இக்கட்டுரையின் முந்தைய பகுதியை படிக்க
ரைன் நதிக்கரையினிலே...
3. கலாச்சார நிழலில்
(Mainz and Eberbach)
Mainz - பழங்கால நகரம்

Mainz Marktplatz
9 அக்டோபர் 2021
அதிகாலையிலேயே 5 மணிக்கே நம் நண்பர்கள் கார் மூலம் முனிச் நகருக்கு புறப்பட்டனர். நான் நிதானமாக எழுந்து சில துணிகளை துவைத்து விட்டு காலை 9 மணி அளவில் தன்னந்தனியே எனது பயணத்தை தொடங்கினேன்... நாங்கள் தங்கியிருந்த இடம் நகரின் வெளிப்புறத்தில் இருப்பதால் வார நாட்களில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு பேருந்து மட்டுமே வந்து செல்லும். அன்றைய தினம் வார இறுதி நாள் என்பதால் அது 2 மணி நேரத்திற்கு ஒன்றாக குறைக்கப்பட்டிருந்தது. குறித்த நேரத்திற்கு பிறகு அரை மணி நேரம் காத்திருந்தும் பேருந்து வராததால் சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள எல்ட்வில்லே ரயில் நிலையத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
பொதுவாக நடைபயணம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. எனது பயணத்தில் சாலையோரம் பல்வேறு புதிய பூக்களை கண்டேன். அது மனதிற்கு மகிழ்ச்சியை தந்தது. மேலும் நான் சென்ற சாலையின் இடது புறம் முழுவதும் திராட்சை தோட்டங்கள் இருந்தன. அந்த திராட்சைகள் ஒயின் தயாரிப்பதற்காக வளர்க்கப்படுகின்றன. ஜெர்மனியின் ஒயின் மிகவும் பிரபலமானது. அதிலும் ரைன் நதிக்கரையில் உள்ள திராட்சைத் தோட்டங்களில் இருந்து தயாரிக்கப்படும் ஒயின் உலகப் பிரசித்தி பெற்றது. வழியெங்கிலும் ரசித்துக் கொண்டே வந்த போதிலும், எனது விரைவான நடையால் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எல்ட்வில்லே ரயில் நிலையத்தை 30 நிமிடங்களில் அடைந்தேன்.
விஸ்பாடன் நகருக்குச் சென்று அங்கிருந்து தரையில் உள்ள மைன்ஸ் (Mainz) நகருக்கு செல்வதே எனது திட்டம். ஆனால் விஸ்பாடன் நகரின் பிரதான ரயில் நிலையத்தில் (Hauptbahnhof) சில பணிகள் நடைபெற்று வருவதால் வழியில் உள்ள Mainz-Kastel நிலையத்திலேயே இறங்க வேண்டியதாயிற்று. அது தேனீர் இடைவேளை நேரம் என்பதால் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள ஒரு கடையில் ஒரு கப்புசினோ (Cappuccino) பருகினேன். பொதுவாக வெளிநாடுகளில் காபி கேட்டால் சர்க்கரை இல்லாத கருப்பு காபியைத்தான் தருவார்கள். எனவே நாம் பாலுடன் கலந்த காபி (Coffee with milk) என கேட்க வேண்டும். மேலும் சர்க்கரையை தனியாக சேர்க்க வேண்டும். Cappuccino பருகிய பின் அங்கிருந்து 1.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மைன்ஸ் நகரை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
மைன்ஸ் (Mainz) ஜெர்மனியின் ஒரு புகழ்பெற்ற பழங்கால நகரம் (Old town). தெற்கு திசையில் இருந்து வடக்கு நோக்கி பாய்ந்து வரும் ரைன் நதியானது, மைன்ஸ் நகரில் இரண்டாகப் பிரிந்து கிழக்கு திசையில் மெயின் (Main) என்ற துணை நதியாகவும், மேற்கு திசையில் ரைன் (Rhine) என்ற பெயரிலேயே தொடர்ந்தும் செல்கிறது. அத்தகைய சிறப்புமிக்க நகரத்தில் சுமார் 500 மீட்டர் அகலமுள்ள ரைன் நதியின் மீது கட்டப்பட்ட தியோடர் ஹியூஸ் பாலத்தை (Theodor-Heuss-Brücke) நடந்து, கடந்து சென்றேன். அப்போது பாலத்தின் அடியில் ஓரளவு பெரிய சரக்கு கப்பல் ஒன்று கடந்து செல்லும் காட்சியை கண்டேன். அது ரைன் நதி அந்நாட்டு சரக்குப் போக்குவரத்தின் உயிர்நாடி என உணர்த்தியது. பாலத்தின் அடியில் நதியை ஒட்டி மரங்களுடன் கூடிய நிழல் சாலை மக்கள் இயற்கையோடு இணைந்து தங்கள் பொழுதை போக்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது பாராட்டத்தக்கது. பாலத்தைக் கடந்த பின், சாலையின் எதிரே தெரிந்த கோட்டை போன்ற கட்டிடம் பாரம்பரிய நகரமான மைன்ஸ் இருகரம் நீட்டி என்னை வரவேற்பது போல் தோன்றியது.
இறுதியாக மதியம் 12 மணியளவில் மைன்ஸ் நகரின் கதீட்ரல் எனப்படும் தேவாலயத்தை சென்றடைந்தேன். கதீட்ரல் மிகவும் பெரிதாகவும் பழமையானதாகவும் இருந்தது. அதில் அவர்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் பல வேலைப்பாடுகள் நிறைந்த இறை தூதர்களின் திருவுருவ சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் வரிசையாக ஏற்றிவைக்கப்பட்டிருந்த விளக்குகள் தேவாலயத்திற்கு மேலும் அழகு சேர்த்தன. கதீட்ரல் மைன்ஸ் நகர சந்தையின் (ஜெர்மன் மொழியில் Marktplatz) மையத்தில் அமைந்துள்ளது. சந்தையில் நிறைய கடைகளும், வார இறுதி நாள் என்பதால் அவற்றில் மக்கள் கூட்டமும் அதிகமாக இருந்தது. காய்கறிகள், பழங்கள், ஒயின்கள், பாஸ்தாக்கள் (Pasta) மற்றும் பல்வகை உணவுக் கடைகள் அனைத்தும் இருந்தது. சிலர் மார்க்கெட் பகுதியில் இசைக்கருவிகளை வாசித்து பணம் வசூலித்து கொண்டிருந்தது வேடிக்கையாக இருந்தது. மக்கள் இங்கு தங்கள் குடும்பத்துடன் வந்து, வேண்டியதை வாங்கி, பொது இடங்களில் அமர்ந்து உணவருந்தி நிறைய நேரம் செலவழித்து மகிழ்வது போல் தெரிகிறது. அக்காட்சி எனது மனதிலும் ஒரு வித மகிழ்ச்சியை உண்டாக்கியது போல் தோன்றியது என்பது உண்மையே.
Gutenberg Museum
பின்னர் அருகிலுள்ள குட்டன்பெர்க் அருங்காட்சியகம் (Gutenberg Museum) சென்றேன். இது அச்சிடும் தொழில்நுட்பத்தை (Printing technology) அடிப்படையாகக் கொண்டது. நுழைவு கட்டணம் 5 யூரோக்கள். இங்கு பழங்கால அச்சு இயந்திரங்கள் உள்ளன, அவை எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்கினர். இந்த அருங்காட்சியகத்தில் புனித பைபிளின் பழைய அச்சு புத்தகங்கள் பல்வேறு அளவுகளில் உள்ளன. பைபிளின் மிகப் பழமையான நகல் அவர்களிடம் இருப்பது போல் தெரிகிறது. அருங்காட்சியகத்தின் உள்ளே ஒரு திரையரங்கம் உள்ளது. அதில் அருங்காட்சியகத்தைப் பற்றி ஒரு குறும்படம் ஒளிபரப்பினர். அது ஜெர்மன் மொழியில் இருந்தாலும் புரிந்து கொள்ளும் வகையில் இருந்தது.
பிறகு அங்கிருந்த வெளியேறி அருகில் இருந்த இந்திய உணவகம் ஒன்றில் சாதம் மற்றும் மஸ்ரூம் மசாலா சாப்பிட்டேன். அதற்கு அவர்கள் 15.40 யூரோக்கள் வசூலித்தனர், அதை நாம் இந்திய ரூபாயாக கணக்கிடும் போது (1 யூரோ = 86.5 ரூபாய் தோராயமாக) லேசாக தலை சுற்றியது எனினும் இது நான் பணிபுரியும் நிறுவனத்தின் செலவு என்பதால் சற்று சுதாரித்து கொண்டேன். நகரை நன்கு சுற்றிப் பார்த்தபின் பேருந்து மூலம் விஸ்பாடன் வந்து அங்கிருந்து Biebrich Palace (கோட்டை) மற்றும் அதன் பின்புறம் Schloss Park (பூங்கா) செல்ல திட்டமிட்டிருந்தேன். ஆனால் பேருந்து நிறுத்தத்தை அடையாளம் காணும் குழப்பம் காரணமாக வேறொரு தவறான திசையில் பயணம் செய்து விட்டேன். ஒருவழியாக சரியான வழிக்குத் திரும்பினாலும், சோர்வின் காரணமாக மேற்கொண்டு பயணம் செய்வதைத் தவிர்த்து பத்திரமாக எனது அறைக்கு திரும்பினேன், மைன்ஸ் நகரின் கலாச்சார நினைவுகளோடு...
Kloster Eberbach - கலாச்சார மையம்
13 அக்டோபர் 2021
இன்று எங்கள் அலுவலகத்தில் Kloster Eberbach என்ற இடத்திற்கு அழைத்துச் சென்றனர். இது முற்காலத்தில் பல துறவிகள் (Monks) வாழ்ந்த மடாலயம் (Monestry). பழங்காலத்தில் நமது நாட்டில் துறவிகள் எப்படி மடங்களில் தங்கி ஔஷதங்கள் (மருந்துகள்) தயாரித்தனரோ, அதே போல் இங்கு ஒயின் தயாரித்துள்ளனர். இவ்விடம் 17 ஆம் நூற்றாண்டில் ஒரு மிகப்பெரிய ஒயின் தொழிற்சாலையாக விளங்கியுள்ளது. ஒயினை ஊற்றி வைக்கப் பயன்படுத்தப்பட்ட பெரிய பெரிய பீப்பாய்கள் பல நினைவு சின்னமாக வைக்கப்பட்டுள்ளது. 300 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்க பட்ட ஒயினை பல பாட்டில்களில் அடைத்து தனியறையில் பாதுகாத்து வருகின்றனர். விலைமதிப்பில்லாத இவற்றை ஆண்டிற்கு ஒருமுறை ஏலம் விடுவதாக கூறினர்.
இடம் பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கிறது. அந்நாட்டு கலாச்சாரத்தை எடுத்துரைப்பதாகவும் பல்வேறு காலகட்டத்தில் அவ்விடம் அடைந்த மாற்றங்களை விளக்குவதாகவும் இருக்கிறது. இங்கு 1986ல் வெளிவந்த ஜேம்ஸ்பாண்ட் திரைப்படமான "தி நேம் ஆஃப் தி ரோஸ்" (The name of the rose) எடுக்கப்பட்டதாக கூறினர். மேலும் பிளைமோபில் (Playmobil) என்ற விளையாட்டை பிரபலப்படுத்தும் விதமாக பல பொம்மைகள் இங்கே வைக்கப்பட்டுள்ளன. சமீப காலத்தில் உருவாக்கப்பட்ட கண்ணாடியில் பொறிக்கப்பட்ட "இயேசுவை கையில் ஏந்திய மாதா" உருவ ஓவியம் என்னை மிகவும் கவர்ந்தது. பின்பு அங்கேயே உள்ள ஒரு உணவகத்தில் இரவு உணவு ஏற்பாடு செய்திருந்தனர்.

கண்ணாடியில் தெரியும் கலை
இந்நாட்டில் எந்த உணவகத்திற்கு சென்றாலும் என்ன சாப்பிடுகிறீர்கள் என கேட்பதற்கு பதில் என்ன குடிக்கிறீர்கள்? என்பதே முதல் கேள்வியாக உள்ளது. பெரும்பாலும் தண்ணீருக்கு பதில் ஒயின் பீர் அல்லது குறைந்தபட்சம் கோக் பரிமாறப்படுகிறது. குடிக்கும் தண்ணீரிலும் sparkling water எனப்படும் சோடா கலந்த நீர் அதிகம் விற்கப்படுகிறது. மொழி பிரச்சனையால் உணவக மெனுவில் சைவ உணவை தேடிக் கண்டுபிடிப்பது சற்று சிரமமாக இருந்தது. ஒருவழியாக தேடி ஒரு உணவை ஆர்டர் செய்தேன். குறைவான எதிர்பார்ப்பு காரணமாக உணவு நன்றாக இருப்பதாகவே தோன்றியது. அன்று ஏதோ ஒரு ஞாபகத்தில் Jerkinஐ காரிலேயே வைத்து விட்டு வந்து விட்டேன். மாலை நேரத்தில் கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் குளிரை தாங்கியது ஒரு பெரிய சாதனையே. குறிப்பாக நேரம் செல்லச் செல்ல இது என் மன வலிமைக்கும், உடல் வலிமைக்கும் விடப்பட்ட மிகப்பெரிய சவாலாக இருந்தது. பிறகு ஒரு வழியாக இரவு 9:50 மணிக்கு அபார்ட்மெண்டை அடைந்தோம். ஜெர்மனியின் கலாச்சார நினைவுகளோடு...
தொடரும்...
மேலும் சில புகைபடங்கள்
Mainz City

பாலத்தின் அடியில் சரக்கு கப்பல்
Mainz cathedral

மைன்ஸ் கதீட்ரல்

கதீட்ரல் வெளியே

கதீட்ரல் உள்ளே

கதீட்ரல் உள்ளே விளக்குகள்
Mainz Matket platz - கடைவீதியில்

மைன்ஸ் மார்க்கெட் பகுதி

ஒரு காய்கறி கடை

பரங்கிக்காய் விற்பனைக்கு

பழங்கள் விற்பனைக்கு

பாட்டில்கள் விற்பனைக்கு
Eberbach Abbey - மடாலயம்
இயற்கை எழில் சூழ்ந்த Eberbach
பூட்டிய அறையில் ஒயின் பாட்டில்கள்
Eberbach Abbey உள்ளே
Eberbach Abbey உள்ளே
The Name of the Rose
பழங்காலத்தில் நதி போக்குவரத்து
ஒரு பனிக்காலத்தில் Eberbach Abbey
Eberbach Abbey
ஒயின் பீப்பாய்கள்
வேலைப்பாடுகள் நிறைந்த கதவு
அடுத்த பகுதியை படிக்க...
Good narration👏👏👏👏
ReplyDelete