மலர் மாலை 4. மூலிகை மலர்கள்
இப்பூக்கள் பல்வேறு மூலிகை செடிகளில் வளர்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை நமது சாலையோரங்களில் காணப்படுகின்றன. பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதனை காத்த தெய்வங்கள் இவை.
வரையறுக்கப்பட்ட பொறுப்பு:
நான் இப்பதிவில் உள்ள புகைப்படங்களுக்கு மட்டுமே பொறுப்பாவேன். பூக்களின் பெயர்கள் மற்றும் பிற விவரங்கள் விக்கிபீடியா மற்றும் பல்வேறு இணையதளங்களில் இருந்து திரட்டப் பட்டுள்ளது. இதில் தவறேனும் இருப்பின் தனிப்பட்ட முறையில் சுட்டிக் காட்டவும்.
மேலும் இவை மூலிகைகளை பற்றிய ஒரு அறிமுகம் மட்டுமே. இவற்றை நன்கு அறிந்தவர் மூலம், சரியான முறையில் பயன்படுத்தினால் மட்டுமே நன்மை பயக்கும். சுய முயற்சி வேண்டாம். மீறி பயன்படுத்தினால் ஏற்படும் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல.
பெயர் - நித்திய கல்யாணி, பட்டிப்பூ
ஆங்கிலப் பெயர் - Madagascar periwinkle, Cape periwinkle
தவராவியல் பெயர் - Catharanthus roseus
மருத்துவப் பயன்கள்
இப்பூச்செடியில் இருந்து இரத்தப் புற்றுநோய் (இலூக்கேமியா), நீரிழிவு நோய் போன்ற நோய்களுக்கான மருந்துகள் பிரித்தெடுக்கப்படுகிறது. இச்செடியை நேரடியாக உட்கொள்வது தீவிர நச்சுத்தன்மையை உண்டாக்கும்.
பெயர் - கருந்துளசி பூ
ஆங்கிலப் பெயர் - Holy basil, Tulsi
தவராவியல் பெயர் - Ocimum tenuiflorum
மருத்துவப் பயன்கள்
துளசி மூலிகைகளின் ராணி எனப்படுகிறது. இதன் இலைகளும், பூக்களும் ஆயுர்வேத மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. காய்ச்சல், தொண்டைப்புண், தலை வலி, கண் பிரச்சனைகள், வாய் பிரச்சனைகள், இரத்த அழுத்தம், சளி, இருமல், நீரிழிவு, சிறுநீரக கற்கள் போன்றவற்றிற்கு துளசி அருமருந்தாகும். துளசி இலையை தினமும் சாப்பிட்டு வர மன அழுத்தத்தைப் குறையும்.
பெயர் - அரளி
ஆங்கிலப் பெயர் - Oleander
தவராவியல் பெயர் - Nerium oleander
மருத்துவப் பயன்கள்
இதன் இலைகள், வேர் மற்றும் வேர்ப்பட்டை ஆகியவை தோல்நோய்கள், குழிப்புண், குஷ்டம் போன்றவற்றிக்கு மேல் பூசும் மருந்தாகும். இதை தக்க முறையில் பயன்படுத்தினால் தலை எரிச்சல், காய்ச்சல், பித்தக்கோளாறுகள் போன்றவை நீங்கும். சற்று அஜாக்கிரதையாகப் பயன்படுத்தினால் விஷத் தன்மையடைந்து விபரீதமான விளைவுகளை உண்டாக்கி விடக்கூடும்.
பெயர் - தும்பை
ஆங்கிலப் பெயர் - Thumbai or Thumba
தவராவியல் பெயர் - Leucas Aspera
மருத்துவப் பயன்கள்
சித்த மருத்துவத்தில் நச்சு முறிவில் தும்பை தனித்த ஒரு இடம் பெறுகிறது. ஆயுர்வேத மருத்துவ முறையில் இதனை துரோன புஸ்பி என்று அழைப்பர்.
பெயர் - ஓரிதழ் தாமரை
ஆங்கிலப் பெயர் - Hybanthus
தவராவியல் பெயர் - Hybanthus enneaspermus
மருத்துவப் பயன்கள்
தேகப் பொலிவு, தாது விருத்தி, வெள்ளைப்படுதல் போன்றவற்றிக்கு இது சித்த மருத்துவத்தில் பயன்படும் மருந்தாகும்.
பெயர் - வேம்பு
ஆங்கிலப் பெயர் - Neem flower
தவராவியல் பெயர் - Azadirachta indica
மருத்துவப் பயன்கள்
வாயு கோளாறு, பித்தம், சரும நோய் போன்றவற்றிற்கு இது அருமருந்து. இதை ரசம், காஷாயம் செய்து பருகலாம். மேல் பூச்சாகவும் பயன்படுத்தலாம்.
பெயர் - பூவரசம்
ஆங்கிலப் பெயர் - Indian Tulip
தவராவியல் பெயர் - Thespesia populnea
மருத்துவப் பயன்கள்
இதன் இலை சொறி, சிரங்கு, தேமல், படர்தாமரை, வீக்கம் போன்ற தோல் நோய்களுக்கு மருந்தாகும்.
பெயர் - நந்திவட்டம்
ஆங்கிலப் பெயர் - Crepe jasmine, East Indian Rosebay
தவராவியல் பெயர் - Ervatamia divaricata, Tabernaemontana divaricata
மருத்துவப் பயன்கள்
இதன் இலைகளை கொண்டு தயாரிக்கப்படும் எண்ணெய் கண் மற்றும் சரும நோய்களுக்கு மருந்ததாகும்.
பெயர் - ஊமத்தம்
ஆங்கிலப் பெயர் - Jimson weed, Thorn Apple
தவராவியல் பெயர் - Datura stramonium
மருத்துவப் பயன்கள்
இது விஷமுறிவு, வாதம், வீக்கம், உன்மத்தம் (பிரமை) போன்றவற்றை குணமாக்க பயன்படுகிறது.
பெயர் - எருக்கு
ஆங்கிலப் பெயர் - Crown flower
தவராவியல் பெயர் - Calotropis gigantea
மருத்துவப் பயன்கள
சித்த மருத்துவத்தில் சளி, இருமல், மூச்சிரைப்பு போன்ற நோய்களுக்கு சுவாச குடோரி மாத்திரையாக எருக்கம் பூ வழங்கப்படுகிறது. இதன் இலை கற்பூர எண்ணெய்யுடன் சேர்த்து காய்ச்சி தடவ மூட்டு வலியை குணப்படுத்தும்.
பெயர் - சோற்றுக்கற்றாழை
ஆங்கிலப் பெயர் - Aloevera flower
தவராவியல் பெயர் - Aloevera
மருத்துவப் பயன்கள்
முதல் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே இந்தத் தாவரம் மூலிகையாக ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படுகிறது. உடல் எடை குறைப்பிற்கும், உடல் சூட்டைத்தணிக்கவும், முக அழகிற்காகவும் இத்தாவரம் பயன்படுத்தப்படுகிறது.
பெயர் - செம்பருத்தி, செவ்வரத்தை
ஆங்கிலப் பெயர் - Chinese hibiscus, China rose, Hawaiian hibiscus
தவராவியல் பெயர் - Hibiscus rosa-sinensis
மருத்துவப் பயன்கள்
இதன் இலை, பூ, வேர் என அனைத்தும் மருத்துவத் தன்மையுள்ளவை. வயிற்றுப்புண், வாய்ப்புண், கருப்பை சம்பந்தமான நோய்களை குணமாக்கும். இது ஆயுர்வேதத்தில் இது ஜபா புஸ்பா, ருத்ர புஷ்ப, ரக்த கார்பாச என்றும் அழைக்கப்படுகிறது.
பெயர் - சித்தரகம்
ஆங்கிலப் பெயர் - White Leadwort
தவராவியல் பெயர் - Plumbago zeylanica
மருத்துவப் பயன்கள்
இதன் வேர், வேர்ப்பட்டை மற்றும் இலைகள் மருத்துவப் பயன் கொண்டவை. வேர் சொறி, தேமல், படை மீது களிம்பாகப் பூசப்படுகிறது. இலை மற்றும் வேர் ஜீரண கோளாறுகளுக்கும், உடல் எடைகுறைப்பதற்கும் உதவும். வேர் கசாயம் தலை வழுக்கையினைப் போக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
பெயர் - சங்கம் குப்பி
ஆங்கிலப் பெயர் - Glory bower
தவராவியல் பெயர் - Clerodendrom inermis or Volkameria inermis
மருத்துவப் பயன்கள்
இதன் இலை, வேர் ஆகிய இரண்டுமே சிறந்த மருத்துவப் பண்பைக் கொண்டிருக்கின்றன. கரப்பான், காளாஞ்சகப்படை (சொரியாசிஸ்), விஷக்கடி, ஊறல், தடிப்புகள் போன்ற அனைத்துவிதமான தோல் நோய்களுக்கும் இது அருமருந்தாகும். இது ரத்தம் மற்றும் வயிற்றை சுத்திகரிக்க உதவும்.
பெயர் - அரிவாள்மனைப் பூண்டு, அரிவாள் மூக்குப் பச்சிலை
ஆங்கிலப் பெயர் - Sida acuta
தவராவியல் பெயர் - Sida acuta
மருத்துவப் பயன்கள்
இதன் இலை வெட்டு காயங்களுக்கும் புண்களுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.
பெயர் - சதகுப்பை அல்லது சதகுப்பி
ஆங்கிலப் பெயர் - Dill
தவராவியல் பெயர் - Anethum graveolens
மருத்துவப் பயன்கள்
ஆயுர்வேத மூலிகையாகப் பயன்படுகிறது. இதன் இலை கருப்பை நோய், பசியின்மை, காக்கை வலிப்பு போன்றவற்றிக்கு மருந்தாகும்.
பெயர் - சிறுபலதை
ஆங்கிலப் பெயர் - Zornia
தவராவியல் பெயர் - Zornia Diphylla
மருத்துவப் பயன்கள்
இது சித்த மருத்துவத்தில் பயன்படும் மூலிகை ஆகும்.
பெயர் - தரைக்கீரை பூ, பருப்புக்கீரை பூ
ஆங்கிலப் பெயர் - Duck weed, Little hogweed, or Pursley, Chicken weed
தவராவியல் பெயர் - Portulaca oleracea
மருத்துவப் பயன்கள்
இதன் கீரை பித்தத்தை குறைக்கும். உடல் சூட்டை தணிக்கும்.
பெயர் - ஆவாரை, ஆவிரை, மேகாரி
ஆங்கிலப் பெயர் - Matura tea tree, Avaram, Ranawara
தவராவியல் பெயர் - Cassia auriculata
மருத்துவப் பயன்கள்
நீரிழிவு, மேக நோய், நீர்கடுப்பு, உள்ளங்கால் எரிச்சல், சிறுநீர் எரிச்சல், வெள்ளைப்படுதல், உடல் அரிப்பு, உடல் வெப்பம் போன்ற நோய்களுக்கான மருந்து.
”ஆவாரை பூத்திருக்கச் சாவாரைக் காண்பதுண்டோ ?” என்பது சித்த மருத்துவப் பழமொழி.
பெயர் - அரிவாள் தகரை
ஆங்கிலப் பெயர் - Senna tora
தவராவியல் பெயர் - Senna tora
மருத்துவப் பயன்கள்
இதன் வேர்கள், இலைகள் மற்றும் விதைகள் பாரம்பரிய இந்திய மற்றும் தெற்காசிய மருத்துவத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
பெயர் - பாதிரி, அம்பு, அம்புவாகினி, பாடலம், புன்காலி
ஆங்கிலப் பெயர் - Bignonia
தவராவியல் பெயர் - Bignonia suaveolens
மருத்துவப் பயன்கள்
இதன் வேர் பெரும்பஞ்ச மூலங்களுள் ஒன்று. இது உடலுக்குக் குளிர்ச்சி தரும், சிறுநீர் பிரச்சனைகளை தீர்க்கும். இதன் காய் ஒற்றைத் தலைவலியை போக்கும். பூ ஆண்மைக் குறைவை போக்கும்.
பெயர் - கனவாழை
ஆங்கிலப் பெயர் - Benghal dayflower, Tropical spiderwort, Wandering Jew
தவராவியல் பெயர் - Commelina benghalensis
மருத்துவப் பயன்கள்
சருமப் பொலிவிற்கு பயன்படும் மூலிகை ஆகும்.
பெயர் - கண்டங்கத்தரி
ஆங்கிலப் பெயர் - Nightshade
தவராவியல் பெயர் - Solanum virginianum
மருத்துவப் பயன்கள்
இதன் வேர் தச மூலம் எனப்படும் பத்து முக்கிய மூலிகைகளில் ஒன்றாகும். இளம் பிள்ளை வாதம், ஆஸ்துமா, இருமல், சளி போன்ற நோய்களை போக்க உதவும்.
பெயர் - தூதுவளை பூ, தூதுளம், தூதுளை, சிங்கவல்லி
ஆங்கிலப் பெயர் - Solanum trilobatum
தவராவியல் பெயர் - Solanum trilobatum
மருத்துவப் பயன்கள்
இதன் கீரை நாள்பட்ட சளி, ஆஸ்துமா, காய்ச்சல் மற்றும் பொதுவான குளிர் சிகிச்சை செய்வதற்குப் பயன்படுகிறது.
பெயர் - பேராமுட்டி
ஆங்கிலப் பெயர் - Pavonia, Fragrant Swamp mallow
தவராவியல் பெயர் - Pavonia odorata
மருத்துவப் பயன்கள்
இது காய்ச்சல் மற்றும் இடுப்பு வலிக்கு பயனுள்ளதாக இருக்கிறது.
பெயர் - தங்க அரளி
ஆங்கிலப் பெயர் - Yellow elder, Yellow trumpetbush, Yellow bells, Ginger-thomas
தவராவியல் பெயர் - Tecoma stans
மருத்துவப் பயன்கள்
இதன் இலை நீரிழிவு, வயிற்று வலி, சிறுநீரக பிரச்சனை, மேக நோய் போன்றவற்றிற்கு மருந்தாகும்.
பெயர் - வெட்டுக்காயப்பூண்டு, கிணற்றுப்பாசான்
ஆங்கிலப் பெயர் - Shepherd's needles, Spanish needles, Butterfly needles, Coatbuttons, Tridax daisy
தவராவியல் பெயர் - Bidens alba or Tridax procumbens
மருத்துவப் பயன்கள்
இந்தச் செடியின் இலைகளை வெட்டுக் காயங்களுக்கு தமிழக ஊர்ப்புறங்களில் மருந்தாகப் பயன்படுத்துவர். இது புண்ணாற்றும், குறுதியடக்கி, கபநிவாரணி. மூச்சுக்குழாய்ச்சிரை, மூக்கடைப்பு, தடுமல், நீர்கோப்பு, வயிற்றுப்போக்கு, பேதி முதலியவை குணமாகும்.
பெயர் - பூளை பூ, தேங்காய்ப்பூ, சிறுபீளை, பூளாப்பூ
ஆங்கிலப் பெயர் - Mountain knotgrass
தவராவியல் பெயர் - Aerva lanata
மருத்துவப் பயன்கள்
சிறுபீளையால் சிறுநீரக பிரச்சனைகள், பித்தவாதம் ஆகிய நோய்கள் குணமாகும்.
பெயர் - பண்ணைக்கீரை பூ, மசிலிக்கீரை பூ
ஆங்கிலப் பெயர் - Plumed cockscomb or Silver cock's comb
தவராவியல் பெயர் - Celosia argentea
மருத்துவப் பயன்கள்
இச்செடியின் அனைத்து பாகங்களும் மருந்தாகப் பயன்படுகிறது.
இது மூலிகை வகையை சார்ந்த கீரையாகும். இதில் அதிக கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குழந்தைகளுக்கு வார ஒருமுறை கொடுத்தால் நல்லது. வைட்டமின் யு, இ, டீ சத்துக்கள் அதிகமுள்ளது. பண்ணைக்கீரையானது குடல்புண் மற்றும் சரும வியாதிகளை குணப்படுத்தும்
பெயர் - சித்தாமுட்டி, சிற்றாமுட்டி, சிறுந்தொட்டி, சிறுந்தொட்டை, குறுந்தொட்டி, குறுந்தோட்டி சேங்கன். மம்மட்டி, தெங்கைப் பூண்டு
ஆங்கிலப் பெயர் - Flannel weed, Bala, Country mallow, Heart-leaf sida
தவராவியல் பெயர் - Sida cordifolia
மருத்துவப் பயன்கள்
கடும் வாத நோய்களைத் தீர்ப்பதற்குறிய மருந்தாகும். மது பழக்கத்திலிருந்து விடுபெற உதவுகிறது. கர்ப்பிணிப் பெண்ணுக்களுக்கு மருத்துவ உணவாகப் பயன்படுகிறது. இதன் தைலம் முடி உதிர்வதைத் தடுக்கிறது. இது மூட்டு வலியைக் குணப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுகிறது.
பெயர் - மஞ்சள் கரிசிலாங்கண்ணி பூ, கரிச்சை, கரியசாலை, கரிக்கை, கைகேசி, கரிக்கண்டு, கையாந்தகரை, பிருங்கராஜம், தேகராஜம், கரிசணாங்கண்ணி, கரிசனம், பொற்றலைக்கையான் (மஞ்சள் கரிசாலை)
ஆங்கிலப் பெயர் - False daisy, Yerba de tago, Karisalankanni , Bhringraj
தவராவியல் பெயர் - Eclipta prostrata
மருத்துவப் பயன்கள்
கரிசலாங்கண்ணி ஞான மூலிகை, தேசசுத்தி மூலிகை, காய கல்ப மூலிகை என பாராட்டப்படுகிறது. இதன் இலையில் நீர்=85%, மாவுப்பொருள்=9.2%, புரதம்=4.4%, கொழுப்பு=0.8%, கால்சியம், இரும்புத் தாது, பாஸ்பரஸ் சத்துகள் உள்ளன. உடல் கசடுகள் விரைந்து விலகி தேகம் சுத்தம் பெற, கெட்ட பித்த நீர் விலகி காய்ச்சல் குறைய, உடல் வசீகரம் பெற, ஆயுள் நீடிக்க கரிசிலாங்கண்ணி இலை பயன்படுகிறது. மேலும் மஞ்சள் காமாலை, மகோதர வியாதி, சிறுநீர் எரிச்சல், பெண்களின் பெரும்பாடு, குழந்தைகளின் சளி உள்ளிட்ட பல்வேறு வகையான நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
பெயர் - துத்திக்கீரை பூ, வட்டத்துத்தி, கக்கடி, கிக்கசி, அதிபலா
ஆங்கிலப் பெயர் - Indian abutilon, Indian mallow
தவராவியல் பெயர் - Abutilon indicum
மருத்துவப் பயன்கள்
இதன் இலை குடல்புண், மூலம் போன்ற வியாதிகளை குணப்படுத்தும் வல்லமை கொண்டது.
பெயர் - நாயுருவி, அபமார்க்கி, நாய்க்குருவி, சரமஞ்சரி, சனம், சுவானம், சேகரி, மாமுனி, கஞ்சரி, சிகிசிரம், கதிரி, கரமஞ்சரி, சிறுகடலாடி, சகரிகம், கொட்டாவி, நாயரஞ்சி
ஆங்கிலப் பெயர் - Chaff-flower, Prickly chaff flower, Devil's horsewhip
தவராவியல் பெயர் - Achyranthes aspera
மருத்துவப் பயன்கள்
இதன் வேர் அழகுண்டாகும். இலை கீழ்வாய்க்குரிதிப்போக்கையும், கழிச்சல், ஐயநோய், வியர்வை, வெள்ளை இவைகளையும் போக்கும். செந்நாயுருவி வீக்கம், பாண்டு, காமாலை இவை நீக்கும். வேர்ப் பொடியுடன் சிறிது மிளகு பொடியும் ,தேனும் சேர்த்துக் கொடுக்க இருமல் நீங்கும். நாயுருவி விதையை அரிசி கழுவிய நீருடன் உட்கொண்டால் மூலம் நீங்கும்.இது மூளை நோய்களை நீக்கும்.
பெயர் - சீமையகத்தி பூ, சீமை அகத்தி, பேயகத்தி, அலடா, காலவகத்தி, சீமைஅவுத்தி, சிண்டுகை, சிரிகை, பைரவம், பொன்னகத்தி, புளியச்சிகா செடி, புழுக்கொல்லி, வண்டு கொல்லி
ஆங்கிலப் பெயர் - Emperor's candlesticks, Candle bush, Candelabra bush, Christmas candles, Empress Candle plant, Ringworm shrub, Candle tree.
தவராவியல் பெயர் - Senna alata
மருத்துவப் பயன்கள்
இதன் இலைகள் அதிகமாக, முறைப்படி மருத்துவத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. தோல் மற்றும் இரத்த அழுத்த நோய்கள் தீரப் பயன்படுகிறது. இலைகளில் தடுப்பு சக்தி இருப்பதால் சோப்பு, முகப்பூச்சாகவும் பிலிப்பைன்சில் பயன்படுத்துகிறார்கள். இதனுடைய தண்டின் பட்டை, இருபாலரின் இனப்பெருக்க மண்டல நோய்களைத் தீர்க்கவும் பயனாகிறது. மலக் கழிவைக் குணப்படுத்தும் மருந்திலும் பயனாகிறது.
இதன் பூக்களை நீரில் இட்டு, பின்னர் அதனைக் காய்ச்சி உண்டு வர சிறுநீரகத் தொந்தரவுகள் நீங்குமென சித்த மருத்துவம் கூறுகிறது.
பெயர் - கற்பூரவல்லி பூ
ஆங்கிலப் பெயர் - Coleus amboinicus
தவராவியல் பெயர் - Coleus amboinicus
மருத்துவப் பயன்கள்
குழந்தைகளுக்கு சளியை வெளியேற்ற பயன்படுகிறது. இது குளிர் காய்ச்சல், இருமல், மார்பு நெரிசல் மற்றும் அஜீரணம் குணப்படுத்த பாரம்பரிய மருத்துவத்தில் ஒன்றாகும்.
பெயர் - சடச்சி பூ
ஆங்கிலப் பெயர் - Grewia damine
தவராவியல் பெயர் - Grewia damine
மருத்துவப் பயன்கள்
இதன் பட்டை மற்றும் வேர்கள் எலும்பு முறிவு, வயிற்றுப்போக்கு மற்றும் தோல் நோய்களுக்கு மருந்து தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
பெயர் - தடச்சி பூ
ஆங்கிலப் பெயர் - Phalsa, Falsa
தவராவியல் பெயர் - Grewia asiatica
மருத்துவப் பயன்கள்
இதன் பழங்கள் உண்ணத்தக்கது. அது குளிர்ச்சியைத்தரும் தன்மையும், பசியைத் தூண்டுகிற தன்மையும் கொண்டுள்ளது. சீரண சக்தியை அதிகரிக்கிறது. பழம் தாகத்தை தணிக்கும். உடல் எரிச்சலை குணப்படுத்தும்.
பித்த மயக்கத்தைப் போக்கும். வீக்கங்களைக் குணப்படுத்தும். இருதயம், இரத்தம் ஆகியவற்றில் உண்டாகும் கோளாறுகளை நீக்கும். தொண்டை நோய்களுக்கு இது நல்லது. விக்கலை போக்கும். வயிற்றுப் போக்குக்கு நல்ல மருந்தாகும்.
பெயர் - நிலச்சுருங்கி
ஆங்கிலப் பெயர் - Little tree plant, Mukkutti (Malayalam)
தவராவியல் பெயர் - Biophytum sensitivum
மருத்துவப் பயன்கள்
இதன் சாறுகள் பாரம்பரியமாக பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு, காயம்-குணப்படுத்துதல், நீரிழிவு எதிர்ப்பு சக்தி கொண்டவை என்று நம்பப்படுகிறது.
பெயர் - நேத்திரப்பூண்டு
ஆங்கிலப் பெயர் - Blepharis
தவராவியல் பெயர் - Blepharis
மருத்துவப் பயன்கள்
இது கண்பார்வை கோளாறு, சைனஸ் போன்ற பிரச்சனைகளை குணப்படுத்தும் தன்மையுடையது.
நன்றிகள் :
Redmi 3S, Redmi Note 7S - புகைப்படங்களுக்கு
Wikipedia, Google - பல்வேறு தகவல்களுக்கு
இப்பதிவை பார்வையிடும் உங்களுக்கு…
பிற பதிவுகளை பார்க்க
மலர் மாலை
Comments
Post a Comment