தோல்வியறியா அணி
கிரிக்கெட்டையும் ஒரு மதமாய் கருதும் இந்தியாவில், உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இன்னும் சில தினங்களில் துவங்க இருக்கிறது. ரசிகர்கள் அனைவரும் அவரவருக்கு பிடித்த வீரர்கள் மற்றும் அணிகளின் ஆட்டங்களை கண்டுகளிக்க ஆயத்தமாக உள்ளனர். ரசிகர்கள் தங்களது கிரிக்கெட் அனுபவங்களையும், தாங்கள் ஏற்கனவே பார்த்து ரசித்த பரபரப்பான போட்டிகளையும், தங்களுக்கு பிடித்த அணிகளின் சிறந்த தருணங்களையும் அசை போடும் இத்தகைய நேரத்தில் எனது மனதில் என்றென்றும் நிலைத்திருக்கும் ஒரு அற்புத அணியின் கிரிக்கெட் பயணத்தின் சுருக்கமே இப்பதிவு.
பொதுவாக நம் வாழ்வைப் போலவே விளையாட்டிலும் வெற்றியும் தோல்வியும் மாறிமாறி வரும். ஒவ்வொரு அணியும் பல்வேறு சோதனைகளையும், சாதனைகளையும் எதிர்கொள்ளும். ஆனால் ஒரு குறிப்பிட்ட அணி மட்டும் ஓராண்டு காலம் முழுவதும் தோல்வி என்பதையே அறியாமல் வெறும் வெற்றிகளை மட்டுமே சுவைதுள்ளது. நெருங்கி வந்த தோல்விகளையும் பலமுறை தடுத்துள்ளது. தங்களுக்குள்ளேயே பலவித சவால்கள் இருந்தாலும், அவற்றையெல்லாம் கடந்து வெற்றிவாகை சூடியுள்ளது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?
அப்படிப்பட்ட நம்ப இயலாத சாதனையை படைத்த, ஆண்டு முழுவதும் தோல்வியே காணாத கனவு அணி,
ஆஸ்திரேலியா அல்ல…
மும்பை இந்தியன்ஸோ அல்லது
சென்னை சூப்பர் கிங்ஸோ அல்ல…
ஏன் நமது இந்தியாவும் அல்ல…
அது சென்னை தியாகராய நகரில் இருந்த ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு “பி” பிரிவில் இருந்த சாய்ராம் அணி. அந்த அற்புத அணியின் வீரர்கள் மற்றும் ஒரு சில முக்கிய ஆட்டங்கள் குறித்த பதிவுகளே இக்கட்டுரை.
பொதுவாக எல்லா வகுப்புகளிலும் உள்ளதை போலவே எங்கள் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பிலும் இரண்டு குழுக்கள் இருந்தன. அவை எப்போதும் இந்தியா - பாகிஸ்தான் போலவே ஒன்றை ஒன்று எதிர்த்து வந்தன. படிப்பு, விளையாட்டு என எதிலும் எப்போதும் ஒருங்கிணையாமல் போட்டியும், பொறாமையும் நிறைந்த அந்த காலகட்டத்தில் தான் இந்தியாவில் உலகக்கோப்பை (1996) ஜூரம் பரவியது. சச்சினின் தனிமனித போராட்டமும், ஜெயசூர்யாவின் ஸ்ப்ரிங் பேட் (Spring bat) சர்ச்சையும் எங்கெங்கும் பேசுபொருளாய் மாறியது. குறிப்பாக போட்டி நிறைந்த மாணவர்களான எங்களிடம் அதன் தாக்கம் அதிகரித்து, ஏற்கனவே இரு குழுவாக இருந்த வகுப்பில் இரு அணிகள் உதயமாகின. அதில் ஒன்றே சாய்ராம் டியூசன் அணி. ஆம்! அணியின் பெரும்பாலான வீரர்கள் பிற்காலத்தில் சாய்ராம் டியூசன் எனப்படும் இலவச டியூசன் சென்டரில் படித்ததால் அப்பெயர் உருவானது. முதலில் அதிலிருந்த வீரர்களை பற்றிய சிறு குறிப்பு.
1. ஆப்சைடு வெங்கடேசன்
வெங்கடேசன் அணியின் ஸ்பான்ஸரும் கூட... ஒவ்வொரு போட்டிக்கும் ஐந்து ரூபாய் பந்தயம் கட்டுபவன். பெரும்பாலும் ஆட்டங்கள் எங்கு, எப்போது நடைபெற வேண்டும் என தீர்மானிப்பவன். குறிப்பாக தி.நகர் சோமசுந்தரம் பார்க்கில் விளையாடும் போது அணி வெற்றி பெற்றால் அனைவருக்கும் நிச்சயம் லெமன் ஜூஸ் வாங்கி தருபவன். சுருக்கமாக சொன்னால் அணியின் தல…
அப்பேற்பட்ட வெங்கடேசனே சாய்ராம் அணியின் ஒபனிங் பேட்ஸ்மேன். லெக்சைடில் வரும் பந்தையும் ஆப்சைடில் அசால்டாக அடிப்பவன். ஆப்சைடில் இவனுக்கு பந்து வீசினால் பவுண்டரி நிச்சயம் உண்டு. அவ்வபோது பந்தும் வீசுவான்.
பேட்டிங் - அருமை, பௌலிங் - சுமார்
பீல்டிங் - மிக அருமை. லாங் ஆன் திசையில் அடித்தால் கேட்ச் நிச்சயம்
சிறப்பு - ஆப்சைடு பேட்டிங், அணியின் ஸ்பான்ஸர், நல்ல பீல்டர்.
2. ரோஷக்கார சிவா
ரோஷக்கார சிவா, வெங்கடேசனுடன் இணைந்து ஆட்டத்தை துவக்குபவன். இவனுக்கு பேட்டிங் ஓரளவு வரும் ஆனால் கோவம் மட்டும் பொசுக்கென உடனே வரும். சில சமயம் விளையாட்டு, மோதலாக மாறும் தருணங்களில் அணியின் ஆட்டநாயகனாக திகழ்ந்து, பல்வேறு ஆட்டங்களை சிறப்பாக (¡) முடித்து வைத்ததில் இவனுக்கு குறிப்பிட்ட பங்கு உண்டு.
முன்னும் பின்னுமாய் இரண்டுமுறை கைகளை சுற்றி சற்று வித்தியாசமாக பந்து வீசுவான். பந்து எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பிலேயே சில சமயம் எதிரணி பேட்ஸ்மேன்கள் அவுட் ஆவதுண்டு.
பேட்டிங் - சுமார், பௌலிங் - மிகவும் சுமார்
பீல்டிங் - பரவாயில்லை
சிறப்பு - வித்தியாசமான பௌலிங், கோவம்.
3. சுழல் செந்தில்
இவன் அணியின் ஒன் டௌன் பேட்ஸ்மேன். மிகவும் நம்பிக்கையான ஆட்டக்காரன். எப்போதாவது சிக்ஸர் அடிப்பவன். பேட்டிங் மட்டுமின்றி பௌலிங்கும் செய்யும் ஆல்ரவுண்டர். பெரும்பாலும் இரண்டாம் ஓவர் வீசுபவன். மீடியம் பேஸ், ஸ்பின் என இரண்டும் போடுவான். எதிரணி தனது வேகப்பந்தை வெளுத்து வாங்கினால் உடனடியாக சுழல் பந்திற்கு மாறிவிடுவான்.
அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகிப்பவன் என்றாலும் எல்லா போட்டியிலும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்துவதால் பெரும்பாலும் தனித்து தெரிய மாட்டான். அணியின் நம்பிக்கை நட்சத்திரம்.
பேட்டிங், பௌலிங் - அருமை
பீல்டிங் - மிக அருமை
சிறப்பு - நிதானம், நம்பகத்தன்மை (Consistency)
4. கேம் சேன்ஜர் தீனா
துடுக்குத்தனம் நிறைந்த தீனா ஓரளவு பேட்டிங் செய்வான். செந்திலுடன் இணைந்து இவனது பார்ட்னெர்ஷிப் நன்றாக இருக்கும். ஆல்ரவுண்டரான இவன் நன்றாக பந்து வீசுவான் என்றாலும் சில சமயங்களில் எதிரணி இவனது பந்துகளை வெளுத்து வாங்கிவிடும். இருந்தபோதும் பல அதிரடி வீரர்களை எதிர்பாரா நேரத்தில் அவுட் ஆக்கி ஆட்டத்தை திசை திருப்புபவன். இவனும் சிவாவும் ஒன்று சேர்ந்தால் கலாட்டா நிச்சயம் என்பதால் இவர்களை பிரித்து வைப்பது அணிக்கு நன்மை பயக்கும்.
பேட்டிங், பௌலிங் - நன்று
பீல்டிங் - நன்று
சிறப்பு - Game changer
5. குள்ள செந்தில்
இரண்டு செந்தில்கள் உள்ளதால் இவன் குள்ள செந்தில். அணியின் வேகப்பந்து வீச்சாளர். மூன்றடி உயரமே உள்ள இவன் வீசும் பந்துகள் பெரும்பாலும் அரை அடி மட்டுமே எழும்பும் என்பதால் கணித்து ஆடுவது கடினம். ஓரளவு நன்றாக பேட்டிங் செய்வான்
பேட்டிங் - நன்று
பௌலிங் - மிகவும் நன்று
பீல்டிங் - நன்று
சிறப்பு - வேகப்பந்து
6. சிங்கள் பாலாஜி
அணியின் உயரமான ஆட்டக்காரன். ஆனால் பெரும்பாலும் சிங்கிளை தவிர எதுவும் எடுக்க மாட்டான். சிறப்பாக விளையாடும் ஆட்டக்காரர்களுக்கு ஓரளவு பார்ட்னர்ஷிப் தருவான். சில சமயம் வீரர்கள் குறைவாக இருக்கும் தருணத்தில் ஜோக்கராக இரு அணிகளிலும் ஆடுவான். அணியின் விக்கெட்கீப்பர் என்றாலும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு கேட்ச் எதுவும் பிடிக்க மாட்டான்.
பேட்டிங் - சிங்கள் மட்டும்
பௌலிங் - வராது
பீல்டிங் - சுமார்
சிறப்பு - பொறுமை
7. கேப்டன் பாஸ்கர்
இந்த வெற்றி அணியின் கேப்டன் இவனே… பெரும்பாலும் முதல் பந்திலேயே அவுட் ஆகிவிடுவான். ஒரு சில ஆட்டங்களில் 2-3 பந்துகள். அதில் ஒன்றை கூட இவன் பேட்டில் படுமாறு பௌலர்களால் போட முடியாது. ஆம்! அவ்வளவு ஆச்சாரமாக பந்தை அடிக்காமல் விளையாடுவதில் இவன் கில்லாடி. எதிரே நன்றாக ஆடிக்கொண்டிருக்கும் தனது அணி வீரர்களே இவனது ஆட்டத்தில் மயங்கி ஆட்டமிழக்கும் வாய்ப்பு உள்ளது என்பதால் பேட்டிங்கில் இவனை இறங்கவிடாமல் செய்வதில் தான் அணியின் வெற்றி அடங்கி உள்ளது.
இவன் கேப்டன் ஆனதிற்கு பின்னால் ஒரு பெரும் கதை உள்ளது. நியாயப்படி வெங்கடேசன் தான் கேப்டனாக இருக்க வேண்டியவன். நன்றாக ஆடுபவன். அவனே அணியின் ஸ்பான்ஸரும் கூட… இவ்வளவு இருந்தும் இவன் அணியின் செல்ல பிள்ளை, இவன் சொல்லும் வார்த்தைகளை அனைவரும் கேட்பார்கள் என்ற ஒரே காரணத்தால் அணியின் கேப்டனாக, மன்னிக்கவும் மானேஜராக விளங்குபவன். குறிப்பாக அடங்காத காளையாக சுற்றிவரும் சிவா கூட இவன் சொன்னால் ஒரு சில நேரங்களில் அடங்கி விடுவான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
பேட்டிங் - வராது
பௌலிங் - சுத்தமா வராது
பீல்டிங் - அப்படின்னா என்ன ?
சிறப்பு - டீம் மேனேஜர், ஸ்கோர்போர்டு கண்ட்ரோலர், டாஸ் ஸ்பெஸலிஸ்ட் (80% சக்ஸஸ்). குறிப்பாக முக்கியமான மேட்சுகளில் நிச்சயம் டாஸ் வென்று விடுவான்.
எதிரணி - RBT
எதிரணி என்பதை விட சாய்ராம் டியூசனின் எதிரி அணி என்பதே பிரபாகரன் தலைமையிலான RBT அணிக்கு நிச்சயம் பொருந்தும். இரு அணிகளுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் தான். இந்த அணியில் உள்ள பெரும்பான்மையான வீரர்கள் RBT எனப்படும் டுடோரியலில் படித்ததால் அதுவே அணியின் பெயராக பிற்காலத்தில் மாறியது.
ஆல்ரவுண்டர் கேப்டன் பிரபாகரன், அதிரடி வீரன் செல்வகுமார், தீரன் ராஜாமணி, சதீஷ், காந்தராவ் என பல நட்சத்திர வீரர்கள் நிறைந்த அணி. பேட்டிங், பௌலிங், பீல்டிங் என அனைத்திலும் சாய்ராம் அணியை விட பல மடங்கு தரமான அணி. அவ்வளவு இருந்த போதும் அவ்வப்போது கோபத்திலும், சில சமயம் பதட்டத்தில் எடுக்கும் சில தவறான முடிவுகளாலும், பல சமயங்களில் துரதிர்ஷ்டதாலும் தோல்வியை தழுவது இந்த அணியின் சாபம்.
இந்த அணியின் அளவுகடந்த கோபம் சில சமயம் மைதானத்திற்கு வெளியேவும் தொடரும். குறிப்பிட்ட வீரர்கள் தவிர அவ்வப்போது மைதானத்திற்கு வரும் ஓரிருவர் இரு அணிகளிலும் இணைந்து விளையாடுவது உண்டு என்றபோதும் சாய்ராம் அணியில் ஒருமுறை விளையாடியவர்களுக்கு RBTல் வாய்ப்பு கிடைப்பது கடினமே… அவ்வளவு ரோசமான அணி இது.
இப்படி சார்பட்டா - இடியாப்ப பரம்பரை போல எதிரும் புதிருமான இரு அணிகளும் மோதிக் கொண்ட சில பரபரப்பான ஆட்டங்கள்…
தொடரும்…
Comments
Post a Comment