பைந்தமிழ் காதல் - 14. The last meeting



2005ம் ஆண்டு

        இந்த ஆண்டின் சில நாட்களில், சில சமயங்களில் அவள் மீது எனக்கு அளப்பரிய கோபம் வந்ததுண்டு. அது நான் என்னைத் திருத்திக் கொண்ட பின்னும், எனது கடந்தகால தவறுக்காக என்னை அவள் தண்டித்து விட்டாள் என்ற விரக்தியின் வெளிப்பாட்டினால்... ஆனால் இன்று உணர்ச்சிகளுக்கு இடம் கொடுத்து விடக்கூடாது. முடிந்தளவு அமைதியாகவும், அன்பாகவும் நடந்து கொள்ள வேண்டும். ஒருவேளை அவளே என்னை மீண்டும் திட்டினால் கூட நான் கோபப்படக்கூடாது. இப்போது கோபப்பட்டு பிற்காலத்தில் அதை நினைத்து  எப்போதும் வருத்தப்படக் கூடாது என முடிவு செய்தேன். 

இன்று கல்லூரி வாழ்க்கையின் இறுதி நாள் துவங்கியது. முதலில் எனது வகுப்பில் படித்த சக மாணவர்கள் அனைவரிடமும் ஓரிரு வார்த்தைகள் பேசி அவர்களின் ஆட்டோகிராஃப் பெற்றுக் கொண்டேன். பின்பு முதலாம் ஆண்டிலிருந்து இதுவரை வகுப்பெடுத்த அனைத்து ஆசிரியர்களையும் தனித்தனியே சந்தித்து அவர்களிடம் ஆசி பெற்றேன்... அவர்களல்லவா பாறையாய் இருந்த என்னை உற்சாகம்  மற்றும் அறிவுரை எனும் இரு உளிக் கொண்டு செதுக்கியவர்கள்???!!! பின்பு ஒவ்வொரு பிரிவாக சென்று மற்ற பிரிவுகளில் படிக்கும் எனது பிற நண்பர்களை சந்தித்தேன். இறுதியாக அவள் படிக்கும் எலக்ட்ரிகல் பிரிவுக்கு சென்றேன்...

எலக்ட்ரிக்கல் பிரிவில் எனக்கு நன்கு பரிச்சயமான நண்பர்கள் இருவர் மட்டுமே... ஒன்று நாம் முன்னரே சந்தித்த அவளை எனக்கு அறிமுகப்படுத்திய சூர்யா. மற்றொன்று அவள். முதலில் அவனை சந்தித்துவிட்டு பிறகு அவளை சந்திக்க எண்ணினேன்... பிற நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்த அவன் என்னை கண்டதும் அவர்களிடமிருந்து விலகி என்னிடம் வந்தான். 

"என்ன வெற்றி, செம சந்தோஷமாக இருக்க போல???" என்றான். அவன் கேட்ட விதமே மிகவும் கிண்டலாய் இருந்தது... 

"எனக்கு என்ன சந்தோஷம்? நானே கடைசியா உங்களையெல்லாம் பார்க்க போறேனு வருத்தத்தில இருக்கேன்."

"ஹை... சும்மா சொல்லாதே எனக்கு தெரியாதா? என்ன உன் ஆளு தான் உனக்கு ஓகே சொல்லிட்டால்ல?".

"சத்தியமா நீ சொல்றது எனக்கு புரியல. என்ன சொல்ல வரேன்னு கொஞ்சம் தெளிவா சொல்லு..."

"என்னப்பா ஒன்னும் புரியாத மாதிரி நடிக்கிற? அவளை உனக்கு அறிமுகம் பண்ணி வச்சதே  நான் தான்,  எனக்கே  காது குத்திரியா? " 

"யாரு? தமிழையா சொல்றே? அவ கூட நான் பார்த்து, பேசி ரொம்ப நாள் ஆச்சு இன்னைக்கு தான் கடைசியா பார்க்கலாம்னு வரேன். அனேகமா நீ எங்கள தப்பா புரிஞ்சிருக்கனு நினைக்கிறேன்" 

"அப்படியா? அப்ப நீ அவள லவ் பண்ணலையா? அப்புறம் எதுக்கு என்ன அவ ரிஜக்ட் பண்ணா? கடந்த மூணு வருஷமா அவ பின்னாடி சுத்துறேன். இதோட மூணு வாட்டி புரோபோஸ்  பண்ணிட்டேன். ஒரு வாட்டி கூட பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் இல்ல அதான் கேட்டேன்" என அவன் கூறியதைக் கேட்டு சற்று அதிர்ச்சியானேன்.

"மூணு வாட்டி புரோபோஸ் பண்ணியா?" சற்று அதிர்ச்சியுடன் நான்...

"ஆமா! செகண்ட் இயர் படிக்கும்போது ரயில்வே ஸ்டேஷன்ல ஒரு வாட்டி, போன வருஷம் ஆண்டு விழாவில் ஒரு வாட்டி, அப்புறம் நேத்து ஒரு வாட்டி. கொஞ்சம் கூட பிடி கொடுக்க மாட்டறா... முடிஞ்சா நீ கொஞ்சம் ரெக்கமெண்ட் பண்ணு" என்றான்...

"போன வருஷம் ஆண்டுவிழாவில புரோபோஸ் பண்ணியா? முழு நாளும் அவ கூட தானே நானும் இருந்தேன் எனக்கு எப்படி அது தெரியாம போச்சு?" மீண்டும் அதிர்ச்சியுடன் நான்.

"ஓ அதுவா?  ஆடிட்டோரியத்துல உங்க ரெண்டு பேரு பையையும் (Bags)  வச்சுட்டு போனல்ல... அப்ப ஒரு லெட்டர் எழுதி அவ பேக்ல இருந்த ஹேண்ட் பேக் உள்ள வச்சுட்டேன். ஆனா அவ கொஞ்சம் கூட ரெஸ்பான்ஸ் பண்ணல... அட்லீஸ்ட் அந்த லெட்டரை படிச்சதா கூட காமிச்சிக்கல... ஒருவேளை உன்ன லவ் பண்றதால எனக்கு ரெஸ்பான்ஸ் பண்ணலனு நினைச்சேன். கொஞ்ச நாளா நீயும் அவளும் பேசாததால, உங்களுக்குள்ள பிரேக்கப் ஆயிடுச்சுனு நினைச்சு திருப்பி நேத்து ப்ரொபோஸ் பண்ணேன். ஆனா இப்பவும் அவ எனக்கு ஓ.கே. சொல்லல... ப்ளீஸ் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுடா" என்றான்

என் தலை சுழல ஆரம்பித்தது. இப்போது தான் எனக்கு எல்லாம் புரிந்தது. எல்லாம் இவன் வேலை தான் போலிருக்கிறது. இவன் தான் நான் அவளுக்கு பரிசாக வாங்கி வைத்த கைப்பையில் (Handbag) ஏதோ எழுதி வைத்துவிட்டான். அவளும் அதை நான் எழுதியதாக எண்ணிக் எங்கள் நட்பை துண்டித்து கொண்டாள்...
நானும் அவள் என்னிடம் கேட்டபோது எனது பழைய எண்ணங்களை தான் கேட்கிறாள் என எண்ணி உளறி விட்டேன்... 

 

எனக்கு கோபம் தலைக்கேறியது. அனைத்திற்கும் காரணம் இவன்தான் எனத் தெரிந்ததும் அவனை நைய புடைக்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அந்த கோபம் அவன் மீது மட்டுமல்ல. ஆம்! அவன் மீது மட்டும் தவறல்ல. உண்மை அறியாமல் என் நட்பை துண்டித்த அவள் மீதும் தான்... அவள் மீது மட்டும் இல்லை, உண்மையில் நானும் ஒரு காலத்தில் அவளை காதலித்தவன்தானே என்ற முறையில் என் மீதும் தான்... எங்கள் இருவரையும் சேர்த்தும் பிரித்தும் வைத்து விளையாடிய பைகள் (Bags) மீதும் தான்...

இதைத்தான் விதி என்பதோ???

தொடரும்...

அடுத்த பகுதியை படிக்க


Comments

Post a Comment