகவே இருக்கிறது. இன்னும் கேட்டால் வடக்கு நோக்கி சென்று கடலில் கலக்கும் முன் பல கிளைகளாக பிரிந்து அந்த பாலை நிலத்தில் தனது பசுமை தடத்தை பதித்து, அற்புதங்களை நிகழ்த்திய பின்னரே ஓய்கிறாள் நைல் அன்னை. கூகுள் வரைபடத்தில் இக்காட்சியை காண அது பல தலைகளுடன் படமெடுத்து ஆடும் ஆதிசேஷன் பாம்பை போல் தோன்றுகிறது.
சுமார் நான்கு மணிநேர பயணத்திற்கு பிறகு ஒருவழியாக மதியம் 12 மணி அளவில் எகிப்தின் இரண்டாம் பெரிய நகரமான, மத்தியதரைக்கடலின் மணப்பெண் என உலகப்புகழ்பெற்ற பாரம்பரிய அலெக்சாண்ட்ரியாவை அடைந்தேன். மாவீரர் அலெக்ஸாண்டரால் கி.மு. 331ல் உருவாக்கப்பட்ட இந்நகரம் பிற்கால எகிப்தின் வரலாற்றோடு மிகவும் நெருங்கிய தொடர்புடையது. நகரை அடைந்ததும் முதலில் ரயில் நிலையத்தின் அருகிலுள்ள புகழ்பெற்ற ரோமன் தியேட்டரை காண சென்றேன்.
ரோமன் விளையாட்டரங்கம்
ரோமன் தியேட்டர் என்பது 3ம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு விளையாட்டரங்கம். பூமிக்குள் புதைந்திருந்த இது பிற்காலத்தில் அகழப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருகிறது. விளையாட்டு அரங்கத்தை தவிர அதன் பின்பகுதியில் குளியல் பகுதியும், சிறு தெருக்களும் இடிந்துபோன கட்டிடங்களும் உள்ளன. வரலாற்று பிரியர்களுக்கு பிடித்த ஓர் இடம்.
ரோமன் தியேட்டரை பார்வையிட்டதும் முதலில் அலெக்ஸாண்ட்ரியாவின் மேற்குப்புறம் உள்ள முற்கால உலக அதியசங்களில் ஒன்றான அலெக்ஸாண்ட்ரியா கலங்கரைவிளக்கத்தை பார்வையிட எண்ணினேன் ஆனால் அந்த கலங்கரைவிளக்கம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அழிந்துவிட்டது என்றும் தற்போதுள்ள கலங்கரைவிளக்கம் பிற்காலத்தில் தான் கட்டப்பட்டது என அறிந்த பின் அத்திட்டத்தை கைவிட்டு, உபேர் மூலம் நேரடியாக மேற்கு பகுதியில் உள்ள கைத்பே கோட்டைக்கு (Citadal of Qaitbay) சென்றேன்.
Citadal of qaitbay
போர்கள் பல கண்ட சிங்கமான அலெக்ஸாண்ட்ரியாவில், கைத்பே கோட்டை கடலில் வரும் எதிரிகளை கண்காணிப்பதற்காக 15ம் நூற்றாண்டில் சுல்தான் சுல்தான் அபு அல்-நஸ்ர் சைஃப் அட்-தின் அல்-அஷ்ரஃப் கைத்பே என்பவரால் (Sultan Abu Al-Nasr Sayf ad-Din Al-Ashraf Qaitbay) அமைக்கப்பட்ட கோட்டையாகும். மூன்று தளங்கள் கொண்ட கோட்டையின் அனைத்து அறைகளிலும் கடலை காணும் வகையில் ஜன்னல்கள் (ஓட்டைகள்) உள்ளன. அந்த ஜன்னல்கள் வழியே தன்னை அன்புடன் அணைக்க வரும் கடல் அரசனை, சற்று நாணத்துடன் எதிர்கொள்ளும் மணப்பெண் போல காட்சியளித்த அலெக்ஸாண்ட்ரியாவை கண்டது அற்புதமாக இருந்தது. அந்த கண்கொள்ளா காட்சியில் மனதை பறிகொடுத்தபின் கோட்டையை முழுவதும் சுற்றிப் பார்க்க ஆரம்பிதேன்.
கோட்டையின் உள்ளே ஒளிந்திருந்து பார்ப்பதை விட அதன் சுற்றுசுவர்களில் இருந்து பார்க்க, அமைதியாய் இருந்த அந்த நடுநிலக்கடல் மங்கையின் பேரழகு பலமடங்காக பல்கி பெருகியது போல் தோன்றியது. வார்த்தைகளால் விவரிக்க முடியாத, வாழ்நாளில் நிச்சயம் பார்க்கவேண்டிய ஒரு இடம்.
மத்தியதரைக்கடல்
கைத்பே கோட்டையை பார்வையிட்ட பின் மத்தியதரைக்கடலின் கரையை ஒட்டி ஒரு சிறிய நடைபயணம் மேற்கொண்டேன். மெடிட்டேரியன் (Mediterranean) என்ற ஆங்கில சொல் மடுதரை (மடு (Cavity) + தரை (Land Surface) என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மெசபடோமியா, எகிப்து, பாரசீகம், கிரேக்கம், ரோம் உள்ளிட்ட பல்வேறு புகழ்பெற்ற நாகரீகங்கள், இக்கடலின் மடியிலேயே உருவாகி இருந்தன. தற்போது ஐரோப்பிய - ஆசிய வணிக தொடர்புகளுக்கு முக்கிய பாதையாக விளங்குகிறது.
அந்த மதிய நேரத்தில் மனதை வருடிய மத்தியதரைக்கடல் காற்று, அதன் அதன் கரையோரமுள்ள 22 நாடுகளையும் சுற்றிவந்த பின் இறுதியாய் என்னை தொட்டது போல் ஒரு பிரமை தோன்றியது. கரையோரத்தில் கடலில் விளையாடும் சிறுவர்களை காணும் போது எனது செல்ல மகளின் பிரிவு என்னை வாட்ட, உடனடியாக அவளுக்கு போன் செய்தேன். அப்போது ஏற்பட்ட சிக்னல் பிரச்சனை காரணமாக தொலைபேசி இணைப்பு கிடைக்காமல் போக, அது எனது மன வலியை இன்னும் அதிகமாகியது.
இறுதியாய் அங்கு எனக்கு துணையாய் இருந்த கடலோடு பேசியபடியே எனது பயணத்தை தொடர்ந்தேன். அப்பகுதியில் உள்ள சாலை நமது சென்னை பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை சாலை போல காட்சியளித்தது. கடல் நீரிலும், கரையோரங்களிலும் உள்ள சில கழிவுப்பொருட்களை பார்க்கையில் அந்த அற்புத கடற்கரையின் பராமரிப்பு அவ்வளவு சிறப்பாக இல்லை என தோன்றுகிறது
அலெக்ஸாண்ட்ரியா நூலகம்
கடற்கரையோரமாக சில தூரம் சென்றவுடன் சாலையின் எதிரில் போர் நினைவுச்சின்னம் ஒன்றை கண்டேன். அது அப்பகுதியில் நடைபெற்ற பல கடற்போர்களில் உயிரிழந்த அறியப்படாத வீரர்களுக்காக (Alexandria Naval Unknown Soldier Memorial) கட்டப்பட்டது. அந்த நினைவகத்தில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்திவிட்டு அங்கிருந்து மைக்ரோ பஸ் என அழைக்கப்படும் அந்த ஊர் ஷேர் ஆட்டோவில் ஏறி அலெக்ஸாண்ட்ரியா நூலகத்தை அடைந்தேன்.
கிமு 3ம் நூற்றாண்டில் அலெக்ஸாண்ட்ரியாவில் உலகப் புகழ் பெற்ற நூலகம் ஒன்று இருந்ததுள்ளது. அதில் பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் பாபிரஸ் காகித சுருள்களாக இருந்தது. பிற்காலத்தில் ஏற்பட்ட போர்களின் காரணமாக அந்த அற்புத அறிவுக்களஞ்சியம் அழிந்து போக, கிபி 2002ல் ஒரு புதிய நூலகம் கட்டப்பட்டு பிரமாண்டமாய் காட்சியளிக்கிறது. 2010ம் ஆண்டில் பிரான்சின் தேசிய நூலகம் 500,000 நூல்களைக் கொடையாக வழங்கிபின் இது உலகின் ஐந்தாவது பெரிய பிரெஞ்சு மொழி நூலகமாக உள்ளது.
நன் சென்ற தினம், விடுமுறை தினம் என்பதால், கடற்கரையோரம் இருந்த அந்த அறிவுக் கடலில் எனது பாதத்தை நனைக்க முடியாவிட்டாலும், அந்த விருட்சத்தின் நிழலில் நிற்க வாய்ப்பு கிடைத்ததே பெரும் பேறு என எண்ணி அடுத்த இலக்கை நோக்கி நடந்தேன்.
Stanley bridge (ஸ்டான்லி பாலம்)
வில் போல் வளைந்த அலெக்ஸாண்ட்ரியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில், அந்த வில்லின் நாண் போல கட்டப்பட்டதே ஸ்டான்லி பாலம். சுமார் 400 மீட்டர் நீளமுள்ள இந்த அழகான பாலம் அழகான அலெக்சாண்டரியாவை மேலும் அழகாக்க கட்டப்பட்டு, 2001ல் திறக்கப்பட்டது.
பாதுகாப்பு காரணங்களுக்காக பாலத்தின் மேல் நடக்க அனுமதி இல்லாததால், எட்ட இருந்தே அந்த அற்புத பாலத்தின் அழகையும் அதன் அடிவில் தவழ்ந்து வரும் கடலையும் ரசிக்க, அப்போது பாலத்தின் மேல் அற்புதமாய் ஜொலித்த சூரியன், அவனும் என்னைப் போலவே அந்த கடல்பாலத்தின் அழகில் சொக்கிப் போனதாய் தோன்றியது.
திட்டமிட்டபடி அனைத்தும் சிறப்பாக அமைந்தாலும் நேரமின்மை காரணமாக, மைக்ரோ பஸ் மற்றும் டிராம் மூலம் லேசான பரபரப்புடன் கடைசி நிமிடத்தில் ரயில் நிலையத்தை அடைந்து, சரியான நேரத்தில் எனது ரயிலை பாய்ந்து சென்று பிடித்து, கெய்ரோவிற்கு திரும்பி, இரவு 10.30 மணியளவில் எனது அறையை அடைந்தேன். நான் எதிர்பார்த்ததை விட அதிக நேரம் எடுத்துக்கொண்டாலும், என்னை பொறுத்தவரை மத்தியதரைக்கடலின் மடியில் தவழ்ந்தது மிகவும் சிறப்பான அனுபவமே… அது பசுமரத்தாணி போல் என்றென்றும் என் நினைவில் நீங்காமல் நிலைத்திருக்கும்...
Comments
Post a Comment