1990களில் சிறுவனாக சுற்றித் திரிந்த எனக்கு அப்போதெல்லாம் சாலையில் திடீரென வேறொரு கிரகத்தில் இருந்து வந்து இறங்கிய ஒரு பறக்கும் தட்டை போல காட்சியளித்த கார்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்ததில் துவங்குகிறது எனது கார் கால நினைவுகள். அந்த காலகட்டத்தில் பொழுது போகாத போது எப்போதாவது சாலையில் செல்லும் ஓரிரு கார்களை கணக்கெடுப்பதும் அந்த எண்ணிக்கையை நண்பர்களிடம் பகிர்ந்து பீற்றிக் கொள்வதுமே ஒரு வித பொழுதுபோக்குதான். கீழ் நடுத்தர வர்க்க (Lower middle class) குடும்பத்தில் பிறந்த எனது வாழ்விலும் எதிர்காலத்தில் ஒரு நாள் அந்த கார்கள் கடந்து செல்லும் என அப்போது கனவில் கூட நான் எண்ணியது கூட இல்லை.
படிப்பு, வேலை, குடும்பம் என வாழ்க்கையின் அந்தந்த கட்டங்களை கடக்க கடக்க, தொடந்து உழைப்போர்க்கு தக்க நேரத்தில் அனைத்தும் கைகூடி வருவதுதான் நமது வாழ்வின் தத்துவம் என்பது போல சிறு வயதில் நான் ஆச்சர்யப்பட்ட அந்த விஷயமும் என் வாழ்வில் வந்தது. எனது முதல் காரான Hyundai Santro xing உடனான எனது அனுபவங்களே இக்கட்டுரை.
முதல் கார் வாங்கிய அனுபவம் முதல் பைக் வாங்கிய ஒரு அனுபவத்திற்கு சற்றும் குறைந்தது அல்ல… அது பழையதாக இருந்தாலும் கூட… கார் என்றாலே ஆடம்பரம் என்ற எனது மிடில் கிளாஸ் எண்ணத்தை காலம் மெல்ல மெல்ல கரைக்க ஆரம்பித்த தருணத்தில் முதல்முறையாக சுமார் 700 கிலோ மீட்டருக்கு மேல் சென்ற ஹம்பி பயணத்தில் (மகிழ்ச்சி தந்த மகிழுந்து பயணம்) கிடைத்த அனுபவம் அந்த வாகனங்களின் மீது ஒரு மரியாதையை உருவாக்க செய்தது. ஆனால் பட்ஜெட் போட்டு பழக்கமான வாழ்வில் கார் என்பது கானல் நீரே… எனவே வேண்டாம் வேண்டாம் என விலகிச் செல்ல, தானாகவே வாழ்வில் வந்தது இந்த மகிழுந்து. அதிலும் FC ஆன நிலையில் தனது வாழ்வின் இறுதி கட்டத்தில் சில காலம் என்னுடன் பயணித்து நீங்கா நினைவுகளை அள்ளித் தந்தது எனது சான்ட்ரோ.
ஒரு வாகனத்தை ஓட்ட நாம் என்ன செய்ய வேண்டும்? முதலில் அதனுடன் பேச வேண்டும். ஆம்! முதல் முறை காரில் அமர்ந்தவுடன் செருப்பை கழட்டி விட்டு, கால் மூலமாக காருடன் பேசும் வித்தையை கற்றுக் கொடுத்தான் நண்பன் பாபு (நன்றி). அதிலிருந்து எந்த காரை எடுத்தாலும் முதல் முறை அமரும் போது காலணியை கழட்டி விட்டு அமர்வது தான் வழக்கம். அப்போதுதான் அந்த மகிழுந்தின் மன ஓட்டத்தையும் அது பேசும் மொழியையும் அறிய முடியும்.
நீச்சல் மற்றும் கார் ஓட்ட கற்றல் என இரு குறிக்கோள்கள் வெகு நாளாய் மனதில் இருந்தவை. அதில் நீச்சல் அவ்வளவு எளிதாக பிடிபடாமல் டிமிக்கி கொடுக்க, ஒரு சில நாட்களிலேயே கார் ஓட்டுதல் எனது வசமாகியது. குறிப்பாக ஓட்ட ஆரம்பித்த மூன்றாவது நாளே பார்க்கிங்கில் எனது காரை ஒரு பக்கமாக இடித்த பிறகு முதல் சம்பவம் என்பதால் மனது ஒருபுறம் வலித்தாலும், அடுத்த இரு நாட்களுக்கு வண்டியை தொடவே லேசாக உதறல் எடுத்தாலும், மறுபுறம் அந்த மகிழுந்தின் மையமான கண்ட்ரோல் தானாகவே பிடிபட்டது. சந்து பொந்துகள் நிறைந்த எனது பகுதியில் இருந்து வெளியே வர வேண்டி இருந்ததாலும், நெரிசல் மிகுந்த பல்லாவரம்-பம்மல் சாலையில் அடிக்கடி ஒட்ட வேண்டி இருந்ததாலும் அடுத்த ஒரு மாதத்திலேயே ஒரு தெளிவு பிறந்தது. குறிப்பாக போக்குவரத்து நெரிசல் காரணமாக மூன்று கிலோ மீட்டர் தொலைவை கடக்க மூணே கால் மணி நேரம் ஆன அந்தப் பயணம் என்னை தெளிவான ஒரு ஓட்டுநர் ஆக்கிவிட்டது. ஆரம்ப நாட்களில் வண்டியை பார்க் செய்ய, சிக்னலில் திருப்ப, யூ-டர்ன் செய்ய, மேடுகளில் ஏற உதவிய பல நல்ல உள்ளங்களை இந்நேரத்தில் நினைவு கூர்கிறேன் (நன்றி). அதன் பிறகு மாதாமாதம் மளிகை சாமான் வாங்க டீமார்ட் செல்வது கூட சுற்றுலா செல்வதை போல சுகமான பயணமானது.
அடுத்த சில மாதங்களில் தொலைதூரப் பயணங்களில் நண்பர்களின் மகிழுந்தை ஓட்ட கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பற்றி கொண்டு எனது காரை மட்டுமின்றி பலரக கார்களையும் ஆர்வமுடன் ஓட்ட ஆரம்பித்தேன். குறிப்பாக காளஹஸ்தி முதல் தேனி வரை நீண்ட முதல் பயணத்திலேயே திருப்பதி முதல் வேலூர் மற்றும் நாமக்கல் முதல் திண்டுக்கல் வரை ஓட்ட வாய்ப்பு கிடைத்தது (நன்றி: நண்பர் சிவா). அதிலும் காரில் இருந்த நண்பர்கள் அனைவரும் தூங்கிய பின் அந்த நள்ளிரவில் அற்புதமான ஆறு வழி சாலையில் வீடியோ கேம் போல அமைக்கப்பட்டிருந்த ரிஃப்ளெக்டர்கள் (Reflectors) நடுவே அந்த எக்கோஸ்போர்டில் (EcoSport) முதல் முறை 100ஐ தொட்ட அனுபவம், முதல் காதலுக்கு சற்றும் சளைத்தது அல்ல…
போதாக்குறைக்கு எங்கு சென்றாலும் தனது பலீனோவை (Baleno) ஓட்ட தந்த நண்பன் பிரகாஷின் உடல்நிலையும், விலைமதிப்பான தனது ஸ்கோடா குஷாக்கை (Skoda Kushaq) நம்பி தந்ததுடன் முன்னால் அமர்ந்து கொடைக்கானல் மலை ஏறவும் வழிகாட்டிய ஆனந்தின் உதவியும் (நன்றி) எனது பயணத்தை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்றது. ஒரு வேலையை மனதிற்கு பிடித்து செய்வதில் உள்ள மகிழ்ச்சியை கார் ஓட்டுதல் எனக்கு கற்றுத் தந்தது.
தந்தைக்கும் மகளுக்கும் ஆயிரம் அற்புத நினைவுகள் இருந்தாலும் அதில் ஒரு சில நினைவுகளில் எனது சான்ட்ரோவும் மகிழ்ச்சியுடன் பங்கு பெற்றது. முதல் முறை அவளை காரில் அழைத்து செல்லும்போது பெரும்பாலும் பைக்கில் மட்டுமே சென்றிருந்த அவள், நான்கு சக்கரத்தில் இருபுறமும் ஆடி அசைந்து சென்ற வண்டி, மிதப்பது போல இருப்பதாக கூறியது இன்றும் நினைவில் உள்ளது. அது தவிர ஒருமுறை பழுதாகி சாலையில் நின்ற சான்ட்ரோவை வழிப்போக்கன் ஒருவன் ‘டப்பா வண்டி’ என திட்டிவிட, அவளுக்கு வந்த கோபம் அதன் மேல் அவள் வைத்த பாசத்தை உறுதி செய்தது.
மழை நாட்களில் மகளுடன் காரில் அமர்ந்து செல்லும்போதெல்லாம் வெளியே மட்டுமின்றி உள்ளேயும் மகிழ்ச்சி சாரல் அடிக்கும். அவள் கோபித்துக் கொள்ளும் போதெல்லாம் காரில் எனது பாசத்தை வெளிப்படுத்தும் பாடல் ஒன்றை (‘தாயே தாயே மகள் என வந்தாள்’ - மகாராஜா) ஒலிக்கச் செய்து சமாதானப்படுத்துவதும் அதைக் கேட்டதும் அவள் முகத்தில் தவழும் மெல்லிய புன்னகையும் எங்கள் மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று. அதுவரை குடும்ப விழாக்களுக்கு கூட சுடிதார் மட்டுமே அணிந்து பைக்கில் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்த எனது மனைவியை தனக்கு பிடித்த புடவையை கட்டிக்கொண்டு முன் சீட்டில் ஜோராக அமர வைத்து அழகு பார்த்தது இந்த கார்தான். மேலும் எந்த வாகனத்தில் சென்றாலும் லேசாக பயம் கொள்ளும் என்னுடைய அக்கா கூட எனது திறன் மீது நம்பிக்கை கொண்டு தைரியமாக முன் சீட்டில் அமர்ந்து வந்தவாசி வரை சென்று வந்ததும் இந்த காரில் தான். இது மட்டும் இன்றி திடீரென உடல் நலம் குன்றிய எனது தாயை நள்ளிரவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உதவியதும் இந்த கார் தான்.
திருமணமான பெண்கள் ஏதாவது ஒரு காரணம் கொண்டு அடிக்கடி அம்மா வீட்டுக்கு செல்வதை போல நானும் அதிக மகிழ்ச்சியுடன் இருக்கும்போது காரில் ஒரு ரவுண்டு செல்வதும், கடும் துன்பம் இருக்கும்போது ஒரு ரவுண்டு. அதைத் தவிர அவ்வப்போது எங்காவது வாகனத்தை ஒரு ஓரமாக நிறுத்தி கதவுகளை சாற்றிக்கொண்டு மனதிற்கு இனிமையான ஒரு பாடலை கேட்டு ஆசுவாசப்படுவதும் எனது வழக்கமானது. கிட்டத்தட்ட நடமாடும் ஒரு வீட்டை போல என்னுடன் இருந்தது இந்த கார். யாருமே உடன் இல்லாத தனிமையில் துணையிருக்கும் உற்ற நண்பனைப் போல அலுவலகம் விட்டு வரும் நள்ளிரவில் துணையாய் இருந்தது இந்த சான்ட்ரோ தான். எத்தனை பாடல்கள் இருந்தாலும் வாகனத்தை கிளப்பியவுடன் முதலில் போடுவது கந்த சஷ்டி கவசம்தான். அந்த பாசிட்டிவ் வைப்ரேஷன் எனது பயணம் முடியும் வரை தொடரும்.
எங்கு சென்றாலும் ஐந்து நிமிடத்திற்கு முன்பே புறப்பட்டு வாகனத்தை ஓரளவு சுத்தமாக்கிய பின் புறப்படும் பழக்கம் ஏற்கனவே ஓரளவு நேரம் தவறாமையை கடைபிடிக்கும் எனக்கு எளிமையாகவே இருந்தது. இந்த கார் எனது வாழ்வில் வந்தவுடன் வயதான எனது பிளாட்டினா கூட அதனுடன் போட்டி போட்டுக் கொண்டு சூப்பராக ஓடியது அதிசயமே. கால ஓட்டம் மற்றும் வேலைப்பளு காரணமாக நான் வழக்கமாக படிக்கும் புத்தகங்கள் தடை பட, ஆடியோ கதைகளை கேட்க ஆரம்பித்ததும் இந்த வண்டியில் தான். வேலை செய்யும் அலுவலகம் மாறிவிட்ட நிலையில் அருகில் உள்ள போரூருக்கே மூன்று பேருந்துகளை பிடித்து செல்லும் நிலை ஏற்பட்ட போதும், நள்ளிரவில் திரும்பும் வழியில் தெருநாய்களின் தொல்லைகளில் இருந்து காப்பாற்றவும், கார் காலத்தில் மழையில் இருந்தும் பனி காலத்தில் கடும் குளிரிலிருந்தும் காத்ததும் இந்த கார் தான்.
இப்படி பல பல சுகமான நினைவுகள் இருப்பினும், கால வெள்ளத்தில் நிகழ்ந்த நினைவுகளை தவிர அனைத்திற்கும் ஒரு முடிவு உண்டு என்பதே நிதர்சனம். வயதானவுடன் உடலின் ஒவ்வொரு பாகங்களும் மெல்ல மெல்ல சோர்ந்து செயல் இழந்து போவது போல அடிக்கடி பழுதாகி செலவு வைக்க ஆரம்பித்தது எனது சான்ட்ரோ. அந்த செலவிற்கும் மேலாக நம்பி எங்கும் எடுத்துக் கொண்டு போக முடியாத நிலையம் உண்டாக, வேறு வழி இல்லை விடை தந்து தான் ஆக வேண்டும் என்ற நிலை உண்டானது.
சென்று வா எனது பிரிய சான்ட்ரோ. Goodbye.
பிற பதிவுகளை படிக்க…
Nice car
ReplyDelete