நீண்ட பயணம்
ஒரு பயணி என்ற முறையில் பல்வேறு இடங்களுக்கு பயணங்கள் செய்திருந்தாலும் அவற்றில் பெரும்பாலும் நான் பயன்படுத்தியது பொது போக்குவரத்து வாகனங்களையே… ஒரு சில முறை மகிழ்ந்துகளில் சென்று இருந்தாலும் அவையும் அதிகபட்சம் ஒரு சில மணி நேரங்களே… என்னதான் அலுவலக வண்டியில் (Office cab) தொடர்ந்து சென்று வந்தாலும் தினமும் ஒரே வழி மற்றும் நகர நெரிசல் காரணமாக அதில் அவ்வளவாக சுவாரசியம் இருப்பது இல்லை என்பதால் பெரும்பாலான அலுவலக பயணங்கள் அலைபேசியில் மூழ்கியும், குட்டி தூக்கங்களிலும் கரைந்து விடுகின்றன.
முதன்முறை காரில் கிட்டத்தட்ட 1500 கிலோமீட்டர் தூரம் பயணித்து, எனது சொந்த மாநிலத்தை கடந்து, இதுவரை செல்லாத ஒரு ஊருக்கு பயணம் செய்து திரும்பும் வாய்ப்பு கிட்டியது. அந்த நீண்ட பயணத்தின் நினைவுகளே இப்பதிவு.
பயண இலக்கு
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹம்பி எனப்படும் விஜயநகரத்திற்கு செல்லவேண்டும் என்பது எனக்கும் எனது நண்பர் திரு. ஆனந்த் அவர்களுக்கும் நீண்டநாள் கனவு. எதிர்வரும் தொடர் பயண திட்டங்களால் (Travel schedules) எனது 2023ம் ஆண்டின் அனைத்து மாதங்களும் நிறைந்திருக்க, இந்த ஜூன் மாதத்தில் மட்டும் பயணங்கள் ஏதும் இல்லாமல் இருந்தது அதிசயமே… எனவே கொளுத்தும் கோடையின் சகோதரனான ஜூன் மாதத்திலேயே கலாச்சார புதையலான ஹம்பி செல்ல முடிவு செய்தோம்.
பொதுவாக தொடர்வண்டிகளே தொலைதூர பயணத்திற்கு ஏற்றவை என்பதால் ரயிலில் முன்பதிவு செய்து பயணத் தேதியை எதிர்நோக்கி காத்திருக்க ஆரம்பித்தோம். ஆனால் இறைவனின் விருப்பத்தால் மேலும் இரு நண்பர்கள் எங்கள் பயணத்தில் இணைந்து கொள்ள, கடைசி நேரத்தில் ரயில் பயண சீட்டுகளை ரத்து செய்து விட்டு மகிழுந்தில் செல்ல முடிவு செய்தோம்.
இனிய ஆரம்பம்
ஒரு வியாழக்கிழமை (15 ஜூன் 2023) அன்று காலை 5:50 மணியளவில் எங்கள் பயணம் துவங்கியது. சென்னையிலிருந்து வட கர்நாடகத்தில் உள்ள ஹம்பி செல்ல இரு பாதைகள் உண்டு. ஒன்று பெங்களூரு வழி (சுமார் 700 கி.மீ.) மற்றொன்று ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் வழி (சுமார் 600 கி.மீ.). அனந்தப்பூர் வழி குறுகிய தூரம் கொண்டதாக இருந்தாலும் சாலைகள் அவ்வளவு சிறப்பாக இல்லாத காரணத்தால், கூகுளின் பரிந்துரையை ஏற்று பெங்களூரு வழியை தேர்வு செய்தோம். மெல்லிய இசையுடனும், அளவான A.C. வெப்பநிலையுடனும் (20 degree celcius) எங்களின் இனிய பயணம் ஆரம்பித்தது.
பயணம் ஆரம்பித்தவுடன் எங்கள் பேச்சும் ஆரம்பித்தது. முதலில் சென்று கொண்டிருக்கும் சாலையை பற்றியும் வழியில் உள்ள ஊர்கள் பற்றியும் ஆரம்பித்த எங்கள் பேச்சு, வாகனத்தில் ஒலித்துக் கொண்டிருந்த பாடல்களின் பக்கம் லேசாக திரும்பியது. குறிப்பாக அந்நேரத்தில் ஒலித்துக் கொண்டிருந்த A.R. ரஹ்மானின் 1990 பாடல்கள் 90களின் குழந்தைகளான (90’s kids) எங்களின் செவிகளுக்கு தேனாக தித்தித்தது. அந்த தேனின் சுவையை பருகியபடியே வேலூரை கடந்து, ஆம்பூர் அருகில் எங்கள் காலை 9:00 மணியளவில் அன்னபூர்ணா உணவகத்தில் காலை சிற்றுண்டியை முடித்துக் கொண்டு பயணத்தை தொடர்ந்தோம்.
செவிக்கும், வயிற்றிற்கும் தேவையான உணவு கிடைத்த பின் எங்கள் பேச்சு அறிவுக்கு தீனியிடும் புத்தகங்களை நோக்கி திரும்பியது. குறிப்பாக நண்பர் ஆனந்த் அதிகம் படித்தவர் என்பதால் அவரது பார்வையில் பல்வேறு எழுத்தாளர்கள் மற்றும் அவர்களின் புத்தகங்களை பற்றிய கருத்துக்களை, குறிப்பாக ஜெயமோகன் மற்றும் ஜெயகாந்தன் பற்றி பேசிக் கொண்டு வந்தார். நானும் எனக்கு பிடித்த எழுத்தாளர்களான சுஜாதா மற்றும் பாலகுமாரன் அவர்களை பற்றி அளவளாவி மகிழ்ந்தேன்.
சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்த பயணத்தில் எழுத்தாளர்களை பற்றி பேசி ஓய்ந்த நேரத்தில் நாங்கள் அறியாமலேயே எங்களை ஆட்கொண்டார் நமது இசைஞானி. “இது ஒரு பொன் மாலைப் பொழுது”, “என்ன சத்தம் இந்த நேரம்” போன்ற அற்புத இசையும், வரிகளும் ஒருங்கிணைந்த பாடல்கள் எங்களை ரசிக்க வைத்த பின் அந்த நெடுஞ்சாலையில் தென்றலாய் வீசிய “இளங்காற்று வீசுதே” பாடல் என்னை மிகவும் பரவசப்படுத்தியது. “ராஜா என்றும் ராஜாதான்” என என் மனம் அவர் புகழ் பாடியது.
அற்புதமான கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், அளவான வேகத்தில் இசைஞானியின் பாடல்களை ரசித்த பின் அவரின் இசை ஆளுமை குறித்து ஆரம்பித்த எங்கள் அடுத்தக்கட்ட பேச்சு, மெல்ல மெல்ல பல்வேறு துறைகளை சேர்ந்த ஆளுமைகளை (Personalities) நோக்கி நகர்ந்தது. குறிப்பாக சச்சின், M.S. தோனி மற்றும் கமலஹாசன் போன்றவர்களை பற்றி பேசி கிலாகித்தோம். அவரவர் பார்வையில் பல்வேறு வகையான ஆளுமைகளை (Types of leadership) பற்றிய கருத்துக்களும் பகிர்ந்துக் கொள்ளப்பட்டன.
பெங்களூரு நாட்கள்
சுமார் ஐந்தரை மணிநேர பயணத்தில் (காலை 11:20 மணி) பெங்களூருவின் புறநகரான எலக்ட்ரானிக்ஸ் சிட்டியில் நுழைந்தபோது, அங்கு நிலவிய லேசான போக்குவரத்து நெரிசல், எங்களின் தொடர் பேச்சிற்கு சிறிது அணையிட்டது. அந்த நெரிசலை கடந்து பெங்களூருவின் புறவழிச் சாலையான நைஸ் ரிங் ரோட்டில் நுழைந்தோம். நைஸ் ரிங் ரோடு முற்றிலும் கான்கிரீட்டால் (Concrete) அமைக்கப்பட்ட சிறப்பான சாலை என்பதால் எங்களது வாகனம் வழுக்கி கொண்டே சென்றது போல் தோன்றியது. மேலும் குறிப்பிட்ட தொலைவுக்கு இடையே அமைக்கப்பட்ட ஸ்பீட் கேமரா கண்ட்ரோல் (Speed camera control), அதில் செல்லும் வாகனங்களின் வேகத்தை கண்காணித்து உடனுக்குடன் தகவல் தெரிவிக்கிறது. அதிவேகமாக செல்லும் வாகனங்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது. நல்லவேளையாக நாங்கள் மிதவேகத்தில் சென்றதால் பாதகமில்லை.
பெங்களூரு, சென்னையின் அருகில் உள்ள ஒரு மிகப்பெரிய நகரம் என்பதால் நாங்கள் அனைவரும் ஏற்கனவே சிலமுறை, சில தருணங்களில், பல காரணங்களால் தனித்தனியே அங்கு சென்றிந்தோம். இதனால் அந்த நகரை கடந்து செல்லுகையில் இசையை நிறுத்திவிட்டு அவரவர்களின் பெங்களூரு அனுபவங்களை பகிர்ந்து கொண்டோம். வாகனத்தில் இருந்த தொடுதிரை தகவல் கருவி (Touch screen infotainment system), இன்னும் நாங்கள் ஆறு மணிநேரம் (350 கி.மீ.) பயணம் செல்ல வேண்டியிருப்பதாக கூறியது. முன்தினம் சரியான தூக்கம் இல்லாத நிலையில், கிட்டத்தட்ட எங்களின் பயணத்தின் பாதி தூரத்தை கடந்தும் சிறிது கூட சோர்வாக இல்லை. பயணத்தின் மீதான எனது ஆர்வம் ஒரு முக்கிய காரணம் என்றாலும், நண்பரின் மகிழுந்து (Skoda Kushaq) சிறப்பான தரத்தில் இருந்ததும் மற்றொரு காரணமாகும்.
கர்நாடக சாலை
பெங்களூருவை கடந்து எங்கள் பயணத்தை தொடர்ந்த போது, அந்த கர்நாடக மண்ணின் வரலாறு எங்களின் பேசுபொருளாக மாறியது. குறிப்பாக நாங்கள் செல்ல வேண்டிய ஹம்பியின் வரலாற்றை நண்பர் ஒருவர் கூற, அதை எனது அலைபேசியில் பதிவு செய்து கொண்டேன். அதன்பின் எதிர்வந்த தும்கூருவில் (Tumkur) ஒரு பஞ்சாபி உணவகத்தில் எங்களின் மதிய உணவு முடிந்தும், எங்களின் அந்த வரலாற்று பேச்சு தொடர்ந்து கொண்டே சென்றது.
ஹம்பியின் வரலாற்றில் ஆரம்பித்த எங்கள் உரையாடல், பிறகு தஞ்சை பெரிய கோவிலை பற்றியும், பிற்கால தமிழகத்தின் வரலாற்றையும் பேச ஆரம்பித்தது. அதன்பின் மெல்ல மெல்ல இந்தியா சுதந்திரம் அடைந்த வரலாற்று பதிவுகளை நோக்கி திரும்பியது. இதில் மகாத்மா காந்தி குறித்து நமது நண்பர்கள் இடையே ஏற்பட்ட மாற்றுக் கருத்தால் திடீர் மௌனம் நிலவியது. அந்த சிறிதுநேர மௌனமே, ஏற்பட்ட மாற்றுக் கருத்தை எளிதில் கடந்துவர உதவியது.
சுமார் 3:00 மணியளவில், இவ்வளவு நேரம் மறந்திருந்த எனது வீட்டிற்கு போன் செய்து பேசினேன். எங்களின் எதிர்பார்ப்பிற்கு மாறாக நாங்கள் சென்ற கர்நாடக சாலைகள் மிகவும் சிறப்பாகவே இருந்தது. அனேகமாக இது மறைந்த முன்னாள் பிரதமர் திரு. வாஜ்பாய் காலத்தில் அமைக்கப்பட்ட தங்க நாற்கர சாலையின் ஒரு பகுதியாக இருந்திருக்க கூடும். பிறகு சித்திரதுர்காவை கடந்து, வலப்பக்கம் திரும்பி சென்ற சாலையில் இருபுறமும் இருந்த அதிக எண்ணிக்கையிலான காற்றாலைகள், எனக்கு திருநெல்வேலி-நாகர்கோவில் சாலையை நினைவுப்படுத்தியது.
ஹம்பிக்கு சுமார் 20 கி.மீ. முன்பு துங்கபத்திரா அணையின் அருகே ஒரு மலையில் அமைக்கப்பட்ட குகைவழி சாலையில் சென்றது சிறப்பான அனுபவமாக இருந்தது. இறுதியாக 12 மணிநேர பயணத்தில் சரியாக மாலை 5:50 மணியளவில் சுமார் 700 கிலோமீட்டர்களை கடந்து எங்கள் இலக்கான ஹம்பியை அடைந்தோம். திட்டமிட்டபடி அனைத்தும் சிறப்பாக அமைந்தது மனதிற்கு மகிழ்ச்சியை தந்தது. தொடர்வண்டியில் செல்லாமல் காரில் சென்றது, நாங்கள் தங்கியிருந்த இடத்தில் இருந்து நகரை சுற்றிப் பார்க்க சிறப்பாய் உதவியது. கிட்டத்தட்ட இரண்டு நாட்களில் எனது திட்டத்தில் இருந்த பெரும்பாலான இடங்களை பார்வையிட்ட பின் அந்த அற்புத நகரில் இருந்து புறப்படும் வேளையில் எதிர்பாராமல் நடந்த அந்த சம்பவம் எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தொடரும்…
Comments
Post a Comment