எகிப்தின் அற்புதங்கள்... 8. மம்மிகளின் தரிசனம் (Mummy museum)

முந்தைய பகுதிகளை படிக்க...



8. மம்மிகளின் தரிசனம் (Mummy museum)


மம்மிப்படுத்துதல்


மம்மிப்படுத்துதல் (Mummifying process)  

வாழ்ந்து முடித்த மானிடர்களை தங்கள் வாழ்க்கைக்கு பின் அந்த வரலாற்றில் நீக்கமற இடம்பெற செய்வதே மம்மிப்படுத்துதலின் நோக்கமாகும். ஆம்! இறந்தவர்களின் உடலை, இறந்த பின் உள்ள மறுவாழ்விற்காக பதப்படுத்தும் முறையே மம்மிப்படுத்துதல். காலத்திற்கேற்ப மம்மிப்படுத்தல் முறையில் ஒரு சில மாற்றங்கள் இருப்பினும் பொதுவான செய்முறை இதுவே...

முதலில் இறந்தவரின் மூக்கின் வழியே மூளையை வெளியே எடுத்து அவ்விடத்தில் உருக்கிய பிசினை (Melted resin) கொண்டு நிரப்புவர். பின்பு உடலின் இடப்புறம் கிழித்து, அதில் உள்ள அழுகும் பாகங்களான குடல், ஈரல், வயிறு, போன்றவற்றை எடுத்து நான்கு தனித்தனி ஜாடியில் மூடிவைப்பர். பின் உள்உறுப்புகள் அற்ற சடலத்தை பனைமரத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒயினால் கழுவி, கைத்தறி துணியால் சுற்றி உலர்த்துவர். அதன்பின் உப்பு மற்றும் பிற சோடா உப்பு கலவையில் 40 நாட்கள் வரை புதைத்து வைப்பர். பிறகு அடுத்த 30 நாட்களில் அவ்வுடலை அடிக்கடி எண்ணையில் துடைத்து பிரார்த்தனைகள் செய்வர். இறுதியாக மம்மியாக்கிய உடலை மீண்டும் துணியால் சுற்றி, அவர்கள் கல்லறைக்கு எடுத்து சென்று மீண்டும் பிரார்த்தனை செய்து, அவரவர் தகுதிக்கேற்ப பல்வேறு அடுக்குகள் (Layers) கொண்ட அலங்கரிக்கப்பட்ட சவ பெட்டிகளில் (Coffin) வைப்பதே மம்மிபடுத்துதல். ஒரு மம்மியை தயார்படுத்த சுமார் 70 நாட்கள் வரை ஆகுமாம்.

மம்மிப்படுத்துதல் முறையில் உடலில் உள்ள அனைத்து அழுகும் பாகங்கள் எடுக்கப்பட்டாலும் இதயம் மட்டும் நீக்கப்படுவதில்லை. காரணம் இறப்பின் பின் வரும் தீர்ப்பு நாளில் (Judgement day), சூரியனின் மகளும் உண்மையின் உருவமுமான மாயட்டால் (Maat or Mayat) இறந்தவரின் இதயம் சரிபார்க்கப்படுகிறது. இறந்தவரின் இதயம் கனமாக இருப்பின் அவர்களின் உடல் அமித் (Ammit) என்ற அசுர கடவுளிடம் ஒப்படைக்கப்பட்டு அழிக்கப்படும். ஒருவேளை இறந்தவரின் இதயம் லேசாக இருப்பின் அது ஓசிரிஸ் (Osiris) என்ற மறுவாழ்வு கடவுளிடம் ஒப்படைக்கப்பட்டு மீண்டும் தனது உடலை அடையும் என்பதே பழங்கால எகிப்தியர்களின் நம்பிக்கையாகும்.





உண்மையின் கடவுள் Maat


மம்மிகளுடன் கூடிய சவப்பெட்டி மட்டுமின்றி, உயிரோடு இருந்த போது அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் நகைகளோடு பிரமிடுக்குள் வைக்கும் பழக்கம் அக்காலத்தில் இருந்தது. மாண்டவர் மீண்டு வரும்பொழுது அவர்களின் உடலும், உரிமையான பொருட்களும் அவர்களுக்கு மீண்டும் தேவைப்படும் என கருதியே இவ்வாறு செய்தனர். மன்னர்கள் மட்டுமின்றி சாமானியர்களையும் அவரவர் தகுதிக்கேற்ப மம்மிப்படுத்தினாலும், பிரமிடுக்குள் இடம்பெறும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்கவில்லை.    

பிற்காலத்தில் பிரமிடுக்குள் வைக்கப்பட்ட மம்மிகளும், அதனுடன் இருந்த பல பொருட்களும் அதன் பொக்கிஷங்களுக்காக களவாடப்பட்டன என்றபோதும் அக்காலத்தில்  இருந்த சில பாதுகாப்பாளர்களால், கொள்ளையர்களிடமிருந்து மீட்கப்பட்டு பாதுகாக்கபட்ட மம்மிகளில் சில தற்போது எகிப்திய பண்பாட்டு தேசிய அருங்காட்சியகத்தில் உள்ளது.     


30 செப்டம்பர் 2022 

The National Museum of Egyptian Civilization


வெகுநாளாய் காத்திருந்த ஒன்று, இன்று நிகழ்ந்தது. ஆம்! கால எந்திரத்தில் ஏறி பழங்கால எகிப்து மன்னர்களை சந்திக்க இயலாத நான், எகிப்திய தேசிய பண்பாட்டு அருங்காட்சியகம் சென்று அங்கு மம்மிகளாக வைக்கப்பட்டிருந்த அவர்களை தரிசித்தேன். எகிப்திய பண்பாட்டு தேசிய அருங்காட்சியகம், சமீப காலத்தில் (2017) கட்டப்பட்ட அதி அற்புதமான அருங்காட்சியகம். இங்குள்ள பாதாள அறைகளில் ராயல் மம்மிகள் எனப்படும் அரச குடும்பதை சேர்ந்த 18 அரசர்களும், 2 அரசிகளும் அமைதியாக மீளா துயிலில் இருக்கின்றனர். 


எகிப்திய தேசிய பண்பாட்டு அருங்காட்சியகம்


சுமார் 3700 ஆண்டுகளுக்கு முன் புவியை ஆண்ட அன்றைய மாமன்னர்களை இன்று எலும்பும் தோலுமான சதை பிண்டங்களாக பார்ப்பதற்கு மனதிற்கு லேசான சங்கடமாய் இருந்த போதிலும், குறைந்தபட்சம் அவர்களை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி நிம்மதி அடைந்தேன். குறிப்பாக அன்றைய அரசிகள் இன்றும் பின்னிய தங்கள் சிகை அலங்காரத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கின்றனர். ஒவ்வொரு மம்மிகளுக்கும் அருகில் அவர்களின் வம்சத்தை பற்றியும் அவர்களின் சாதனைகளும் விளக்கமாக பலகைகளில் பொறிக்கப்பட்டிருக்கின்றன. 


மம்மியுருவில் மன்னர் ஒருவர்


பல்வேறு அறைகள் கொண்ட அரங்கில், முதல் அறையில் பண்டைய எகிப்தின் 17ம் வம்சத்தை சேர்ந்த செகன்ரே தோ  (Sekenenre Tao VI - கிமு 1555) வின் மம்மி உள்ளது. அங்குள்ள மம்மிகளிலேயே இவரே வயதில் மூத்தவர். மூத்தவரின் பாதம் பணிந்து அடுத்த அறைக்கு சென்றேன்.

இரண்டாம் அறையில் 18ம் வம்சத்தை சேர்ந்த அரசி அஹ்மோஸ் நேபிர்தரி (Ahmose Nefertari, கி.மு. 1550-1525), அவரது மகன் அமேன்ஹோடேப் (Amenhotep I, கி.மு. 1525-1504) மற்றும் மகள் துட்மோஸ் (Thutmose I, கிமு 1504-1492) ஆகியோர் இறந்த பின்னும் ஒரு குடும்பமாகவே வாழ்ந்து வருகின்றனர்.  

கடைசி அறைக்கு முந்தைய அறையில் பல்வேறு நோய்களால் 16 வயதிலேயே அகால மரணமடைந்த 20ம் வம்சத்தை சேர்ந்த சிறுவன் சிபாத்தை (Sipath, கி.மு. 1194-1188) பார்க்க பரிதாபமாக இருந்தது.  

கடைசி அறையில் 20ம் வம்சத்தை சேர்ந்த ராம்செஸ் IV, V, VI, IX (Ramses IV, V, VI, IX) ஒரே பெயரை கொண்ட பல மன்னர்கள் (அல்லது வம்சத்தின் பெயராக கூட இருக்கலாம்) உள்ளனர். ராம்செஸ் மன்னர்கள் புகழ் பெற்றவர்களாக இருந்தனர் என்பதற்கு இன்றும் அவர்கள் பெயர் சூட்டப்பட்ட பல்வேறு இடங்கள் எகிப்தில் இருப்பதே சாட்சி. 

இம்மன்னர்கள் அனைவரும் பொதுவாக பார்வோன்கள் (Pharaoh) என அழைக்கப்படுகின்றனர். வாழும் போது வரலாறு படைத்த மன்னர்களை அவர்கள் காலத்திற்கு சென்று நேரடியாக சந்திக்க முடியாத நிலையில், அவர்கள் வாழ்ந்து முடிந்து பல நூற்றாண்டுகளுக்கு பின் மம்மிகளாக  சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது நான் பெற்ற பாக்கியமே...    

அருங்காட்சியகத்தில் மம்மிகள் மட்டுமின்றி மேலும் பல சிறந்த விஷயங்கள் உள்ளன. குறிப்பாக ராயல் மம்மி அறைக்கு செல்லும் வாயிலின் அருகில் தரையில் ஒளிபரப்பப்பட்ட லேசர் பட கண்காட்சி நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய அற்புதமான ஒன்று. அந்த வர்ணஜாலம் என்றென்றும் என் மனதில் மனதில் நீங்காத ஒரு இடத்தை பிடித்தது எனலாம்.   



35,000 ஆண்டுகளுக்கு முந்தய எலும்புக்கூடு


தரைத்தளத்தில் பிற்கால மக்கள் பயன்டுத்திய சில பொருட்களும், பல்வேறு கலை பொருட்களும் உள்ளன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வரலாற்றை தன்னுள் ஒளித்து வைத்திருந்தன. அங்கிருந்த கிரேக்க புராணக் கதாபாத்திரமான நியோப் (Niobe) பெண்ணின் தலை பாவமாய் காட்சியளிக்க, கழுத்தில்லாமல் தலை மற்றும் உடலுடன் கைகாட்டியபடி கம்பீரமாக காட்சியளித்தார் கி.மு. 1300களில் வாழ்ந்த அரசர் அஃஹென்டேன் (Akhenaten). அது தவிர நாஸ்லெட் காதர் (Nazlet Khater) இடத்தில் கண்டெடுக்கப்பட்ட சுமார் 35,000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புக்கூடும் அங்கு காட்சிப்படுத்தபட்டிருந்தது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று.   

மம்மிகள், கற்சிலைகள் மட்டுமின்றி கி.மு.வில் ஆரம்பித்து சென்ற நூற்றாண்டு வரை எகிப்திய மக்களின் கைவண்ணங்கள் (ஓவியங்கள்) பதித்த துணிகள், ஆடைகள்  மற்றும் பிற பொருட்கள் தனி அரங்கில் வைக்கப்பட்டுள்ளன.  ஆரம்ப காலத்தில் வெள்ளை துணிகளை பயன்படுத்திய அவர்கள், பிற்காலத்தில் தாவரம் மற்றும் பூச்சிகளில் இருந்து பிரித்தெடுத்து நிறங்களை பயன்படுத்தியதும் அங்கு விளக்கப்பட்டிருந்தது.    

இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல சிறப்பு அம்சமாக மெக்ஸிகன் புகைப்பட காட்சி வைக்கப்பட்டிருந்த சிறு அரங்கில் இருந்த புகைப்படங்கள் அவை புகைப்படங்களா அல்லது ஓவியங்களா என என்னும் அளவுக்கு ஒவ்வொன்றும் வண்ணமயமாய் அற்புதமாய் இருந்தது.  புகைப்படத்தை ரசிப்பதில் ஆர்வம் உள்ள எனக்கு இந்த சிறிய அரங்கம் மிகவும் பிடித்திருந்தது.

கண்காட்சியை கண்ணனார ரசித்தபின், அருங்காட்சியகத்தின் வலதுபுறம் செல்ல, அங்கு ஒய்யாரமாய் ஒரு ஏரியும், அதன் பின் தெரிந்த மலையும் அந்த சூழ்நிலைக்கு மேலும் அழகு சேர்த்தன. அங்கு எடுத்த தனிநபர் புகைப்படங்கள் அழகாக இருந்தாலும், அந்த இயற்கை காட்சியை கண்ணில் கண்ட அளவுக்கு புகைப்படமாய் எடுக்க முடியவில்லை என்பதில் ஒரு சிறிய வருத்தம் ஏற்பட்டது.   

எகிப்து செல்பவர்கள் நிச்சயம் தவறவிடக்கூடாத ஓர் இடம் எகிப்திய பண்பாட்டு தேசிய அருங்காட்சியகம். அங்கிருந்த இருந்த அனைத்தையும் ஆசைதீர கண்டுகளித்த பின், இந்திய உணவகமான மஹாராஜாவில் மதிய உணவை முடித்துக்கொண்டு மனநிறைவுடன் எனது அறைக்கு திரும்பினேன்.  மண்ணோடு மண்ணாகும் உடலை மம்மிப்படுத்தி பாதுகாத்த எகிப்தியர்களின் கைத்திறனை எண்ணியபடியே…


மேலும் சில புகைப்படங்கள்




மம்மியுருவில் மன்னர் ஒருவர்


மம்மியுருவில் மன்னர் ஒருவர்


மம்மிகள்


கிரேக்க புராணக் கதாபாத்திரம் நியோப் (Niobe)


அரசர் அஃஹென்டேன் (Akhenaten)


கற்சிலை ஒன்று


பாப்பிரஸில் வரைந்த ஓவியம்


அருங்காட்சியகத்தின் வலப்புறம்


லேசர் கண்காட்சி






























மெக்ஸிகன் புகைப்பட காட்சி

























Comments

Post a Comment