ரைன் நதிக்கரையினிலே...4 இயற்கையின் மடியில்

ரைன் நதிக்கரையினிலே...

4. இயற்கையின் மடியில்
(Rüdesheim and Biebrich)



Rüdesheim - ருடெஷெய்ம்


10 அக்டோபர் 2021

        இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7:00 மணி அளவில் எனது அறையில் இருந்த புறப்பட்டேன். பேருந்து மட்டுமல்ல, டாக்ஸியும் இல்லாததால் வழக்கம் போல எல்ட்வில்லே ரயில்வே ஸ்டேஷனுக்கு நடந்து சென்று அங்கிருந்து Neuwied செல்லும் ரயில் மூலம் ருடெஷெய்ம் (Rüdesheim) செல்ல திட்டமிட்டேன். விரைவாக நடந்தும் பயணச்சீட்டு எடுக்கும் ஐந்து வினாடி இடைவெளியில் ரயிலை தவற விட்டு ஒரு மணி நேரம் காத்திருந்தேன். ஒரு வழியாக அடுத்த ரயிலை பிடித்து 5 நிறுத்தங்கள் தள்ளியிருக்கும் ருடெஷெய்ம் ரயில் நிலையத்தை அடைந்தேன். ரயில் நிலையம் ரைன் ஆற்றங்கரையின் வெகு அருகில் அமைந்திருந்தது. ரயில் நிலையத்திற்கு அருகிலேயே கப்பல்கள் பலவும் இருந்தன. பரந்து விரிந்த ரைன் பள்ளத்தாக்கில் நதியிலிருந்து மேகங்கள் உருவாகும் காட்சி அற்புதமாக இருந்தது.



Rüdesheim திராட்சை தோட்டங்கள் நடுவே


ருடெஷெய்ம் ரைன் நதிக்கரையில் அமைந்துள்ள சுற்றுலா நகரம். இது யுனெஸ்கோவால் (UNESCO) அங்கீகரிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் ஒன்றாகும். ஒயின் தயாரிப்பதற்கு புகழ் பெற்ற இடம்.  நதிக்கரையோரம் உள்ள மலை எங்கும் திராட்சை பயிரிடப்பட்டு அதைக்கொண்டு ஒயின் தயாரிக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் ஒயின் உலகத் பிரசித்தி பெற்றது. மலை உச்சிக்கு செல்ல இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று அடிவார நகரத்திற்குச் சென்று அங்கிருந்து கேபிள் கார் மூலம் செல்லலாம் அல்லது திராட்சைத் தோட்டங்கள் வழியே நடந்தும் செல்லலாம். வெறும் அரை கிலோ மீட்டர் தூரமுள்ள மலை அடிவார நகரத்திற்கு செல்ல ஒரு பொம்மை ரயிலும் (Toy train) உள்ளது. 


இவை ஏதும் அப்போது எனக்கு தெரியாததால், ரயில் நிலையத்தில் இறங்கியவுடன் நேராக மலையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். அதுவும் நல்லதுதான். வழியெங்கிலும் உள்ள தோட்டங்களில்  திராட்சைகளை பறித்து ருசித்தபடி உற்சாகமாக மலையேறினேன். ஏறும் வழி முழுவதும் அடிக்கடி திரும்பி சூரிய ஒளியில்  ஜொலிக்கும் ரைன் நதியின் அழகிய காட்சியைக் கண்ணார ரசித்துக் கொண்டே சென்றேன்.



மலைமேல் Tempel எனப்படும் கோபுரம்  



சிறிது நேரத்தில் மலைமேல் ஒரு வட்ட வடிவமான தூண்களின் மேல் அமைக்கப்பட்ட கோபுரம் ஒன்றை கண்டேன். இதற்கு டெம்பிள் (Tempel) என்று பெயர். இது பார்ப்பதற்கு அழகாக இருந்தது. நமது ஊரில் மட்டுமல்ல ஜெர்மனியிலும் மலைமேல் டெம்பிள்கள்  கட்டுவது வழக்கம் என தோன்றியது. பின்பு சிறிது நேரம் சென்றவுடன் நியூயார்க் நகர சுதந்திரதேவி சிலை போல உயரத்தில் அமைக்கப்பட்ட ஒரு சிலையை கண்டேன். அந்த இடத்திற்கு  நீடர்வால்ட் (Niederwald in Rudesheim) என்றும் அந்த சிலைக்கு ஜெர்மானியா என்றும் பெயர்



ஜெர்மனியா சிலை

சிலையின் பீடத்தில்
புகைப்பட உதவி : விக்கிப்பீடியா


இது பிரஸ்ஸியா என்று அழைக்கப்பட்ட முன்னாள் ஜெர்மனியின் ஒரு பகுதி மீதான பிரான்ஸின் போரில் ஜெர்மன் இளவரசர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாகவும், ஒருங்கிணைந்த ஜெர்மனி என்ற ஒரு நாடு உருவாக காரணமான வரலாற்றுச் சிறப்புமிக்க அந்நிகழ்வை போற்றவும் மலை உச்சியில் 1871-1883 ஆண்டுகளில் அமைக்கப்பட்ட 125 அடி உயரம் கொண்ட ஒரு நினைவுச் சின்னம் ஆகும். ஜெர்மானியா சிலையின் வலது கையில் உள்ள மீட்கப்பட்ட கிரீடம் உயர்ந்தும், போர் முடிவுற்றதால் இடது கையில் உள்ள போர் வாள் தாழ்ந்தும் காணப்படுகிறது. சிலையின் பீடத்தில் "Die Wacht am Rhein" என்ற ஜெர்மனியின் தேசப்பற்று பாடலை விளக்கும் வண்ணம் சிற்பங்கள் உள்ளன. இவ்வரலாறு பற்றிய விவரங்கள் இங்கு கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவல்களுக்கு - Refer : https://www.niederwalddenkmal.de/


நீடர்வால்ட் - ஜெர்மானியா சிலை எதிரே



நீடர்வால்டில் உள்ள ஜெர்மானியா சிலை எதிரே உள்ள ரைன் பள்ளத்தாக்கில் பாயும் நதியை கண்டும் காணாதது போல் உள்ளது ஆனால் அங்கு சென்ற ஒருவர் பள்ளத்தாக்கில் ஜொலிக்கும் நதியின் பேரழகை பார்த்து மனதை பறி கொடுக்காமல் இருப்பது சாத்தியமில்லை ‌ என்பது சத்தியம். ஜெர்மானியா சிலையையும், ரைன் பள்ளத்தாக்கையும் ரசித்த பிறகு அதன் அருகில் உள்ள மலை பாதையில் ஒரு சிறிய பயணம் செல்ல எண்ணி தவறுதலாக அலைபேசி சிக்னல் இல்லா காட்டுக்குள் நுழைந்து விட்டேன். 45 நிமிடங்களுக்குப் பிறகு சரியான வழியைக் கண்டறிந்து மீண்டும் நீடர்வால்டை அடைந்தேன். ரைன் நதிக்கரையின் இருபுறமும் உள்ள மலைத்தொடர்கள் நடைபயிற்சிக்கு (Hiking) புகழ்பெற்றவை‌ இவை சுமார் 320 கிலோமீட்டர் தூரம் கொண்டவை. இதில் நீடர்வால்ட் உட்பட பல பகுதிகள் முக்கிய இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.  நடை பயணத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இதை கடப்பது ஒரு அற்புத சாதனை என்ற போதிலும் எனக்கு   இருக்கும் குறைவான நாட்களால் நீண்ட பயணம் சாத்தியபடவில்லை. 


ரைன் நதிக்கரையின் முக்கிய இடங்கள் 
நன்றி : Google


பிறகு அங்கிருந்து அடிவாரம் செல்லும் கேபிள் காரில் செல்ல ஆர்வம் கொண்டு அதில் பயணம் செய்தேன். கேபிள் காரில் இருந்து பார்க்கும்போது திராட்சைத் தோட்டங்களும், ரைன் நதியின் பேரழகும் அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரங்கள் போல் விளங்கின. 

ருடெஷெய்ம் அடிவார நகரம் சுற்றுலா பயணிகளால் நிரம்பி ஆரவாரமாக இருந்தது. மக்கள் மகிழ்ச்சியுடன் பல்வேறு கடைகள் மற்றும் ஹோட்டல்களில் தங்களுக்கு பிடித்தமான பொருட்களை வாங்கி மகிழ்ந்து கொண்டிருந்தனர். அங்கிருந்த ஒரு உணவகத்தில் பெயர் தெரியாத ஒரு ஜெர்மன் சைவ உணவை புசித்தேன். சீஸ் மற்றும் நூடுல்ஸில் செய்யப்பட்டு அதன்மேல் பகோடா துருவல் போடப்பட்டது போல் காணப்பட்ட அதன் பெயர் தெரியாவிட்டாலும் சுவை நன்றாகவே இருந்தது. பொதுவாக ஜெர்மனியில் சைவ உணவு வகைகள் சற்று குறைவு என்றாலும், அங்கு இயற்கையாக கிடைக்கும் பால் பொருட்களால் சமைக்கப்பட்ட உணவுகள் பெரும்பாலும் சுவையாகவே (எனது தனிப்பட்ட கருத்து) இருந்தது. பிறகு கேபிள் கார் மூலம் மலை உச்சிக்கு மீண்டும் சென்று அங்கிருந்து எனக்கு பிடித்த திராட்சை தோட்டங்களில் வழியாக நடந்து மலை இறங்கி ரயில் நிலையத்தை அடைந்தேன்.



käsespätzle - ஒரு ஜெர்மானிய பாரம்பரிய உணவு




Biebrich palace and Schloss park 

நேரம் அதிகமாக இருந்த காரணத்தால் எனது அறைக்கு உடனடியாக திரும்பாமல் முன்தினம் செல்ல திட்டமிட்டு பிறகு தவறவிட்ட வைஸ்பேடன்-பீப்ரிச் (Wiesbaden-Biebrich) பகுதிக்கு ரயில் மூலம் சென்றேன். இங்கு மிகப்பெரிய பூங்காவும் அழகிய கோட்டையும் (Palace) உள்ளது. கோட்டை 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு 18ம் நூற்றாண்டு துவக்கத்தில் அப்பகுதி மன்னர்களின் கோடை வாசஸ்தலமாக இருந்துள்ளது. கோட்டை அழகாக இருந்தது என்ற போதிலும் அதன் உள்ளே செல்ல அனுமதி இல்லை.  கோட்டை மிகவும் அகலமாக இருந்ததால் அதன் முழு உருவத்தையும் சாதாரண அலைபேசி கேமராவில் படம் பிடிக்க முயன்று தோற்றுப் போனேன் (Panorama பயன்படுத்த வேண்டும்). பின்பு முழு கோட்டையையும் எனது இரு விழிகளில் படமெடுத்து இதயத்தில் சேமித்து வைத்தேன்.

கோட்டையின் பின்புறம் புல்வெளிகள் நிறைந்த பெரிய  பூங்கா  (Schloss park)  உள்ளது. பூங்கா மிகப்பெரியதாகவும் நன்றாக பராமரிக்கப்பட்டும் வருகிறது. பல குடும்பங்கள் வார இறுதி நாட்களை இங்கே மகிழ்ச்சியுடன் கழிக்கின்றன. பூங்காவில் ஒரு பெரிய குளம் உள்ளது. அதில் வாத்துகள் பல உள்ளன. அவைகளுக்கு அங்கு வரும் குழந்தைகள் உணவளித்து மகிழ்கின்றன. ஜெர்மானிய குழந்தைகள் நன்றாக அலங்கரிக்கபட்டு அழகாய் காட்சி அளிக்கின்றனர். மேலும் இயற்கையாகவே அவர்களின் கண்களில் உள்ள நீலம் மற்றும் பச்சை நிறம் கலந்த கருவிழிகள், அவர்களின் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கிறது. இக்குழந்தைகளை பார்க்க பார்க்க என் செல்ல மகளின் பிரிவு என் மனதை வாட்டியது. 


Biebrich palace


பூங்காவில் பலர் தங்களது வளர்ப்புப் பிராணிகளான விதவிதமான நாய்களுடன் வந்திருந்தனர். ஜெர்மனியில் வளர்ப்பு பிராணிகளுக்கு சிறப்பிடம் உண்டு. நான் வசிக்கும் பகுதியில் ஒரு பூனை காணாமல் போனதிற்காக ஒட்டப்பட்ட போஸ்டரை கண்டது அவர்கள் தங்கள் செல்லப்பிராணிகளை எந்த அளவுக்கு நேசிக்கிறார்கள் என விளக்கியது. இந்நாட்டில் செல்லப்பிராணிகளை பேருந்துகள், ரயில்கள், உணவகங்கள் என எங்கு வேண்டுமானாலும் நீங்கள் அவற்றை அழைத்துச் செல்லலாம்.  இவற்றைப் பார்க்கும்போது நம்மூர் நாய்களுக்கு இப்படிப்பட்ட வாய்ப்புகள் கனவிலும் கிடைக்காது என்றே தோன்றியது. நாயாகப் பிறந்தால் கூட ஜெர்மனியில் தான் பிறக்க வேண்டும் போல முதலில் தோன்றினாலும் நம்மூர் தெருநாய்களுக்கு இருக்கும் சுதந்திரம் ஜெர்மனி நாய்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை என பிறகு தோன்றியது. சோற்றை விட சுதந்திரம் முக்கியம் அல்லவா?


நதிக்கரையில் பிரார்த்தனை பூட்டுகள்



பிறகு கோட்டையையும் அதன் வாசலில் உள்ள ரோட்டையும் கடந்து எதிரே ரைன் நதிக்கரையை அடைந்தேன். நதிக்கரையில் சில இடங்களில் பிரார்த்தனை பூட்டுகள் தொங்கவிடப்பட்டிருந்தது (எங்கேயும் காதல் படம் போல) வித்தியாசமாக இருந்தது. நதிக்கரையில் மக்கள் அமர்வதற்காக நீண்ட இருக்கைகள் (bench) பல போடப்பட்டிருந்தன. அங்கிருந்தவர்களில் பெரும்பாலானோர் கையில் ஒயினுடன் காட்சியளித்தனர். அக்காட்சியை பார்த்த எனக்கு "கண்ணெதிரே ரைன்; கையருகே ஒயின்"   என கவிதை பாடத் தோன்றியது. ஜெர்மானியர்கள் அவர்கள் வாழ்வை நன்றாக அனுபவிக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. பிறகு வழக்கம்போல் ரயில் மூலம் எனது அறைக்கு திரும்பினேன். பலவித அனுபவங்களோடு...


தொடரும்... ‌‌


மேலும் சில புகைபடங்கள்


Rüdesheim and Niederwald
 

ரைன் நதி கப்பல் 


நதியில் இருந்து புறப்படும் மேகங்கள்


அடிவார நகரில் பொம்மை ரயில்


நீட்டர்வால்ட் ஜெர்மனியா சிலை


கேபிள் கார்கள்


கேபிள் கார்



ருடெஷெய்ம் அடிவார நகரம் 


திராட்சை தோட்டம்



கொத்து கொத்தாய் திராட்சைகள்


ஒரு ஒயின் தொழிற்சாலை  


ரைன் நதி பள்ளத்தாக்கு


ரைன் நதி பள்ளத்தாக்கு


திராட்சை தோட்டத்தின் பின்னே தவழும் மேகங்கள்



Biebrich palace and Schloss park 


பீப்ரிச் கோட்டை


பீப்ரிச் கோட்டை


பீப்ரிச் கோட்டை பின்புறம்



பீப்ரிச் கோட்டை பின்புறம்


பீப்ரிச் பூங்கா உள்ளே


பீப்ரிச் பூங்கா உள்ளே



அழகிய வாத்துகள்



பசுமையான புல்வெளிகள்



மரத்தின் பின் ஒளிந்து விளையாடும் சூரியன்


திருமண போட்டோஷூட்



ஒரு ஜெர்மானிய குழந்தை (பெற்றோர் அனுமதியுடன் எடுத்த புகைப்படம்)






அடுத்த பகுதியை படிக்க...

Comments