மகிழ்ச்சி தந்த மகிழுந்து பயணம் - 2

முந்தைய பதிவினை படிக்க... 

மகிழ்ச்சி தந்த மகிழுந்து பயணம் - 1



எதிர்பாரா விபத்து 

ஹம்பி பயண திட்டத்தில் இருந்த பெரும்பாலான இடங்களை கண்டுகளித்த பின் பயணத்தின் இறுதி நாள் (17 ஜூன் 2023) அன்று கடைசி சில இடங்களை கண்டு அதன் பின் சென்னை திரும்பும் நோக்கில் புறப்பட்டோம். காலை உணவருந்த ஒரு சாலையோரம் நிறுத்தி, இறங்க முற்பட்ட போது திடீரென கேட்ட “டமால்” என்ற சத்தம் எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆம்! எங்கிருந்தோ வந்த இரு சக்கர வாகனம் ஒன்று சற்றும் எதிர்பாராமல் எங்கள் காரில் மோதி சரிந்தது. அதில் இருந்த இரு சிறுவர்களில் ஒருவனுக்கு காலில் சிராய்ப்பு ஏற்பட்டு லேசாக ரத்தமும் வழிந்தது. 


என்ன நடந்தது? ஏது நடந்தது? என புரிவதற்குள் அங்கு கூடிய கூட்டம் எங்களை சங்கடப்படுத்த ஆரம்பித்தது. உடனடியாக சுதாரித்து அந்த சிறுவனை கூட்டத்திலிருந்து பிரித்து மருத்துவமனையை நோக்கி அழைத்து சென்றோம். அந்த காலை பொழுதில் வேற்று மாநிலத்தில் உள்ள அந்த நகரத்தில் (Hosapete) உள்ள மருத்துவமனைகளை தேடிக் கண்டுபிடிப்பதில் இருந்த சிரமத்தை விட அந்த மருத்துவமனைகளில் அப்போது மருத்துவர்கள் யாரும் இல்லாமல் இருந்ததுதான் அதிக சிரமத்தை தந்தது. நல்லவேளையாக எங்களில் ஒருவருக்கு கன்னட மொழியில் ஓரளவு பரிச்சியம் இருந்ததால் சூழ்நிலையை சமாளிக்க முடிந்தது (நன்றி).   





“தவறு யாருடையது?” என தேவையற்ற விவாதம் செய்து நேரத்தையும், சக்தியையும் வீணாக்காமல், சற்று முதிர்ச்சியோடு நாங்கள் அனைவரும் ஒரே நோக்கில் செயல்பட்டு அடிபட்ட சிறுவனை விரைவாய் தேற்றி அந்த சூழ்நிலையில் இருந்து வெளியே வர முயற்சி செய்தோம். நல்லவேளையாக பெரிய காயம் ஏதும் இல்லாததால் தேவையான சிகிச்சை முடிந்ததும் அங்கிருந்து புறப்பட்டோம். கிட்டத்தட்ட 2-3 மணிநேரம் நீடித்த அந்த சூழ்நிலை நேர விரயமல்ல, எனக்கு கிடைத்த ஒரு அனுபவமே… இப்படி எதிர்பாரா விபத்துகள் நடப்பதும், அதை பதற்றப்படாமல் சரியான முறையில் சமாளிப்பதும் மகிழுந்து பயணங்களின் ஒரு அங்கம் என அறிந்துக்  கொண்டேன். 


பிறகு நடந்ததை எண்ணி கவலை கொள்ளாமல், எங்கள் திட்டப்படி பயணத்தை தொடர்ந்து, எஞ்சியுள்ள இடங்களை கண்டு ரசித்து மதியம் 2:00 மணியளவில் சென்னைக்கு புறப்பட்டோம். போகும் போது பின் சீட்டில் அமர்ந்து பற்பல விவாதங்களில் கலந்துகொண்ட நான், திரும்பும் போது முன் சீட்டில் அமர்ந்து காரை ஓட்டும் நண்பருக்கு துணையாக பேசியபடியே வந்தேன். அப்போது முன் சீட்டில் அமர்பவரின் பொறுப்புகளையும், அவர் ஓட்டுனருக்கு செய்ய வேண்டிய எச்சரிக்கைகளையும் அறிந்துக் கொண்டேன் (நன்றி : திரு லோகநாதன்).        


ஒருவழியாக ஊரின் வெளியே வந்து தேசிய நெடுஞ்சாலையை அடைந்ததும் பெய்த திடீர் மழை எங்கள் பயணம் சிறப்பாக நிறைவுற போவதை அறிவித்தது. கர்நாடகத்தில் பெய்த அந்த மழையை, நாங்கள் எங்களுடன் சென்னைக்கு அழைத்து வந்தோம். அப்போது எங்களை முந்தி வேகமாய் சென்ற ஒரு வாகனம், எங்கள் வாகனத்தின் மீது மழைநீரை வாரியடித்தது என்றபோதும் நாங்கள் சற்றும் நிதானம் தவறாமல் பாதுகாப்பான வேகத்தில் ஓட்டினோம். மீண்டும் பற்பல கதைகளை பேசியபடியே, நீண்ட பயணத்தின் அற்புத அனுபவங்களோடு அதிகாலை 2:30 மணியளவில் சென்னையை அடைந்தோம். 



 திட்டங்களும் செயல்பாடுகளும் 



எந்த ஒரு பயணமும் சிறப்பாய் அமைய சரியான திட்டமிடுதலும், அதற்குண்டான  செயல்பாடுகளும் மிகவும் அவசியம். குறிப்பாக தொலைதூர மகிழுந்து பயணத்தில் பின்வரும் முன்னேற்பாடுகளையும், செயல்பாடுகளையும் மேற்கொள்வது நிச்சயம் பலன் தரும்.


  1. வாகன பராமரிப்பு


  • என்ஜின் ஆயில் மாற்றிய அல்லது மாற்ற வேண்டிய தூரத்தை கவனித்தல் மற்றும் கடைப்பிடித்தல்.

  • ரேடியேட்டரில் உள்ள நீரின் அளவை பராமரித்தல்.

  • அனைத்து சக்கரங்களின் (ஸ்டெப்னி உட்பட)  காற்றழுத்தத்தை பராமரித்தல்.

  • விளக்கு மற்றும் வைப்பரின் இயங்கும் நிலையை சோதித்தல் - இருட்டு மற்றும் எதிர்பாரா மழையிலிருந்து தப்பிக்க...

  • வாகனத்தை பழுதுபார்க்க தேவையான அடிப்படை கருவிகளை தயாராக வைத்தல்.


தற்போதைய கார்களில் உள்ள சென்சார்கள், வண்டியில் ஏதேனும் குறை இருப்பின் தானாகவே எச்சரிக்கை செய்யும் தன்மை கொண்டவை என்றபோதும், எதற்கும் ஒருமுறை நேரடியாக சோதனை செய்வது நல்லது.


  1. பயணத்தின் போது செய்ய வேண்டியது.


  • சாலையை தேர்ந்தெடுத்தல் - குறைவான தூரம் கொண்ட மோசமான சாலையை விட அதிக தூரம் கொண்ட சுமாரான சாலையே பயணத்திற்கு சிறந்தது.  

  • நேரக் கணக்கீடு - ஓய்வு நேரம், மற்றும் எதிர்பாரா போக்குவரத்து நெரிசல்களையும் யூகித்து கூடுதல் நேரம் ஒதுக்கினால் நிதானமாக பயணம் செய்யலாம்.   

  • ஓய்வு - நம்மால் தொடர்ந்து ஓட்ட முடிந்தால் கூட ஒவ்வொரு இரண்டு மணிநேரம் அல்லது 100 கி.மீ.க்கு ஒருமுறை வாகனத்தை நிறுத்தி 10-15 நிமிடங்கள் ஓய்வெடுத்து விட்டு பயணத்தை தொடர்தல் நன்று.    

  • மித வேகம் - என்னதான் வாகனங்கள் அதிவேகமாக இயங்கும் திறன் கொண்டாலும் 100 கி.மீ.க்கு மேல் மிகாத வேகம் மிகவும் நன்று.     

  • மாற்று ஓட்டுநர் - சிறந்த ஓட்டுநராக இருப்பினும் குறைந்தபட்சம் வாகனம் ஓட்ட தெரிந்த மற்றொரு நபர் இல்லாமல் பயணம் செய்ய வேண்டாம். 



நான் பயணித்த வாகனம் 


Skoda Kushaq 1.0 TSI Ambition

999 CC


(மாதிரி புகைப்படம்)


நன்றிகள்


  • காரின் உரிமையாளர் நண்பர் திரு ஆனந்த் அவர்களுக்கு.

  • காரை பத்திரமாக இயக்கிய திரு ஆனந்த் மற்றும் லோகநாதன் அவர்களுக்கு.

  • உடன் பயணித்த நண்பருக்கு.

  • சுங்கம் வசூலித்தாலும் அற்புத சாலைகளை அமைத்த அரசாங்கத்திற்கு.

  • தரமான வாகனங்களை வடிவமைத்து விற்பனை செய்யும் மகிழுந்து நிறுவனங்களுக்கு.

  • இப்பதிவை படிக்கும் உங்களுக்கு.



மகிழுந்து பயணம் வெறும் பொழுது போக்கல்ல, அது பொறுப்புடன் கூடிய கலை… அந்தக் கலையை மகிழ்வுடன் கற்று, மனமார இந்த பரந்த உலகை அனுபவிப்போம்.



அடுத்த கட்டுரையை படிக்க

விஜயநகரத்தில் விஜயபாஸ்கர் - விரைவில் 


 பிற பதிவுகளை படிக்க...

ஒரு பயணியின் வழித்தடம்


Comments