பைந்தமிழ் காதல் - 17. The waiting game (Anticlimax)

முந்தைய பகுதிகளை படிக்க



வெற்றி என்பது ஒரு சிலரின் பைகளில் மட்டுமில்லை. 
விடாமுயற்சி செய்பவரின் கைகளிலும் உண்டு... 
முயற்சி திருவினையாக்கும்...



    இறுதி ஆண்டின் இறுதி தேர்வு துவங்க இரண்டு வாரங்களுக்கு முன்பே நான் அதில் வெற்றி பெற்று விட்டேன். ஆம்! என் காதலெனும் தேர்வில் கிடைத்த வெற்றியும்... அவ்வெற்றி தந்த உற்சாகமும் கல்லூரி இறுதி தேர்விலும் எதிரொலித்தது... ஆனால் இனிமேல் தான் உண்மையான சோதனை ஆரம்பம்... நாங்கள் எங்கள் வாழ்க்கையில் கடக்க வேண்டிய படி இன்னும் ஒன்று மீதம் உள்ளது... அதுதான் வேலை தேடுவது... அவளுக்கு இருந்த ஆங்கில அறிவுக்கு எளிதில் வேலை கிடைத்துவிட்டது. நான் தான் இக்கடினமான படியை கடக்க ஓராண்டு காலமாக முயற்சித்து வருகிறேன்.


எங்கள் காதல் உறுதியானதும் நாங்கள் ஒன்று கூடி பேசி அதைவிட ஓர் உறுதியான முடிவை மேற்கொண்டோம்... நாங்கள் பிற காதலர்களை போல் அடிக்கடி சந்திக்கப் போவதில்லை என்ற விசித்திர முடிவுதான் அது... நாங்கள் இருவரும் பெரிதும் மதிக்கும் அவளின் அப்பா அமைத்துக் கொடுத்த பாதையில் நடக்க வேண்டும் என உறுதி பூண்டோம்... முதலில் ஒரு நல்ல வேலை தேட வேண்டும்... அதன் பிறகு எங்கள் காதலை அவரிடம் தெரிவித்து அவரின் சம்மதம் வாங்க வேண்டும்... அதுவரை பொறுத்திருக்க வேண்டும் என்ற சபதத்தை மேற்கொண்டோம்... 

காதல் தோன்றியபின் காணாமல் இருத்தல் தகுமோ?... அடிக்கடி இல்லாவிட்டாலும் வாரம் ஒருமுறையாவது பார்க்காமல் இருக்க முடியாது அல்லவா? எனவே எங்களை சேர்த்து வைத்த சாய்பாபா கோவிலில் வியாழன்தோறும் ஆரத்தி நேரத்தில் சந்திப்பது என முடிவு செய்தோம்... அதன்படி நாங்கள் முதல் வாரத்தில் சந்தித்தபோது நான் பரிசாக கொடுத்த அந்த பிங்க் நிற கைப்பையை மீண்டும் என்னிடமே தந்தாள். "இது உன்கிட்டேயே இருக்கட்டும் வெற்றி... இத கொடுக்கும்போது நீ ஒரு நண்பனா நெனச்சு கொடுத்த... So நான் உனக்கு அப்படியே இதை திருப்பி கொடுத்துடரேன்... எப்ப உனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்குதோ அப்ப அத எனக்கு ஒரு காதலனாக திருப்பிக் கொடு... அதுவரைக்கும் இது உன்கிட்டயே இருக்கட்டும்" என்றாள். அன்று முதல் அவளை மனதில் சுமக்கும் நான், கைகளிலும் பை வடிவில் சுமக்க ஆரம்பித்தேன்...



இன்று (2006ம் ஆண்டு) 

அதன் பிறகு ஒவ்வொரு வாரமும் நாங்கள் சந்திக்கும் போது அப்பையை அவளிடம் தரப்போகும் அந்தத் திருநாளுக்காக அவள் காத்திருக்கிறாள்... அதை அவளிடம் கொடுக்கவே நானும் தொடர் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.
இன்றுடன் 51 வாரங்கள் ஆகிவிட்டன... ஆம்! சிலர் நாட்களை எண்ணுவது போல நான் அவளை சந்திக்கும் வாரங்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன்... அவள் கொடுத்த அந்த கைப்பையை நான் நேர்முகத்தேர்வுக்கு போகும் பையின் (Bag) மற்றொரு அறையில் பத்திரமாக வைத்திருக்கிறேன்... இதையே நான் யாருக்கும் காண்பிக்காமல் பாதுகாக்கும் எனது பொக்கிஷம் என எனது இந்த கதையைப் படிக்கும் நேயர்களுக்கு முன்பே தெரிவித்திருந்தேன்...

இப்பொழுது நான் செல்லும் பேருந்து நாங்கள் வசிக்கும் பகுதியான மேற்கு மாம்பலம் நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நான் ஜன்னலோரத்தில், அளப்பரியா ஆனந்தத்துடன் பயணம் செய்து கொண்டிருக்கிறேன்... எனது ஓராண்டு கால விடாமுயற்சிக்கு இன்று பலன் கிடைத்துவிட்டதல்லவா???? தற்செயலாக இன்று வியாழக்கிழமையும் கூட... மாலை நேரமும் ஆகிவிட்டது... எனவே அவள் நிச்சயம் எனக்காக சாய்பாபா கோயிலில் காத்திருப்பாள்... எனவே நேராக வீட்டுக்குச் செல்லாமல் முதலில் அவளை சந்திக்க வேண்டும். அவளை சந்தித்து இந்த பிங்க் நிற பையை (Handbag) அவளிடம் ஒப்படைக்க வேண்டும்... அவள் எதிர்பார்த்த சர்ப்ரைஸை அவளுக்கு இன்று தரவேண்டும்... நண்பனாக அல்ல... அவளின் ஆசைப்படி ஒரு காதலனாக....

நான் மெல்ல என் மடியில் இருந்த பையின் (Backbag) ஒரு அறையை திறக்கிறேன்... அதிலிருந்து அந்த பிங்க் நிற கைப்பையை வெளியே எடுக்கிறேன்... என் விரல்களால் மென்மையாக அதை தடவி கொடுக்கிறேன்... மற்றொரு அறையிலிருந்து வேலை கிடைத்தற்கான பணி ஆணையை எடுத்து... அதை அந்த கைப்பைக்குள் வைக்கிறேன்... இதுவே நான் அவளுக்கு முதன்முதலில் தரப்போகும் காதல் கடிதமாகும். இதை முதலில் அவளுக்கு தர வேண்டும். அவளை இன்ப மழையில் நனைக்க வேண்டும். பிறகு அவள் மூலமாகவே அப்பையை அவள் அப்பாவிடம் கொடுக்கச் சொல்ல வேண்டும்... இதுவே எனது திட்டமாகும்.

இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டும். 
அன்று தற்செயலாக இப்பையை திறந்து தவறான ஒரு கடிதத்தை படித்த அவருக்கு பரிகாரமாக இச்செயல், ஒரு நற்செயலாக அமைய வேண்டும். படிப்பு, வேலை அதன்பிறகு காதல், திருமணம் என அவர் வகுத்துக் கொடுத்த பாதையிலேயே நாங்கள் பயணிக்கிறோம் என்பதை அவரை உணரச் செய்ய வேண்டும். அவரின் பரிபூரண சம்மதத்தை உறுதி செய்ய வேண்டும் என்றெல்லாம் எண்ணிக் கொண்டிருக்கிறேன்... எல்லாம் நல்லபடியாக அமைய வேண்டும் என இறைவனை வேண்டியபடி...


இப்போது நான் சென்று கொண்டிருக்கும் பேருந்தானது, நான் இறங்க வேண்டிய போஸ்டல் காலனி பேருந்து நிலையத்தை அடைந்து விட்டது. முதன்முதலில் சாய்பாபா கோயலில்  அவளை சந்தித்த அந்த பொன்னான தருணத்தை மீண்டும் ஒருமுறை என மனதில் அசைபோட்டபடியே ஜெய்சங்கர் தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கிறேன். அன்று 
பச்சை ரவிக்கையின் மேல் வெள்ளை தாவணியும் உடுத்தி, சிறு நெற்றியில் சந்தனத்திற்கு மேல் சிறு சாந்து பொட்டும் வைத்திருந்த அவள் திருமுகத்தை என் அகக்கண்ணில் மீண்டும் ஒருமுறை தரிசனம் செய்து கொண்டே எங்கள் குல தெய்வமாக விளங்கப் போகும் சாய்பாபா கோவிலினுள் நுழைகிறேன்.

ஆனால்,  இன்று அவள் அங்கு வரவில்லை. சாய்பாபாவிற்கு ஆரத்தியும் ஆரம்பித்து விட்டது.  நான் சற்று முன்பின் தாமதமாக வந்தாலும் அவள் ஒருபோதும் நேரம் தவறியதில்லை என்பதால் அவளது தாமதம் என் மனதை ஏதோ செய்தது. என்ன ஆயிற்று அவளுக்கு? என் மனம் பல்வேறு சிந்தனைகளில் ஈடுபட்டு கொண்டிருக்கிறது. ஒருவேளை அவள் வீட்டில் ஏதாவது பிரச்சனையா? என்றெல்லாம் சிந்தனை என் மனதில் எழுகிறது. எனக்கு வேலை கிடைத்தவுடன் தான் அவளின் அப்பாவிடம் கூற வேண்டும் என எண்ணியிருந்தோம். ஒருவேளை அவருக்கு விஷயம் தெரிந்து விட்டதோ? அதன் விளைவுகள் என்ன ஆகுமோ என்றெல்லாம் என் மனம் பதைபதைக்கிறது.  


ஆம்! மீண்டும் நான் காத்திருக்கிறேன்.



இப்போது ஆரத்தியும் முடிந்துவிட்டது. அவள் இன்னும் வரவில்லை. அவளுக்கு இன்ப அதிர்ச்சியை அளிக்க வேண்டும் என எண்ணியிருந்த நான், இப்போது பெரும் துன்பத்தில் இருக்கிறேன். என்ன செய்வது என்று புரியாமல் கோயிலிலிருந்து வெளியே வர, அவர் என் எதிரில் நின்று கொண்டிருந்தார். நாம் முன்பே சந்தித்திருந்த அந்த பெரிய மனிதர் தான். ஆம், அவளின் அப்பா!





இப்பொழுது எனக்கு எல்லாம் உறுதியாகிவிட்டது. ஆம்! எங்களின் காதல் அவருக்குத் தெரிந்துவிட்டது. அதனால்தான் அவள் வரவில்லை. இவர் என்ன திட்டத்தோடு இங்கு வந்திருக்கிறார்? இவரை எப்படி எதிர்கொள்வது தயங்கியபடி நான் நிற்க, 


என்னருகே வந்த அவர் "வெற்றி! உன் கூட கொஞ்சம் பேசணும்" என்றார். 

எனக்கு வேறு வழி இல்லை. சரி என்று தலையை ஆட்டினேன். 























ஆறு மாதங்களுக்குப் பிறகு..‌.


இன்று மேற்கு மாம்பலம், குமரன் திருமண மண்டபத்திலிருந்து பலர் வெளியே வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களின் கைகள் அனைத்திலும் தவறாமல் ஒரு பை உள்ளது. அது,  அவர்கள் திருமணத்தில் கலந்துகொண்டு, மணமக்களை வாழ்த்தி வயிறார உண்டு, தாம்பூலத்தை பெற்று விடை பெறுகின்றனர் என்று நமக்கு எடுத்துரைக்கிறது. நாமும் அந்த பைகளை சற்று உற்று நோக்குகிறோம். 

 அதில் மணமக்கள் பெயர்கள் அச்சிடப்பட்டுள்ளன.  

"வெற்றிசெல்வன் - தமிழ்செல்வி"



ஆம்! ஒருவழியாக பல பைகள் (Bags) ஒன்றுகூடி, முயற்சித்து, பல தடைகளை தாண்டி தமிழாகிய அவளை என்னுடன் இணைத்து பைந்தமிழ் காதலை தோற்றுவித்தன... அப்பைகளுக்கு மிகவும் நன்றி...

திருமணத்தில் கலந்து கொண்டு எங்களை வாழ்த்திய தங்களுக்கும் நன்றி.

பைந்தமிழ் காதல் முற்று பெற்றிற்று.


வாசகர்களின் பேராதரவிற்கு நன்றி...






Comments