எகிப்தின் அற்புதங்கள்... 4. பாலை நிலத்தின் வரலாறு (Saqqara and Memphis)

 முந்தைய பகுதிகளை படிக்க...



4. பாலை நிலத்தின் வரலாறு (Saqqara and Memphis)


சக்காரா (Saqqara)


சக்காரா (Saqqara)

சக்காரா (சஹாரா அல்ல) கிசாவில் இருந்து அரை மணிநேர பயண தூரத்தில் உள்ள பேரிச்சை காட்டின் பின்னால் அமைந்த பாலை நிலம் ஆனால் அங்கு தான் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே பழமையான பிரமிடுகள் உள்ளன. அதில் சுமார் 4700 ஆண்டுகளுக்கு முன் ஜோசெர் மன்னருக்கு (King Djose, கி.மு. 2686-2668) கட்டப்பட்ட படிக்கட்டு வடிவ பிரமிடே உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே பழமையமான ஒன்றாக கருதப்படுகிறது. அதனுள் செல்ல தனி வழியும் உள்ளது. 


ஜோசெர் மன்னரின் படிக்கட்டு வடிவ பிரமிடு


துவக்ககால எகிப்து ராஜ்யத்தை நிறுவிய ஜோசெர் என்ற மன்னரின் கல்லறை கட்டிடம், அவரது ஆட்சியில் இருந்த 40 மாகாணங்களை குறிக்கும் வண்ணம் 40 தூண்கள் கொண்ட நுழைவாயில் கொண்ட கோட்டைக்குள்  அமைந்துள்ளது. அவற்றை கடந்து உள்ளே சென்று அங்கு பாதாளத்தில் உள்ள, அவரது சவப்பெட்டி (coffin) வைக்கப்பட்டிருந்த மேடையை பார்த்தது உண்மையிலேயே ஒரு மெய்சிலிர்க்கும் அனுபவமாக இருந்தது. இன்றும் அவரது ஆத்மா அங்கேயே தங்கி தன்னை தரிசிக்க வரும் மக்களை உற்று நோக்குவதாக எனது உள்ளுணர்வு கூறியது. குறிப்பிட்டு சொன்னால் பிரம்மாண்டமான கிசா பிரமிடை விட காலத்தில் மூத்த இந்த கலைநயம் மிக்க இதுவே என்னை அதிகம் கவர்ந்தது எனலாம்.

சக்காராவில் ஜோசெர் பிரமிடை தவிர இன்னும் பல பிரமிடுகள் உள்ளன. அவற்றில் பல அழிந்த நிலையில் உள்ளது. பிரமிடுகள் தவிர பல்வேறு கல்லறை கோட்டைகளும் (Tomb) உள்ளன. அவற்றின் உள்ளே அவர்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும் சிறப்பான பல்வேறு சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இறந்த பின் மறுபிறவியில் தாங்கள் பெற விரும்பும் வடிவங்களையும், தங்கள் வாழ்வியலை பற்றியும் குறிப்பாக விவசாயம், மீன்களை வரியாக செலுத்தும் வணிகர்கள் மற்றும் மகப்பேறு சிற்பங்கள் அதி அற்புதம். அங்குள்ள ஒவ்வொரு சிற்பமும் பல்வேறு வரலாற்று கதைகளை தன்பின் மறைத்து வைத்து அமைதி காத்தது போல் தோன்றியது. அவற்றை எல்லாம் காணக் காண, காலச்சக்கரத்தில் ஏறி அவர்களை நேரில் காணும் பேராசை மனதில் உண்டானது என்றால் மிகையில்லை.   

இப்படிப்பட்ட அற்புத கல்லறை கோவில்களில், அக்கல்லறைக்கு சொந்தமானவர்களின் சிற்பங்கள் வைக்கப்பட்டிருந்ததும் அவற்றின் முகங்கள்   பெரும்பாலும் சிதைக்கப்பட்டிருந்தன. அது அங்கிருந்த பொக்கிஷங்களை திருடிய  கொள்ளையர்களின் கைவரிசை ஆகும். சிலைகளின் முகத்தை உருகுலைத்தால், ஒருவேளை உடலுக்குரிய ஆன்மா திரும்பி வந்தாலும், தங்கள் கல்லறையை அடையாளம் கண்டுகொள்ளாமல் போவது மட்டுமின்றி, அவற்றின் பொக்கிஷங்களை திருடிய தங்களையும் தண்டிக்க இயலாது என்ற அவர்களின் அறிவார்ந்த சிந்தனையை என்னவென்று சொல்ல… 


மெம்பிசிஸ் (Memphis) 


மாமன்னர் இரண்டாம் ராமேசஸ் (Ramesses-ll)


சக்காராவில் இருந்து ஐந்து நிமிட தொலைவே உள்ள இடம் மெம்பிசிஸ். இதுவே அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால எகிப்தின் தலைநகரம். இங்கு தான் பண்டைய எகிப்தை ஆட்சி செய்த அரசர்களிலேயே சிறந்த மற்றும் வலிமை வாய்ந்தவராக போற்றப்படும் ஒப்பற்ற அரசர் இரண்டாம் ராமேசஸின் (Ramesses-ll) பிரம்மாண்ட சிலை உள்ளது. கி.மு. 1279 முதல் 1213 வரை சுமார் 66 ஆண்டுகள் ஆண்ட இவரது ஆட்சி காலத்தில் எகிப்தின் எல்லை வடக்கில் தற்போதைய சிரியா, மேற்கே லிபியா மட்டுமின்றி தெற்கே உகாண்டா வரை பரவியிருந்தது என கேள்வியுற்றேன். அந்த பெருமைமிக்க மன்னர் ராமேசஸின் பிரம்மாண்ட சிலையின் அருகே நிற்கும் போது, அதன் பிரம்மாண்டத்தின் முன்பு மட்டுமல்ல அவரின் புகழின் முன்பும் நாம் சிறு கடுகே என்ற உண்மை உரைத்தது.


எகிப்தின் சுருக்கமான வரலாறு 




அந்த இறைவனை போலவே என்று தோன்றியது என எவரும் அறியா எகிப்து, நீண்ட நெடிய வரலாறு கொண்டது. சுமார் 40,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என கணிக்கப்படும் அந்த வரலாற்றை அறியாமல் எகிப்து தேசத்தின் அருமையை புரிந்து கொள்வது இயலாத ஒன்று. மேலும் அந்த வீர வரலாற்றை விரிவாக எழுத இப்பிறவி போதாது என்பதால் படிப்போரின் சுவாரசியம் கருதி சுருக்கமாக விளக்க முயற்சிக்கிறேன்.  


  1. வரலாற்றுக்கு முந்தைய காலம் (கி.மு. 3150 வரை) 


இக்காலத்தின் வரலாற்று சான்றுகள் எதுவும் தற்போது இல்லை என்றபோதும் நாஸ்லெட் காதர் (Nazlet Khater) என்ற இடத்தில சுமார் 35,000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.  


  1. வரலாறு படைத்த காலம் (கி.மு. 3,150 முதல் கி.மு. 525 வரை)


இக்காலத்தில் சுமார் இருபத்தாறு வம்சங்களை (26 Dynasties) சேர்ந்த மன்னர்கள் எகிப்தை ஆட்சி செய்ததாக பட்டியல் இடப்பட்டிருக்கிறது.


இதில் முதல் வம்சத்தை சேர்ந்தவரே மாமன்னர் நார்மர். அவரே கீழ் எகிப்து, மேல் எகிப்து என இரண்டாக பிரிந்திருந்த நாட்டை ஒருங்கிணைத்தவர். அவரின் வம்சத்தில் தான், செடிகளின் தண்டுகளை கூழாக்கி  அதிலிருந்து தயாரிக்கப்பட்ட பாபிரஸ் எனப்படும் காகிதம் கண்டுபிடிக்கப்பட்டு, அதில் ஓவியங்களும், குறிப்புகளும் எழுதப்பட்டன.


துவக்க காலம் எனப்படும் கலைகளின் பொற்காலமான 3 முதல் 6ம் வம்ச காலத்தில் (கி.மு. 2686–2181), எகிப்தை பார்வோன்கள் எனப்படும் வம்சத்தினர் ஆட்சி செய்ய ஆரம்பித்தனர். இவர்களே மரணத்திற்கு பிந்தைய மறுவாழ்விற்காக பிரமிடுகளை கட்டி, வரலாற்றில் நீங்கா இடம் பிடித்தனர். இவர்களின் ஆட்சியில் தான் சூரிய கடவுள் வழிபாடு துவங்கியது. 


11 முதல் 17ம் வம்சங்களின் (கி.மு. 2050-1710)  காலத்தில் ஓசைரிஸ் (Osiris) எனப்படும் இறப்பின் கடவுள் புகழ் பெற்றிருந்தார். இவர் வாழ்வு, இறப்பு, மறுவாழ்வு, பாதாளம் போன்றவற்றின் கடவுள் ஆவார்.




இறப்பின் கடவுள் ஓசைரிஸ்


18 முதல் 26ம் வம்சங்கள் ஆட்சிபுரிந்த கி.மு. 16 முதல் 11ம் நூற்றாண்டு வரையிலான காலம், புது எகிப்து ராஜ்ஜியம் என அழைக்கப்படுகிறது.  இக்காலத்தில் 19ம் வம்சத்தை சேர்ந்த ராமேசஸ்  (Ramesses), மெம்பிசிஸை (Memphis) தலைநகராக கொண்டு 66 ஆண்டுகள் ஆட்சி செய்த வலிமையான மன்னர். 

 

  1. அலெக்சாண்டரின் வருகை / தாலமி பேரரசு 



இருபத்தாறு வம்சங்களின் ஆட்சி முடிவுக்கு பின்னர் எகிப்து, பாரசீக பேரரசின் (இன்றைய ஈரான்) பிடியில் இருந்தது. அதை மீட்க கிரேக்கத்திலிருந்து எகிப்திற்கு கி.மு. 332ல் வந்த மாவீரர் அலெக்சாண்டர், அந்நாட்டின் பாதுகாவலராக (Liberator) போற்றி புகழப்படுகிறார். அலெக்சாண்டரின் இறப்பிற்கு பின்னர், அவரின் படைத்தலைவர் அமைத்த எகிப்தின் சுதந்திர தாலமி பேரரசு (Ptolemaic Kingdom) சுமார் 300 ஆண்டுகள் நீடித்த பின் கிமு 30ல் எகிப்தின் பேரழகி ஏழாம் கிளியோபாட்ரா இறந்ததும் முடிவுக்கு வந்தது. அதன்பின் எகிப்து, ரோமப் பேரரசின் ஒரு பகுதியாக மாறியது. 



மாவீரர் அலெக்சாண்டர்


  1. ரோமானிய எகிப்து 


கி.மு. 33 முதல் 632 வரை கிட்டத்தட்ட 670 ஆண்டுகள், எகிப்து ரோமானிய பேரரசின் ஒரு அங்கமாக இருந்தது. இக்காலத்தில் தான் இங்கு கிறித்தவம் தழைத்தது. இன்றும் எகிப்தில் Coptic எனப்படும் பழங்குடி கிருஸ்தவர்களின் வழிவந்தவர்களும், அவர்களின் தேவாலயமும் உள்ளது. 


  1. அரேபியர் & துருக்கியர் ஆட்சி    


இறைத்தூதர் முகமது நபி தோற்றுவித்த இஸ்லாமிய மதத்தின் எழுச்சிக்கு பிறகு, கி.பி. 632 முதல் 1798 வரை எகிப்தை பல்வேறு கலீபாக்களும், சுல்தான்களும் ஆட்சி செய்தனர். இவர்களின் காலத்தில் தான் எகிப்து அரபு வடிவம் பெற்றது.      


  1. நவீன கால எகிப்து


பிரான்ஸ் (1798-1801), சூடான், முகமது அலி  வம்சம், பிரிட்டிஷ் (1882-1922) என பல கைகள் மாறி பிறகு பிரிட்டிஷ்க்கு கட்டுப்பட்ட மன்னராட்சியாக  (1922-1953) இருந்து 1953ல் குடியரசாக மாறியது.  


ஒவ்வொரு முறையும் பிறரின் ஆதிக்கத்தால் தனது சுயத்தை இழந்தாலும், உயிர்ந்தெழுந்து மறுவடிவம் பெற்ற பீனிக்ஸ் பறவை போல புதுப்பொலிவுடன் காட்சியளிப்பது எகிப்தின் தனித்துவமாகும். 



மேலும் சில புகைப்படங்கள் 



சக்காரா (Saqqara)


சக்காரா (Saqqara) பாலை நிலம்


அழிந்த நிலையில் உள்ள ஓரு பிரமிடு


சக்காராவின் உள்ளே


ஒரு கல்லறையின் நுழைவாயில்


சக்காராவில் உள்ள சில கல்லறைகள்

Teti பிரமிடின் உள்ளே செல்லும் வழி


Teti பிரமிடின் உள்ளே செல்லும் வழி


பிரமிடின் உள்ளே பல்வேறு குறியீடுகள்


ஒரு கல்லறை கட்டிடம் (Tomb)


இடிந்த நிலையில் உள்ள கல்லறை கட்டிடங்கள்


ஒரு முக்கிய பிரமுகரின் கல்லறை 


கல்லறைக்குள் செதுக்கப்பட்ட சிற்பங்கள் 


கல்லறைக்குள் செதுக்கப்பட்ட சிற்பங்கள்


பழங்கால எகிப்தின் வாழ்வியல் சிற்பங்கள்


விவசாயமும், மீன் பிடித்தலும்


மீனை வரியாக செலுத்துதல்


பழங்கால எகிப்தின் வாழ்வியல் சிற்பங்கள்


விவசாய சிற்பங்கள்


பழங்கால எகிப்தின் வாழ்வியல் சிற்பங்கள்



உலகின் பழையமான பிரமிடு   
(Djose Pyramid complex)


ஜோசெர் மன்னரின் படிக்கட்டு பிரமிடு 


கோட்டை வடிவ நுழைவாயில்


நுழைவாயில் பின்னே


நுழைவாயிலில் உள்ள தூண்கள்


நுழைவாயில் உள்ளே இருந்து


உலகின் முதல் பிரமிடு (Pyramid of Djose)


உலகின் முதல் பிரமிடு (Pyramid of Djose)


ஜோசெர் மன்னரின் பிரமிடு வளாகம்


ஜோசெர் மன்னரின் பிரமிடின் உள்ளே


ஜோசெர் மன்னரின் பிரமிடின் உள்ளே


ஜோசெர் மன்னர் வைக்கப்பட்டிருந்த மேடை



மெம்பிசிஸ் (Memphis) 

இரண்டாம் ராமேசஸின் பிரம்மாண்ட சிலை


இரண்டாம் ராமேசஸின் பிரம்மாண்ட சிலை


இரண்டாம் ராமேசஸின் தரிசனம்


இரண்டாம் ராமேசஸின் தரிசனம்


மெம்பிசிஸ் வளாகத்தில் 
 

மெம்பிசிஸ் வளாகத்தில் ஸ்பினிக்ஸ்  


பொய் தாடியுடன் ஸ்பினிக்ஸ் பெண் தெய்வம்


ஓங்கி உயர்ந்த ராமேசஸின் சிலை


பிரம்மாண்டத்தின் முன்பு




Comments

Post a Comment