பைந்தமிழ் காதல் - 4. Many thanks



சில பைகள் (Transparent polythene bags) வெளிப்படையானவை. 
அவைகளுக்கு சில மனிதர்களைப் போல 
உள்ளொன்று வைத்து புறமொன்று காட்ட தெரியாது. 







இன்று (2006ம் ஆண்டு)


        திடீரென்று சென்று வந்த மின்சாரம், என்னை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்து சேர்த்தது... ஆம் நான் இன்னும் அதே அறையில் தான் நேர்முகத் தேர்வின் முடிவுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என உணர்ந்தேன். அப்போது அந்த அறைக்குள் நுழைந்த நவநாகரீக மங்கை ஒருத்தி "For your kind attention,  the results will be announced post lunch" என அறிவித்து சென்றாள். அவள் கூறியதைக் கேட்ட அங்கிருந்த அனைவரும், உணவருந்த வேண்டி அந்த அறையிலிருந்து வெளியேறினர். என்னைத் தவிர...

        சாப்பிட மனமில்லை...  செவிக்கு உணவில்லாத போது வயிற்றுக்கு உணவிட சொன்ன வள்ளுவர்‌ கூட, நினைவுகளை கடக்கும் வழியை கூறவில்லை என்றே நினைக்கிறேன். தற்போது அந்த அறையில் யாரும் இல்லாததால் கையில் உள்ள பையின் மற்றொரு அறையை திறந்தேன். அதில் அவள் கொடுத்த சிறிய பையும், "Many Thanks!" என்று எழுதப்பட்ட துண்டு சீட்டும், இன்னும் சிற்சில பொருட்களும் இருந்தன. இப்பொக்கிஷங்களே நான் யாருக்கும் காட்டாமல் என் பையில் பாதுகாக்கும், என் மறுபக்க மனதின் சாட்சிகளாகும்.  அந்த துண்டு சீட்டை என் கைகளில் ஏந்தினேன்... அதிலுள்ள "Many", இன்னும் பல நினைவுகளை என்னுள் நியாபகப்படுத்தியது... ஆம்! மீண்டும் நினைவுகளுக்குள் மூழ்கிப் போனேன்...


2002ம் ஆண்டு

        இன்று முதல் ஆண்டின் கடைசித் தேர்வு. முன்தினம் நடந்த நிகழ்வுகளை கடந்து செல்ல முடியாததால், இன்றைய தேர்வை சரியாக எழுத இயலவில்லை. இருப்பினும் ஒருவழியாக சமாளித்து முடிந்த அளவு எழுதி விட்டு வந்திருக்கிறேன். இதை விட்டுவிட்டால் இன்னும் இரு மாதங்களுக்கு விடுமுறை என்பதால் அவளை சந்திக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு. எனவே இந்த அரிய வாய்ப்பை தவற விடக்கூடாது என்ற எண்ணத்தில் அவளை சந்திக்க எண்ணி, அவளின் தேர்வு அறையை கண்டுபிடித்து அதன் வாயிலில் நின்று கொண்டிருந்தேன். தேர்வு துவங்க இன்னும் சில மணித்துளிகள் இருந்த போதும், அவள் இன்னும் வரவில்லை... ஒருவழியாக தேர்வு மணியும்  அடித்துவிட்டது. இதன்மேலும் அங்கு நிற்க அனுமதி இல்லை என்பதால் வேறு வழியின்றி அங்கிருந்து ஏமாற்றத்தோடு புறப்பட்டேன். அவள் ஏன் வரவில்லை என்ற காரணம் புரியாமலேயே...

        இரண்டு மாத விடுமுறை இரண்டு யுகங்களை விட நீண்டதாக இருந்தது. இருவரும் ஒரே பகுதியில் வசித்து வந்தாலும் சரியான முகவரி தெரியாததால், விடுமுறை நாட்கள் முழுவதும் மேற்கு மாம்பலத்தை, குறிப்பாக சாய்பாபா கோவில் அருகில் உள்ள தெருக்களை, என் மிதிவண்டியால் அங்குலம் அங்குலமாக அளந்தேன். பல்லாயிரக்கணக்கான மக்கள் வசிக்கும் பகுதியில் என் தேவதையை கண்டுபிடிப்பது கானல் நீராகவே இருந்தது. 

        ஒரு வழியாக எனது இரண்டு மாதத் தேடல் முடிவுக்கு வந்தது. இன்று இரண்டாம் ஆண்டு கல்லூரி ஆரம்பம் என்பதை எண்ணி நேற்று முதலே எனக்கு தூக்கம் வரவில்லையாகையால், உறங்கா விழிகளோடு,  வழக்கத்திற்கு முன்னதாகவே  கல்லூரிக்கு வந்துவிட்டேன். இருந்த போதிலும், உணவு இடைவேளை நேரத்தில் தான் அவளை சந்திக்கும் வாய்ப்பு நல்கியது. அனைவரும் உணவருந்தும் கல்லூரி உணவகத்தில், நான் மட்டும் உண்ணாமல் அமர்ந்திருந்தபோது, நான் தொலைத்த எனது உயிர் என்னைத் தேடி புன்முறுவலுடன் வந்தது.

        "எப்படி இருக்கீங்க வெற்றி?" என என் நிலை தெரியாமல் அவள் கேட்க, ஏதோ வாயில் வந்த வார்த்தைகளை வைத்து ஒரு வழியாக சமாளித்தேன். அன்று கோவிலில் வேறு யாராவது பார்த்து அப்பாவிடம் சொல்லி விடுவார்கள் என்பதால் அதிகம் பேசவில்லை எனக் கூறி மன்னிப்பு கேட்டவள், என் உதவியால் தான் அந்தத் தேர்வை நன்றாக எழுத முடிந்தது எனக் கூறி மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்தாள். ஆனால், அவளால் தான் நான் எனது அடுத்த தேர்வை சரியாக எழுத முடியவில்லை என கூற இயலாமல் நான் அமைதி காத்து நின்றேன். மேலும் கடைசி நாளன்று ரயிலை தவற விட்டு விட்டதால், தேர்வு ஆரம்பித்த சிறிது நேரம் கழித்து வந்ததால், அன்றே என்னை சந்திக்க முடியவில்லை எனக் கூறினாள். 

     சாய்பாபா கோவிலுக்கு இரண்டு தெரு தள்ளி உள்ள சீனிவாசா தெருவில் தான் அவள் வசிக்கிறாளாம் (தெரிந்திருந்தால் வீடுவீடாக தேடி இருப்பேன்). பேருந்தில் கூட்டமாக இருப்பதால் தினமும் ரயில் மூலம் கல்லூரிக்கு வந்து செல்கிறாள் எனக் கூறினாள். இதனால் தான் வழியில் கூட அவளை சந்திக்க முடியவில்லை போலும்... நானும் இனி மின்சார ரயிலில் தான் கல்லூரிக்கு வரவேண்டும் என்ற மாபெரும் இலட்சியத்தை(!) மனதில் ஏந்திக் கொண்டேன்...



       ஆனால் அது நான் எண்ணியபடி அவ்வளவு சுலபமாக இல்லை. அப்பாவிடம் பேசி ரயில் பாஸ்க்கு உண்டான பணத்தை பெறுவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. இருந்தபோதும் பல பொய்களை பேசி அவரை சம்மதிக்க வைத்து, இச்சிறு விஷயத்தில் நான் அடைந்த வெற்றி(!), எனது தன்னம்பிக்கையை அதிகரித்தது. அவர் தந்த பணத்தை வாங்கி எனது பைக்குள் (Purse) வைத்த தருணத்தில், ஏதோ வாழ்க்கையின்  குறிக்கோளையே அடைந்து விட்டதை போல் ஒரு பரவச உணர்வு தோன்றியது. அவளுடன் தினமும் பயணம் செய்ய போகிறோம் என்ற குதூகல எண்ணமே அதற்கு காரணம்...

தொடரும்...


அடுத்த பகுதியை படிக்க

Comments

Post a Comment