மலர் மாலை – 2 பைந்தமிழ் பூக்கள் / சங்ககால மலர்கள்

மலர் மாலை 2 -பைந்தமிழ் பூக்கள் / சங்ககால மலர்கள்

    

    நமது இலக்கியங்கள் இயற்கையை போற்றுகின்றன.  குறிப்பாக சங்க இலக்கியங்களில் 99 வகையான மலர்களை மகளிர் குவித்து விளையாடியதாக குறிப்புகள் உள்ளன. இப்பதிவு பைந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள சில பூக்களை கொண்டு தொடுக்கப்பட்ட  ஒரு மாலையாகும்.    

    இப்பூக்கள் பல நூற்றாண்டுகளை கடந்து வாழ்கின்றன. இதில் ஒவ்வொரு  பூவும் பல காதல், வீர செயல்கள், சரித்திர சம்வங்களின் சாட்சியாகும். இவற்றை பார்ப்பது இப்பிறவியில் நாம் அடைந்த பேராகும்.      


வரையறுக்கப்பட்ட பொறுப்பு:

    நான் இப்பதிவில் உள்ள புகைப்படங்களுக்கு மட்டுமே பொறுப்பாவேன். பூக்களின் பெயர்கள் மற்றும் பிற விவரங்கள் விக்கிபீடியா மற்றும் பல்வேறு இணையதளங்களில் இருந்து திரட்டப்பட்டுள்ளது. இதில் தவறேனும் இருப்பின் தனிப்பட்ட முறையில் சுட்டிக்காட்டவும்.


செங்காந்தள்


பிற பெயர்கள்                        :    காந்தள்,  கார்த்திகை மலர் 

ஆங்கில பெயர்                      :    Flame lily 

தாவரவியல் பெயர்               :    Gloriosa superba

இலக்கிய குறிப்புகள்

   சங்க இலக்கியங்களில் பெண்களின் கைவிரல்களுக்கு உவமையாக கூறப்படும் மலர்.      

கூடுதல் தகவல்

    இது தமிழ்நாட்டின் மாநிலப்பூ. இதன் அனைத்துப் பகுதிகளும் கோல்சிசினே (colchicine) நிறைந்தது. அதனால் இவற்றை உட்கொண்டால் மரணம் சம்பவிக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக இதன் வேர் மிகுந்த நச்சுத் தன்மை கொண்டது. இதன் இலை மற்றும் தண்டு நம்மேல் பட்டால் தோலில் அரிப்பு உண்டாகும். இந்தியாவில் பல்வேறு மருத்துவ பயன்பாடுகளில் இது பயன்படுத்தப்படுகிறது.



கருவிளம் (கருவிளை) 


பிற பெயர்கள்                        :    நீலசங்கு பூ, மணி பூ

ஆங்கில பெயர்                      :    Asian pigeonwings - Violet

தாவரவியல் பெயர்               :    Clitoria ternatea


இலக்கிய குறிப்புகள்

    குன்றத்து மகளிர், தோழிகளோடு குவித்து விளையாடி அணியாக்கிக் கொண்ட 99 பூக்களில் ஒன்று.

    "மணி கண்டு அன்ன மா நிற கருவிளை/ஒண் பூ தோன்றியொடு தண் புதல் அணிய" - நற்றிணை 

கூடுதல் தகவல்

    மணி நிறம் என்பது நீலநிறம். எனவே இது மணி பூ என்றும், தோற்றத்தில் சங்கின் விரிவாய் போலத் தோன்றுவதால் சங்கு பூ என்றும் அழைக்கப்படுகிறது.


செருவிளம் (செருவிளை) 

பிற பெயர்கள்                        :    வெண்சங்கு பூ

ஆங்கில பெயர்                      :    Asian pigeonwings - White

தாவரவியல் பெயர்               :    Clitoria ternatea

இலக்கிய குறிப்புகள்

    கபிலர் இயற்றிய குறிஞ்சி பாட்டு நூலிலும், கலிங்கத்து பரணியிலும் இம்மலரை பற்றிய குறிப்புகள் உள்ளன.


சிவந்தி அல்லது செவ்வந்தி


பிற பெயர்கள்                        :    சாமந்தி

ஆங்கில பெயர்                      :    Marigold 

தாவரவியல் பெயர்               :    Chrysanthemum


இலக்கிய குறிப்புகள்

    இம்மலர்களை கண்ணியாகக் கட்டி மகளிர் தலையில் இதனைச் சூடிக்கொள்வர் என சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. 

கூடுதல் தகவல்

    இப்பூவானது பொதுவாக வெள்ளை, மஞ்சள், சிவப்பு நிறங்களில் பூக்கும். எனினும் தற்போது மரபணு மாற்றப்பட்டு புதிய நிறங்களில் காணப்படுகிறது.



தும்பை 

பிற பெயர்கள்                        :    முடிதும்பை

ஆங்கில பெயர்                      :    Thumbai or Thumba

தாவரவியல் பெயர்               :    Leucas Aspera

இலக்கிய குறிப்புகள்

    தொல்காப்பியத்தில் தும்பைப் போருக்கு என்று தனி இலக்கணம் உண்டு. கம்பராமாயணத்தில் இராவணன் போருக்குப் புறப்பட்ட போது தும்பை மாலையும்,  இராமன் துளசி மாலையுடன் தும்பைப்பூ மாலையும் சூட்டிக்கொண்டான் என்கிறார் கம்பர். 

கூடுதல் தகவல்

    இதில் பெருந்தும்பை, சிறுதும்பை, கருந்தும்பை, மலைத்தும்பை, கவிழ்தும்பை மற்றும் காசித்தும்பை என்று பல வகைகளுண்டு. 



கூவிரம் 


பிற பெயர்கள்                        :    ஊமத்தம் பூ

ஆங்கில பெயர்                      :    Jimson weed, Thorn Apple 

தாவரவியல் பெயர்               :    Datura stramonium

இலக்கிய குறிப்புகள்

    கூவிரம் என்பது சங்ககால மகளிர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று

கூடுதல் தகவல்

    இதனை ஊமத்தை, உன்மத்தம் என்றும் அழைப்பர். இது பூ புனல் வடிவில் காணப்படுகிறது. இம்மலர்கள் வெள்ளை, மஞ்சள் (பொன் ஊமத்தை) மற்றும் கருஞ்சிவப்பு (கரு ஊமத்தை) ஆகிய நிறங்களில் காணப்படுகின்றன.


வாழை 

பிற பெயர்கள்                        :    வான்பயிர், அம்பணம், அரம்பை, கதலி, பனசம்

ஆங்கில பெயர்                      :    Banana Flower

தாவரவியல் பெயர்               :    Musa acuminata

இலக்கிய குறிப்புகள்

    தமிழிலக்கியத்தில், வாழை முக்கனிகளில் ஒன்றாக குறிப்பிடப்படுகிறது. கம்பராமாயணம், தொல்காப்பியம், புறநானூறு, அகநானூறு, சிறுபாணாற்றுப்படை சீவக சிந்தாமணி போன்ற பல இலக்கியங்களில் வாழையை பற்றிய குறிப்புகள் உள்ளன.

கூடுதல் தகவல்

    செந்தொழுவன் (செவ்வாழை), இரசக்கதிலி (ரசுதாளி), தேன் வாழை (கற்பூரவல்லி), ஏற்றன் பழம் (நேந்திரம்) போன்றவை நாம் அன்றாடம் பயன்படுத்தும் வாழைப் பழங்களின் வேறு பெயர்களாகும்.


குடசம் 



பிற பெயர்கள்                        :    பூவரசு, பூவரசம்

ஆங்கில பெயர்                      :    Indian Tulip

தாவரவியல் பெயர்               :    Thespesia populnea

இலக்கிய குறிப்புகள்

    குடசம் என்னும் மலரைக் குறிஞ்சிப்பாட்டு வான்பூங் குடசம் என விளக்கிக் காட்டுகிறது. சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களும் இதனைக் குறிப்பிடுகின்றன. 

கூடுதல் தகவல்

    முற்காலத்தில், கிராமப்புறங்களில் சிறுவர்கள் பூவரச இலையைக் கூம்புபோல் சுருட்டி கூர்ப்பகுதியில் கொஞ்சம் கிள்ளிவிட்டு அதில் வாய் வைத்து ஊதி மகிழ்வர்.


பூளை பூ


பிற பெயர்கள்                        :    தேங்காய்ப்பூ, சிறுபீளை, பூளாப்பூ

ஆங்கில பெயர்                      :    Mountain knotgrass

தாவரவியல் பெயர்               :    Aerva lanata

இலக்கிய குறிப்புகள்

    குறிஞ்சிநிலக் கோதையர் குவித்து விளையாடியதாகக் காட்டப்பட்டுள்ள 99 மலர்களில் பூளை மலரும் ஒன்று. இது குருவி அமர்ந்திருப்பது போலப் பூத்திருக்கும், வரகரிசிச் சோறு போல் இருக்கும், காற்றில் உதிராமல் போராடும், முன்பனிக் காலத்தில் பூக்கும், காட்டுப்பூனைக் குட்டியின் மயிர் இருக்கும், வேளை வெண்பூவை மேயும் மான் பூளையை மேயாமல் ஒதுக்கும் என சங்கப்பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    கண்ணகி மதுரையை எரியூட்டியபோது நான்கு வருணப் பூதங்களும் வெளியேறின. அவற்றுள் ஒன்றாகிய வேளாண் பூதம் அணிந்திருந்த பூக்களில் ஒன்று பூளை என்கிறது சிலப்பதிகாரம்.

கூடுதல் தகவல்

    பொங்கல் திருவிழாவின்போது இது காப்புக் கட்டவும், வீடுகளுக்கும் மாடுகளுக்கும் தோரணம் கட்டவும் பயன்படுத்தப்படுகிறது. இச்செடி சாப்பிடக்கூடியவை. இதன் இலைகளை ரசம் தயாரிக்கும் போது சேர்க்கின்றனர்.


பீரம்


பிற பெயர்கள்                        :    பீர்க்கு, பீர்கம் பூ 

ஆங்கில பெயர்                      :    Sponge gourd, Egyptian cucumber or Vietnamese luffa

தாவரவியல் பெயர்               :    Luffa aegyptiaca

இலக்கிய குறிப்புகள்

            வான்பூப் பொன்போல் பீரொடு புதல்புதல் மலர - நெடுநல்வாடை

   மேலும் குறிஞ்சிப்பாட்டு, ஐங்குறுநூறு, நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, சிலப்பதிகாரம் ஆகியவற்றில் பீர்க்கம் பூவை உவமையாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

கூடுதல் தகவல்

    மருத்துவ குணம் உடைய இக்காய் முற்றிய நிலையில் உலர்ந்தபின் தோல் மற்றும் விதைகளை நீக்கி எஞ்சிய நார்ப்பகுதி குளியலுக்கு உடலை தேய்த்து உதவ பயன்படுகிறது.


நந்தி 

வகை 1

வகை 2


பிற பெயர்கள்                        :    நந்திவட்டம், நந்தியாவட்டை, நந்தியார்வட்டை

ஆங்கில பெயர்                      :    Crepe jasmine, East Indian Rosebay

தாவரவியல் பெயர்               :    Ervatamia divaricata, Tabernaemontana divaricata

இலக்கிய குறிப்புகள்

    சங்ககால மகளிர் குவித்து விளையாடியதாகச் சொல்லப்பட்டுள்ள 99 மலர்களில் 'நந்தி' என்னும் பெயரால் நந்தியாவட்டை மலர் சூட்டப்பட்டுள்ளது

கூடுதல் தகவல்

    இந்தச் செடி சுமார் 1.5 - 2.5 மீட்டர் உயரம் வளரும். பூக்கள் வெண்மை நிறத்துடன், வாசனையுடன் கூடியவை. இலையை காம்புடன் கிள்ளினால் பால் வரும். வேர், பூ, இலை மற்றும் அதிலிருந்து வடியும் பால் இவை அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்தவை.


பாதிரி (சிகப்பு)


பிற பெயர்கள்                        :    அம்பு, அம்புவாகினி, பாடலம், புன்காலி

ஆங்கில பெயர்                      :    Bignonia

தாவரவியல் பெயர்               :    Bignonia suaveolens

இலக்கிய குறிப்புகள்

    இது பொதுவாக மஞ்சள் நிறத்திலும், சிலப்பகுதியில் சிவப்பு நிறத்திலும் காணப்படும். பாதிரி மலரைச் சங்ககாலக் குறிஞ்சிப்பாட்டு பல இடங்களில் குறிப்பிடுகிறது.

உதாரணம்:     பண்ணன் வாழ்ந்த சிறுகுடியில் பாதிரி மரங்கள் மிகுதி
                            ஆற்றுத் துறையில் வேனில் காலத்தில் பாதிரி மலரும் 

மேலும் ஐங்குறுநூறு,  அகநானூறு, பெரும்பாணாற்றுப்படை, நற்றிணை ஆகிய இலக்கியங்களிலும் இம்மலரை பற்றிய குறிப்பை காணலாம்.

கூடுதல் தகவல்

    மூலிகை மருத்துவத்தில் பயன்படும் ஒரு மரமாகும். 25 மீட்டர் உயரம் வரை வளரும் இதன் இலை, பூ, விதை, காய், வேர் ஆகிய அனைத்தும் மூலிகை மருத்துவத்தில் பயன்படுகின்றன.


அவரை


பிற பெயர்கள்                        :    தட்டை மொச்சை 

ஆங்கில பெயர்                      :    Broadbeans flower

தாவரவியல் பெயர்               :    Vicia faba

இலக்கிய குறிப்புகள்

இது சங்க இலக்கியங்களில் குறிப்பிட பட்டுள்ள 99 மலர்களில் ஒன்று

கூடுதல் தகவல்

    ஆட்டுக் கொம்பவரை, ஆரால் மீனவரை, ஆனைக் காதவரை, கணுவவரை, கொழுப்பவரை, கோழியவரை, சிவப்பவரை, சிற்றவரை, தீவாந்தர வவரை, நகரவரை, பாலவரை, பேரவரை, முறுக்கவரை, கப்பல் அவரை, காட்டவரை, வீட்டவரை, சீமையவரை, சீனியவரை, கொத்தவரை, குத்தவரை, சுடலையவரை அல்லது பேயவரை, பட்டவரை, வாளவரை, தம்பட்டவரை, சாட்டவரை என தமிழறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர் அவரையைப்  வகைப்படுத்தியுள்ளார்.


புன்னை


பிற பெயர்கள்                        :    தொம்ப (சிங்களம்), புன்னாகம் (மலையாளம்)

ஆங்கில பெயர்                      :    Tamanu, Mastwood, Beach calophyllum, Beauty leaf 

தாவரவியல் பெயர்               :    Calophyllum inophyllum

இலக்கிய குறிப்புகள்

பைங்கோட்டு மலர்ப்புன்னைப் பறவைகாள் பயப்பூரச்

சங்காட்டந் தவிர்த்தென்னைத் தவிராநோய் தந்தானே

செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டன் பணிசெய்ய

வெங்காட்டு ளனலேந்தி விளையாடும் பெருமானே.

                    - மூன்றாம் திருமுறை, திருஞானசம்பந்தர் 

(புன்னை மரத்தின் பூ சிட்டுக்குருவியின் பொரித்த முட்டை போல இருப்பதாகக் கூறுகின்றார்).

கூடுதல் தகவல்

    இது ஏனைய பல இனத் தாவரங்கள் வளர முடியாத, வரண்ட மணற் பாங்கான கடற்கரையோரங்களில் வளரக்கூடியது. இதன் தோற்றம் காரணமாக, நகரப் பகுதிகளில் அழகுக்காக சாலையோரங்களில் நட்டு வளர்க்கப்படுகின்றது.


வேம்பு


பிற பெயர்கள்                        :    வேப்பம் பூ

ஆங்கில பெயர்                      :    Neem flower

தாவரவியல் பெயர்               :    Azadirachta indica

இலக்கிய குறிப்புகள்

    வேம்பு பாண்டிய முடிமன்னர்களின் குடிப்பூவாகும் என்று தொல்காப்பியம் கூறுகின்றது. 

கூடுதல் தகவல்

    1995ல் யுரோப்பிய காப்புரிமைக்கழகம் வேம்பு தொடர்பான காப்புரிமையை அமெரிக்க ஐக்கிய நாடுகள் விவசாயத்துறைக்கு வழங்கியது. பிறகு இந்திய அரசாங்கம் இச்செயற்பாடு 2000 ஆண்டுகளாக இந்தியாவில் நடைமுறையில் இருப்பதாக கூறி இதை எதிர்த்தது. கிபி 2000ல் இந்தியாவிற்கு சாதகமாக யுரோப்பிய காப்புரிமைக்கழகம் தீர்ப்பளித்தது.



சேடல்

 



பிற பெயர்கள்                        :    பவழ மல்லி

ஆங்கில பெயர்                      :    Night-flowering jasmine

தாவரவியல் பெயர்               :    Nyctanthes arbor-tristis

இலக்கிய குறிப்புகள்

    வைகையாற்றுப் படுகையில் இது பூத்துக் கிடந்தது என்றும், மதுரையைக் காவல் புரிந்துவந்த நாற்பெரும் பூதங்களில் ஒன்று சேடல் மலரை அணிந்திருந்தது என்றும் இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.

கூடுதல் தகவல்

    பவழ (பவள) நிறக் காம்பும் வெண்ணிறமான இதழ்களும் உடைய பூக்களைக் கொண்டது. இதற்குத் தனிச் சிறப்பான நறுமணம் உண்டு. குளிர் மாதங்களில் பின்னிரவில் பூத்து விடியற்காலையில் உதிரத்தொடங்கும்.


சுள்ளி 



பிற பெயர்கள்                        :    செம்முள்ளி

ஆங்கில பெயர்                      :    Porcupine flower

தாவரவியல் பெயர்               :    Barleria prionitis

இலக்கிய குறிப்புகள்

    குறிஞ்சி நில மகளிர் குவித்து விளையாடியதாகக் குறிஞ்சிப்பாட்டு குறிப்பிடும் 99 மலர்களில் ஒன்று என திணைமாலை நூற்றைம்பது என்னும் நூல் குறிப்பிடுகிறது. இப்பூவை  பற்றிய குறிப்பு சங்கப்பாடல்களில் இரண்டு இடங்களில் உள்ளது.


வெட்சி


பிற பெயர்கள்                        :  வெட்சி  

ஆங்கில பெயர்                    :    Ixora, Jungle geranium, Flame of the woods or Jungle flame or Pendkuli

தாவரவியல் பெயர்               :    Ixora coccinea

இலக்கிய குறிப்புகள்

    முருகக் கடவுள் தன் தலையிலே சூடும் கண்ணிமாலைகளில் ஒன்று இந்தச் செச்சை என்னும் வெட்சிப் பூவாலானது (செய்யன் ...கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன்) - திருமுருகாற்றுப்படை

குறிஞ்சிநிலக் கோதையர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று வெட்சி.

வெண்ணிற வெட்சி அதியமானின் குடிப்பூ ஆகும்

கூடுதல்     தகவல்

    வெட்சி என்பது ஒருவகைக் காட்டுப்பூ. இது சிவப்பு, இளஞ்சிவப்பு, வெள்ளை, மஞ்சள் முதலிய நிறங்களில் காணப்படுகிறது. இக்காலத்தில் அழகுக்காக வீடுகளிலும் வளர்க்கப்படுகிறது.


எருக்கு


பிற பெயர்கள்                        :    எருக்கன்

ஆங்கில பெயர்                      :    Crown flower

தாவரவியல் பெயர்               :    Calotropis gigantea

இலக்கிய குறிப்புகள்

    அனைத்து சங்க இலக்கிய புலவர்களும் தங்கள் பாடல்களில் ஒப்புமை கூற எருக்கஞ் செடியை பயன்படுத்தியுள்ளனர். “குறுமுகழ் எருக்காவ் கண்ணி” என நற்றிணையிலும், “குவியினார் எருக்கு” என கபிலரும், “புல்லெருக்கங்கண்ணி நறிது” என தொல்காப்பியமும் குறிப்பிடுகிறது. 

கூடுதல் தகவல்

 அதர்வண வேதத்தில் எருக்கஞ்செடி பற்றி கூறப்பட்டுள்ளது. நாரத புராணத்தில் சிவ பெருமானுக்கு எருக்கம் பால் வைத்து படைக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. அக்கினி புராணத்தில் மன்னர் எருக்கம் பூமாலை அணிந்து சென்றால் வெற்றி பெறுவார் என்று கூறப்படுகிறது. "சிவமஞ்சரி” எனும் நூலில் சிவனுக்கு காலையில் பூஜிக்க சிறந்த மலர் “எருக்கம் மலர்” என்று கூறப்படுகிறது.


இருள்நாறி


பிற பெயர்கள்                        :    இருள்வாசி, இருவாச்சி மல்லி

ஆங்கில பெயர்                      :    Arabian jasmine or Sambac jasmine

தாவரவியல் பெயர்               :    Jasminum sambac

இலக்கிய குறிப்புகள்

    மாலையில் மலர்ந்து, இருளில் வண்டுகளை ஈர்ப்பதற்காக வெண்ணிறம் கொண்டிருக்கும் பூ நள்ளிருள்-நாறி அல்லது இருள்நாறி என சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. அவை இருவாட்சி என அழைக்கப்படும் இப்பூவையோ அல்லது மரமல்லிகை என வழங்கப்படும் பூவையோ இருக்க கூடும்.


கொகுடி


பிற பெயர்கள்                        :    அடுக்கு மல்லி

ஆங்கில பெயர்                      :    Type of Jasmine

தாவரவியல் பெயர்               :    Jasminum sambac

இலக்கிய குறிப்புகள்

    சங்ககால மகளிர் குவித்து விளையாடிய 99 மலர்களில் இந்தக் கொகுடி (Jasminum sambac) மலரும் ஒன்று. இது மரமல்லி அல்லது அடுக்குமல்லியாக இருக்க கூடும். அதில் இந்த நறுமணம் மிக்க குளிர்ச்சி மிக்க பூ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 


அடும்பு


பிற பெயர்கள்                        :    அடும்பு

ஆங்கில பெயர்                      :    Beach Morning Glory, Goat's Foot

தாவரவியல் பெயர்               :    Ipomoea cairica

இலக்கிய குறிப்புகள்

 "குன்றோங்கு வெண்மணல் கொடியடும்பு கொய்தும்" - நற்றிணை, பாடல் 254

    இம்மலர் சங்க இலக்கியங்களின் பல பாடல்களில் நெய்தல் நிலத்திலே விளைவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 


ஆவாரை


பிற பெயர்கள்                        :    ஆவிரை அல்லது மேகாரி

ஆங்கில பெயர்                      :    Matura tea tree, Avaram, Ranawara

தாவரவியல் பெயர்               :    Cassia auriculata

இலக்கிய குறிப்புகள்

    ஆவிரங்கோடு, ஆவிரஞ்செதிள் (பட்டை), ஆவிரந்தோல், ஆவிரம்பூ என தொல்காப்பியர் இந்த மரவினத்தைக் குறிப்பிடுகிறார். 

    குறிஞ்சிப்பாட்டில் தொகுக்கப்பட்டுள்ள 99 வகையான மலர்களில் ஒன்றாக இது பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தலைவியை அவளது பெற்றோர் அவள் விரும்பும் தலைவனுக்குத் தர மறுத்தால் ஊரில் மடலூர்ந்து வந்து பெறப்போவதாக அந்தத் தலைவன் குறிப்பிடுகிறான். பனைமட்டைகளால் குதிரை செய்வானாம். அதற்கு ஆவிரம்பூ மாலை சூட்டுவானாம். இன்னாள் இவ்வாறு வரச்செய்தாள் என எழுதி அதன்மேல் வைத்திருப்பானாம். இதனைப் பார்க்கும் ஊரார் அந்தத் தலைவன்-தலைவியரைக் கூட்டுவிப்பார்களாம்.

    காதலர் இருவர் ஆவிரை மலர்மாலை அணிந்துகொண்டு பல ஊர் மன்றங்களில் இன்னிசை முழங்க ஆடினார்களாம். 

இவ்வாறெல்லாம் பல இடங்களில் இப்பூ குறிப்படப் படுகிறது.


கொவ்வை


ஆங்கில பெயர்                      :    Ivy gourd, scarlet gourd, tindora and kowai 

தாவரவியல் பெயர்               :    Coccinia grandis


இலக்கிய குறிப்புகள்

    இதன் பழங்கள் ஒரு கவனிக்கத்தக்க செந்நிறத்தில் இருக்கும். இதன் காரணமாக திருநாவுக்கரசர் பின்வரும் தனது பாடலில் சிவனின் வாய்நிறத்திற்கு உவமையாக இதைப் பயன்படுத்துகிறார்

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும் 
பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால்வெண்ணீறும் 
இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்ல் 
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே.


வகுளம்


பிற பெயர்கள்                        :    மகிழம், இலஞ்சி

ஆங்கில பெயர்                      :   Spanish cherry, Medlar, Bullet wood 

தாவரவியல் பெயர்               :    Mimusops elengi 

இலக்கிய குறிப்புகள்

    குறிஞ்சிப்பாட்டு, பரிபாடல், சிலப்பதிகாரம், மணிமேகலை, பெரும்பாணாற்றுப்படை ஆகிய இலக்கியங்களில் மகிழம் பூவை பற்றிய குறிப்புகள் உள்ளன. இது சங்ககால மகளிர் குவித்து விளையாடிய 99 மலர்களில் ஒன்று.



காயா



பிற பெயர்கள்                        :    காயான் 

ஆங்கில பெயர்                      :    Memecylon umbellatum

தாவரவியல் பெயர்               :    Memecylon umbellatum

இலக்கிய குறிப்புகள்

    திருமால் தெய்வத்தை 'காயாம்பூ மேனியன் என்பர். மை நிறம் கொண்ட இந்தத் தெய்வத்தைத் தொல்காப்பியம் 'மாயோன்' எனக் குறிப்பிடுகிறது. மாயோனைத் தெய்வமாகக் கொண்ட முல்லை நிலத்துக் கருப்பொருள்களில் ஒன்று காயா-மலர்.


முருக்கு


பிற பெயர்கள்                        :    முள்முருக்கு, கல்யாண முருங்கை, 
                                                        முள்முருங்கை, கிஞ்சுகம், கவிர், புழகு, 
                                                        மலை எருக்கு 

ஆங்கில பெயர்                      :   Flame-of-the-forest, Bastard teak 

தாவரவியல் பெயர்               :    Butea frondosa 

இலக்கிய குறிப்புகள்

        குறுந்தொகை, கலித்தொகை போன்ற இலக்கியங்களில் இப்பூவை பற்றிய குறிப்பு உள்ளது. 
உதாரணம் - செம் பூ முருக்கின் நன் நார் களைந்து - குறுந்தொகை 



முடக்கொத்தான்



பிற பெயர்கள்                        :       கொற்றான், முடர்குற்றான், முடக்கற்றான்,                                                                    முடக்கொற்றான், முடக்குத் தீர்த்தான்,           
                                                            உழிஞை, முடக்கறுத்தான்

ஆங்கில பெயர்                      :        Balloon plant, Love in a puff    

தாவரவியல் பெயர்                :        Cardiospermum halicacabum

இலக்கிய குறிப்புகள்

    பழங்காலத் தமிழகத்தில் போரின்போது அரண்களை முற்றுகையிடும்போது, அதன் அறிகுறியாக இதன் மலர்களை வீரர்கள் சூடிக்கொள்வார்களாம். உழிஞையின் பெயரில் உழிஞைத் திணை என்ற திணை அமைந்துள்ளது


கூடுதல் தகவல்

            இதன் காய்கள் பலூன் போன்ற அமைப்பை உடையவை, அவற்றை கைகளுக்கு இடையில் வைத்துத் தட்டும்போது பட்டாசு வெடிப்பதைப் போன்ற ஒலி உண்டாக்கும். இதன் காரணமாக சிறுவர்கள் இதன் காய்களை, ‘பட்டாசுக் காய்’ என்றும் அழைப்பதுண்டு. 



சிந்துவாரம்



பிற பெயர்கள்                        :       நொச்சி

ஆங்கில பெயர்                      :      Vitex negundo

தாவரவியல் பெயர்               :      Vitex negundo

இலக்கிய குறிப்புகள்

    முற்றுகையைத் தகர்த்தெழும் வீரர்கள் குடும் போர் மலர் இது. இதன் பூங்கொத்து அகத்துறையிலும் புறத்துறையிலும் பேசப்படுகின்றது. குறிஞ்சிப் பாட்டில் (89) குறிப்பிடப்படும் சிந்துவாரம் என்பதற்குக் கருநொச்சி என்று நச்சினார்க்கினியர் உரை கூறுவர்.

கூடுதல் தகவல்
        நொச்சியை ஒரு சிறுமரமெனக் கூறலாம். இதன் கூட்டிலையில் 3 முதல் 7 வரையிலான சிற்றிலைகள் காணப்படும். இவற்றின் கூட்டிலை அமைப்பை பொறுத்து மூன்றிலை நொச்சி. ஐந்திலை நொச்சி, ஏழிலை நொச்சி என அழைக்கப்படுகின்றது. மேற்கண்ட படத்திலுள்ளது ஐந்திலை நொச்சியாகும்.

இம்மலர்கள் சிறியவை. நீலநிறமானவை.  நொச்சியில் மனைநொச்சி, கருநொச்சி, மலைநொச்சி, வெண்ணொச்சி என்ற வகைகள் உள்ளன. 



பாரிஜாதம்



பிற பெயர்கள்                        :       பாரிஜாதம்

ஆங்கில பெயர்                      :      Night-flowering jasmine

இலக்கிய குறிப்புகள்

       தேவலோகத்தில் பெருமாள் பாரிஜாத மலரில் வீற்றிருப்பதாக புராணங்கள் கூறுகிறது. அவர் பூலோகத்தில்  கிருஷ்ணராக அவதரித்த போது தன் மனைவி சத்யபாமாவின் ஆசைக்கேற்ப இம்மலரை  பூலோகத்திற்கு கொண்டுவந்தார் என்று புராணங்கள் உள்ளன.

 கூடுதல் தகவல்

        பாரிஜாதம் வேறு. பவழமல்லி வேறு ஆனால் விக்கிப்பீடியா உட்பட பெரும்பாலான இணையதளங்களில் இரண்டும் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது.



நன்றிகள் :

  • Redmi 3S, Redmi Note 7S - புகைப்படங்களுக்கு
  • Wikipedia, Google    -   பல்வேறு தகவல்களுக்கு
  • இப்பதிவை பார்வையிடும் உங்களுக்கு…


பிற பதிவுகளை பார்க்க


Comments

Post a Comment