குடுமிசாமியின் தீர்த்தங்கள்...7

முந்தைய பகுதிகளை படிக்க...

  1. முன்னுரை,  முதல் பயணம்
  2. குடிமல்லம், பொன்முகலி தீர்த்தம்
  3. குடுமி சாமியின் தரிசனம், பாரத்வாஜ தீர்த்தம்
  4. மயூர தீர்த்தம், மகாலிங்க தரிசனம்
  5. தட்சிண காளி, பைரவ தீர்த்தம்
  6. சகஸ்ரலிங்க தீர்த்தம், ஹரஹர தீர்த்தம்

ஆகாய லிங்க தரிசனம்


    இறைவன் படைத்த தீர்த்தங்களில் நீராடுவது மனிதனின் பாவத்தைப் போக்கும் என்றால், அதே தீர்த்தத்தில் இறைவனுக்கு அபிஷேகம் செய்வது அவரது மனதை குளிர்வித்து வேண்டிய வரங்களை அருள செய்யும். இவ்வளவு நாள் அறியாமல் திருக்காளத்தியின் முக்தி தரும் பிற தீர்த்தங்களில் நீராடிய திண்ணன், இன்று ஹரஹர தீர்த்தம் என்று தனது பெயராலேயே அழைக்கப்படும் தீர்த்தத்தால் தன்னை அபிஷேகம் செய்ததால், எல்லாம் வல்ல இறைவன் ஹர சிவ சங்கரர் மனம் மகிழ்ந்து போனார். திருக்காளத்தியின் மாயையை விலக்கி தனது உண்மையுருவை அவனுக்கு காட்ட அருள் புரிந்தார். 


திண்ணனைப் போலவே வேடுவ குலத்தில் பிறந்தாலும்,  கொள்ளையனாக மாறிய கரபன் இன்னும் கொடியவன், பின்பு சதானந்தர் என்ற முனிவரின் ஆலோசனையை ஏற்று இங்கு வருகை தந்து பல்லாண்டு காலம் வெறும் நீரை மட்டுமே பருகி இறைவனை நினைத்து "ஹர ஹர" என்ற நாமத்தை ஜெபித்து முக்தி அடைந்ததால், இத்தீர்த்தத்திற்கு  ஹர ஹர தீர்த்தம் என்று பெயர். இத்தகைய சிறப்பு மிக்க தீர்த்ததை பற்றி சிறிதும் அறியாவிட்டாலும், தீர்த்த அபிஷேகம் செய்து இறைவனின் மனதை மகிழ வைத்த அவனின் சிந்தையில் தற்போது புதிய தெளிவை இறைவன் வழங்கினார். 


வேட்டைக்குப் புறப்பட்ட அவன், குடிமல்லத்தில் தனது உருவத்தையே தரிசனம் செய்ததையும், அங்கு குடுமி சாமியின் பெயரை அறிந்து கொண்டதையும், பின்பு பன்றி மூலம் திருக்காளத்திக்கு வந்த விதத்தையும், குடுமி சாமியை கண்ட ஆனந்த தருணத்தையும்,  ஒவ்வொரு நாளும் அவனுக்கு கிடைத்த அற்புத அனுபவங்களையும் மனதில் அசை போட்டான்.மேலும் தான் செல்லும் இடங்களில் எல்லாம் பாதுகாப்பாய் வரும் அவரது அன்பையும் எண்ணி மகிழ்ந்தான். 


இம்மலையே அவரது வீடு. அதனால்தான் எங்கு சென்றாலும் அவரை காண முடிகிறது என எண்ணினான். இவ்வளவு தெளிவாக சிந்தித்த போதும் அவனிடமிருந்து இருமுறை தப்பிய மாய பன்றியின் ரகசியத்தை அவனால் உணர முடியவில்லை. அடுத்த முறை பன்றியை கண்டால் நிச்சயம் அதை பிடித்துவிட வேண்டும்.  உணவுக்காக அல்ல... அதன் பின் உள்ள உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என அவன் சிந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில், அவன் எதிரே நின்று கொண்டு அவன் மனதை படிப்பது போல் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது அந்த மாயப் பன்றி.


வஜ்ர தீர்த்தம்


பன்றி கண்டதும் அதை பிடிக்கும் எண்ணத்துடன் முன்பை விட பல மடங்கு வேகத்தில் பாய்ந்து ஓடினான் திண்ணன். உணவுக்காக அல்ல... அதன் உண்மை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தினால்... பன்றியும் மலையிலிருந்து வழிந்து வந்த சிற்றாற்றின் கரையின் ஓரம் வேகமாய் ஓடியது. திண்ணனும் நீரில் இறங்கியும், கரையில் ஏறியும் மாறி மாறி ஓடினான். நீரில் இறங்கி அவன் ஓடியபோது, அவன் அறியாமலேயே ஹர ஹர தீர்த்தத்திற்கு அருகில் உள்ள, வஜ்ர தீர்த்தம் என்று அழைக்கப்படும் ஒரு சிறிய அருவியில் தனது உடல் நனைந்ததால் அவன் தேகம் எங்கும் வஜ்ரமாய் மாறிய உண்மையை அவன் அறியவில்லை. இதனால் வழியெங்கும் முட்கள், செடிகள், பாறைகள் என பல கூர்மையான பொருட்கள் உரசிய போதும் அவன் உடலில் ஒரு சிறிய காயம் கூட ஏற்படவில்லை.


காயம் ஏதும் இல்லாததால் தனது வேகத்தை சிறிதும் குறைக்காமல் கிட்டத்தட்ட மூன்று நாழிகைக்கும் மேலாக அப்பன்றியை விடாமல் துரத்தினான். காடு, மேடு,  பள்ளம் என பல இடங்களை கடந்து ஓடிய பன்றி இறுதியாக ஓரிடத்தில் சரிவான பள்ளத்தையொட்டி இருந்த மேடை போன்ற ஓர் இடத்தில் நின்றது. துரத்திச் சென்ற திண்ணனும் அதன் எதிரே போய் நின்றான். பின்புறம் பள்ளம்; முன்புறம் திண்ணன். இப்போது பன்றிக்கு தப்பிச் செல்ல வழி ஏதுமில்லை. நிச்சயம் அது தன் கையில் சிக்கி விடும் என்று எண்ணியிருந்த போது அவன் சற்றும் எதிர்பாராத அச்சம்பவம் நடந்தது.


அவன் முன்பு நின்றிருந்த பன்றியின் உருவம் ஒரு மலையைப் போல் பெரியதாக மாறியது. உருவத்தில் பெரியதாக மாறிய அப்பன்றி அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு பின்புறம் பள்ளம் இருந்த திசையில் திரும்பி அதன் பின்னால் உள்ள திருக்காளத்தி மலைத் தொடரிலேயே உயரமான  அம்மலை சிகரத்தை வணங்குவது போல் செய்தது. பின்பு ஒரே தாவாக தாவி அச்சிகரத்தில் கலந்து மாயமாய் மறைந்து போனது. பன்றியின் ரகசியத்தை அறிந்து கொள்ள வந்த திண்ணன், இக்காட்சியைக் கண்டதும்  தனது வாழ்நாளின் உச்சபட்ச அதிர்ச்சிக்கு ஆளானான். இன்னும் சற்று நேரத்தில் திருக்காளத்தி மலையின் ரகசியத்தை அறிந்துகொள்ள போகிறான் என்ற உண்மையை அப்போது அவன் உணராததால்...


அதேநேரம் திருக்காளத்தியின் மேற்கு திசையில் சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருமலை திருப்பதியில் குடி கொண்டு, கிழக்கு திசையில் உள்ள திருக்காளத்தி மலையை தரிசித்து கொண்டிருக்கும் ஏழுமலையான் வெங்கடாஜலபதியின் முகத்தில் புன்னகை தவழ்ந்து கொண்டிருந்தது... ஆம்! இவ்வளவு நேரம் தனது வராக ரூபம் எடுத்து திண்ணனை திருக்காளத்தில் நுழைய வைத்து, அம்மலையில் உள்ள மாயைகள் ஒவ்வொன்றாக விலக்கி, அத்திருத்தலத்தில் அவனை ஆத்மார்த்தமாக பிரவேசிக்க வைத்தவர் அவரே... மேலும் திண்ணனுக்கு தனது விஸ்வரூப தரிசனத்தையும் தந்து, இறுதியாக ஹரியும் ஹரனும் வேறில்லை என்ற உண்மையை உணர்த்தும் வண்ணம் திருக்காளத்தி மலை சிகரத்தில் மறைந்தவரும் அவரே...


திருக்காளத்தி ஆகாய லிங்கம்


பன்றியின் உண்மையை அறிய அதைத் துரத்தி வந்த திண்ணன், தான் நின்று கொண்டு இருக்கும் மேடை போன்ற இடத்தில் சாஷ்டாங்கமாக அமர்ந்தான். எதிரே இருந்த திருக்காளத்தி மலையின் உயர்ந்த சிகரத்தை உற்று நோக்கினான். இதுவே அவன் முன்தினம் சகஸ்ரலிங்கத்தின் அருகிலிருந்தும், இன்று ஹர ஹர தீர்த்தத்தில் நுழையும் முன்பும் கண்ட முக்கோண வடிவ மலைச் சிகரமாகும். ஆனால் அது தற்போது அவன் கண்களுக்கு அவ்வடிவில் தெரியவில்லை. சுற்றியுள்ள பள்ளத்தாக்குகளுக்கு நடுவே காட்சியளித்த அச்சிகரமே அவனுக்கு ஆவுடையாருக்கு நடுவில் உள்ள சிவலிங்கம் போல் தோன்றி, தான் வணங்கும் குடுமி சாமி போல் தரிசனம்* அளித்தது. 


ஆம்! 

குடுமி சாமியின் உண்மை உருவமே இம்மலை என்ற உண்மையை ஆத்மார்த்தமாக உணர்ந்தான்...


இவ்வாறு திருக்காளத்தியில் முக்தி தரும் தீர்த்தங்கள் வழியாக அவன் மனதில்  சரணாகதி என்ற நற்செயல் (சரியை),  இறைவனை வணங்கும் நல்லொழுக்கம் (கிரியை),  பல்லாண்டு காலம் தவம் செய்த பலன் (யோகம்) மற்றும் இறைவனின் உண்மையான உருவத்தை அறிந்து கொள்ளும் மெய்யறிவு (ஞானம்) ஆகியவற்றை அளித்த இறைவன் அவனுக்கு முக்தியையும் தர விருப்பம் கொண்டார். ஆனால் அதன் முன்பு அவன் செய்ய வேண்டிய முக்கிய காரியம் ஒன்று இருந்தது. 


அதுவே திருக்காளத்தி கிரிவலம்...


* ஆகாய லிங்கம் என்று அழைக்கப்படும் திருக்காளத்தியின் உயர்ந்த மலைச் சிகரம், அக்காட்டில் உள்ள மேடை போன்ற அமைப்பில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் லிங்க வடிவில் காட்சியளிக்கிறது. மேலும் சுற்றிலும் பள்ளத்தாக்குகளுக்கு நடுவில் அமைந்துள்ள அச்சிகரம், ஆவுடையாருக்கு நடுவில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம் போல் காட்சியளிக்கிறது. அதுமட்டுமில்லாமல் அந்த ஆகாய லிங்க சிகரத்தின் உச்சியிலும், அற்புதமான ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


அடுத்த பகுதியை படிக்க...  

8. திருக்காளத்தி கிரிவலம் - இறுதி பகுதி

Comments

Post a Comment