ரைன் நதிக்கரையினிலே...7 ஜெர்மனி - சிறுகுறிப்பு



ரைன் நதிக்கரையினிலே...

7. ஜெர்மனி - சிறுகுறிப்பு
(About Deutschland)


Deutschland (டொய்ஸ்லேண்ட்) என்று அந்நாட்டு மக்களால் அன்போடு அழைக்கப்படும் ஜெர்மனியில் எனது பயணத்தின் போது நான் பெற்ற அனுபவங்களின் தொகுப்பு. பிறரின் அனுபவங்கள் மாறுபடலாம்.


Deutschland என்பதற்கு of the people அதாவது மக்களின் நிலம் என்று பொருள். கிட்டத்தட்ட 8ம் நூற்றாண்டில் இருந்தே மக்கள் இந்த வார்த்தையை பயன்படுத்துகின்றனர். 

கலாச்சாரம்

பொது இடங்களில் (குறிப்பாக புறநகர் பகுதிகளில்) ஒருவரையொருவர் பார்க்கும்போது முன்பின் தெரியாதவர் என்ற போதிலும் Hello (ஹலோ) என்று சொல்லும் மக்களின் வழக்கம் அந்நாட்டில் நான் ரசித்த ஒரு விஷயம். மக்களில் பெரும்பாலானோர் தனிமனித ஒழுக்கத்தை கடைப்பிடித்த போதிலும் எல்லாம் நாடுகளை போல இங்கும் சில  விதிவிலக்குகள் உண்டு. குறிப்பாக புறநகர்ப் பகுதிகளில் பாதுகாப்பு சற்று குறைவாகவே இருந்தது. ஆள் அரவம் இல்லாத சாலைகள் மற்றும் ரயில் நிலையங்கள் அங்கும் உண்டு. உடை கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை என்றபோதிலும் பெரும்பாலானோர் ஒழுக்கமான முறையிலேயே ஆடை அணிந்திருப்பதை கண்டேன்.

அரசியல்


திருமதி. ஏஞ்சலா மெர்க்கல்  



அரசியலைப் பொருத்தவரை ஜெர்மனியின் முதல் பெண் அதிபராக பதவியேற்ற திருமதி. ஏஞ்சலா மெர்க்கல்  2005ம் ஆண்டிலிருந்து தற்போது (அக்டோபர் 2021) வரை பதவியில் தொடருகிறார். இவர் ஐரோப்பிய யூனியனில் சக்தி வாய்ந்த தலைவர்களுள் ஒருவர்.  கடந்த செப்டம்பர் 26ம் தேதி நடைபெற்ற தேர்தலில் அவர் போட்டியிடவில்லை என்ற போதிலும் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தற்போது வரை காபந்து (தற்காலிக) அதிபராக நீடிக்கிறார். விரைவில் கூட்டணி அரசின் மூலம் புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார் என தெரிகிறது. 



மொழி

நமது நாட்டை ஒப்பிடுகையில் அந்நாட்டில் ஆங்கிலத்தை பயன்படுத்துவோர் நகர்ப்புறங்களில் சற்று குறைவாகவே உள்ளனர். புறநகர் பகுதியில் பெரும்பாலனோர் ஜெர்மன் மொழி மட்டுமே பேசுவதை கண்டேன். எனவே அங்கிருந்த முதல் வாரத்தில் ஜெர்மன் மொழியில் பொதுவாக பயன்படுத்தப்படும் ஒரு சில வார்த்தைகளை கற்றுக் கொண்டு பயன்படுத்த ஆரம்பித்தேன். இது அந்நாட்டு மக்களுடன் எளிதாக பழகுவதற்கு எனக்கு உதவியது.


ஒரு சில ஜெர்மன் சொற்கள்

Danke - Thank you 
Danke schön - Thank you very much
Bitte - You're welcome
Guten Morgen - Good morning
Bis später - See you later
Bis morgen - See you tomorrow
Willkommen - Welcome


உணவு முறை

உணவை பொருத்தமட்டில் முக்கிய நகரங்களில் இந்திய உணவகங்கள் பல இருந்தாலும் தினந்தோறும் அங்கு செல்லும் வாய்ப்பு இல்லாததால் அந்நாட்டு உணவுகளை தவிர்க்க இயலாது. அங்கு பெரும்பாலனோர் அசைவ உணவு உண்பவர்கள். ஹோட்டல் மெனுவில் ஒரிரு சைவ உணவுகள் (அதுவும் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்) மட்டுமே உள்ளது. சில உணவகங்களில் வெஜிடபிள் சாண்ட்விச் கேட்டால் கூட அதன் மேல் வேகவைத்து நறுக்கிய முட்டை துண்டை வைத்து தந்தார்கள். வேகன் (Vegan) உணவு வேண்டும் என கேட்க வேண்டும். அசைவ உணவுகளும் பெரும்பாலும் மசாலா இல்லாமல் வெறுமனே வேகவைத்ததாக உள்ளது (ஓரிரு விதிவிலக்குகள் உண்டு). அந்நாட்டு உணவுகளின் பெயர்கள் தெரியாததால் சரியான உணவை தேர்ந்தெடுப்பது கடினமான செயலே. 



என்னை பொறுத்தவரை உணவு என்பது மனது சார்ந்து ஒரு விஷயம் என்பதால் பெரிய அளவில் சிரமம் இல்லை. கிடைக்கும் சைவ உணவுகளை (முட்டைகளை நீக்கிவிட்டு) முழுமனதுடன் ஆரம்பித்தேன். ஓரிரு நாட்களிலேயே அந்நாட்டு உணவின் சுவையும் பிடிக்க ஆரம்பித்தது‌. விதவிதமான பிரட்ஸ், பீட்சா தவிர சாலட் மற்றும் நல்ல  கொழுப்பு (Good cholesterol) கொண்ட பால் பொருட்கள் நல்ல தரத்தில் கிடைப்பதால் உணவு எனக்கு ஒரு பிரச்சனையாக இல்லை. இன்னும் கேட்டால் அங்கிருந்த 17 நாட்களில் சற்று எடை கூடியே திரும்பி வந்தேன். மனமிருந்தால் மார்க்கமுண்டு...


போக்குவரத்து
போக்குவரத்தை பொருத்தவரை நகர்ப்புறங்களில் பேருந்து வரும் நேரங்கள் டிஜிட்டல் பலகையில் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் நமது ஊரை போலவே புறநகர்களில் பேருந்து சேவை குறைவாகவும் அவையும் சரியான நேரத்திற்கு வராமலும் உள்ளன.  ‌ ரயில் சேவை சிறப்பாக இருப்பினும் அவையும் ஒரு சில நேரங்களில் தாமதமாக வருகின்றன. தாமதமாக வந்த போதிலும் அதற்கு உண்டான அறிவிப்புகள் ரயில் நிலையங்களில் முறையாக உள்ளன. அங்கு ஒரே பயண சீட்டில் பேருந்து மற்றும் ரயில்களில் பயணம் செய்யும் வகையில் ஒருங்கிணைந்த சேவை உள்ளது. குறிப்பாக RMV எனப்படும் செயலியை பயன்படுத்தி செல்ல வேண்டிய வழிகளை அறியலாம் மற்றும் பயணச் சீட்டுகளை பெறலாம். அயல் நாட்டுப் பயணியான எனக்கு இது எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. விருப்பம்போல் பயணம் செய்ய தினசரி மற்றும் வாராந்திர பயணச்சீட்டுகள் (Day and weekly tickets) உள்ளன. குழுவாக பயணித்தால் டிக்கெட் விலை மிகவும் குறைவு. இருவருக்கு உண்டான கட்டணத்தில் 5 பேர் வரை பயணம் செய்யும் வகையில் குழு பயணச்சீட்டு (group ticket) கிடைப்பது ஒரு நல்ல விஷயம்.‌‌ ரயில் நிலையங்களில் டிக்கெட் கவுண்டர்கள் தனியாக ஏதும் இல்லை. முழுவதும் தானியங்கி இயந்திரங்கள் மட்டுமே. மக்கள் தொகை குறைவாக இருப்பதால் ரயில்களிலும், பேருந்துகளிலும் கூட்டம் ஓரளவு குறைவாக உள்ளது. ‌



பணப்பரிவர்த்தனை

பண பரிவர்த்தனையை பொருத்தமட்டில் பெரும்பாலானோர் பணம் மற்றும் அட்டைகளை (Cards) பயன்படுத்துகின்றனர். Google pay, phonepe போன்ற செயலிகளை யாரும் பயன்படுத்துவதாக தெரியவில்லை‌. அதைக் காண்கையில் இவை அனைத்தும் பாதுகாப்பற்றது என தோன்றுகிறது. பணத்தை பொறுத்தவரை யூரோ அறிமுகமான பின்னர் அதுவே அந்நாட்டின் பிரதான நாணயம். முந்தைய கரன்சியான மார்க் (Mark) தற்போது பயன்பாட்டில் இல்லை.  ‌‌‌
 




இயற்கை வளம் காத்தல்
 
ரைன் நதியின் மறுபுறம் இருந்த தொழிற்சாலையிலிருந்து இரவும் பகலும் வெளியேறிக் கொண்டிருந்த புகையை பார்க்கையில், தொழில்நுட்பங்களில் முன்னேறிய நாட்டிலும் தொழிற்சாலைப் பகுதிகளில் வெளிவரும் புகை தவிர்க்க இயலாததாகவே உள்ளது என உணர்ந்தேன். தொழிற்சாலை புகை ஒருபுறம் இருப்பினும் பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை எதுவும் இல்லாததால், மக்கள் தங்கள் விருப்பப்படி புகைப்பதை காணமுடிந்தது.  இயற்கை வளம் கொட்டிக் கிடப்பதால் ‌ தற்போதைக்கு இப்பிரச்சனைகள் பெரிய குறையாக தெரியவில்லை என்றபோதிலும் 2019ம் ஆண்டு உலக வெப்பமயமாதல் (Global warming) காரணமாக கோடைகாலத்தில் அதிக வெப்பத்தை அனுபவித்தனர் என்பதை கேட்டறிந்தேன். இது வளர்ந்த நாடுகளுக்கும் ஒரு எச்சரிக்கை மணியே...



நீர் மேலாண்மை

கடல் வளத்தில் இந்தியாவிற்கு நேர் மாறாக 3 புறம் நிலம் ஒரு புறம் கடலால் சூழ்ந்திருந்தாலும் வற்றாத ஜீவநதிகள் பல இருப்பதால், ஜெர்மனி நீர் வளம் மிக்கதாகவே விளங்குகிறது. ரைன் மிகப்பெரிய நதியாக இருந்தபோதும் அது பெரும்பாலும் சுத்தமாகவே இருப்பதாக தோன்றுகிறது. மேலும் நதியோர பூங்காக்கள், படகு போக்குவரத்து என அது சிறப்பாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. குடிநீரை பொறுத்தவரை  வீடுகளில் குழாய்களில் வரும் தண்ணீரை அப்படியே பிடித்து குடிக்கவும் சமைக்கவும் செய்யும் வகையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இது நீர் மேலாண்மையில் அவர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள் என எண்ண தோன்றுகிறது



முடிவுரை

மொத்தத்தில் ஜெர்மனி ஒரு அழகான பூமி. இயற்கை வளத்திலும், தொழில்நுட்பத்திலும் நம் நாட்டை விட பலமடங்கு முன்னேறிய ஒரு நாடு. இவ்வளவு சிறப்பம்சங்கள் இருந்த போதிலும் என்னைப் பொறுத்தவரை நம்மை நேசிக்கும் உறவுகள் இருக்கும் இடமே ஒவ்வொரு மனிதனுக்கும் சொர்க்கம். எனவே எனது சொர்க்க பூமியான இந்தியாவிற்கு மகிழ்ச்சியுடன் திரும்பி வந்தேன். ஜெர்மனியின் சுகமான நினைவுகளோடு...




மேலும் சில புகைபடங்கள்


எனது நடைபாதையில்(Eltville)


எனது நடைபாதையில் (Eltville)


Niderwalluf ரயில் நிலையம்


விஸ்பாடன் ரயில் நிலைய சுரங்க பாதை



    சில ஜெர்மானிய உணவு வகைகள் 


Veg salad


ஒரு வகை சாண்ட்விச்


Bandnduein  Pfifferlinge  Fruhlingslauch


Grape-caramel dessert


Cauliflower & Brocolli Gratin (விமானத்தில் வழங்கப்பட்டது)

King size Pizza

Breakfast @ Hotel



இத்துடன் ஜெர்மனி பயண அனுபவ கட்டுரை முடிவு பெறுகிறது.


நன்றிகள்  

  • இப்பயணத்தை ஏற்பாடு செய்த எனது அலுவலகத்திற்கு 
  • என்னுடன் பயணித்த சக அலுவலக நண்பர்களுக்கு
  • ஜெர்மனியில் எனக்கு உதவிய திரு. அரவிந்த் அவர்களுக்கு     
  • தனது பயண அனுபவத்தை பகிர்ந்து வழிகாட்டிய நண்பர் சரவணன் அவர்களுக்கு
  • அன்பாய் பழகிய ஜெர்மனி மக்களுக்கு 
  • கூகுள் மற்றும் விக்கிப்பீடியா - பல கூடுதல் தகவல்கள் பெற உதவியதற்கு
  • RMV ரயில் மற்றும் பேருந்து சேவை - பல்வேறு இடங்களுக்கு செல்ல உதவியதற்கு
  • அழகிய புகைபடங்கள் எடுக்க உதவிய Redmi 7Sக்கு
  • மனதில் பாய்ந்து கொண்டிருக்கும் ரைன் நதிக்கு   
  • இறுதியாக - இந்த நீண்ட பதிவை படித்து / பார்த்து கொண்டிருக்கும் உங்கள் ரசனைக்கு 
மீண்டும் ஒரு பயணத்தில் சந்திப்போம்.

நன்றி! வணக்கம்! 


புகைப்பட தொகுப்பு -  ஜெர்மனி மலர்கள் (German flowers)

Comments