வெள்ளியங்கிரி - மெய்நிகர் பயணம் - பாகம் 1 சிகர தரிசனம்

வெள்ளியங்கிரி - மெய்நிகர் பயணம் - பாகம் 1 சிகர தரிசனம்

 

   பயணங்கள் எப்போதுமே அற்புத அனுபவங்கள் தருகின்றன. நாம் அப்பயணங்களை திட்டமிட்டபடி மேற்கொள்ள முடியாவிட்டாலும் கூட... 


ஆம் ! அத்தகைய ஒரு அனுபவத்தை இங்கே பதிவு செய்ய விழைகிறேன்.


வெள்ளியங்கிரி மலை


     ஒருமுறை சென்றாலே பலமுறை மீண்டும் மீண்டும் செல்லத் தூண்டும் மலையாம் தென் கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளையங்கிரி மலைக்கு,  இவ்வாண்டு (2020) கோடையில் நண்பர்களுடன் சேர்ந்து பயணம் செய்ய திட்டமிட்டு இருந்தேன். ஆனால், கொரோனா காரணமாக நம் பயணம் தடைப்பட்டது. பயணங்கள் தடைபடலாம். பயணிப்பதை தடுக்க முடியாதல்லவா??? 


    "நதி காயலாம்; நினைவில் உள்ள காட்சி மாறாது" (நன்றி: கவிஞர் நா.முத்துக்குமார்) என்ற வரிகளுக்கேற்ப நான் ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளியங்கிரி சென்று வந்த போது சேகரித்த  நினைவுகளின் துணை கொண்டும், அப்போது எடுத்த புகைப்படங்களின் உதவியோடும், மனதளவில் ஒரு மெய்நிகர் (Virtual) பயணம் மேற்க்கொண்டேன். அத்தகைய ஒரு பயண அனுபவத்தை இங்கு மறுபதிவு செய்கிறேன். இப்பயணத்தில் பங்கு கொள்ள உங்களையும் வாஞ்சையோடு அழைக்கிறேன்... 


வாருங்கள் சேர்ந்து பயணிப்போம்....


பூண்டி - வெள்ளியங்கிரி அடிவாரம்


    முதலில் நம் யாத்திரிகர்கள் அனைவரையும், தம் மனோ வேகத்தில் பயணித்து கோவையிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பூண்டி என்ற மலை அடிவார கிராமத்திற்கு வருமாறு அழைக்கிறோம். இங்கிருந்து தான் நம் பயணத்தை துவங்கப் போகிறோம். இங்கு பக்தர்கள் தங்க மண்டபங்களும், குளியல் வசதியும் உண்டு. மேலும் சிறப்பு நாட்களில், சிலவேளைகளில் அன்னதானமும் நடைபெறுகிறது.

அடிவாரத்திலுள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோவில்

    இப்பயணத்தைத் துவங்கும் முன் நாம் அனைவரும் அடிவாரத்திலுள்ள வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயிலில் தரிசனம் செய்கிறோம். வயது முதிர்ந்தோர், மலையேற அனுமதி இல்லாதோர் மற்றும் இயலாதோர் அடிவார கோவிலில் தரிசனம் செய்வது மலை உச்சியில் உள்ள வெள்ளையங்கிரி ஆண்டவரை தரிசனம் செய்ததற்கு ஒப்பாகும். நம் பயணம் சிறக்க இறைவனை இங்கு வேண்டி வணங்கிக் கொள்கிறோம்.


    இத்திருக்கோவிலில் பூண்டி விநாயகர் வெள்ளியங்கிரி ஆண்டவர், மனோன்மணி அம்மன் ஆகிய சன்னதிகளும் 63 நாயன்மார்களின் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. 


வெள்ளியங்கிரி தல வரலாறு


       இங்கு வெள்ளிங்கிரி மலையின் தல வரலாறு ஓவியங்களாக வரைந்து வைக்கப்பட்டுள்ளது அவற்றை கண்டுகளித்து, அதன் முக்கியத்துவம் உணர்கிறோம். வெளிப் பிரகாரத்தை சுற்றி வர, அங்கு பஞ்ச விநாயக மண்டபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஐந்து விநாயகர் சிலைகளை வணங்குகின்றோம். அப்போது அங்குள்ள மணிகள் காற்றில் அசைந்து ஒலி எழுப்பி நம்மை வரவேற்கின்றன.


காற்றில் அசையும் மணிகள்

          பின்பு மலையேறும் பாதையின் முன்பு ஒரு பக்தர் வரைந்து வைத்த மலர் கோலத்தை காண்கிறோம். அது காண்பதற்கு அற்புதமாக அமைந்து நம் மனதை தெய்வீக பயணத்திற்கு தயார் செய்கிறது.


பூக்கோலத்தில் இறைவன்

       

          அடிவாரத்திலுள்ள ஒரு சிறு ஆசிரமத்தில் இருந்து நமது யாத்திரிகர்களில் சிலர் மூங்கில் குச்சியை பெற்றுக் கொண்டனர். இந்த குச்சிகள் தான், இணைபிரியா தோழனாக அவர்களில் பெரும்பான்மையோருக்கு இப்பயணத்தில் கடைசிவரை உதவ போகிறது என்பதை அவர்கள் அறிந்தனரா என்பதை நாமறியோம்...


மூங்கில் குச்சியை அன்பர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நண்பர்கள்

 

           பின்பு கோவிலின் பின்புறம் உள்ள   ராசி தூணை வழிபடுகிறோம். இதில் தாமரை மலரின் மேல் 12 ராசிகளுக்குரிய சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன. இதன் உச்சியில் ஒரு குடையும், அதன் மேல் ஒரு அன்னப்பறவையும் செதுக்கப்பட்டுள்ளது.



ராசி தூண்



       பிறகு மலையேறும் பாதையில் முதல்படியில் உள்ள சிவபெருமானிடம் சிரம் தாழ்ந்து, பாதம் பணிந்து அனுமதி பெற்று, நம் பயணத்தை துவங்குகிறோம். யாராக இருப்பினும், இவரின் அனுமதியின்றி மலையேற முடியாது என்பது நிதர்சனமான உண்மையாகும்.  


முதல் படியில் உள்ள சிவபெருமான்


        இனிய காலைப் பொழுதில்,    நாம் இப்பொழுது முதல் மலையில் ஏற ஆரம்பித்து விட்டோம். மலை ஏறும் வழியில் படிகள் நன்கு அமைக்கப்பட்டுள்ள போதிலும், செங்குத்தான பாதை நமக்கு சற்று சவாலாகவே உள்ளது. ஒவ்வொரு இருபது, முப்பது அடிக்கும் மூச்சு வாங்கிக் கொண்டு நம் பயணத்தை தொடர்கிறோம்...   


முதல் மலை படிக்கட்டுகள்


        சுமார் ஐந்து நிமிட மலையேற்றத்திற்கு பின் வலதுபுறம் ஒரு சிறிய குகைக்கோவில் உள்ளது. இதிலுள்ள சிவபெருமானை பக்தியுடன் வழிபட்டு  நம் பயணத்தை தொடர்கிறோம். முழு மலையும் ஏற இயலாதவர்கள் குறைந்தபட்சம் இவரை வழிபட முயற்சிப்பது நலம் தரும்.



முதல் மலையில் உள்ள குகைக்கோவில்


            நாம்  செல்லும் பாதையின்  படிகட்டுகள் நடுவே ஒரு பெரிய மரம்  விழுந்து கிடக்கிறது. இது நாம் எவ்வளவுதான் உடல் வலிமை கொண்டிருந்தாலும், இறையின்  முன்பு நாம் ஒரு சிறு துரும்பே என்ற உண்மையை நமக்கு எடுத்துரைக்கிறது. அதை உணர்ந்து, வணங்கி, தாண்டிச் சென்று கொண்டிருக்கிறோம்.


முதல் மலை பாதையில் குறிக்கிட்ட மரம்


            சுமார் ஒரு மணி நேர கடும் ஏற்றத்திற்கு பிறகு ஒரு சிறிய விநாயகர் கோவிலை காண்கிறோம். இது வெள்ளைப் பிள்ளையார் கோவில் என அழைக்கப்படுகிறது.  இது முதல் மலை முடிவதை குறிக்கிறது‌. ஆனைமுகனை வணங்கி சிறிது இளைப்பாறுகிறோம்.



முதல் மலை விநாயகர் கோவில்


          நமது பயணிகளில் பெரும்பாலானோருக்கு வெள்ளியங்கிரி முதல் முறை என்பதால், இதுவரை கடந்து வந்த பாதை மிகவும் கடினமாக தோன்றுகிறது. எனவே முதல் மலை முடிவில் நன்கு ஓய்வு எடுத்துக் கொண்டு நம் பயணத்தை தொடர்கிறோம்...


      விழா நாட்களில் மட்டும் முதல் மலையின் மேல் சிற்சில     கடைகள் உண்டு. அவற்றில் சுக்கு காபி, சோடா போன்றவைகள் கிடைக்க வாய்ப்புண்டு.


மூங்கில் மரத்தில் விளையாடும் மந்தி


    இரண்டாம் மலையின் ஆரம்பம் மூங்கில் மரங்களின் நடுவே சமதள பாதையாகவும், நடப்பதற்கு எளிதாகவும் உள்ளது. 

    இந்த மூங்கில் மரங்கள் மேலே மந்திகள் மகிழ்ச்சியாக விளையாடும் காட்சியை கண்ட நமது கண்கள், அம்மகிழ்ச்சியை நம் மனங்களுக்கும் கடத்துகிறது. இது நம் மனம் என்னும் குரங்கை  நாம் கட்டுப்படுத்தினால் மட்டுமே இறைவனை அடைய இயலும் என நமக்கு எடுத்துரைக்கிறது.


       நாம் நடந்து செல்லும் பாதையில் மரங்களின் வேர்கள் பல இருக்கின்றன.  அவற்றை தாண்டியும்,  குனிந்தும் கடந்து சென்று கொண்டிருக்கிறோம். இது இவ்வுலக வாழ்வில் நாம் கடந்து சென்று கொண்டிருக்கும் பாதைகளை பிரதிபலிப்பதாக  எண்ணுகிறோம்.


பாதையின் நடுவே மரங்களின் வேர்கள்

   
         தற்போது காவடி எடுத்து வரும் ஒரு பக்தர், நம்மை கடந்து சென்று மலை ஏறிக் கொண்டிருக்கிறார். தமது சொந்த   உடமைகளையே சுமக்க கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் பக்தர்களிடையே, அவரின் பக்தியையும் அதனால் கிடைக்கப்பெற்ற, மன சக்தியையும் மெச்சியபடி நம் பயணத்தைத் தொடர்கிறோம்...



காவடி எடுக்கும் பக்தர்


        இரண்டாம் மலையில், மலைப்பாதையின் வலதுபுறம் கைதட்டி சுனையை காண்கிறோம். அதில் பக்தர்களின் வசதிக்காக ஒரு சிறிய குழாய் செருகப்பட்டுள்ளது. இங்கு நாம் கொண்டு செல்லும் பாட்டில்களில் நீரை நிரப்பிக் கொண்டு பயணத்தைத் தொடர்கிறோம்.



கைதட்டி சுனை தீர்த்தம்


        சிறிது தூர நடைபயணத்தில் வழுக்குப்பாறைகளை காண்கிறோம். இது மூன்றாம் மலையில் நாம் ஏற ஆரம்பித்துவிட்டோம் என்பதை குறிக்கிறது. இப்பாறைகள் வழியே தான், நீர் வழிந்து ஓடி வரும் என்பதால்,  மழைக்காலங்களில் வெள்ளையங்கிரி மலை ஏற அனுமதி இல்லை.



வழுக்குப்பாறை



     இப்பாதையில் சற்று ஜாக்கிரதையாக ஏற வேண்டும். முந்தைய காலகட்டத்தில் இப்பாதையை கடப்பது இன்னும் கடினமாக இருந்திருக்கக்கூடும். கோவையை சேர்ந்த ஒரு தம்பதியினர் இந்த பாதையை 1974ஆம் ஆண்டு செதுக்கி உள்ளனர். இது குறித்த கல்வெட்டு இங்கே வலப்புறம் காணப்படுகிறது. அவர்களுக்கு நமது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டு நம் பயணத்தைத் தொடர்கிறோம்...


        
வழுக்குப்பாறை கல்வெட்டு

      
      வழுக்குப் பாறை முடிந்த சிறிது நேரத்தில் இடதுபுறம் பாம்பாட்டி சித்தர் குகையும், சுனையும் உள்ளது. இங்கு சற்று ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறோம்... 


பாம்பாட்டி சித்தர் குகை



    சிறிது நேர சிரம பரிகாரத்திற்கு பின்பு அங்கிருந்து புறப்படத் தயாரானபோது, நண்பர் ஒருவர் அளித்த தகவலின்படி ஒரு நபர் மட்டுமே நுழையக்கூடிய ஒரு குகையை காண்கிறோம்.  


ஒரு நபர் மட்டுமே நுழையக்கூடிய குகை



         குகையினுள் சுமார் 3-4 பேர்கள் நிற்க முடியும் என்றாலும், செல்லும் பாதை மிகக் குறுகலாகவும்,  உள்ளே ஒளிபுகா வண்ணம் இருளாகவும் இருக்கிறது. இதனுள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள வெண்ணிற சிவலிங்கம் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது....


குகையினுள் சிவலிங்கம் (இடது புறம்)


        இரண்டாம் மற்றும் மூன்றாம் மலைகளில் நாம் செல்லும் பாதையின் ஓரத்தில் பல அழகிய பூக்கள் உள்ளன.‌‌.. அவை அவ்வழியே செல்லும் நம்மை உற்சாகப்படுத்தி வழி அனுப்பி வைக்கின்றன...


        இப்போது தொடர் ஏற்றமாக இருக்கும் நான்காம் மலையை கடந்து சென்று கொண்டிருக்கிறோம்... பாறைகள்  நிறைந்த இப்பாதை, முதல் மலை ஏற்றத்தை ஒப்பிடும்போது சற்று எளிதாகவே இருக்கிறது...


பாறைகள்  நிறைந்த நான்காம் மலை



        தற்போது நாம் செல்லும் பாதையில் உள்ள பாறைகள் வெண்ணிறமாக உள்ளது. இது நாம் ஐந்தாம் மலையில்  நாம் சென்று கொண்டிருக்கிறோம் என்பதை தெரிவிக்கிறது. இம்மலை விபூதி மலை என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது எனவே நாமும் ஒரு துளி மண்ணை எடுத்து நம் நெற்றியில் வைத்துக்கொண்டு வணங்கி நம் பயணத்தை தொடர்கிறோம்.


விபூதி மலை


        தொடர் ஏற்றமும் பின்பு இறக்கமும் கொண்ட  ஐந்தாம் மலை முடிவில் (ஆறாம் மலை துவக்கத்தில்) ஆண்டி சுனை எனும் தீர்த்தம் உள்ளது. கடுமையான பகல் நேரத்திலும் இத்தீர்த்தத்தின் நீர் மிகவும் குளுமையாக உள்ளது. பக்தர்கள் இத்தீர்த்தத்தை அசுத்தம் செய்யாமல் இருக்க சமீபத்தில்  இதனுள் ஒரு சிவலிங்கம்  அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு சிறிது இளைப்பாறிவிட்டு அதனுள் ஸ்தாபிக்கப்பட்ட லிங்கத்தை தரிசனம் செய்கிறோம்.... 


ஆண்டி சுனை 



        ஆண்டி சுனையில் இருந்து புறப்பட்டு சிறிது ஏற்றத்திற்குப் பின் ஆறாம் மலை உச்சியில் சென்று கொண்டிருக்கிறோம். வலதுப்புறம் உள்ள புற்கள் கொண்ட சமவெளி பார்ப்பதற்கு மிகவும் அழகாய் உள்ளது. அதன் பின்னே உள்ள அடர்ந்த பசுமைக் காடுகள் சீதை வனம் என்று அழைக்கப்படுகிறது. 


சீதை வனம்



    இடதுபுறம் தெரியும் பள்ளத்தாக்கும், பின்பு தூரத்தில் தெரியும் மலை சிகரங்களின் கடந்து செல்லும் மேகங்களும் காண்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது.  


இயற்கை எழில் கொஞ்சும்  ஆறாம் மலை


        இம்மலையில் உள்ள மிகப்பெரிய பாறை பீமன் களி உருண்டை என்று அழைக்கப்படுகிறது. இந்த பீமன் பாறை, நாம் ஏற்கனவே கண்ட சீதை வனம் மற்றும் தலபுராணத்தில் கண்ட அர்ஜுனன் பசுபதாஸ்திரம் பெரும் காட்சி ஆகியவை ராமாயண, மஹாபாரத இதிகாசங்களிற்கும், வெள்ளியங்கிரி மலைக்கும் உள்ள தொடர்பை எடுத்துரைக்கிறது..‌.           


பீமன் களி உருண்டை

            இதை கடந்து சிறிது தூரம் சென்றபின் நாம் காணும் ஏழாம் சிகரத்தின் தரிசனம் நாம் இதுவரை கடந்துவந்த வலிகள் அனைத்தையும் மறக்கச் செய்து நம் மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.


வெள்ளியங்கிரி சிகர தரிசனம்



           ஆம்! நமது குறிக்கோளை  நெருங்கிவிட்டோம்...நெருங்கிவிட்டோம்... என நம் மனது  குதூகலித்து  கூக்குரலிட   ஆரம்பிக்கிறது....

தொடரும்...




Comments