முந்தைய பகுதிகளை படிக்க...
- முன்னுரை, முதல் பயணம்
- குடிமல்லம், பொன்முகலி தீர்த்தம்
- குடுமி சாமியின் தரிசனம், பாரத்வாஜ தீர்த்தம்
- மயூர தீர்த்தம், மகாலிங்க தரிசனம்
தட்சிண காளி
திருக்காளத்தி குடுமி சாமியின் தரிசனம் கிடைத்த மூன்றாம் நாள் இன்று. முன்தினம் மாய பன்றியை துரத்தியதால் காட்டுக்குள் நுழைந்து மனதில் பலவித அனுபவங்களையும், உடலில் சில காயங்களையும் பெற்ற திண்ணன், இன்று அவற்றை தவிர்க்கும் பொருட்டு ஆற்றங்கரையோரமே தன் பிரிய குடுமி சாமிக்கு இரை தேட திட்டமிட்டு அதிகாலையிலேயே புறப்பட்டான். முன்தினம் திரும்பி வந்த பாதையில் சிறு சிறு விலங்குகள் கிடைத்ததால் அதே பாதையில் செல்ல எண்ணி தெற்கு திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
தட்சிண காளி
என்ன ஆச்சரியம்! முந்தினம் அவ்வளவு களைப்பாக இருந்தபோதிலும் எளிதாக வேட்டையாட முடிந்த அவனுக்கு, விலங்குகள் எதுவும் இன்று தட்டுப்படவில்லை. சுமார் நான்கு மைல்கள் தூரம் நடந்த பின்னும் ஆற்றங்கரையோரத்தில் விலங்குகள் எதுவும் சிக்காததால் கரையை விட்டு சிறிது விலகி இடதுபுறம் மலையை நோக்கி நடந்தான். அங்கு ஒரு அழகிய தாமரை குளத்தின் அருகில், அமைதியான சூழ்நிலையில் வெட்ட வெளியில் தலையை சற்று சாய்த்தபடி உக்கிர வடிவாய் அமர்ந்திருந்த ஒரு பெண்ணை கண்டு ஒரு நிமிடம் திகைத்துப் போனான்.
ஒரு நிமிடம் சுதாரித்த பின்தான் அது பெண்ணல்ல, பெண் வடிவ சிலை என புரிந்து கொண்டான். முதல் பார்வையில் உக்கிரமாய் தோன்றிய அச்சிலை அருகில் போய் நின்றதும் சாந்த சொரூபமாய், கனிவாய் அவனைப் பார்ப்பது போல் தோன்றியது சற்று ஆச்சரியமே! அவ்வுருவம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக அங்கு குடிகொண்டிருக்கும், விக்ரமாதித்தன் முதலான பேரரசர்களால் வழிபாடு செய்யப்பட்ட தட்சிண காளியம்மன் என்பது அவனுக்கு அப்போது தெரியவில்லை...
தட்சிண காளியம்மனை பற்றி தெரியாவிட்டாலும், தான் முந்தினம் தரிசித்த மகாலிங்க அனுபவத்தால், இதுவும் தான் வணங்கும் குடுமி சாமி போல வேறொரு இறைவனின் திருவுருவமாக இருக்கக்கூடும் என அவன் உள்ளுணர்வு கூறியதால் அவ்வுருவத்தின் முன் விழுந்து வணங்கினான். அப்போது எங்கிருந்தோ ஒரு வேட்டை நாய் அவனெதிரே வந்ததை கண்டு ஆனந்தம் அடைந்தான்.
ஆம்! இது வேடுவர்களுக்கு உரிய இயல்பே. வேட்டைக்குச் செல்லும்போது நாய்களே அவர்களுக்கு உற்ற தோழனாக விளங்குபவை. யாருமில்லா காட்டில், தனது குடுமி சாமிக்கு உணவு தேடும் இப்பயணத்தில் இந்த நாய் தனக்கு துணையாக இருக்கும் என தோன்றியது. அப்போது அந்த நாயும் அவனைப் பார்த்து சினேகமாக வாலை ஆட்டியதால் உற்சாகமாகி அதை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
பைரவ தீர்த்தம்
முதலில் அவனை கண்டதும் வாலாட்டிய நாய் அவனை கிழக்கு திசையில் உள்ள மலையை நோக்கி அழைத்துச் சென்றது. நாயின் உதவியால் இன்று நல்ல வேட்டை கிடைக்கும் என்று எண்ணி அதை தொடர்ந்து சென்ற திண்ணன், அங்கு கம்பீரமாய் நின்றிருந்த ஒரு ஆணின் சிலையை* கண்டு திகைத்துப் போனான். அதன்பின் அருகிலிருந்த ஒரு அழகிய சிற்றருவியில் நனைந்து கொண்டிருந்த தனக்கு பிடித்த குடுமி சாமியை கண்டு அளவில்லா ஆனந்தம் அடைந்தான். நீரில் குளிப்பது அவனுக்கு எப்போதும் மிகவும் பிடித்த விஷயம். தனக்கு மிகவும் பிடித்த அதே விஷயத்தை தனது உயிருக்கு உயிரான குடுமி சாமியும் செய்து கொண்டிருப்பதை கண்டு வியப்படைந்தான்.
ஆவலுடன் ஓடிச்சென்று அவரை ஆரத் தழுவிக் கொண்டான். அவருடன் சேர்ந்து தானும் அச்சிற்றருவியில் ஆனந்தமாய் குளிக்க துவங்கினான். என்ன அதிசயம்! அருவியில் குளிக்க தொடங்கியதும் அவன் உடலில் இருந்த, முன்தினம் ஏற்பட்ட காயங்கள் அனைத்தும் மாயமாய் மறைந்தன. திருக்காளத்தியின் முக்தி தரும் தீர்த்தங்களில் ஒன்றான பைரவ தீர்த்தம் அவன் உடலில் இருந்த காயங்களை மட்டுமல்லாமல், பிறவி எனும் பிணியையும் நீக்கியது அவன் அறியாமலே... சிற்றருவி நீரை விட அதிகமாய் உற்சாகம் அவனது மனதில் கரைபுரண்டு ஓடியதால் எவ்வளவு நேரம் அப்படியே இருந்தான் என தெரியவில்லை. நன்றாக குளித்ததும் இயற்கையாக உண்டாகும் பசி அவனை இவ்வுலக்கிற்கு கொண்டு வந்து சேர்த்தது.
பசி வந்த பின்பே தன்னை அங்கு அழைத்து வந்த நாய் காணாமல் போனதை உணர்ந்தான். அதைத் தேட ஆரம்பிக்கும் போது அருகிலிருந்த அந்த கம்பீரமான ஆணின் சிலையருகே தான் தொடர்ந்து வந்த நாயும் சிலையாக மாறி இருந்ததை கண்டு பயந்து போனான். அது திருக்காளத்தியை காக்கும் அஷ்ட பைரவர்களில் ஒருவரான கால பைரவர் என்றும், அவரே தனது வாகனத்தை அனுப்பி அவனை அங்கு அழைத்து தனது அருகில் உள்ள பைரவ தீர்த்தத்தில் நீராட வைத்தார் என்ற உண்மை அப்போது அவனுக்கு தெரியவில்லை என்றாலும் தனது குடுமி சாமியை இங்கு தரிசிக்க உதவியதால், தனது வழக்கமான உணர்வின் காரணமாக அவரையும் விழுந்து வணங்கினான்.
பைரவ தீர்த்தத்தில் குடுமி சாமி
பிறகு நீண்ட நேரம் ஆனதால், தனது குடுமி சாமியும் பசியால் காத்துக் கொண்டிருப்பார் என்ற எண்ணம் தோன்றியதால் மீண்டும் உணவைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தான். தான் விட்டு வந்த குடுமி சாமியும் இங்கிருக்கும் குடுமி சாமியும் ஒருவரே எனத் தோன்றினாலும், இங்கு இவருக்கு பாதுகாப்பாய் நாயுடன் இருக்கும் மனித சிலை ஒன்று உள்ளது ஆனால் தான் விட்டுவந்த குடுமி சாமிக்கோ தன்னை விட்டால் வேறு யாரும் இல்லை என்ற எண்ணம் தோன்றியதால் அங்கிருந்து உடனடியாக புறப்பட்டான்.
உடலில் ஏற்பட்ட காயங்கள் அனைத்தும் மாயமாய் மறைந்ததால் உற்சாகமாக வேட்டையாடி பல மிருகங்களின் மாமிசத்தை தன் அன்பிற்கினிய குடுமி சாமிக்கு அமுதாய் படைத்தான். மேலும் அன்றைய தினம் தாமரை குளத்தின் கரையில் பெண் சாமியை தரிசித்ததையும், பிறகு சிற்றருவியில் அவரைப் போன்ற மற்றொரு குடுமி சாமியுடன் விளையாடியதையும் விடிய விடிய அவருக்கு கதையாய் கூறினான். மட்டற்ற மகிழ்ச்சியோடு...
* திருக்காளத்தியில் கோவிலின் தெற்கு திசையில் 5.5 கிலோமீட்டர் தூரத்தில் தக்ஷிண காளி கோவிலும் அதன் அருகில் ஐந்து நிமிட நடை பயண தூரத்தில் பைரவ தீர்த்தமும் உள்ளது. பைரவர் தீர்த்தத்தில் சிவலிங்கமும் அதற்கு சற்று அருகில் நாய் வாகனத்துடன் கூடிய கால பைரவர் சிலையும் உள்ளது. பைரவ தீர்த்தத்தை பருகினால் அல்லது அதில் நீராடினால் எப்பேர்ப்பட்ட கொடிய நோயும் தீரும் என்பது பலரின் அனுபவத்தில் கண்ட உண்மையாகும்.
🙏🙏🙏
ReplyDeleteExcellent update
ReplyDelete