முந்தைய பதிவுகளை படிக்க...
அற்புத அணி - 1 தோல்வியறியா அணி
அற்புத அணி - 2 வெற்றி பயணம்
அடுத்த பயணம் (சாய்ராம் அணி 2.0)
ஒன்பதாம் வகுப்பு முடிந்தது. பத்தாம் வகுப்பு பொது தேர்வு என்பதால் இந்த ஆண்டில் (1997-98) நாங்கள் விளையாடிய ஆட்டங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவே… அதிலும் சென்ற ஆண்டை போல இல்லாமல் பல தோல்விகளையும் (67%), ஒரு சில வெற்றிகளையும் (33%) பெற்றது ராமகிருஷ்ணா பள்ளியின் 10B வகுப்பு சாய்ராம் அணி.
ஒரு வழியாக பள்ளியின் இறுதி தேர்வுகள் முடிய, வகுப்பில் எதிரியாய் உலா வந்த இரு அணிகளுக்குமான தொடர்பு, அலைபேசி இல்லாத அந்த காலத்தில் அறுந்துப் போனது. ஆனால் அதுவே அந்த அணிகள் புதுப் பரிணாமம் பெற காரணமாய் அமைந்தது. ஆம்! சாய்ராம் டியூஷனில் அருகில் உள்ள வள்ளியம்மாள் தோட்டத்தில் இருந்த பெரும்பாலான மாணவர்கள் படித்து வந்தனர். அவர்களில் சிலர் வள்ளியம்மாள் தோட்ட பிரதான அணியிலும் விளையாடி வந்தனர். ராமகிருஷ்ணா பள்ளி மாணவர்கள் சிவா, தீனா, பாலாஜி போன்ற ஒப்பற்ற வீரர்கள் எல்லாம் ஓய்வு பெற்று கோடை விடுமுறையில் வேலைக்கு செல்ல, சாய்ராம் டியூஷனில் படித்த வள்ளியம்மாள் தோட்ட சிறுவர்களும், ராமகிருஷ்ணா பள்ளி மாணவர்களும் இணைந்து புதிய சாய்ராம் அணியை கட்டமைத்தனர்.
புதிய வீரர்கள்
ஆனந்த்
சிறுவன் என்றாலும் வள்ளியம்மாள் தோட்டத்தின் பெரியவர்கள் ஆடும் பிரதான அணியில் முக்கிய இடம் பெற்ற ஆனந்த், அற்புதமான ஆட்டக்காரன். படிப்பைப் போலவே விளையாட்டிலும் கில்லி. சுருக்கமாக சொன்னால் சாய்ராம் டியூஷன் சச்சின். விரிவாக சொன்னால் வள்ளியம்மாள் தோட்டத்தின் விராட் கோலி. எதிரணி மலைப் போல ரன்கள் எடுத்தாலும் சற்றும் நிதானம் தவறாமல் ஆடுபவன். நன்றாக பந்தும் வீசுவான்.
பேட்டிங் - மிக அருமை பௌலிங் - நன்று பீல்டிங் - சிறப்பு சிறப்பு - பொறுமை
பாபு
பாபு, ஆனந்தின் தம்பி. வயதில் சிறியவன் என்றாலும் ஓரளவு நன்றாகவே ஆடுவான். துடிப்பான வீரன். மிடில் ஆர்டர் அல்லது லோயர் ஆர்டரில் ஆடுவான். நன்றாக ஆடுபவர்களுக்கு பார்ட்னெர்ஷிப் தருவான்.
பேட்டிங் - அருமை பீல்டிங் - சுமார் சிறப்பு - நல்ல பார்ட்னெர்ஷிப்
ராமு மற்றும் கார்த்திக்
ஆல்ரவுண்டர்களான இருவரும் அணியின் ஓப்பனர்கள். நன்றாக ஆடுபவர்கள். மித வேக மற்றும் சூழல் பந்து வீச்சாளர்கள்.
பேட்டிங் - அருமை பௌலிங் - அருமை பீல்டிங் - நன்று
அருண்
அருண் அவ்வப்போது மைதானத்திற்கு வருவான். ஓரிரு ரன்களை எடுப்பான்.
வடிவேல்
மேற்கு மாம்பலம் பிருந்தாவனம் தெருவை சேர்ந்த வடிவேல் சாய்ராம் அணியின் கீப்பர். ஓரளவு நன்றாக பேட்டிங் செய்வான்.
தினமும் காலையில் 8 மணிக்கு குளிக்காமல் கொள்ளாமல் வீட்டை விட்டு கிளம்புதல், கோடை வெப்பத்தை சற்றும் பொருட்படுத்தாமல் பசி என்பதையே மறந்து மாலை 3-4 மணிவரை மைதானத்தில் காய்தல். வீடு திரும்பும் போது கோடம்பாக்கம் ஐந்து விளக்கு அருகே இக்ளூவில் (igloo) இரண்டு ரூபாய் ஐஸ்கிரீம் சாப்பிடுதல் என சாய்ராம் அணியின் அடுத்தகட்ட பயணம் சிறப்பாக இருந்தது.. தினமும் பெட் (bet) மேட்ச் போட எதிரணி தேடி அலைந்தோம். எதிரணி கிடைக்காதபோது எங்களுக்குள் இரண்டாக பிரிந்து சோமசுந்தரம் பார்க் சிமெண்ட் பிட்சில் விளையாடினோம்.
புதிய வீரர்கள் இணைந்த பின் பாஸ்கரின் கேப்டன் பதவி பறிபோனது. அணியின் ஸ்பான்ஸர் ஆப்சைடு வெங்கடேசன் தானே அந்த பதவியை ஏற்றுக்கொண்டான். அணி ஜெயிக்கும் போதெல்லாம் (சில சமயம் தோற்றாலும்) லெமன் ஜூஸும், இரண்டு ரூபாய் ஐஸ்கிரீமும் வாங்கி தந்து தனது பதவியை சிறப்பாக செய்தான்.
பதவி பறிபோனாலும் சற்றும் கலங்காமல் தனது பணியை செவ்வனே செய்தான் பழைய கேப்டன் பாஸ்கர். ஆம்! சில சமயம் வீரர்கள் அதிகம் இருக்கும் போது அணியில் இடம் கிடைக்காமல் போனாலும் மைதானத்தையே சுற்றி சுற்றி வந்து, எல்லைக்கோடு அருகே பந்துகளை பொறுக்கி போட்டு, ஸ்கோர்போர்டு கணக்குகளை எழுதி தனது பொன்னான காலங்களை கழித்தான். சிலநேரம் அனைவரும் மைதானத்தின் நடுவே கிரிக்கெட் விளையாடி கொண்டிருக்கும்போது மைதானத்தின் ஓரமாக செஸ் (Chess) போர்டு வைத்து விளையாடவும் ஆரம்பித்தான்.
குறிப்பிட்ட ஒரே அணிக்கு எதிராக மட்டும் விளையாடாமல், ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அணிகளுடன் மோதி, பல வித அனுபவங்களையும், சில சோதனைகளையும் எதிர்கொண்டு, பற்பல சாதனைகளை (Records) படைத்தது சாய்ராம் அணி. குறிப்பாக ஒரு ஆட்டத்தில் ஆனந்த் (75) மற்றும் பாபு (36) இணைந்து முதல் விக்கெட்டுக்கு 114 ரன்கள் குவித்தது, பரிட்சார்த்த முறையில் ஆனந்துடன் இணைந்து ஆட தெரியாத பாஸ்கரை களமிறக்கியது, யாருமே அடிக்க முடியாத ஒரு போட்டியில் பாஸ்கர் மட்டும் முதல் பந்திலேயே பௌண்டரி அடித்து அதிர்ச்சி அளித்தது என பல நினைவுகள் நிரம்பிய நாட்களை கடந்து வீர நடை போட்ட பின்புதான் அந்த நாள் மீண்டும் வந்தது.
ஆம்! எங்கள் பரம எதிரியான RBTயுடன் மீண்டும் மோதும் வாய்ப்பே அது…
மீண்டும் சாய்ராம் vs RBT
வெகுநாட்களுக்கு பிறகு மைதானத்தில் எதிர்பாராமல் சந்தித்த நண்பர்கள் மூலம் மீண்டும் சாய்ராம் 2.0 மற்றும் RBT அணிக்குமான போட்டி தீர்மானிக்கப்பட்டது. ஞாயிற்றுக் கிழமை நடக்கும் போட்டி என்பதால் வள்ளியம்மாள் தோட்ட சீனியர் அணியில் இருந்தும் ஓரிரு வீரர்களை களமிறக்கினோம். மிக முக்கியமான போட்டி என்பதால் ஏற்கனவே நாங்கள் அவர்களுடன் விளையாடிய அனுபவங்களை எல்லாம் அவர்களுடன் பகிர்ந்து கொண்டோம். ஆனால் எங்களை விட பலமடங்கு பலம் பொருந்திய அணியாக களமிறங்கிய RBTன் கணக்குகளை நாங்கள் அப்போது அறியவில்லை. குறிப்பாக சாய்ராம் அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரன் சுழல் செந்தில் RBTயின் சார்பாக களமிறங்கியது கண்டு அதிர்ந்து போனோம்.
டாஸ் ஜெயித்த RBTஅணி வழக்கம் போல பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. என்னதான் புதிய வீரர்கள் களம் கண்டாலும், எதிர்பார்த்த சிலர் வராததால் இந்த முக்கிய ஆட்டத்தில் பாஸ்கருக்கும் இடம் கிடைத்தது அதிசயமே... வெகுநாட்களுக்கு பிறகு தீனாவும் களம் கண்டான்.
ஆட்டம் முதல் ஒவரிலேயே சூடு பிடித்தது. ஷார்ட் லெக் (Short leg) திசையில் வேகமாக ஓங்கி அடிக்கப்பட்ட ஒரு பந்தை தடுக்க முடியாமல் பயந்து குனிந்த பாஸ்கர், அடுத்த பந்தை எதிர்பாராமல் பிடித்து RBTன் முதல் விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமானான். 14 ஒவர்கள் கொண்ட ஆட்டத்தில் முதல் ஒவரிலேயே விக்கெட்டை வீழ்த்தியதால் உற்சாகமான சாய்ராம் அணியின் மகிழ்ச்சியை சிதைக்க அடுத்ததாக களமிறங்கனான் அபாயகரமான சுரேஷ்.
RBTன் முன்னாள் மாணவனும், மாநில அளவில் பல்வேறு போட்டிகளில் விளையாடியவனுமான சுரேஷ், சாய்ராம் அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்ய துவங்கினான். அவன் அடித்த பந்து ஒன்று மிகப்பெரிய சோமசுந்தரம் மைதானம் மற்றும் அதன் ஓரம் உள்ள சாலையை கடந்து அருகில் உள்ள வீட்டில் தஞ்சம் புகுந்து அவன் திறமையை பறைசாற்றியது. அடுத்த வீசப்பட்ட மூன்று ஒவர்களில் பல பந்துகள் பௌண்டரிக்கும் சிக்ஸருக்கும் பறக்க, அவனை யாரும் கட்டுப்படுத்த முடியாத நிலையில்தான் கை கொடுத்தான் தீனா…
ஆம்! முதல் இரண்டு பந்துகள் அடித்து நொறுக்கப்பட்டாலும், அடுத்து வீசிய மெதுவான பந்தில் (Slow ball) சுரேசை அவுட்டாக்கி அணியின் ஆபத்பாந்தாவனாக மாறி, தான் எப்போதும் கேம்சேஞ்சர்தான் என நிரூபித்தான் தீனா. அதன் பிறகு சீட்டுக்கட்டு போல விக்கெட்டுகள் சரிய ஆரம்பித்தாலும் கடைசி ஓவர் வரை தாக்கு பிடித்து 130 ரன்களுக்கு மேல் எடுத்தது RBT. பீல்டிங் பற்றி அறியாத பாஸ்கர் மட்டுமே 3 கேட்ச்கள் பிடித்து எட்டாவது அதிசயமாய் மாறினான்.
சவாலான இலக்கை நோக்கி, நிதானமாக துவங்கிய சாய்ராம் அணியின் ஆட்டம் இரண்டாம் ஒவரிலேயே தடைபட்டது. ஆம்! ஒரு நோபால் சர்ச்சையில் வழக்கம் போல வார்த்தை போர் துவங்கியது. நல்லவேளையாக அது கைகலப்புக்கு சற்று முன்பாக தடுக்கப்பட்டது என்றாலும் ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
ஒருவேளை ஆட்டம் தொடர்ந்திருந்தால் சாய்ராம் அணி வென்றிருக்குமா?
,
,
,
,
,
,
,
,
அதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்.
பள்ளிப்படிப்பு முடிந்ததும் அணிகள் கலைந்து விட்டன. காலங்கள் மாறியதும், மைதானத்தில் ஆடிய கிரிக்கெட், தொலைக்காட்சி பெட்டிக்குள் சுருங்கி போனது. கிரிக்கெட்டும் ஒருநாள் போட்டியில் இருந்து டி20, ஐபிஎல் என பல பரிணாமங்களை கடந்து விட்டது. இருந்தபோதும் எங்கள் அற்புத அணியே என்றென்றும் என் நெஞ்சில் நிறைந்துள்ளது.
முற்றும்.
பிற பதிவுகளை பார்க்க / படிக்க...
Comments
Post a Comment