பைந்தமிழ் காதல் - 13. Get out of my life


இன்று (2006ம் ஆண்டு)


    இப்போது நான் அண்ணா சாலையில் இருந்து மேற்கு மாம்பலம் செல்லும் 11H பேருந்தின் ஜன்னலோரத்தில் அமர்ந்திருக்கிறேன். என் இருக்கையில் சக பயணிகள் யாருமில்லை. காலையில் ஆரம்பித்த இந்த நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று பணி ஆணை (offer letter) வாங்கி வெளியே வருவதற்குள் மாலை ஐந்து மணி ஆகிவிட்டது. இந்நேரத்தில் தான் வழக்கமாக அவளுடன் கல்லூரியிலிருந்து நான் வீடு திரும்பும் நேரம். அன்றைய நிகழ்வுக்கு பின் மீண்டும் அவளோடு பேருந்தில் பயணிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை... அவள் கடைசியாக கூறிய வார்த்தைகள் மீண்டும் மீண்டும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது...  

Get out of my life...
Get out of my life...
Get out of my life... 

2004ம் ஆண்டு 

பல மாதங்கள் உருண்டோடிவிட்டன அவளிடம் பேசி... ஆனால் இன்றுவரை ஒன்று மட்டும் எனக்கு புரியவில்லை. என் காதலை எவ்வாறு அவள் கண்டறிந்தாள்? ஆனால் எனக்கு இது தேவைதான். ஆரம்பத்தில் அவளுடன் அந்த எண்ணத்தில் தானே பழக ஆரம்பித்தேன்? என ஒருபுறம் என் மனதில் இருந்த ஒரு எண்ணம் அவளுக்கு வக்காலத்து வாங்க, மற்றொரு எண்ணமோ நான் தான் திருந்தி அவன் நண்பனாக மாறிவிட்டேனே பிறகு என்ன தவறு இருக்கிறது? என என் சார்பாக வாதிட்டது. இவ்வாறு என் மனதுக்குள் தினம் தினம் பல போராட்டங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன... அப்போது அவளை காதலியாக நினைத்ததற்காக இரண்டு ஆண்டுகள் கடந்த பின் இப்போது வருத்தப்படுகிறேன்... 
தெய்வம் நின்று கொல்லும் என்பது இதுதானோ??? 

முதல் ஆண்டில் சின்சியர் மாணவன், இரண்டாம் ஆண்டில் ஒருதலை காதலன், மூன்றாம் ஆண்டில் நல்ல நண்பன், நான்காம் ஆண்டில் யாருமில்லா அனாதை என இந்த நான்காண்டு கல்லூரி வாழ்க்கையில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு விதமான அனுபவத்தை தருகின்றன... இப்போதெல்லாம் பெரும்பாலும் நான் யாருடனும் பேசுவதில்லை. பேசவும் பிடிப்பதில்லை... அவளைக் கடந்து வர வழி ஏதும் தெரியவில்லை. ஆனால் அதற்கான வழியையும் அவளே காட்டினாள்.

ஆம்! நாட்கள் செல்லச் செல்ல கடைசியாக அவள் சொன்ன வார்த்தைகளை தவிர மற்ற வார்த்தைகளையும் எண்ணிப் பார்த்தேன். "I am in important stage of my life" என அவள் கூறிய வார்த்தைகள் எனக்கு நினைவுக்கு வந்தது... எனக்கும் இது important stage தானே? அவளுக்கு அவள் அப்பா உள்ளது போல், எனக்கும் ஒரு குடும்பம் உள்ளதல்லவா? அவர்களும் என்னை நம்பிதான் உள்ளனர். அவர்களுக்காகவாவது இவ்வாண்டு நன்றாக படிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. எனது கவனம் முழுவதையும் படிப்பில் செலுத்த ஆரம்பித்தேன்... 

நீரோடையைக் கடப்பது போல் நினைவுகளைப் கடப்பது எளிதல்ல என்ற போதும் எனது பிறவிக் குணமான விடாமுயற்சி என்னை மெல்ல மெல்ல மீட்டு வந்தது. இறுதியாண்டின் முதல் பருவத்தில் (semester) நான் வாங்கிய அபார மதிப்பெண்களை கண்ட சக மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் என்னை பாராட்டினர். எனது வீட்டிலும் என் பெற்றோருக்கு மிக்க மகிழ்ச்சி. எனக்கும் தான்... ஆம் அவர்கள் இவ்வளவு நாள் பட்ட கஷ்டத்திற்கு இன்றுதான் நான் உண்மையாக இருக்கிறேன் என்ற எண்ணம் என்னை என் கவனத்தை வேறெங்கும் சிதற விடாமல் மென்மேலும் உற்சாகமூட்டியது... 


2005ம் ஆண்டு


இறுதி ஆண்டின் இறுதிப் பருவத்தில் மீண்டும் கல்லூரியின் ஆண்டு விழா வந்தது... இவ்வாண்டு கல்லூரியின் ஆண்டு விழாவும், அவளது பிறந்த நாளும் தற்செயலாக ஒரே நாளில் வந்தன. அதில் பங்கேற்பது எனது கடந்தகால துயர சம்பவங்களை நினைவுப்படுத்த கூடும் என்பதால் கலந்து கொள்ளாமல் அதை புறக்கணித்தேன். இருந்த போதிலும் கடந்த ஆண்டு அவள் பாடிய கவிதை மீண்டுமொருமுறை நினைவுக்கு வந்து மீண்டும் அவளை எனக்கு நினைவுப்படுத்தியது. அன்று அவள் சொன்ன கவிதையின் அர்த்தத்தை மீண்டும் எண்ணிப் பார்த்தேன். ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு வார்த்தையும் என் மீது அவளுக்கு இருந்த நம்பிக்கையை எடுத்துரைத்தது. அதெல்லாம் உண்மைதான் போலும். அதனால்தான் நான் அவளை காதலித்தது தெரிந்ததும் அவளுக்கு அவ்வளவு கோபம் வந்தது?!,  நான் என்ன செய்யக்கூடும்? எல்லாம் எனது விதிப்படி தானே நடக்கும்... 


எங்கள் கல்லூரியின் வழக்கப்படி ஆண்டு விழாவின் அடுத்த நாள் இறுதி ஆண்டில் படிக்கும் மாணவர்களைத் தவிர பிற மாணவர்களுக்கு விடுமுறை தினமாகும். அன்று இறுதி ஆண்டில் படிக்கும் அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் கல்லூரியின் சார்பாக பிரிவு உபச்சார (farewell party) விழா நடக்கும். கடந்த ஆண்டு இதைப் பற்றி நான் அறியவில்லை. ஆண்டு விழாவில் பங்கேற்க மனமில்லாத போதும்  இந்நிகழ்வை நான் தவறவிட விரும்பவில்லை... இன்று நாள் மட்டுமே அனைவரையும் ஒன்றாக பார்க்க முடியும்? என்னை உற்சாகப்படுத்திய ஆசிரியர்கள்,  கல்லூரி நண்பர்கள் அனைவரையும் இன்று தனித்தனியே சந்தித்து ஓரிரு வார்த்தைகளாவது பேசிவிட வேண்டும் என்ற எண்ணம் கொண்டேன். முடிந்தளவு எனது மெக்கானிக்கல் பிரிவில் மட்டும் இல்லாமல் மற்ற பிரிவுகளில் உள்ள எனது நண்பர்களையும் ஒரு முறை பார்த்து விட வேண்டும். அவள் உட்பட....

கடைசியாக ஒருமுறை அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தோன்றியது. முடிந்தால் அவளது அப்பாவிடமும் மன்னிப்பு கேட்டதாகச் சொல்ல வேண்டும். அவள் கூறியபடியே அவர் ஜென்டில்மேன் தான். இல்லாவிட்டால் அன்று அவ்வளவு சகஜமாக என்னிடம் பேசி இருக்க முடியுமா? மேலும் அவள் எனது காதலை எப்படி கண்டறிந்தாள் என்ற ரகசியத்தையும் தெரிந்து கொள்ளதான் வேண்டும்... என திட்டமிட்டேன்.  ஆயிரம் இருந்தபோதிலும் அவள்தானே எனது முதல் காதலி? அவளை இறுதியாக சந்திக்கும் வாய்ப்பை எதிர்நோக்கிக் காத்திருந்தேன்... ஆம்! இனி எங்கே, எப்படி, எப்போது பார்க்கப் போகிறேன்? 

காலங்கள் பல கடந்தும், என்றென்றும் நினைவில் நிலைத்திருக்கப் போகும் தருணம் அல்லவா???  

தொடரும்...

அடுத்த பகுதியை படிக்க

Comments

Post a Comment