வெள்ளியங்கிரி - மெய்நிகர் பயணம் - பாகம் 2 இறை தரிசனம்

 வெள்ளியங்கிரி - மெய்நிகர் பயணம் - பாகம் 2 இறை தரிசனம்


முந்தைய பாகத்தை படிக்க

பாகம் 1 சிகர தரிசனம்




வெள்ளியங்கிரி ஆண்டவர்


          ஏழாம் மலை சிகர தரிசனம் கண்டதும், நம் மனதில் புது உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. வெகுநேரம் பிரிந்திருந்த தாயைக் கண்டதும் ஓடிச்செல்லும் குழந்தையைப் போல,    இதுவரை இருந்த களைப்பு  மறந்து, விரைவாக ஓடிச்சென்று அதனை அடைய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகிறது.  ஆனால் இனிமேல் தான் பயணம் ஆரம்பம் எனக் கூறத்தக்க வகையில் கிரி மலை என்னும் ஏழாம் மலையை ஏறுவது சவாலான பயணமாக உள்ளது. மலைபாதை சுமார் 40-45 டிகிரி தொடர் ஏற்றமாக காணப்பட்டதால் ஒவ்வொரு 5-10 அடிகளுக்கும் மூச்சு வாங்குகிறது.


வெள்ளியங்கிரி 7ம் மலை சிகரம்



        இதுவும் நல்லது தான்.  மூச்சு வாங்கும் ஒவ்வொரு தருணத்திலும், இடப்புறம் தெரியும் தூர சிகரங்களின் அழகையும், பள்ளத்தாக்கில் தெரியும் சிறுவாணி அணையின் எழில்மிகு தோற்றத்தையும் நாம் ரசிக்க வேண்டும் என்ற இறைவனின் சித்தத்தையும் உணருகிறோம்... 

எனவே இறைவனின் உத்தரவின்படி இயற்கையை ரசித்தபடி நம் பயணத்தை தொடர்கிறோம்...



தூர சிகரங்களும், சிறுவாணி அணையின் காட்சியும்


    ஆதி அந்தமில்லா இறைவனை நாம் தரிசிக்கச் செல்லும் வெள்ளையங்கிரி மலையேற்றத்தில் முதல் மலை மற்றும் ஏழாம் மலை ஆகிய இரண்டும் சற்று கடினமான இடங்களாகும். இது தம்மை நாடி வரும் பக்தர்களின் மன உறுதியை சோதிக்க இறைவனால் இவ்வாறாக அமைக்கப்பட்டதாக எண்ணுகிறோம்.



        சுமார் 40 நிமிட தொடர் ஏற்றத்திற்கு பிறகு இயற்கையாகவே ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டு உருவான  பாறைகளை காண்கிறோம்... இதுவே குடுமியாண்டவர் சன்னதி எனப்படும் வெள்ளியங்கிரி ஆண்டவரின் திருக்கோவில். 


    இது எவ்வித மனித முயற்சியும் இன்றி இயற்கையாகவே, பாறைகளிடையே  இறைவன் தனக்குத்தானே அமைத்துக் கொண்ட ஒரு அற்புத திருத்தலம் ஆகும்...


குடுமியாண்டவர் சன்னதி


        வெள்ளியங்கிரி ஆண்டவரின் கோயிலுக்குள் நுழையும் முன் பாறை  ஒன்றில் இயற்கையாகவே அமையப்பெற்ற விநாயகரின் வாகனமான மூஷகம் (எலி) போன்ற ஒரு தோற்றத்தை காண்கிறோம். இது இக்கோவிலில் உள்ள சந்நிதிகளும், அதிலுள்ள  இறைவனின் உருவங்களும் பெரும்பாலும் இயற்கையாகவே அமையப் பெற்றவை என்பதை முன்கூட்டியே நமக்கு எடுத்துரைக்கிறது...


எலி உருவ பாறை


        இத்திருகோயிலுக்குள் நுழைந்தவுடன் விநாயக பெருமான் முதலில் நம்மை வரவேற்கிறார். வழக்கமாக விநாயகருக்கு எதிரில் இருக்கும் மூஷகத்தை தவிர நந்தியும் இங்கு உள்ளது சற்று வித்தியாசமாக இருக்கிறது. உருவங்கள் தான் வேறு இறைவன் ஒன்றே என்ற தத்துவத்தை இது நமக்கு உணர்த்துகிறது. விநாயகப் பெருமான், அவரது வாகனம் மற்றும் நந்தி பகவானை வணங்கி மேலும் கோயில் உள்ளே செல்கிறோம்.



வெள்ளியங்கிரி விநாயகர்


        அடுத்ததாக நாம் தரிசிப்பது மனோன்மணி அம்மனை. எங்கும் நிறைந்திருக்கும் இறைவனையே தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொண்ட இறைவி, இங்கு ஒரு குகைக்குள் குடிகொண்டிருக்கிறார்.  நாம் சென்ற நேரத்தில் அவர் நீலநிற ஆடையுடுத்தி, செவ்வந்தி பூ மாலை சூடியபடி நம்மை ஆசிர்வாதம் செய்கிறார். இவர் அருகிலேயே நாக கன்னிகளின் சன்னதியும் உள்ளது. அனைவரையும் வழிபட்டு நாம் அடுத்த சன்னதிக்குச் செல்கிறோம்



மனோன்மணி அம்மன்


        தற்போது நாம் பஞ்சலிங்கேஸ்வரர் எனப்படும் வெள்ளியங்கிரி ஆண்டவரின் சன்னதியில் உள்ளோம். இங்கே  ஒரு குகையின் அடியில் இயற்கையாகவே அமையப்பெற்ற மூன்று சுயம்பு லிங்கங்கள் உள்ளன.  இந்த மூன்று லிங்கங்களுடன், கிரிமலை எனப்படும் ஏழாம் மலை நான்காவது லிங்கமாகவும், இப்பூமியானது இப்பிரபஞ்சத்தின் ஐந்தாவது லிங்கமாகவும் கருதப்படுவதால் இறைவன் இங்கே பஞ்சலிங்கேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.


பஞ்சலிங்கேஸ்வரர் சன்னதி


        வெள்ளிங்கிரி மலை ஏறி பஞ்சலிங்கேஸ்வரரை வழிபடுவது அவ்வளவு சுலபமல்ல. நல்ல உடல்நிலை, நேர்மறையான மனநிலை,  இதமான காலநிலை, எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனின் அனுக்கிரகம் ஆகிய அனைத்தும் கூடி வந்தால் மட்டுமே இது சாத்தியம் எனவே நம்மை இப்பயணத்திற்கு அனுமதித்த இறைவனுக்கு நம் நன்றியை  மனமார தெரிவித்துக் கொண்டிருக்கிறோம். மீண்டும் மீண்டும் அவரை தரிசிக்க அனுமதிக்குமாறு வேண்டி வணங்கி கொள்கிறோம்...


இறைவனுக்கு நன்றி!


        நாம் சுயம்புமூர்த்தியாக சிவபெருமானை பல்வேறு தலங்களில் வழிபட்டு இருக்கலாம் ஆனால் இத்தலத்தில் மட்டுமே எந்தக் கோயிலிலும் இல்லாத வகையில் நந்தி தேவரும் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். 


சுயம்பு நந்தி


        ஆம்! நாம் பஞ்சலிங்கேஸ்வரரை வழிபட்டு நம் வெளியேறும் வழியில் உள்ள ஒரு பாறை நந்தி வடிவில் உள்ளது,  இது தனது பக்தியின் சக்தியால் நந்திதேவர் அடைந்த நிலையாக இருக்கக் கூடும். இது இயற்கையாகவே அமைந்த ஒரு அதிசயமாகும். இவரை வேண்டி வழிபட்டு கோயிலுக்கு வெளியே வந்தடைகிறோம்.

 

கோவிலின் பின்புறம்


        இறை தரிசனம் ஒன்றையே குறிக்கோளாக இப்பயணத்தை ஆரம்பித்த நமக்கு, இத்தொடரின் முதல் பதிவில் சிகர தரிசனம் அளித்த இறைவன், இப்பதிவில் சுயம்பு மூர்த்திகளாக பல்வேறு இடங்களில் தரிசனம் அளித்து அருள் பாவினார்.  அத்தோடு மட்டுமில்லாமல் எல்லையில்லா கருணைப் பெருங்கடலான அவர் தன்னை நாடி வந்த நமக்கு மற்றொரு வகையிலும் தரிசனம் தந்தார்.... அது.... 

தொடரும்...


பின்குறிப்பு

        பொதுவாக இறைவனின் சன்னதிகளில் புகைப்படங்கள் எடுப்பது ஆகம விதிகளுக்கு புறம்பான செயல் ஆனால் வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோவில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஆகம விதிப்படி அமைக்கப்பட்டதல்ல... இயற்கையாகவே இறைவன் திருவருளால் உருவானது. எனவே இவ்விதிகள் இத்திருகோவிலுக்கு பொருந்தாது. மேலும் மலையேறி வெள்ளிங்கிரி ஆண்டவரை தரிசிக்க இயலாதோரின் பார்வைக்காக இறைவனின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளது... 


Comments