முந்தைய பதிவை படிக்க...
அற்புத அணி - 1 தோல்வியறியா அணி
வெற்றி பயணம்
ஆட்டம் 1
இடம்: சோமசுந்தர மைதானம்
விதிகள்: அணிக்கு 8 வீரர்கள், தலா 8 ஒவர்கள்
டாஸ் வெற்றி - சாய்ராம் அணி, முதலில் பேட்டிங்
இரு அணிகளும் உதயமான பிறகு நடந்த முதல் ஆட்டம். எதிரணியின் பலம் மற்றும் பலவீனம் எதுவென தெரியாமல் நடந்த ஒன்று என்பதால் என்றென்றும் நினைவில் உள்ள ஆட்டம் இது.
போட்டியின் முதல் இரண்டு ஒவர்களில் RBT அணியின் கையே ஓங்கியிருந்தது. அவர்களின் கட்டுக்கோப்பான பௌலிங்கிலில் ஆளானப்பட்ட வெங்கடேசே பந்துகளை பார்த்து தேர்ந்தேடுத்து சிங்கள்தான் அடிக்க முடிந்தது, அணியின் ரன்ரேட் ஆமை வேகத்தில் இருந்தது. மூன்றாவது ஓவர் முடிவில் ஒரு விக்கெட் (சிவா) இழப்பிற்கு வெறும் 9 ரன்களே எடுக்க, வேறு வழியின்றி லெக்சைடில் வந்த இரண்டு பந்துகளை, தனது ஸ்டைலில் ஆஃப்சைடில் பௌண்டரிகளாக மாற்றிய பின் அவுட் ஆனான் ஆப்சைடு வெங்கடேசன் (4 ஓவர்களில் 17/2).
துவக்கமே தோல்வியை நோக்கி சென்ற நிலையில் களம் இறங்கிய சூழல் செந்திலுக்கு, தீனா கைகொடுக்க, ரன்ரேட் மெதுவாக உயர்ந்தது. இரு பௌண்டரி மற்றும் ஒரு சிக்ஸருடன் செந்திலும் (17 ரன்) அவுட்டாக, ஒருவழியாக தட்டுத்தடுமாறி எட்டு ஓவர்களில் 47/5 என்ற ஓரளவு கௌரவமான ஸ்கோரை அடைந்தது சாய்ராம் அணி.
ஒவருக்கு ஆறு ரன்கள் மட்டுமே என்ற எளிதான இலக்குடன், பல அதிரடி ஆட்டக்காரர்கள் நிரம்பிய RBT களமிறங்கியது. அதிரடி வீரன் செல்வகுமாருடன், தீரன் ராஜாமணியும் கைகொடுக்க அணியின் ஸ்கோர் 3 ஓவர்களில் 26/0. கைவசம் அனைத்து விக்கெட்டுகளும் இருக்க, தேவை 5 ஓவர்களில் வெறும் 21 மட்டுமே…
முதல் மூன்று ஓவர்கள் வெளுத்து வாங்கப்பட்ட நிலையில் நான்காவது ஓவரை வீச வந்த கேம் சேஞ்சர் தீனா, ஆட்டத்தை மாற்றினான். எளிதான ஒரு பந்தை பௌண்டரி அடித்த செல்வா, அடுத்த பந்தை சிக்ஸர் அடிக்க முயல, அது லாங் ஆனில் இருந்த வெங்கடேசனின் கைகளில் தஞ்சம் அடைந்தது. அடுத்த பந்தில் நன்றாக ஆடிக் கொண்டிருந்த ராஜாமணி பௌல்டாக, ஒரே ஓவரில் இரட்டை அடி விழுந்தது (4 ஓவர்களில் 31/2). தேவை 4 ஓவர்களில் 16.
தீனா ஏற்படுத்தி தந்த வாய்ப்பை அச்சு பிசகாமல் பயன்படுத்தினர் குள்ள செந்திலும், சூழல் செந்திலும்… குறிப்பாக பந்தை அதிகம் எழுப்பாமல் குள்ள செந்தில் வீசிய இரண்டு ஓவர்களில் 3 ரன்கள் மட்டுமே, ஆனால் 2 விக்கெட்டுகள். மறுபுறம் மிதவேகத்தில் இருந்து சுழலுக்கு மாறிய மற்றொரு செந்தில் தனது ஓவரில் 6 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்த 7 ஓவர் முடிவில் 40/5. தேவை 1 ஓவரில் 8 ரன்கள். கைவசம் 2 விக்கெட்டுகள்
குள்ள செந்தில், சூழல் செந்தில், தீனா ஆகியோர் தங்கள் 2 ஓவர்களை முடித்த நிலையில் கடைசி ஓவரை வீச வேறு வழியின்றி சிவாவை அழைத்தான் பாஸ்கர். முதல் பந்தில் ரன் ஏதுமில்லை. அடுத்த பந்தில் 2 ரன்கள். பௌண்டரி நோக்கி சென்ற மூன்றாம் பந்தை அற்புதமாய் தடுத்தான் சுழல் செந்தில். அதில் 2 ரன்கள்.
கடைசி 3 பந்துகளில் 4 ரன்கள் தேவை என்ற நிலையில் எட்ஜ் ஆகி, கைமேல் வந்த கேட்சை தவறவிட்டு டென்ஷன் ஏற்றினான் பீல்டிங் புயல் கேப்டன் பாஸ்கர். அந்த பந்தில் ஒரு ரன்.
2 பந்தில் 3 ரன் தேவை என்ற நிலையில்தான் அந்த அற்புத பந்தை வீசினான் சிவா. கைகளை இருமுறை சுற்றி அவன் வீசிய பந்தை தவறாக கணித்த சதீஷ் பௌல்டாக…
கடைசி பந்தில் 3 ரன்கள் என்ற நிலையில் அதை எதிர் கொண்ட RBT கேப்டன் பிரபாகரன், லாங் ஆன் திசையில் தூக்கி அடிக்க… அது வெங்கடேசனின் கையில் தஞ்சமடைந்தது. சாய்ராம் அணியும் தனது முதல் வெற்றியை சுவைத்தது.
ஆட்டம் 2
முதல் வெற்றிக்கு பின் கிட்டதட்ட பதினோரு ஆட்டங்கள் தொடர் வெற்றியை பெற்று வீரநடை போட்டது சாய்ராம் அணி. சுமாராகவே ஆடியபோதும், அனைத்து ஆட்டங்களிலும் ஏதோ ஒரு தருணத்தில் நிகழும் மேஜிக் காரணமாக வெற்றியின் தேவதை அவர்கள் பக்கமே இருந்தாள். அப்போதுதான் காலாண்டு விடுமுறை முடிந்து, அடுத்த ஆட்டம் துவங்கியது. விடுமுறையில் RBT வீரர்கள் செய்த பயிற்சியின் பலன் மொத்தமாய் வெளிப்பட்டது.
இடம்: ராமகிருஷ்ணா பள்ளி மைதானம்
விதிகள்: அணிக்கு 10 வீரர்கள், தலா 10 ஒவர்கள்
டாஸ் வெற்றி - RBT அணி, முதலில் பேட்டிங்
துவக்க வீரன் செல்வகுமார் (35) ருத்ராதாண்டவம் ஆட, கேப்டன் பிரபாகரன் (22) கைகொடுக்க, பத்து ஓவர் முடிவில் 89/3. இது நிச்சயம் சாய்ராம் அணியால் கனவிலும் எட்ட இயலாத இலக்கு என்பதில் சந்தேகம் இல்லை.
வழக்கம் போல வெங்கடேசனும், குள்ள செந்திலும் ஓரளவு ஆடினாலும், ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிய, 5 ஓவர்களில் 36/5 என தடுமாறியது சாய்ராம் அணி. தேவை 5 ஓவர்களில் 54, கைவசம் 4 விக்கெட்டுகள்.
இக்கட்டான சூழலில் சுழல் செந்தில் ஒருபுறம் போராடிக் கொண்டிக்க, அவனுக்கு துணையாக களமிறக்கப்பட்டான் அணியின் கீப்பர் சிங்கிள் பாலாஜி. அவனும் தடவி தடவி ஓரிரு ரன்களாக எடுத்த போது தான் அந்த சம்பவம் நடந்தது.
RBTயின் கேப்டன் பிரபாகரன் வீசிய பந்தை அடிக்க முயலாமல், தடுக்க மட்டுமே முயன்ற பாலாஜியை ஏமாற்றி, பேட்டில் படாமல் கீப்பர் செல்வகுமாரிடம் தஞ்சமடைந்தது அந்த பந்து. ஆனால் அது பேட்டில் பட்டதாய் அப்பீல் செய்ய, அது நடுவர் (Umpire) குள்ள செந்திலால் நிராகரிக்கப்பட்டது. அப்போதெல்லாம் ஆட்கள் குறைவு என்பதால் பொதுவாக பேட்டிங் அணி வீரர்களே அம்பயரிங் பார்ப்பது வழக்கம்.
ஒரு கோவத்தில் செந்திலை பார்த்து பிரபாகரன் ஏதோ சொல்ல, ஆட்டத்தில் கலவரம் வெடித்தது. RBT சார்பில் ராஜாமணியும், சாய்ராம் சார்பில் சிவாவும் வார்த்தைகளால் மோதிக் கொள்ள, யாராலும் அந்த மோதலை தடுக்க முடியவில்லை. இறுதியாக பாஸ்கர் பஞ்சாயத்து செய்தும், அந்த தீர்ப்பை RBT ஏற்க மறுக்க, ஆட்டம் அப்படியே கைவிடப்பட்டது.
7.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து வெறும் 49 ரன்கள் மட்டுமே எடுத்து தள்ளாடிக் கொண்டிருந்த இருந்த சாய்ராம் அணி தனது முதல் தோல்வியில் இருந்து தப்பியது. ஆட்டம் முழுதாக நடந்திருந்தால் RBT நிச்சயம் வென்று இருக்கும். ஆனால் தனது தேவையற்ற கோவத்தின் காரணமாக கிடைத்த முதல் வாய்ப்பை தவறவிட்டது.
ஆட்டம் 3
ஏற்பட்ட அந்த மோதலுக்கு பின் சென்னை-28 ஷார்க்ஸ் மற்றும் ராயபுரம் ராக்கர்ஸ் போல, சாய்ராமும் RBTயும் எங்கு பார்த்தாலும் அடிக்கடி உரசிக்கொள்ள ஆரம்பித்தது. கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் இரு அணிகளும் மைதானத்தில் களம் இறங்காமல், வகுப்பறையில் தங்கள் பார்வைகளால் மோதிக் கொண்டன. ஏதோ ஒரு காரணத்தால் அன்றைய தினம் பள்ளிக்கு அரைநாள் விடுமுறை விடப்பட்டது. பெரும்பாலான மாணவர்கள் சென்ற பின் இரு அணிகளிலும் தலா 4 என மொத்தம் 8 பேர் மட்டுமே வகுப்பறையில் இருந்தோம். சில பல சமாதான முயற்சிகளுக்கு பிறகு பிரண்ட்லி மேட்ச் விளையாட முடிவு செய்து சோமசுந்தரம் மைதானம் நோக்கி சென்றோம். ஆனால் என்னதான் சமாதானம் செய்தாலும் எட்டு பேரும் ஒரே அணியாக விளையாட மனம் ஒப்பவில்லை. மேலும் மைதானத்திலும் வேறு அணிகள் ஏதும் இல்லாததால் அணிக்கு வெறும் 4 பேர் எனப் பிரிந்து மைதானத்தின் ஒரு ஓரமாக மோதிக்கொள்ள முடிவு செய்தோம். ஆட்கள் பற்றாக்குறையால் பேட்டிங் அணியிடமே கீப்பர் மற்றும் அம்பயரிங் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
டாஸ் வெற்றி - சாய்ராம் அணி, முதலில் பேட்டிங்
அணியின் ஸ்பான்சர் வெங்கடேசன் இல்லாததால் பாஸ்கர், தீனா, குள்ள செந்தில் மற்றும் சூழல் செந்தில் என நால்வர் மட்டுமே விளையாடிய முதல் இரண்டு ஆட்டங்களிலும் வழக்கம் போல வென்ற பின் அன்றைய இறுதி ஆட்டம் துவங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சாய்ராம் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
வழக்கமான ஒப்பனர்ஸ் இல்லாத நிலையில் களமிறங்கிய சூழல் செந்தில் முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து ‘டக்’ அவுட் ஆக, தீனா ஒரு ரன்னுக்கு போல்ட் ஆனான். அணியின் ஸ்கோர் 1 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுக்கு 1 ரன் மட்டுமே…
இப்போது குள்ள செந்திலும், கேப்டன் பாஸ்கரும் களத்தில் இருந்தனர். இதில் பாஸ்கரை நம்பி பயனில்லை என்பதால் முழுக்க முழுக்க குள்ள செந்திலை மட்டுமே நம்பியிருந்தது சாய்ராம் அணி. அவனும் முடிந்த அளவு பந்துகளை தடுத்தாடிய பின் பொறுமையிழந்து இரண்டாம் ஓவரின் ஐந்தாம் பந்தை ஓங்கி அடித்தான். பௌண்டரி செல்லவிருந்த பந்தை அற்புதமாய் தடுத்த RBT பிரபாகரன் துல்லியமாய் த்ரோ அடிக்க, இரண்டாம் ரன்னுக்கு ஆசைப்பட்ட குள்ள செந்தில் ரன் அவுட் ஆனான். ஸ்கோர் 2 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளுக்கு 2 ரன்கள் மட்டுமே...
இப்போதுதான் உண்மையான ஆட்டம் ஆரம்பம். மூன்றாம் ஓவரின் ஒரு பந்தை கூட பேட்டில் தொடாத பாஸ்கர், ஸ்டம்ப்பை நோக்கி வந்த ஓரிரு பந்துகளையும் தனது உடலில் வாங்கி அந்த ஓவரை மெய்டன் ஆக்கினான். ஆனால் யாருமே எதிர்பாராமல் நான்காம் ஓவரில் தனியொரு ஆளாய் இரண்டு சிங்கிள்கள் எடுத்த பின், அத்துடன் திருப்தி அடைந்து அவுட் ஆக, சாய்ராம் அணி வெறும் 4 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது.
முதல் ஓவரிலேயே ஆட்டம் முடிந்து விடும் என்ற நம்பிக்கையுடன் களமிறங்கியது RBT. சாய்ராம் தரப்பில் முதல் ஓவரை வீசிய குள்ள செந்தில் 2 ரன்களை விட்டுத் தந்தாலும் அரை அடிக்கு மேல் எழும்பாத தனது அற்புத பந்து வீச்சால் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினான் (ஒரு கேட்ச், ஒரு போல்ட்). ஸ்கோர் 1 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுக்கு 2 ரன்கள்.
அடுத்த ஓவரை வீச வந்தான் சூழல் செந்தில். அதில் ரிஸ்க் எதுவும் எடுக்க விரும்பாத பிரபாகரன் தான் எதிர்கொண்ட முதல் பந்தை அருகில் இருந்த பாஸ்கரிடம் தட்டிவிட்டு எளிதாக சிங்கள் எடுத்தான். வெற்றி பெற வெறும் இரண்டு ரன்களே தேவை என்ற நிலையில் செந்தில் வீசிய பந்தை அவனிடமே கேட்ச் தந்து வெளியேறினான் சதீஷ்.
இப்போது மொத்த ஆட்டமும் RBT கேப்டன் பிரபாகரன் கையில். அவனும் வழக்கம் போல பந்தை பாஸ்கர் பக்கம் தட்டிவிட்டு எளிதாக ரன் எடுக்க முயல, எதிர்பாராமல் எட்ஜ் ஆனது அந்த ஷார்ட் பிட்ச் பந்து. ஓரளவு உயரப் பறந்த பந்தை இந்த உலகமே எதிர்பாராத தருணத்தில், தன்னையறியாமல் கேட்ச் பிடித்தான் பாஸ்கர்.
வெறும் 4 ரன்களை சேஸ் செய்த RBT, 3 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 2 ரன்கள் மற்றும் ஒரு கேட்ச் பிடித்து சாய்ராம் அணியின் இந்த நம்ப முடியாத வெற்றிக்கு முக்கிய பங்காற்றினான் பாஸ்கர்.
ஆட்டம் 4
இப்படி நடைபெற்ற ஆட்டங்களில் எல்லாம் ஓரளவு திறமை மற்றும் ஏதோ ஒரு குருட்டு அதிர்ஷ்டம் மூலம் வென்ற சாய்ராம் அணிக்கு தோல்வி பயத்தை காட்டிய ஆட்டம் இது.
இடம்: ராமகிருஷ்ணா பள்ளியின் சின்ன மைதானம்
விதிகள்: அணிக்கு 8 வீரர்கள், தலா 8 ஒவர்கள்
டாஸ் வெற்றி - சாய்ராம் அணி, முதலில் பேட்டிங்
பள்ளியின் PET நேரத்தில் நடைபெற்ற ஆட்டம் இது என்பதால் பள்ளியின் பின்புறம் உள்ள பெரிய மைதானத்திற்கு செல்லாமல் கட்டிடங்கள் நடுவே இருந்த சிறிய மைதானத்தில் ஆட்டம் துவங்கியது. பௌண்டரி லைன் மிகவும் சிறியது என்பதால் டாஸ் வென்ற சாய்ராம் அணி துவக்கம் முதலே நன்றாக விளையாடியது. குறிப்பாக வெங்கடேஷ், குள்ள செந்தில் இருவரும் வெளுத்து வாங்க, சூழல் செந்தில், சிவா, தீனா மூவரும் ஓரளவு பங்களிக்க அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. போதாக்குறைக்கு கடைசி ஓவரை எதிர்கொண்ட சிங்கள் பாலாஜி கூட தன் பங்கிற்கு ஒரு பௌண்டரி அடிக்க, 8 ஓவர்களில் 72 ரன்களை குவித்தது சாய்ராம் அணி.
சுமாரான சாய்ராம் அணியே இவ்வளவு ரன் எடுத்ததென்றால் RBT அணி அடித்த ஒவ்வொரு பந்தும் இடிப் போல இருந்தது. குறிப்பாக கேப்டன் பிரபாகரனும், அதிரடி வீரன் செல்வாவும் போட்டி போட்டு பௌண்டரிகளும், சிக்ஸர்களும் அடிக்க, ஸ்கோர் 4 ஓவர்களிலேயே 50ஐ தாண்டியது. குள்ள செந்திலின் ஐந்தாம் ஓவரிலும், சூழல் செந்திலின் ஆறாம் ஓவரில் சில விக்கெட்டுகள் விழுந்தாலும், ஒருபுறம் செல்வா ரங்கூரமிட்டு மைதானத்தில் இருந்ததால் அது RBTயின் ரன்ரேட்டை எள்ளளவும் பாதிக்கவில்லை. அணியின் ஸ்கோர் 6 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 62. தேவை 2 ஓவர்களில் 13 மட்டுமே (கைவசம் 5 விக்கெட்டுகள்)…
ஏழாம் ஓவரிலேயே வெற்றி பெரும் முனைப்பில், முன்னும் பின்னுமாய் கைகளை சுற்றி சிவா வீசிய முதல் பந்தை பௌண்டரி அடித்தான் செல்வா. அடுத்த பந்தை தடுதாடிய அவன் மூன்றாம் பந்தை தூக்கி அடிக்க, அது சிக்ஸர் திசையில் செல்லும் என எதிர்பார்த்த நிலையில், சற்றும் எதிர்பாராமல் மைதானத்தின் அருகிலிருந்த ஒரு வீட்டில் தஞ்சமடைந்தது.
பள்ளியின் சுவர்களை தாண்டி எகிறி குதித்து, PET நேரம் முழுவதும் தேடியும் பந்து அகப்படவில்லை. வேறு பந்தும் கைவசம் இல்லை என்பதால் எங்களின் ‘டக் வொர்த் லூயிஸ்’ விதிப்படி ஆட்டம் யாருக்கும் வெற்றி தோல்வியின்றி கைவிடப்பட்டது. மீண்டும் ஒருமுறை சாய்ராம் அணி தோல்வியில் இருந்து தப்பியது.
இப்படியாக அளவான திறமை மற்றும் அளவுகடந்த அதிர்ஷ்டம் காரணமாக தொடர்ந்து கிட்டத்தட்ட 40 ஆட்டங்களுக்கு மேல் வெற்றி பெற்று, ஆண்டு (1996-97) முழுவதும் அசைக்க முடியா அணியாக வீர நடை போட்டது எங்கள் ராமகிருஷ்ணா பள்ளியின் 9B சாய்ராம் அணி.
ஆனால் அதன் பிறகே எங்கள் அணிக்கு மேலும் பல சவால்கள் காத்திருந்தன.
அற்புத அணி - 3 அடுத்த பயணம்
Comments
Post a Comment