வெள்ளியங்கிரி - மெய்நிகர் பயணம் - பாகம் 3 இயற்கையின் தரிசனம்
முந்தைய பதிவுகளை படிக்க..
எங்கும் நிறைந்திருக்கும் இறைவன் காடுகளிலும், மலை சிகரங்களிலும் கோவில் கொள்ள காரணம் என்ன? குறிப்பாக இவ்வளவு கடினமான இடங்களுக்கு தன் பக்தர்களை வரவழைத்து தரிசனம் தரவேண்டிய அவசியம் தான் என்ன???
"தான் படைத்த இவ்வுலகின் பேரழகை, தன்னை நாடிவரும் தன் பக்தனும் காண வேண்டும். தனது உண்மையான வடிவம் இயற்கையே என்பதை உணர வேண்டும்" என்பதே இக்கேள்விகளுக்கான விடையாகும்.
ஆம்! வெள்ளியங்கிரி ஆண்டவரை தேடிச் சென்ற நமக்கு, முதலில் சிகர தரிசனத்தையும், பிறகு பஞ்சலிங்க தரிசனத்தையும் காட்டிய இறைவன் தனது விஸ்வரூப தரிசனத்தை இயற்கை வடிவில் பலமுறை நமக்கு காட்டினார்! அவற்றை இப்பதிவில் காண்போம்.
இயற்கையின் தரிசனம்-1
காலையில் அடிவாரத்தில் இருந்து ஆரம்பித்த நாம், ஏழு மலை தாண்டி வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசனம் செய்யும் போது மாலை ஆகிவிட்டது.
குடுமி ஆண்டவர் என்று அழைக்கப்படும் பஞ்சலிங்கேஸ்வரரை வெற்றிகரமாக தரிசித்துவிட்டு வெளியே வந்த நாம், நண்பர் ஒருவர் கூறிய தகவலின்படி கோவிலுக்கு பின்புறமுள்ள சத்குரு பீடம் (Sathguru spot) என்ற இடத்தை நோக்கி செல்ல ஆரம்பித்தோம்.
இது கோவிலிலிருந்து சுமார் 15 நிமிட தொலைவே கொண்ட சிறிய பயணமாகும் ஆனால் நாம் கடந்து வந்த உச்சி சிகரத்தின் பின்புற தரிசனமும், மற்ற தூர சிகரங்களின் பேரழகும், நம் காணப்போகும் இயற்கை வடிவ இறை தரிசனமும் 15 ஆண்டுகள் ஆயினும் நம் நினைவை விட்டு நீங்கப் போவதில்லை...
நாம் இப்போது சரிவான பாதையில், சிறு புற்கள் நடுவே சென்று கொண்டிருக்கிறோம்... தூரத்தில் தெரியும் சிறுவாணி அணையின் நீரில் பட்டு ஜொலிக்கும் சூரிய ஒளியானது, நம் இதயம் வரை பிரதிபலிக்கிறது. சிறிது நேரத்திற்குப் பின் நாம் செல்ல வேண்டிய சத்குரு மேடையை அடைந்தோம்.
சத்குரு மேடை (புகைப்பட உதவி: Google)
இது ஒரு பெரிய பாறையின் பின்புறம் அமைந்த ஒரு சரிவான பகுதியாகும். இதிலிருந்து பார்க்கும்போது இயற்கை அன்னையின் அழகு இரட்டிப்பாக தெரிகிறது. தியானம் செய்யவும், அமைதியாக அமர்ந்து இயற்கையை ரசிக்கவும் மிகவும் பொருத்தமான இடம். எனினும் சரிவான பாதையில் சற்று எச்சரிக்கையாகவே அமரவேண்டும்.
இம்மேடையில் அமர்ந்து, இங்கு நம்மை அழைத்துச் சென்ற நண்பரின் உதவியோடு சிறிது நேரம் தியானம் செய்தோம். கண்கள் மூடியிருந்த போதிலும் இயற்கை அன்னையின் எழில்மிகு தரிசனம் நம் அகக்கண்ணில் நன்றாகவே தெரிந்தது.
இயற்கையின் தரிசனம்-2
இப்போது பொன்மாலைப் பொழுது விடை பெறும் நேரம் வந்துவிட்டது.
இதன் பின்பு உடனடியாக இறங்க ஆரம்பித்தாலும் நிச்சயம் நள்ளிரவு கடந்து விடும். மேலும் நம்முடன் வந்த சில நண்பர்களுக்கும் உடல்நிலை சரியில்லை என்பதால் அன்றிரவே அங்கேயே ஓய்வு எடுத்துக்கொண்டு மறுநாள் காலையில் மலையில் இருந்து இறங்க முடிவெடுத்தோம். ஆனால் அது அவ்வளவு உசிதமான முடிவல்ல என இரவில் உணரப் போகிறோம் என்பதை அறியாமல்...
மலையில்தான் இரவில் தங்க போகிறோம் என்று முடிவெடுத்த பிறகு வேறு ஏதும் வேலை இல்லை. எனவே ஒரு சிறிய பாறையின் மீது அமர்ந்து இன்னும் சிறிது நேரத்தில் மறையத் போகும் ஆதவனின் ஒளியை கவனிக்க ஆரம்பித்தோம். கிழக்கில் தோன்றி உலகெங்கும் ஒளி பாய்ச்சிய சூரிய தேவன், மேற்குப்புறம் மறையும்போது தனது ரம்மியமான ஒளியை வானில் கக்கி அப்பகுதியை வண்ணமயமாக்கியது நம் மனதை பரவசப்படுத்தியது.
அப்போது மேற்குப்புறம் இருந்த ஒரு மலைச் சிகரத்தின் வளைவு தன்மேல் விழப்போகும் சூரியனை தாங்கிப் பிடிப்பது போல் தோன்றியது உண்மையா ? அல்லது நம் கற்பனையா? என்பது நமது சிற்றறிவுக்கு புலப்படவில்லை.
இவ்வாறாக சூரிய தேவன், தனது திருவிளையாடலை முடிக்கும் நேரத்தில், இயற்கையானது தனது போர்வையை கொண்டு இவ்வுலகின் மீது போர்த்தி சூழ்நிலையை இருளாக்க துவங்கியது.
மீண்டும் இறை தரிசனம்
இருள் படர்ந்த பின்தான் தங்குமிடத்தை பற்றி யோசிக்க ஆரம்பித்தோம். ஏழாம் மலையான கிரிமலை பக்தர்கள் தங்க ஏதுவாக இல்லை. அங்கிருந்த சிறு குகைகளிலும் 1-2 பேருக்கு மேல் தங்க இயலாது. எனவே ஆறாம் மலையிலுள்ள கோவில் நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட கொட்டகையில் தங்குமாறு நம்மில் சிலர் அறிவுறுத்தினர்.
ஆயினும் காலை 4 மணி அளவில் பஞ்சலிங்கேஸ்வரருக்கு நடைபெறும் அபிஷேகத்தை காண எண்ணியும், இந்த இரவு நேரத்தில் சரிவான ஏழாம் மலையிலிருந்து இறங்கவேண்டிய பயணத்தின் கடினத்தை கருதியும் வெட்ட வெளியிலேயே படுக்க முடிவெடுத்தோம்.
நமது படுக்கையை விரித்து, கைவசம் கொண்டு சென்றிருந்த போர்வையை போர்த்தி படுத்த சில மணி நிமிடங்களிலேயே, நாம் எடுத்த முடிவின் விளைவுகளை உணர ஆரம்பித்தோம். ஆம்! அடுத்த 20 நிமிடங்களில் நம் போர்வை முழுவதும் நனைந்து விட்டது. அந்த அளவிற்கு அது மழையா? பனியா? என்று உணர முடியாத அளவிற்கு உறைபனி கொட்டியது. ஜீன்ஸ் மற்றும் முழுக்கை சட்டை, அதன் மேல் ஒரு கம்பளி அணிந்திருந்த நண்பர்கள் கூட நடுங்கிய காட்சி அக்கடும் குளிரின் தன்மையை நமக்கு எடுத்துச் சொன்னது.
ஆறாம் மலைக்கு செல்லச் கூறியவர்களின் வார்த்தையை கேளாமல் இருந்ததற்கான பலனை தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்... ஆயினும் வேறு ஏதும் வழியில்லை. ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் இரு கைகளை தேய்த்து, அதில் வரும் வெப்பத்தை கன்னங்களில் அப்பி, உடலை சூடாக்கி கொண்டிருக்கிறோம்... இந்த இரவு மிகவும் நீண்டதாக தோன்றுகிறது...
பிறகு அதிகாலையில் எழுந்து மீண்டும் குடுமி ஆண்டவர் சந்நிதிக்குச் சென்று அங்கு பஞ்சலிங்கேஸ்வருக்கு நடக்கும் அபிஷேகத்தை கண்குளிர காண்கிறோம்... உலகமே உறங்கும் இந்த அதிகாலை நேரத்தில், எளிதில் செல்ல இயலாத ஏழாம் மலை உச்சியில் இறையோடு இருக்கும் அனுபவம் உண்மையில் நமக்கு கிடைத்த பெரும் பேராகும்... இத்தகைய காணக்கிடைக்காத தரிசனத்தை நமக்கு அளிக்கவே இறைவன் அத்தகைய (கடுங்குளிர்) சோதனையை நமக்களித்தார் என்று உணருகிறோம்....
இயற்கையின் தரிசனம்-3
காலை சுமார் 5 மணி அளவில் உச்சி சிகரமாம் கிரிமலையிலிருந்து இறங்க ஆரம்பிக்கிறோம். இன்னும் இரவின் போர்வை விலகாததால், டார்ச் லைட்டின் துணை கொண்டே முழு சிகரத்தையும் இறங்கி விட்டோம்.
எனினும் நம்முடன் வந்த பிற நண்பர்கள் அந்தக் காரிருள் நேரத்தில், சரிவில் இறங்க நீண்ட நேரம் எடுத்துக் கொண்டதால், ஆறாம் மலையில் ஒரு சிறு பாறையின் மேல் அமர்ந்து அவர்களுக்காக காத்திருக்கிறோம்...
சிறிது நேரத்திற்குப் பின்பே நாம் காத்திருக்கவில்லை... மீண்டுமொருமுறை இயற்கையின் அற்புத தரிசனத்தை தர இறைவன் நம்மை காக்க வைத்திருக்கிறார் என்ற உண்மையை உணர்கிறோம்....
ஆம்! அப்போது கீழ்வானம் சிவக்க ஆரம்பித்தது. அதே நேரத்தில் அதே திசையில் குடி கொண்டிருந்த சந்திரன் அவ்வானில் முத்துப்போல் ஜொலித்து மேலும் அழகாக்கினான்.
விடியலின் போது கீழ் வானில் சந்திரன்
அந்த அரிய காட்சி கண்ட நாம், அப்பாறையிலேயே மெய்மறந்து அமர்ந்து விட்டோம்... கீழ்வானில் சூரியன் உதிக்கும் போது, அவன் ஒளிப்பட்டு உலகம் உயிர்பெறும் அற்புத காட்சியைக் கண்ட கண்கள் ஓராயிரம் முறை இறைவனுக்கு நன்றி கூறியது.
சுமார் 45 நிமிடங்களுக்கு பிறகு, நமது மற்ற நண்பர்கள் நம்மை கடந்து செல்லும் போது தான், நாம் இவ்வுலகிற்கு மீண்டும் வந்தோம்.
இயற்கையின் தரிசனம்-4
பொழுது நன்றாக புலர்ந்து விட்டது. வலதுபுறம் சூரிய தரிசனம் கண்ட நம் கண்கள், இடப்புறம் (இறங்கும்போது) உள்ள பசுமை புல்வெளியை காண்கின்றன... அப்புற்கள் தம் தலை மீது ஏந்திக் கொண்ட பனித்துளிகள், சிவபெருமான் தலையில் உள்ள பிறை நிலவுக்கு ஒப்பாக அமைந்துள்ளது...
பிறை நிலவை, தம் தலையில் தாங்கும் இறைவன் நம்மையும் ஏற்றுக்கொள்வார் என்ற எண்ணத்தோடு அப்புல்வெளியில் இறங்கி ஒரு சிறு குழந்தையைப் போல் விளையாட ஆரம்பித்தோம்... அதில் உருண்டும், பிரண்டும், குதித்தும் நம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினோம்.
சிறிது நேரத்திற்குப் பின்பு, நம் மனம் சற்று தெளிவடைந்த பின், ஒரு பாறை மீது அமர்ந்து அப்பசுமை சமவெளியை ரசிக்க ஆரம்பித்தோம்... அப்பொழுது நமது பின்புறம் உள்ள பள்ளத்தாக்கில் பயணித்த மேகங்கள், நாம் அதை காட்டிலும் உயர்வான ஓரிடத்தில் அமர்ந்திருக்கிறோம் என்பதை தெரிவித்தது... மலையேறி தன்னை காண வந்த தனது பக்தர்களை, மேகம் அளவுக்கு உயர்த்தி காட்டும் இறைவனின் கருணையை சொல்ல வார்த்தை ஏதும் இல்லை...
இவ்வாறாக சிகர தரிசனம், இறை தரிசனம் மற்றும் இயற்கையின் தரிசனம் ஆகியவற்றை தரிசித்த நாம் அதை மனதில் அசைபோட்டவாறே அடிவாரத்தை அடைகிறோம்... நீங்கா நினைவுகளுடன் ...
நமது வெள்ளியங்கிரி பயணம் இனிதே நிறைவுற்றது....
நன்றிகள்
- உடன் பயணித்த சக பயணிகள் அனைவருக்கும்...
- Redmi 3S புகைப்படங்களுக்கு...
- இப்பதிவை காணும் உங்களுக்கு...
- திரு. ஏழுமலை - இப்பயணத்தை ஏற்பாடு செய்தவர்.
While reading this I felt that I was there and no words say other than
ReplyDeleteHara Hara Mahadeva Shambo Shiva Shankara
Om Namah Shivaya