விஜயநகரம் என்றழைக்கப்படும் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹம்பியை குறித்து பற்பல தகவல்களையும், கதைகளையும் ஏற்கனவே கேள்வியுற்றுள்ளேன். துங்கபத்ரா நதியின் கரையில் உள்ள சரித்திர மற்றும் புராண முக்கியத்துவம் பெற்ற அந்த இடத்திற்கு செல்லும் எனது நீண்டநாள் கனவு சமீபத்தில் நிறைவேறியது. அந்த கனவு தேசத்தில் நான் பார்த்த இடங்களையும், அதில் பெற்ற நினைவுகளையும், அங்கு எடுத்த புகைப்படங்களையும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன், விரைவில் அந்த வீர வரலாற்றை கதை வடிவில் நூலாக எழுத வேண்டும் என்ற சங்கல்பத்துடன்…
இப்பதிவை முழுவதும் படித்து உங்கள் கருத்துக்களை பதிவு (Comment) செய்ய வேண்டுகிறேன்.
பயணக் கதையை படிக்க...
15-ஜூன்-2023
1. அஞ்சனாத்ரி மலை
காலையில் சென்னையில் இருந்து புறப்பட்டு மாலையில் விஜயநகரத்தில் காலடி எடுத்து வைத்ததும் ஒரு கணத்தை கூட வீணாக்காமல், தங்குமிடத்திற்கு கூட செல்லாமல் உடனடியாக சுற்றிப் பார்க்க ஆரம்பித்தோம். முதலில் சென்றது, ஹம்பியின் வட பகுதியில் உள்ள அஞ்சனாத்ரி மலை. புராண காலத்தில் கிஷ்கிந்தை என்று அழைக்கப்பட்ட நகரின் ஒரு பகுதியான, ஆஞ்சநேயர் பிறந்ததாக கருதப்படும் 1536 அடி உயர, 571 படிகள் கொண்ட அப்புனித மலையின் மேல் பால ஹனுமான் ஆலயமும், அதில் அவரை ஈன்ற அஞ்சனை அன்னைக்கென தனி சன்னிதியும் உள்ளது. முதலில் இறைவனை தரிசித்த பின் மலையின் மேல் இருந்து இயற்கையை தரிசிக்க ஆரம்பித்தோம்.
அந்த அற்புத அஞ்சனாத்ரி மலையில் இருந்து பார்க்க அனைத்து திசைகளிலும் உள்ள மலைக் குன்றுகள், இயற்கை அரண் போல் காட்சியளிக்கிறது. அதன் மடியில் பாயும் ஜீவ நதியான துங்கபத்திரையின் அழகு, நீர் குறைவான நிலையிலும் பேரழகாக காட்சி தருகிறது. குறிப்பாக அந்த மாலைப் பொழுதில் தான் ஆளும் வானை கார்மேகத்திடம் ஒப்படைத்து விடைபெற்ற கதிரவனின் கண்கொள்ளாக் காட்சி என் மனதை மயக்கிச் சென்றது. அப்போது அங்கு வீசிய ஆனந்தமான காற்றும் அதனுடன் பன்னீரை தூவியது போல பெய்த தூறல் மழையும், என்னையறியாமல் என் உதடுகளை "அடடா, என்ன அற்புத அனுபவம்" என உச்சரிக்க வைத்தது.
மொத்தத்தில் அற்புத அனுபவங்களுடன் சிறப்பான துவக்கத்தை தந்த ஒரு இடம். இங்கு வந்ததே எனது இப்பயணத்தின் நோக்கம் நிறைவேறிய திருப்தி கிடைத்தது. இனி இப்பயணத்தில் எனக்கு கிடைக்கப்போகும் அனுபவங்கள் அனைத்தும் கூடுதல் வெகுமதியே (Bonus) என மகிழ்ச்சியுடன் அன்றைய இரவை கழிக்கச் சென்றோம்.
அஞ்சனாத்ரி மலையில்
16-ஜூன்-2023
2. விருபாட்சர் ஆலயம்
முன்தினம் மாலையில் அஞ்சனாத்ரி மலையில் இருந்து ஹம்பியின் பேரழகை ரசித்த நாம், மறுநாள் காலையில் முதலில் தரிசித்தது விருபாட்சர் ஆலயம். இந்த ஆலயத்தை மையமாக வைத்தே விஜயநகர பேரரசு கட்டமைக்கப்பட்டதாக ஹம்பியின் வரலாறு கூறுகிறது.
சுமார் 7ம் நூற்றாண்டில் இருந்தே வரலாறு கொண்ட இக்கோயில் 15ம் நூற்றாண்டில் இரண்டாம் தேவராயரால் கட்டப்பட்டு பிற்கால மன்னர்களால் விரிவாக்கப்பட்டது. 165 அடி உயரம் கொண்ட ராஜ கோபுரம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் புனரமைக்கப்பட்டு இன்றும் கம்பீரமாய் காட்சி அளிப்பதுடன், வெகு தூரத்தில் இருந்தே நம்மை வரவேற்கிறது. உள்ளே சென்றதும் பிரம்மா- சிவன்-விஷ்ணு அம்சமாக கருதப்படும் மூன்று தலை கொண்ட நந்தி நம்மை வரவேற்கிறது.
கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்ட பஞ்ச பீடங்களையும், ராயர் கோபுரத்தையும் கடந்து சென்றால் இடப்புறம் கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்ட கல்யாண உற்சவ மண்டபம் உள்ளது. அர்த்த மண்டபத்திற்கு முன்புறத்தில் உள்ள மற்றொரு மண்டபத்தில் கூரையில் உள்ள ஓவியங்களும், யாழி தூண்களும், இசை தூண்களும் அற்புதமாக உள்ளன. குறிப்பாக யாழி தூண்களுக்கு பின்னால் உள்ள துளைகள் நேர்த்தியாக மற்றும் துல்லியமாக 4-5 தூண்களுக்கு பின்னால் உள்ள உருவங்களையும் பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 36 கடவுள்களின் சிலைகள் கொண்ட இக்கோயிலின் மூலவர் விருபாட்சர் சுயம்பு லிங்கமாக காட்சி தர, அவருக்கு வலப்புறம் பிரகாரத்தில் துங்கபத்திரை என்றழைக்கப்படும் பம்பா தேவியும், புவனேஸ்வரி அம்மனும் தனித்தனி சன்னிதில் காட்சி தருகின்றனர்.
மொத்தத்தில் காலங்கள் பல கடந்தும் கம்பீர விஜயநகர பேரரசின் வரலாற்றை பறைசாற்றும் ஒரு இடம்.
விருபாட்சர் ஆலய ராஜ கோபுரம்
3. ஹேமகூட மலை
விருபாட்சர் ஆலயத்தின் தெற்கே அமைந்துள்ளது ஹேமகூட மலை. இங்கு தவம் புரிந்த சிவனின் தவத்தை கலைக்க மன்மதன் அம்பு விட, இறைவன் தனது நெற்றிக்கண் கொண்டு அவரை எரித்ததாக புராணம் கூறுகிறது. இம்மலையின் மேல் தற்போது காணப்படும் கலைக்கோவில்கள் ஜைன கட்டிடக்கலை போல் காட்சியளிக்கின்றன என்றபோதும் அவற்றில் சிலைகள் ஏதும் இல்லை.
ஹேமகூட மலையில் இருந்து பார்க்க விருபாட்சர் கோவிலின் அகலப்பரப்பு காட்சியும் அதன் பின்னால் கோட்டை சுவர்கள் போல காட்சி தரும் மலைகளும் பிரம்மாண்டமாய் உள்ளன. மலையின் மீது ஆங்காங்கே அமைக்கப்பட்ட காவல் மண்டபங்கள் நம்மை மன்னர் காலத்திற்கே அழைத்துச் செல்கின்றன. மலைமேல் காயத்ரி பீடமும், தென்மேற்கே ஒரு மண்டபத்தில் 15 அடி உயரம் கொண்ட கடலேகலு (கொண்டைக்கடலை வயிறு) விநாயகரும், தெற்கே 8 அடி உயரம் கொண்ட சசிகவேலு (கடுகு வயிறு) விநாயகரும் கம்பீரமாய் காட்சி தருகின்றனர்.
ஹேமகூட மலையில் கோயில்கள்
ஹேமகூட மலையில்
ஹேமகூட மலையில் ஒரு மண்டபம்
கடலேகலு (கொண்டைக்கடலை வயிறு) விநாயகர்
(கடுகு வயிறு) விநாயகர்
4. ஸ்ரீ கிருஷ்ணர் கோயில்
ஹேமகூட மலை அருகில் 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலும் அதன் எதிரே உள்ள புஷ்கரணியும் பிற்கால விஜயநகர பேரரசின் எதிரிகளால் நடத்தப்பட்ட அவலங்களுக்கு சாட்சியாய் விளங்குகின்றன. எந்த ஒரு கோயிலும் சிறக்க தேவையான முக்கிய விஷயங்கள் மூன்று ஆனால் அவை எதுவும் இத்தலத்தில் இப்போது இல்லை.
தலம் - கோயில் அழிக்கப்பட்டு அழிவின் எச்சமாய் உள்ளது.
மூர்த்தி - முழுதும் சிதைக்கப்பட்டு தற்போது இல்லை.
தீர்த்தம் - நீரின்றி வறண்டு காணப்படுகிறது
இந்த எச்சங்கள் அனைத்தும் அங்கு நடத்தப்பட்ட கொடுமைகளை நமக்கு எடுத்துரைத்தது.
5. உக்கிர நரசிம்மர் மற்றும் பாடவிலிங்கம்
உக்கிர நரசிம்மரும், பாடவிலிங்கமும் கிருஷ்ணர் கோயிலின் தெற்கே ஒரு வெட்டவெளியில் குடியிருக்கின்றனர். ஒரு காலத்தில் இங்கு பிரம்மாண்ட கோயில் வளாகம் இருந்திருக்க கூடும். ஆனால் தற்போது அதன் சுவடுகள் ஏதுமின்றி இரு சன்னிதிகள் மட்டுமே எஞ்சியுள்ளன.
உக்கிர நரசிம்மர்
ஒரே பாறையில் செதுக்கப்பட்ட உக்கிர நரசிம்மர் ஆதிசேஷனை குடையாய் கொண்டு அதனடியில் ஒருவித யோக நிலையில் அமர்த்துள்ளார். ஆதிசேஷனுக்கு மேல் ப்ராபாவளி எனப்படும் யாளி முகம் உள்ளது. நரசிம்மரின் கைகளும், மார்பில் குடியிருந்த மகாலக்ஷ்மியும் சிதைப்பட்டு இருந்தாலும் அவர் கம்பீரமாகவே காட்சி தந்து அருள் பாவிக்கிறார்.
நரசிம்மருக்கு வலப்புறம் ஒரு அழிந்த விமானத்தின் கீழ் உள்ள தனி சன்னிதியில், நீர் சூழ ஏகாந்தமாய் நிற்கிறார் கம்பீர பாடவிலிங்கேஸ்வரர். மகாலிங்கமாய் காட்சி தரும் இவரது தரிசனம் உண்மையிலேயே ஒரு நிமிடம் சிலிர்க்க வைத்தது. மதங்களின் பெயரால் சிதைக்கப்பட்ட உக்கிர நரசிம்மரும், பாடவிலிங்கேஸ்வரரும் ஒருவருக்கொருவர் துணையாய் நின்று தம்மை நாடி வருவோருக்கு அருள் புரிகின்றனர் என்றால் அது மிகையில்லை.
உங்கள் கருத்துக்களை Commentல் பதிவிடுங்கள்.
தொடரும்...
அடுத்த பதிவு
Nice to read your post
ReplyDelete