ரைன் நதிக்கரையினிலே...5 பிரமாண்ட நகரில்




ரைன் நதிக்கரையினிலே...

5. பிரமாண்ட நகரில்
(Frankfurt city)


 14 அக்டோபர் 21

இன்று எங்கள் அலுவலகத்தின் Warehouseக்கு அழைத்துச் சென்றனர்.  Warehouse 90 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. செல்லும் வழி  பெரும்பாலும் மலைப்பாதையில் அமைந்திருந்தது. எங்கு பார்த்தாலும் பசுமையாக தென்பட்டது. எப்படித்தான் இந்த ஊரை இவ்வளவு அழகாக பராமரிக்கிறார்கள் என்று ஆச்சரியம் ஏற்பட்டது.  ஒரே வார்த்தையில் கூறினால் "அற்புதம்".


15 அக்டோபர் 2021

Eltville அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த நாங்கள், ஒரு வார முடிவில் தனிப்பட்ட காரணங்களுக்காக எங்கள் அலுவலகம் அருகில் உள்ள Walluf அந்த இடத்தில் உள்ள Hotel Ruppertக்கு இடம் பெயர்ந்தோம்.  இது Niderwalluf ரயில் நிலையத்திற்கு அருகில் அமைந்திருந்ததால் வெளியே சென்று வர மிகவும் எளிதாக இருந்தது. மேலும் ஹோட்டல் ரைன் நதிக்கரைக்கு அருகில் இருந்ததால் மாலை அங்கு சென்று உலாவி பொழுதை கழித்தோம்.


16 அக்டோபர் 2021 சனிக்கிழமை


பிரம்மாண்ட நகரில் ஒரு நாள்...

இன்று வார இறுதி விடுமுறை என்பதாலும் உடன் வந்த நண்பர்களில் சில பேர் பிற நாடுகளுக்கு புறப்படுவதாலும் ஷாப்பிங் செய்ய எண்ணி பெரு நகரமான பிராங்ஃபர்ட் செல்ல திட்டமிட்டோம். நாம் ஏற்கனவே சென்ற மைன்ஸ் ஒரு கலாச்சார புதையல், ருடெஷெய்ம் ஒரு இயற்கை பொக்கிஷம் என்றால் பிராங்ஃபர்ட் ஒரு பிரம்மாண்ட குவியல் என அங்கு சென்றதும் தெரிந்து கொண்டேன்.


பிராங்ஃபர்டின் விண்ணை முட்டும் கட்டிடங்கள்


Neiderwalluf ரயில்வே ஸ்டேஷனில் இருந்து RB10 ரயிலின் மூலம் சுமார் ஒரு மணி நேர பயணத்திற்கு பிறகு  பிராங்ஃபர்டை சென்றடைந்தோம். Frankfurt (Main) Hauptbahnhof 24க்கும் மேற்பட்ட நடைமேடைகள் கொண்ட மிகப்பெரிய ரயில் நிலையம். ஜெர்மனியின் பிற முக்கிய நகரங்கள் மற்றும் பிரான்ஸ் உட்பட அருகில் உள்ள நாடுகள் அனைத்திற்கும் செல்லும் ரயில்கள் இங்கிருந்து புறப்படுகின்றன.  ரயில் நிலையத்திற்கு வெளியே உள்ள சுற்றுலா பேருந்தில் நண்பர்கள் நகர்வலம் வர, நான் வழக்கம்போல தன்னந்தனியே எனது காலடியால் நகரத்தை அளக்க ஆரம்பித்தேன்.  



அகலமான சாலைகள், அதில் செல்லும் அழகான பேருந்துகள், டிராம் வண்டிகள் பலவற்றைக் கடந்து முதலில் 1.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள  பழைய நகரமான ரோமரை (Romer) அடைந்தேன். ஜெர்மனி நாட்டைப் பொருத்தவரை பெரும்பாலான நகரங்களில் சர்ச், மியூசியம் மற்றும் மார்க்கெட் பகுதி ஆகியவை அடிப்படை விஷயங்களாகும். அந்நாட்டிற்கே உரிய வழக்கப்படி மக்கள் நெரிசல் நிறைந்த ஒரு மார்க்கெட் பகுதியான ரோமரில்  கதீட்ரல் எனப்படும் தேவாலயம் மற்றும் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. கதீட்ரல் மிகவும் உயரமாக இருந்தது. ரோமர் பகுதியில் இருந்த முக்கோண வடிவ கட்டிடங்களும், கண்ணாடி கட்டிடங்களும் வித்தியாசமாகவும், கண்ணைக் கவரும் வண்ணம் மிகவும் அழகாகவும் இருந்தது. அவற்றின் முன்பு நின்று மக்கள் கூட்டம் கூட்டமாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். (நானும் தான்).


 
Romerன் கண்ணாடி கட்டிடங்கள்


பிறகு அவற்றை கடந்து பிராங்க்ஃபர்டின்  மற்றோரு முக்கிய மார்க்கெட் பகுதியை நோக்கி மெயின் ஆற்றின் கரையில் நடந்தேன். விஸ்பாடன் நகரில் ரைன் நதி பாய்வது போல்  பிராங்ஃபர்ட் நகரில் அதன் கிளை நதியான மெயின் நதி பாய்ந்து நகருக்கு அழகு சேர்க்கிறது. இரு நகரிலும் அதிகமான மக்கள் நடந்தும் மிதிவண்டிகளிலும் செல்வதைக் கண்டேன். ஜெர்மனியில் பெரும்பாலான சாலைகளில் மிதிவண்டிகளுக்கென தனிப்பாதை உள்ளது. தேவைப்பட்டால் மக்கள் தங்கள் மிதிவண்டிகளை பேருந்து மற்றும் ரயில்களில் ஏற்றிச் செல்லலாம். மேலும் எங்கு வேண்டுமானாலும் நிறுத்தி பூட்டிவிட்டு செல்லலாம் என்ற நிலை உள்ளது. இது தவிர வாடகை சைக்கிள்களும் நின்று கொண்டே செல்லும் மின்சார ஸ்கூட்டர்களும் அதிகம் உள்ளன. 


மின்சார ஸ்கூட்டர்


இதன்பிறகு Primark (ப்ரைமார்க்) எனப்படும் பெரிய துணிக்கடையில் நுழைந்தேன். இங்குதான் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் தங்கள் ஊர்களுக்கு செல்லும்போது துணிகளை வாங்கிச் செல்கின்றனர்.  ஓரளவு குறைந்த விலையுள்ள துணிக்கடை ஆனால் இதில் விற்கும் பெரும்பாலான தயாரிப்புகள் இந்தியா, வங்கதேசம் மற்றும் சீனாவில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இக்கடை நகரின் முக்கிய பகுதியான Marktplatzல் அமைந்துள்ளது. 



ஓங்கி உயர்ந்த கட்டிடங்கள்



பிராங்க்பர்ட் நகரம் ஒரு சர்வதேச நகரம் என்பதால் பல நாடுகளைச் சேர்ந்த மக்கள் இங்கு வாழ்கின்றனர். நான் சென்ற நேரத்தில் ஜெர்மனி அரசுக்கு எதிரான ஒரு போராட்டம் நடந்து கொண்டிருப்பதை காண முடிந்தது. பிறகு ஒருமுறை இதே நகருக்கு சென்றபோது சமீபத்தில் வங்கதேசத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருந்ததையும் பார்க்க முடிந்தது. பிறகு நமது ஊர் உணவகமான சரவணபவனுக்கு ஆவலுடன் சென்றேன். நீண்ட நாட்களுக்கு பிறகு கூட்டு பொரியல் உடன் கூறிய சாப்பாட்டை (Meals) சாப்பிட்டேன். அதன் விலை வெறும் 15 யூரோ (சுமார் 1350 ரூபாய் மட்டுமே). 

பிறகு நண்பர்களுடன் மீண்டும் Primmark செல்லும் வழியில் உள்ள ஓங்கி உயர்ந்த கட்டிடங்களை பார்க்கப் பார்க்க நகரின் பிரம்மாண்டம் என் கண்களுக்கு விருந்தாகியது‌. அவற்றைப் பார்க்க பார்க்க, நகரின் உயரமான கட்டிடங்களில் ஒன்றான மெயின் டவருக்கு செல்ல ஆவல் கொண்டேன். சுமார் அரை கிலோ மீட்டருக்கும் மேல் நீண்ட வரிசையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக  நின்றேன். வார இறுதி தினம் என்பதால் சற்று கூட்டம் அதிகம்தான் என்றபோதும் எனது ஆர்வம் அதைவிட அதிகமாக இருந்ததால் கூட்டத்தை பொருட்படுத்தவில்லை. நுழைவு கட்டணம் 9 யூரோ. 56 மாடி உயரம் கொண்ட கட்டிடத்தில் 53 மாடிகள் வரை செல்ல மின்தூக்கி (lift) உள்ளது. ஒரு வழியாக அனைத்தையும் கடந்து கட்டிடத்தின் உள்ளே நுழைந்து உச்சியை அடைவதற்குள் சூரிய அஸ்தமனமாகி நகரை இருள் சூழ்ந்திருந்தது. அதுவும் நல்லதுதான். ஆம்! மின்விளக்குகளால் ஜொலித்த அந்நகரின் பேரழகு நம் கண்களை கொள்ளை கொண்டது. நடப்பதெல்லாம் நன்மைக்கே...



மின்னொளியில் ஜொலிக்கும் பிராங்க்ஃபர்ட்


பின்பு யூரோ ஷாப் (Euroshop) எனப்படும் கடைக்குச் சென்று குழந்தைகளுக்கு சில பரிசுகளையும் சாக்லேட்டுகளையும் வாங்கி வந்தேன். ஒருவழியாக ரயிலைப் பிடித்து இரவு 10 மணி அளவில் எங்கள் தங்குமிடத்தை அடைந்தேன். மொத்தத்தில் அருமையான நாள்....

தொடரும்...



மேலும் சில புகைபடங்கள்


பிராங்க்ஃபர்ட் ரயில் நிலையம்



RB10  பிராங்க்ஃபர்ட் - Walluf train


சாலையில் செல்லும் டிராம் வண்டி


மெயின் நதி


மெயின் நதி பாலம்


ரோமர் பகுதியில்


ஓங்கி உயர்ந்த கட்டிடங்கள்


ஓங்கி உயர்ந்த கட்டிடங்கள்


ஓங்கி உயர்ந்த கட்டிடங்கள்


மார்க்கெட் பகுதியில்


ஒரு நினைவு சின்னம்


மெயின் டவர் மேலிருந்து


மெயின் டவர் மேலிருந்து


மெயின் டவர் மேலிருந்து


மெயின் டவர் மேலிருந்து



அடுத்த பகுதியை படிக்க...


Comments

  1. 👏👏👏👏👏👏👏👏 Good narrative skills 👍

    ReplyDelete

Post a Comment