முந்தைய பகுதிகளை படிக்க...
- முன்னுரை, முதல் பயணம்
- குடிமல்லம், பொன்முகலி தீர்த்தம்
- குடுமி சாமியின் தரிசனம், பாரத்வாஜ தீர்த்தம்
- மயூர தீர்த்தம், மகாலிங்க தரிசனம்
- தட்சிண காளி, பைரவ தீர்த்தம்
சகஸ்ரலிங்க தீர்த்தம்
திண்ணன் திருக்காளத்தியில் நுழைந்து குடுமி சாமியை கண்ட நான்காம் நாள் இன்று. கடந்த மூன்று நாட்களிலும் பலவித அனுபவங்கள் கிடைத்ததாலும், இன்று எத்திசையில் சென்று தனது குடுமி சாமிக்கு உணவு தேடுவது என்று புரியாததாலும், இந்த மாய மலைக்குள் நுழைய சிறிது அச்சமாக இருப்பதாலும் இன்று அவரை தனியே விட்டு எங்கும் செல்லக்கூடாது என்ற முடிவில் இருந்தான். மேலும் அந்தணர் பூஜை செய்தபின் விட்டுச் சென்ற தடயங்களை கண்ட அவன், ஒவ்வொரு நாளும் உணவை கொண்டு வரும் இடைவெளியில், தான் இல்லாத நேரத்தில் வேறு யாரோ இங்கு வந்து தனது குடுமி சாமியை தொந்தரவு செய்வதாகவும் அவனுக்கு தோன்றியது.
இது போன்ற பல காரணங்களால், இன்று முடிந்த அளவு அவர் அருகிலேயே இருந்து, அவருக்கு உண்டான உணவை சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு தோன்றியது ஆனால் வெகுநேரமாகியும் உணவு கிடைக்கும் வேறு வழி எதுவும் தோன்றவில்லை என்பதால் அவன் முகத்தில் சற்று கவலை உண்டான நேரத்தில், அவன் செவியில் காற்றில் அசைந்தாடும் மணியின் ஒலி கேட்டது. ஒலி வந்த திசையை நோக்குகையில் அங்கே கழுத்தில் மணி கட்டியபடி ஒரு காளைமாடு நின்றிருந்தது. மாட்டைக் கண்டு மகிழ்ச்சியடைந்த திண்ணனும் இதுவே இன்று தனது பிரிய குடுமி சாமிக்கும், தனக்கும் கிடைத்த உணவு என முடிவு செய்து அதைப் பிடிக்க எத்தனித்தான். வழக்கமாக அவனைக் கண்டால் ஓடி ஒளிந்துக்கொள்ளும் பன்றியை போல் அல்லாமல் அந்த காளை மாடு அவனை நோக்கி வந்தது அவனுக்கு சற்று ஆச்சரியத்தை தந்தது.
அவனை நோக்கி வந்த மாடு, அவன் முன்பு நின்றிருந்த குடுமி சாமியை மூன்று முறை வலம் வந்தது. பின்பு அவ்விடத்தை விட்டு விலகி நடக்க ஆரம்பித்தது. வந்திருப்பது காளத்தியப்பரின் ரிஷப வாகனமே என்று புரியாத திண்ணன், அதை பிடிக்கும் நோக்கில் அதை நோக்கி வேக வேகமாக சென்றான். அவன் தொடர்ந்து வருவதை கண்ட ரிஷபமோ, குடுமி சாமியின் தென்கிழக்கு திசையில் சென்று அங்கிருந்த குகைக்குள் நுழைந்து சென்றது. கடந்த நான்கு நாட்களாக இங்கேயே இருந்த போதும் அக்குகையை பார்த்திராத திண்ணன், ஒரு மாடு நுழையும் அளவுக்கு அவ்வளவு பெரிய குகையை தான் கவனிக்க தவறியதை எண்ணி கண்டு ஆச்சரியம் கொண்டான்.
இம்மாட்டை விட்டால் இன்று உணவு ஏதும் கிடைக்காது என்ற காரணத்தினாலும், இந்த குகை எங்கு செல்கிறது என்று பார்க்கும் ஆர்வத்தினாலும் மாட்டை தொடர்ந்து குகைக்குள் நுழைந்தான். சிறிது நேரம் தொடர்ந்து சென்ற அவனுக்கு அதனுள் சூழ்ந்திருந்த இருள் அச்சத்தை விளைவித்து, உடலெங்கும் வியர்த்து கொட்டியது. அங்கு நிலவிய அதிக உஷ்ணத்தால் தொண்டை தாகத்தால் தவித்தது. சுமார் இரண்டு நாழிகை கழிந்த பின் வெளியுலக வெளிச்சம் அவன் கண்களுக்கு புலப்பட்டது. வேகவேகமாக வெளியே வந்த அவன் தான் தேடி வந்த மாட்டை காணாமல் போனதை கண்டு ஆச்சரியம் அடைந்தான்.
பிறகு தாகத்தைத் தீர்க்கும் பொருட்டு அருகில் பாறையில் இருந்து சிறிய அருவி போல் வழிந்து வந்த நீரை தனது கைகளில் பிடித்து பருகினான். அது வெய்யிலிங்கால கோனா என்று அழைக்கப்படும் திருக்காளத்தியின் முக்தி தரும் தீர்த்தங்களில் ஒன்றான சகஸ்ரலிங்க தீர்த்தம் என்பதை அறியாமலேயே... கதகதப்பான அந்நீரின் சுவை அவனுக்கு பிடித்திருந்தால் தனது உடல் வெப்பத்தை சமநிலையில் வைக்கும் பொருட்டு அத்தீர்த்தத்தில் நீராடவும் செய்தான். சகஸ்ரலிங்கேஸ்வரர் ஆலயம் அருகில் அமைந்துள்ள திருக்காளத்தியின் முக்தி தரும் தலங்களில் ஒன்றான சகஸ்ரலிங்க தீர்த்தம், அவன் ஆயிரம் வருடங்கள் அங்கு தவம் செய்த பலனை வாரி வழங்கியது...
சகஸ்ரலிங்க தீர்த்தத்தில் நீராடிய திண்ணன் மீண்டும் மாட்டைத் தேடி அருகிலுள்ள மேடான பகுதியை நோக்கி நடந்தான். அவன் அங்கு கண்ட காட்சியைக் கண்டு சொக்கிப் போனான். ஒரு கணம் தான் சொர்க்கலோகத்தில் உள்ளது போல் உணர்ந்தான். ஆம்! தாமரை மலரின் நடுவில் உள்ள மகரந்தத்தை போல் எல்லா பக்கமும் மலைகள் சூழ, நடுவில் ஆயிரம் கண்கள் கொண்ட ஒரு சிவலிங்கம் அற்புதமாய் காட்சியளித்தது. எதற்காக இங்கு வந்தோம் என்ற எண்ணம் கூட மறந்து போனது. தன்னைப் போலவே இரண்டு கண்கள் கொண்ட தனது குடுமி சாமிக்கு இங்கு எப்படி அவ்வளவு கண்கள் வந்தன என்று ஆச்சரியம் அடைந்தான். பின்னர் சுதாரித்து இதுவும் இந்த மாய மலையில் உள்ள தான் வணங்கும் குடுமி சாமியின் மற்றொரு உருவமே என எண்ணிய அவன், லிங்கத்தின் முன் விழுந்து வணங்கினான். முக்கண் கொண்ட ஈசன், சகஸ்ரலிங்க வடிவில் இருந்த காரணத்தினால் தனது ஆயிரம் கண்களின் வழியாகவும் தனது அருள் பார்வையை அவன் மீது வீசினார்.
பின்னர் தான் வந்த குகை வழியை நோக்கி மீண்டும் செல்ல எண்ணி, தான் குளித்த தீர்த்தத்தின் அருகே செல்ல, அக்குகை அங்கு இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தான். வேறு வழி ஏதும் இல்லாததால் எதிரில் தெரிந்த படிக்கட்டு போன்ற பாறைகளில் சென்று, ஒரு சிறு மலை உச்சியில் ஏறி, அங்கிருந்து நோட்டமிட்டு செல்லும் வழியை கண்டுபிடிக்க முயற்சித்தான். அப்போது அவனுக்கு வலபுறம் அந்த மலைத் தொடரிலேயே உயரமான முக்கோண வடிவ சிகரம் தன்னையறியாமலே அவனை ஈர்த்தது என்ற போதும், இடப்புறம் மலைக்கு வெளியே சற்று தூரத்தில் பொன்முகலி ஆறு அவனுக்கு பரிச்சயமான ஒன்றாக இருந்ததால் அந்தப் பக்கமே மலையில் இருந்து இறங்கினான். பின்னர் வழக்கம்போல ஆற்றங்கரையோரம் காணப்பட்ட சிறுசிறு விலங்குகளை வேட்டையாடி கொண்டு வந்து தனது குடுமி சாமிக்கு விருந்தாய் படைத்தான்.
*சகஸ்ரலிங்கமும், சகஸ்ரலிங்க தீர்த்தம் திருக்கோயிலின் தெற்கே 8 கிலோமீட்டர் தொலைவில் இயற்கையாகவே மலையால் சூழப்பட்ட அற்புதமான இடத்தில் அமைந்துள்ளது. தீர்த்தத்தின் அருகில் இருந்து திருக்காளத்தி கோவிலுக்கு செல்லும் யட்ச குகை என்று அழைக்கப்படும் ஒரு சுரங்கவழி இருந்ததாகவும் அது கடந்த நூற்றாண்டில் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டதாகவும் கூறுகின்றனர். இக்குகை வழியாகவே ரிஷப வாகனத்தில் இறைவன் திருக்காளத்தி திருக்கோயிலுக்குள் வந்து செல்கிறார் என்ற கருத்தும் உண்டு.
ஹரஹர தீர்த்தம்
இன்று திருக்காளத்தியில் திண்ணனுக்கு ஐந்தாம் நாள். பொழுது நன்றாக புலர்ந்த பின்னும் அவன் முந்தினம் கண்ட சகஸ்ரலிங்கத்தின் காட்சி கண்களை விட்டு அகலவில்லை. தான் கண்டது கனவா அல்லது நனவா என புரியாமல் தவித்து போனான். குறிப்பாக தன்னைப் போலவே இரண்டு கண்களை உடைய குடுமி சாமிக்கு எப்படி அங்கு ஆயிரம் கண்கள் இருக்க முடியும் என குழம்பிப் போனான். மேலும் அம்மாய மலைக்குள் தான் செல்லும் இடமெல்லாம் எப்படி தனது குடுமி சாமியின் உருவமும் வருகிறது என்ற காரணமும் அவனுக்கு புலப்படவில்லை.
மனதில் பல குழப்பங்கள் இருந்தபோதிலும் அவன் குடுமி சாமியின் மீது கொண்ட அன்பு மட்டும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கூடிக்கொண்டே இருந்தது. குறிப்பாக தான் துணையாக இருக்கும் குடுமி சாமி, தனக்குத் துணையாக செல்லும் இடங்களில் எல்லாம் பலவித வடிவங்கள் எடுத்து தன் கூடவே வருவதாக தோன்றியது. அவர் தன் கூடவே வருவதால் அம்மலை மீது இருந்த பயம் அவன் மனதில் இருந்து மெல்ல விலகியது. பயம் விலகியதால் மனமும் ஓரளவு தெளிவை அடைந்தது. மனம் தெளிவடைந்ததால் அன்றைய வேட்டைக்கு உற்சாகமாக கிளம்பினான்.
புதிய உற்சாகம் ஏற்படும் போது புதுப்புது இடங்களை நாடிச் செல்வது மனித இயல்பே... அதன்படி தான் வழக்கமாகச் செல்லும் நதிக்கரை ஓரம் செல்லாமல் மலைக்கு பின்புறம் கிழக்கு திசையில் உள்ள இடங்களை காணும் ஆர்வத்துடன் அத்திசையை நோக்கி நடந்தான். சுமார் நான்கு மைல் தூரம் நடந்தபின் மலையின் நடுவே பிளவு ஒன்று தென்பட்டது. பிளவின் நடுவே தென்பட்ட மலைச் சிகரம் அவன் முன் தினம் பார்த்த முக்கோண வடிவ சிகரத்தின் பின்புறம் போல் தோன்றியது. பொதுவாக மலைகள் இடையே காணப்படும் பிளவுகளில் வழியில் நீர்நிலைகள் இருக்கக்கூடும். நீர்நிலைகளின் அருகில் பல விலங்குகளும் வசிக்க கூடும் என்பதால் இன்றைய தினம் நிச்சயம் தனது குடுமி சாமிக்கு பெரிய விலங்கின் மாமிசத்தை படைக்க வேண்டும் என்று எண்ணிய திண்ணன் உற்சாகமாகவும், தைரியமாகவும் அவ்வழியே சென்றான்.
மலையில் இருந்து வழிந்து ஓடிவரும் சிற்றாறு போல காணப்பட்ட நீர் நிலையின் வழியே, ஒரு சுமார் ஒரு நாழிகை நடந்ததும், இடதுபுறம் மேடான பகுதியில் இருந்த ஒரு அழகான ஆலயத்தை கண்டான். இதுவரை வயல் வெளியிலும், ஆற்றங்கரையிலும் திறந்த வெளியில் மட்டுமே உள்ள கோயில்களில் இறைவனை தரிசித்த அவனை, அந்த அடர்ந்த காட்டில் கட்டப்பட்ட அழகான கோவிலின் அழகு சுண்டி இழுத்தது. மேலும் கோவிலில் இருந்து கேட்ட மணியோசை அங்கு யாரோ உள்ளனர் என தெரிவித்தது. ஆர்வத்துடன் கோயிலுக்குள் சென்ற அவன், அங்கு யாரும் இல்லாததை கண்டு ஆச்சரியம் அடைந்தாலும், அக்கோவிலில் மற்றொரு வடிவில் இருந்த தனது குடுமி சாமியை ஆனந்தமாக வணங்கினான். பின்னர் அக்கோயில் வளாகத்தில் மலை பாறையை ஒட்டியபடி இருந்த குளக்கரை ஓரம் அமர்ந்து இளைப்பாறினான்.
அக்குளத்தில் தானாக பொங்கி வரும் நீரை கண்டதும் உற்சாகம் அடைந்த அவன், அதை தனது இரு கைகளாலும் அள்ளி பருகி அதன் சுவையில் மெய்மறந்து போனான். பிறகு தனக்குப் பிடித்த நீரின் சுவை தனது குடுமி சாமிக்கும் பிடிக்கும் என்ற எண்ணத்தில் தனது இரு கைகளாலும் அத்தீர்த்தத்தை அள்ளினான். கைகளில் அள்ளிய நீரின் அளவு தனது குடுமி சாமிக்கு போதாது என்ற எண்ணம் தோன்றியதால் தனது வாயிலும் தன்னால் முடிந்த அளவு நீரை உறிஞ்சி எடுத்து கொண்டான். நேராக கோவிலினுள் சென்று குடுமி சாமியின் மேல் தன் கைகளில் இருந்த தீர்த்தத்தை ஊற்றிய அவன், வாயிலிருந்த தீர்த்தத்தையும் அவர் மீது உமிழ்ந்தான்.
அச்செயலானது அவனது வாழ்வை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் நிகழ்வு என்பதை உணராமலே...
* திருக்காளத்தி கோவிலிலிருந்து சுமார் 5.5 கிலோமீட்டர் தொலைவில் ஹரஹர தீர்த்தத்தின் ஓரம் உள்ள சிதிலமடைந்த கோவிலையும், அதிலுள்ள லிங்கத்தையும் இன்றும் காணலாம்.
அடுத்த பகுதியை படிக்க...
Comments
Post a Comment