பைந்தமிழ் காதல் - 11. The last journey

முந்தைய பகுதிகளை படிக்க


பைகள் கிழிந்தால் தைத்து விடலாம். 
கிழிந்த மனங்களை தைக்க நூலேது?
அவற்றை ஒருங்கிணைக்க 
ஊசி தான் ஏது??? 




        காலையில் வெகு நேரம் கழித்தே எழுந்ததால் கிளம்ப நேரம் ஆகிவிட்டது. எனவே நாங்கள் வழக்கமாகச் செல்லும் பேருந்தை தவற விட்டேன். அதன் பிறகு ஒரு வழியாக அடுத்த பேருந்துகளை பிடித்து கல்லூரிக்கு சிறிது தாமதமாக சென்று சேர்ந்தேன். ஆண்டுவிழா முடிந்துவிட்டதால், ஒரு நாள் விடுமுறைக்கு பின், இன்று ஒரு நாள் மட்டுமே வகுப்பு. அதுவும் ஆண்டு இறுதி தேர்வுக்கான ஹால் டிக்கெட் வழங்கும் நாள். இதன்பின் சுமார் இரண்டு வாரங்கள் கல்வி விடுமுறைக்குப் (Study holidays) பின் தேர்வு. காலையில் அவளை சந்திக்க தவறியதால் மதிய இடைவேளை நேரத்தில் நாங்கள் வழக்கமாக சந்திக்கும் எங்கள் கல்லூரியின் உணவகத்தில்  (canteen) அவளுக்காக காத்திருந்தேன். அவள் வரவில்லை... காரணம் ஏதும் புரியாததால் என் எதிரே வந்த, அவளை எனக்கு அறிமுகப்படுத்திய அவளுடன் படிக்கும் என் நண்பன் சூர்யாவிடம் கேட்க, அவள் அன்று காலையிலேயே வந்து ஹால் டிக்கெட்டை வாங்கியவுடன் கிளம்பி சென்று விட்டதாக கூறினான்.

        நடப்பது ஏதும் புரியவில்லை... ஒருவேளை உடல்நிலை சரியில்லாமல் இருக்குமோ என்ற கேள்விக்கும் என்னிடம் பதில் இல்லை. ஒரே முறை சென்ற அவள் வீட்டுக்குச் மீண்டும் சென்று விசாரிப்பதும் முறையாக தோன்றவில்லை. என்ன செய்வது? ஏது செய்வது? என்ற யோசனையிலேயே இந்த இரண்டு வாரத்தை கடத்தினேன். இந்த இரண்டு வாரங்கள் எனது முதல் ஆண்டில் நான் சந்தித்த இரண்டு  மாதங்களை விட மிக மிக நீண்டதாக இருந்தது... தேர்வும் ஆரம்பித்தது. வழக்கம்போல் எனது தேர்வு காலையில்; அவளது தேர்வு மதியம் என்பதால் காலையில் பேருந்து பயணத்தில் அவளை சந்திக்க முடியவில்லை... ஒருவழியாக முதல் நாள் தேர்வை முடித்த பின் அவளது தேர்வறைக்கு வெளியே சென்று காத்திருந்தேன்‌...

        அன்று போல் இன்று அவள் தாமதமாக வரவில்லை. சற்று முன்னதாகவே வந்திருந்தாள். வழக்கமாக என்னை கண்டதும் முகம் மலர பேசும் அவள், அன்று போல் இன்றும் என்னை கண்டும் காணாதது போல் இருந்தது, என்னை, என் மனதை, ஏதோ செய்தது. வேறு வழியில்லை நான் அவளிடம் பேசித்தான் ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் அவளை நெருங்கிச் சென்றேன். என் முகத்தை நேருக்கு நேர் சந்திக்கும் விருப்பம் இல்லாதவள் போல் அவள் முகம் இருந்தது. நான் பேச ஆரம்பிக்கும் முன்பே "Vetri, I have a request for you. please இந்த exams முடியற வரைக்கும் என்ன distrub பண்ணாத!" என்று அவள் கூறிய வார்த்தைகள் என் மனதில் பேரிடியாய் இறங்கியது. அப்படி கூறி முடித்ததும், என்னிடம் பதில் எதுவும் எதிர்பாராமல் நேரடியாக தேர்வு அறைக்குள் சென்றாள். அவள் சென்ற வேகமும், என்னை அலட்சியப்படுத்திய முறையும் அவள் என் மனதிலிருந்து வெளியேறி, எங்கள் நட்புக்கு குட்-பை சொல்வது போல் தோன்றியது. 

        எனது தலை சுற்றியது... கண்கள் இருண்டன... இதயம் நின்று விடும்போல் இருந்தது... என்ன ஆயிற்று??? நான் என்ன தவறு செய்தேன்??? நான் புரியாமல் தவித்த ஒவ்வொரு வினாடியும் எனக்கு நெருப்பாற்றில் நீந்துவது போல் தோன்றியது... தவறிழைக்காமல் தண்டனை பெறுவது கொடுமை. அதிலும் தவறு என்று என்னவென்றே தெரியாமல் தண்டனை பெறுவது மிக மிக கொடுமை. இக்கொடுமையை அனுபவித்தபடியே கல்லூரியில் இருந்து வெளியேறி எங்கள் பஸ் ஸ்டாப்பிற்கு சென்றேன்.  அவள்தான் அவ்வார்த்தைகளை பேசினாள் என்பதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை...  அப்படியே பிரமை பிடித்தபடியே  அங்கேயே அமர்ந்துவிட்டேன்... எவ்வளவு நேரம் அங்கேயே இருந்தேன் என்று தெரியவில்லை... திடீரென சாலையில் எதிரே தோன்றிய அவளை பார்த்த பின்புதான் சுமார் மூன்று மணி நேரமாக நான் அங்கேயே அமர்ந்திருந்ததை உணர்ந்தேன். அவள் என்னை நன்றாக பார்த்ததையும் நான் அறிந்தேன். அவளோ என்னைக் கண்டும் காணாதது போல் செல்கிறாள். நாங்கள் வழக்கமாக செல்லும் பஸ் ரூட்டை தவிர்த்து மீண்டும் ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்லும் மாற்றுப்பாதைக்கு செல்லும் பேருந்தில் ஏறுகிறாள்... அவள் என்னை தவிர்க்க ஆரம்பித்துவிட்டாள் என்பதை என் மனம் ஏற்றுக்கொள்ள வெகு நேரம் பிடித்தது.

        அடுத்து வந்த தேர்வுகள் எளிதாக இருந்தபோதிலும், என் மனம் அதில் லயிக்கவில்லை. ஒவ்வொரு தேர்வையும் எழுதி முடிப்பது ஒரு பெரிய யாகத்திற்கு சமமாக இருந்தது. தேர்வு அறைக்கு உள்ளேயும், வெளியேயும் அவளைப் பற்றிய  சிந்தனையே இருந்ததால் மிகவும் தடுமாறி போனேன். நான் தடுமாறும் போது தாங்கிப் பிடிப்பாள் என நான் எண்ணிய தோழியே எனது தடுமாற்றத்திற்கு காரணம் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. என்னை அவள் தவிர்க்கும் காரணம் இன்னும் எனக்கு புலப்படவில்லை... "Please இந்த exams முடியற வரைக்கும் என்ன distrub பண்ணாத..." என்று அவள் கூறிய வார்த்தைகள் என் செவிகளில் மீண்டும் மீண்டும் ரீங்காரமிட்டதால் என்னால் முடியவில்லை என்றபோதும் இன்று வரை அவளை மீண்டும் சந்திக்க முயற்சிக்கவில்லை. 


        இன்று மூன்றாம் ஆண்டின் கடைசித் தேர்வு. எனக்கு முடிவு தெரிந்தாக வேண்டும். அது நான் எழுதிய தேர்வின் முடிவல்ல... அவள் என்னை தவிர்க்கும் உண்மையான காரணம் எனக்கு தெரியவேண்டும் என்ற எண்ணத்துடன் இன்றும் கல்லூரி பஸ் ஸ்டாப்பிலேயே காத்திருந்தேன். சுமார் மூன்று மணிநேரம் ஆகிவிட்டது. இந்நேரம் தேர்வு முடிந்து இருக்கும். அவள் வருவாள் வழக்கம் போல அவள் ரயிலில் தான் செல்வாள். ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்று அவளை எப்படியாவது இன்று சந்தித்தே தீர வேண்டும் என எண்ணிக்கொண்டிருந்த வேளையில், நான் சற்றும் எதிர்பாராத வண்ணம் நான் நின்ற இடத்தை நோக்கி அவள் வந்தாள். 

        "This is my last journey with you" என அவள் முணுமுணுத்தபடியே அப்போது வந்த பேருந்தில் ஏறினாள். நானும் அவள் பின்னாலேயே அப்பேருந்தில் ஏறினேன். அன்று போல் இன்றும் ஒரே சீட்டில் இடம் கிடைத்தது என்ற போதிலும் சிறிய தயக்கத்துடனே அவளருகில் சென்றேன்.  என்னை அவளருகில் அமரச் சொன்ன  அவளது பார்வையில் அதைவிட கூடுதல் தயக்கம் இருந்ததை என்னால் உணர முடிந்தது. வேறு வழியில்லை நான் கேட்க நினைப்பதை அவளிடம் கேட்க வேண்டும் என்பதால் அவளருகே அமர்ந்தேன். 

        ஒரே சீட்டில் அமர்ந்திருந்த எங்கள் மத்தியில் இருந்த சிறிய இடத்தில் ஒரு பெரிய மௌனம் குடிகொண்டது...

தொடரும்...

அடுத்த பகுதியை படிக்க

Comments

Post a Comment