ரைன் நதிக்கரையினிலே...6 மனதில் பாய்ந்த நதி

இக்கட்டுரையின் முந்தைய பகுதியை படிக்க




ரைன் நதிக்கரையினிலே...

6. மனதில் பாய்ந்த நதி 
(Mine Rhine)


ரைனின் அற்புத தரிசனம் 



18 அக்டோபர் 2021

   முன்தினம் பிராங்ஃபர்ட் சென்றுவந்த களைப்பு நீங்காத போதும் இன்றே இந்நாட்டில் நான் இருக்க போகும் கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் இப்பொன்னாளை அறையிலேயே தங்கி வீணாக்க விரும்பவில்லை. மதியம் 12 மணி அளவில் அறையில் இருந்து புறப்பட்டு விஸ்பாடன் மிருகக்காட்சி சாலைக்கு சென்றேன். சாதாரண ஆடு, கோழிகளை இங்கு காட்சிக்கு வைத்திருந்தார்கள்.  இது மிகவும் சுமாரான ஒரு இடம் என்றபோதும் வார இறுதியில் குழந்தைகளுடன் பொழுது போக்க ஏற்றதே. 


மிருகக்காட்சி சாலையில்



வார இறுதி தினம் என்பதாலும் மிருகக்காட்சி சாலை நகரத்திற்கு வெளியே இருந்ததாலும், அங்கிருந்து பேருந்து வசதி இல்லை என்பதால் சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நியுரோபெர்க்பென் (Nerobergbahn) என்ற இடத்திற்கு நடந்து செல்ல முடிவெடுத்தேன்.  கூகுள் மேப்ஸ் உதவியுடன் குறுக்கு வழியில் செல்ல எண்ணி, ஆள் அரவமில்லா காட்டு பாதையில் நுழைந்து விட்டேன். அப்போது அலைபேசி சிக்னலும் இல்லாமல் போக, காட்டுக்குள் தொலைந்தது போல் உணர்ந்தேன் என்ற போதும் இதுபோல அனுபங்களை ஏற்கனவே இருந்ததால் ஒருவழியாக சமாளித்து சரியான இலக்கை அடைந்தேன்.


நியுரோபெர்க்பென் (Nerobergbahn)


நியுரோபெர்க்பென் மலை மீது



நியுரோபெர்க்பென் ஒரு சிறிய மலையின் அடிவாரத்தில் அமைந்த ஒரு நகர பகுதி. இது நமது ஒரு ஊர் போர்ட்கிளப் போல ஒரு வசதியான பகுதி என்பது அங்கிருந்த அழகான வீடுகளை பார்க்கும்போதே தெரிந்தது. மலைக்குன்றுக்கு மேல் செல்ல நீராவியால் இயங்கும் ஒரு சிறிய ரயிலும் உள்ளது. இது நமது பழனிமலை வின்ச்க்கு பாலிஷ் போட்டது போல அழகாக இருந்தது. மலைமேல் ஒரு வட்டவடிவ பூங்காவும், ஒரு உணவகமும் இருந்தது.   மேலும் நாம் ஏற்கனவே ருடெஷெய்மில் (Rüdesheim) பார்த்தது போல் Tempel எனப்படும் கோபுரம் இங்கும் அமைக்கப்பட்டுள்ளது.   மலையில் இருந்து பார்க்கும்போது நகரின் அழகு அற்புதமாக தெரிந்தது. அக்காட்சிகளை நன்றாக ரசித்த பின் பேருந்து மூலம் விஸ்பாடன் சிங் இந்திய உணவகத்திற்கு சென்று இரவு உணவை வாங்கிக்கொண்டு அறைக்கு திரும்பினேன்.
    


நதியும் நானும்


    முதல் வார முடிவில் அப்பார்ட்மெண்டில் இருந்து ஹோட்டல் அறைக்கு இடம்பெயர்ந்தோம் என சென்ற அத்தியாயத்தில் கூறியிருந்தேன். ஒரே அறையில் தங்கி சிரித்து பேசி மகிழ்ந்த நாங்கள் தனிமை சிறையில் இருப்பது போல் ஒரு உணர்வு எழுந்தது. எனது தனிமைக்கு மருந்தாய் அமைந்தது ரைன் நதி. ஆம்! நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் ரூப்பர்ட், ரைன் நதிக்கு அருகில் அமைந்துள்ளதால் தினமும் ஒருவேளையாவது நதியை தரிசனம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக காட்சியளித்து பல வித அனுபவங்களை அள்ளித் தந்தது ரைன் நதி. 


20 அக்டோபர் 2021

இன்று காலை 7 மணி அளவில் ரைன் நதிக்கரைக்கு சென்றேன். பொழுது புலராத இருள் நேரத்தில் நதி மிகவும் அமைதியாக இருந்தது. சிறிது நேரம் நதிக்கரையில் அமர்ந்து அக்காட்சியை பார்க்கப் பார்க்க அந்த  அமைதி மனதில் பிரதிபலித்து  சிந்தையில் தெளிவை ஏற்படுத்தியது. எனது நாளை சிறப்பாக தொடங்க உதவியது.
 

21 அக்டோபர் 2021

ஆக்ரோஷமான ரைன்


இன்று அதிகாலையில் வீசிய சூறைக்காற்று எனது அறையின் ஜன்னலை தட்டி, பொழுது விடியும் முன்பே என்னை எழுப்பி விட்டது.   அலுவலகம் செல்லும் முன்பு கிடைத்த சிறிய இடைவெளியில் வழக்கம் போல் நதிக்கரைக்குச் சென்றேன். முன்தினம் பார்த்ததற்கு நேர் மாறாக நதி அதிக ஆக்ரோஷத்துடன் காணப்பட்டது‌ பொதுவாக மலையிலிருந்து ஆர்ப்பாட்டமான அருவிகளாக  விழும் நதிகள், சமதளத்தில் பாயும் போது அமைதியையே விரும்பும் ஆனால் மனது எவ்வளவு தெளிவாக இருந்தாலும் சூழ்நிலைகள் அதை கொந்தளிக்கச் செய்வதைப்போல, நதிகள் அமைதியை விரும்பினாலும் காற்று அவற்றை விடுவதில்லை. இருள் நீங்கா அந்நேரத்தில் நதிக் கரையில் நிறுத்தி வைத்திருந்த படகுகள் மீது அலைகள் மோதி பெரும் இரைச்சலை உண்டாக்கியது‌. ஆளையே தள்ளும் வண்ணம் வீசிய அதிவேகமான காற்றை தாக்கு பிடிக்க முடியாமல் உடனடியாக அறைக்குத் திரும்பினேன். அண்டை மாநிலத்தில் ஏற்பட்ட புயலின் விளைவே இந்த சூறைக்காற்று என பின்னர் தெரிந்து கொண்டேன்.


22 அக்டோபர் 2021

ரைனின் விஸ்வரூப தரிசனம்

இன்றும் வழக்கம்போல அலுவலகம் செல்லும் முன் என் பிரிய நதிக்கரைக்கு சென்றேன். முந்தினம் ஆக்ரோஷமாக விளங்கிய நதி தனது இயல்பான அமைதியுடன் அமைதியாக தவழ்ந்து ஓடிச் சென்று கொண்டிருந்தது. அந்நேரத்தில் கீழ் திசையில் உதித்த சூரியனின் கதிர்கள், நதியில் பிரதிபலித்து சூழ்நிலையை ரம்யமாக மாற்றி என்றென்றும் நினைவில் நிற்கும் ஒரு அற்புத காட்சியை தோற்றுவித்தது. உயிருள்ளவரை இக்காட்சி என் மனதை விட்டு அகலாது என்பதே நிதர்சனம்.


ரைனின் அற்புத தரிசனம் 



இன்று எங்கள் அலுவலகத்தின் கடைசி நாள் என்பதால் சக பணியாளர்கள் பரிசுகளை வழங்கி இன்முகத்துடன் விடை கொடுத்தனர். அவர்கள் அனைவருடனும் நினைவாக புகைப்படங்கள் எடுத்துக் கொண்டேன். பின்பு என் கருத்தை ஏற்று சக நண்பர்களும் அலுவலகத்திலிருந்து ஹோட்டலுக்கு நடந்தே வந்தனர். வரும் வழியில் இருந்த அழகான கட்டிடங்களும், பூக்களும் சாலைகளும் அவர்களுக்கும் ஒரு நல்ல அனுபவத்தை ஏற்படுத்தியது என எண்ணுகிறேன். பின்பு மீண்டும் ஒரு முறை நண்பர்களுடன் நதிக்கரைக்கும் அதன் அருகிலுள்ள தெருக்களுக்கும் சென்று பல நினைவு புகைப்படங்களை எடுத்துக் கொண்டோம். 


23 அக்டோபர் 2021

இன்றே நாட்டில் நானிருக்கப் போகும் கடைசி நாள் காலைப் பொழுதில் வழக்கம்போல நதிக்கரைக்குச் சென்று என்னை உயிர்ப்பித்துக் கொண்டிருந்த அந்த நதியிடம் மானசீகமாக விடை பெற்றேன். இதுவரை புறகாட்சியாக என் கண்ணில் விரிந்து கொண்டிருந்த நதி, இனி அககாட்சியாக என் மனதில் என்றென்றும் பாய்ந்து கொண்டிருக்கும்...

பின்பு நண்பர்களுடன் மீண்டும் ஒருமுறை பிராங்ஃபர்ட் நகருக்குச் சென்று சாக்லெட்களையும், சில பரிசுப் பொருட்களையும் வாங்கி வந்தேன்.  முன்தினம் எடுத்த கொரோனா பரிசோதனை முடிவு சரியான நேரத்தில் வராததாலும்,  பேக் செய்த பைகளின் எடை குறிப்பிட்ட எடையை விட அதிகமாக இருந்த காரணத்தாலும் இன்றைய மாலைப்பொழுது பரபரப்பாகவே கழிந்தது. நண்பர் அரவிந்த் தனது டிஜிட்டல் தராசை தந்து பிரச்சினையை சமாளிக்க உதவினார் (நன்றி). பிறகு இரவு உணவிற்கு வெளியே  சென்ற போது இலங்கை தமிழர் ஒருவரை தற்செயலாக சந்திக்க நேரிட்டது. ஆண்டுகள் பல கடந்தும் அவர்கள் வாழ்வில் இடம்பெற்ற சொல்லில் அடங்கா சோகம் என் மனதை ஏதோ செய்தது.


24 அக்டோபர் 2021

இந்நாட்டின் கடைசி இரவில் தூக்கம் சரியாக வரவில்லை. எந்த பிரச்சனையும் இல்லாமல் புறப்பட வேண்டும் என்ற கவலையினாலா? அல்லது தாய் நாட்டிற்கு திரும்ப போகும் சந்தோஷத்தின் காரணமா? என தெரியவில்லை. இன்று அதிகாலை 5:45  மணிளவில் அறையை காலி செய்து புறப்படும் போது வெளிப்புற வெப்பநிலை வெறும் 2 டிகிரி செல்சியஸாக இருந்து எங்களை உறைய வைத்தது. பின்பு எந்த பிரச்னையும் இல்லாமல் விமானத்தில் ஏறி, என்னை இவ்வளவு நாளாக தன் மகனை போல் போற்றி பாதுகாத்த ஜெர்மனியை விட்டு பலவித நினைவுகளை சுமந்து கொண்டு புறப்பட்டேன். இனி ஒரு முறை இத்திருநாட்டை காணும் வாய்ப்பு கிட்டுமா என தெரியவில்லை.


கடலில் விழுந்த சூரியன்




விமானம் காலியாக (3 சீட்டில் ஒருவர் மட்டுமே) இருந்தபோதும் உறக்கம் ஏதும் வரவில்லை. ஜன்னலுக்கு வெளியே தென்பட்ட பஞ்சு போன்ற மேகங்கள் என் மகள் எனக்காக காத்திருப்பதை தெரிவித்தது. மாலை பொழுதில் தோஹாவை நெருங்கும் போது என் விமானத்தின் இறக்கையில் மோதி கடலில் விழுந்ததை போல் தோன்றிய சூரியனை கண்டது பயணம் சிறப்பாக நிறைவுற போகிறது என எடுத்துரைத்தது. அரபு நாடன கத்தாரில் மாலை 5:30 மணிக்கே சூரியன் அஸ்தமித்தது சற்று ஆச்சர்யம் தான். பின்பு சென்னை விமானத்தில் ஏறி இறுதியாக அக்டோபர் 25ம் தேதி அதிகாலை 2:30 மணி அளவில் சென்னை வந்தடைந்தேன். அற்புத அனுபவங்களுடன்....


தொடரும்...


மேலும் சில புகைபடங்கள்


மிருகக்காட்சிசாலைக்கு செல்லும் சாலை         



மிருகக்காட்சிசாலையில்



    
நியுரோபெர்க்பென் மலை ரயில்



நியுரோபெர்க்பென் மலை ரயில்



நியுரோபெர்க்பென் மலை ரயில்பாதை



நியுரோபெர்க்பென் வட்டவடிவ பூங்கா



நியுரோபெர்க்பென் டெம்பெல்


ஒரு அதிகாலை நேரம்



ரைன் நதி



ரைன் நதிக்கரையில்


ரைன் நதி (எதிர்ப்புறம் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை)



அடுத்த பகுதியை படிக்க...

Comments

Post a Comment