சிறப்பான துவக்கம் (Happy weekend)
வார இறுதி என்பது வாரத்தின் முடிவல்ல… அது எதிர்வரும் வாரத்தின் துவக்கம்.
ஆம்! அந்த இரு நாட்களில் நிகழும் நிகழ்வுகள், அதில் நாம் செய்யும் செயல்கள், அதிலிருந்து நமக்கு கிடைக்கும் அனுபவங்கள் ஆகியவையே அடுத்து வரும் வாரத்தில் நம்மை இயக்கும் எரிபொருளாக விளங்குகின்றன. அதற்காக வார இறுதி நாட்களில் அரும்பெரும் சாதனைகள் எதுவும் நாம் செய்ய தேவையில்லை. நமது வழக்கமான பணிகளையே சற்று ரசித்து, அனுபவித்து செய்யும் போது அது நமக்குள் ஒரு உற்சாகமாகத்தை தோற்றுவிக்கும். அந்த உற்சாகம் வார இறுதியையும் கடந்து, அடுத்துவரும் வாரத்தில் நமது அலுவலக பணிகளிலும் எதிரொலித்து நம்மை திறம்பட செயல்பட வைக்கும்.
அப்படி மகிழ்ச்சியுடன் அனுபவித்த ஒரு கடந்த இரு நாட்களில் நடந்த சாதாரணமான நிகழ்வுகளின் தொகுப்பே இக்கட்டுரை.
இறையுடன்
‘அவனின்றி அருளின்றி ஒரு அணுவும் அசையாது’ என்பதற்கேற்ப இந்த வார இறுதியின் முதல்நாள் (சனிக்கிழமை) காலையிலேயே என் மகளின் திருவாய் மொழியால் என்னை அழைத்து, குன்றேறி வந்து தன்னை தரிசிக்குமாறு என்னை அழைத்தான் எங்கள் குன்றத்தூரில் குடிகொண்ட குமரன். அதுவும் கூட்டம் குறைவான காலை வேலையில் மகளுடன் பேசிக்கொண்டே மலையேறி, முருகனை வழிபாட்டுடன் எனது இந்த வார இறுதி சிறப்பாக துவங்கியது. கோவிலில் இருந்து வீட்டிற்கு வரும் வழியில் ஹோட்டல் கோகுலில் நாங்கள் உண்ட வெண்பொங்கல் அமிர்தம் போல நெஞ்சில் இறங்கி புத்துணர்ச்சி அளித்தது.
இல்லாளுடன்
எல்லாம் வல்ல இறை தரிசனத்துடன் துவங்கிய வர இறுதியின் அடுத்த இரு நாட்களில் எப்போதும் உடன் இருக்கும் எனது இல்லாளின் பணிசுமையை கொஞ்சம் பகிர்ந்து கொண்டேன். ஆம்! ஆயுள் முழுவதும் நம்மை பேணிக் காக்கும் அவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது பொன்னோ பொருளோ அல்ல… ஒரு சில மணித்துளிகளும் அதில் சிறு சிறு உதவிகளும் தான்… வாரம் முழுதும் அலுவலக பணி மற்றும் அதை சார்ந்த சிந்தனைகளிலும் மூழ்கி இருப்பதால் இடைப்பட்ட இந்த இருநாட்களில் இல்லாளுடன் அமர்ந்து சிறிது பேசவும், பாத்திரம் கழுவுதல், துணி உலர்த்துதல் என ராமருக்கு உதவிய அணில் போல சிறு சிறு உதவிகளை செய்தேன். அது எனக்கு மட்டுமல்ல என்னை காக்கும் அவளுக்கும் சற்று ஆசுவாசம் அளித்திருக்கும் என்ற நம்பிக்கையுடன்.
திரையுடன்
திரைப்படங்கள் இன்றி ஓய்வுகள் சிறப்பதில்லை என்பதால் வார இறுதி நாட்களில் சிறிது நேரம் அமைதியாய் அமர்ந்து தொலைக்காட்சியில் படம் பார்ப்பதில் உள்ள சுகமே தனிதான்… அதிலும் வன்முறை, ஆபாசம், இரைச்சல் ஏதுமின்றி நமது ரசனைக்கேற்ற ஒரு நல்ல படத்தை (Feel good movie) முதன்முறை பார்க்கும் போது அது ஒரு சிறந்த அனுபவமாகும். அப்படிப்பட்ட அனுபவத்தை இந்த வார இறுதி நாளில் தந்தது Disney hotstar OTT தளத்தில் இருந்த ‘பறந்து போ’. ஒரு குறும்புக்கார சிறுவனுடன் அவன் தந்தை மேற்கொள்ளும் பயணத்தை அழகான திரை ஓவியமாக மாற்றி இருந்தார் இயக்குனர் ராம். அவசியம் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.
நண்பர்களுடன்
ஆடையில்லா மனிதன் மட்டுமல்ல… நம் மீது அன்பு கொண்ட நண்பர்கள் இல்லாதவர்களும் அரை மனிதர்களே… சமீபத்தில் மறைந்த நண்பன் பிரகாஷின் நினைவுகளை தவிர்க்கும் பொருட்டு சில மாதங்கள் தனிமையில் கழித்தாலும் அது ஒரு ஆறாத ரணமாகவே நெஞ்சில் உள்ளது. ஆனால் அதற்கான மருந்தும் என் நண்பர்களிடமே உள்ளது. ஆம்! வெகு நாட்களுக்கு பிறகு மற்ற நண்பர்களுடன் ஒரு சில மணி நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைத்தது. அதிலும் குறிக்கோள் ஏதுமின்றி அவர்களுடன் அங்கும் இங்கும் அலைந்தது, பேசிக்கொண்டே தெருதெருவாக நடந்து சென்றது, சாலையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களுடன் ஒரு சில நிமிடங்கள் விளையாடியது என பற்பல அனுபவங்கள் இந்த நாட்களை சிறப்பாக்கின.
மகளுடன்
வாரம் முழுதும் அலுவலக பணியில் மூச்சுமுட்ட முழ்கிக் கிடக்கும் ஒருவனுக்கு வார இறுதியில் கிடைக்கும் முத்து போன்ற அறிய வாய்ப்பே மகளுடன் செலவிடும் நேரம். குறிப்பாக சனி, ஞாயிற்று நாட்களில் எனது மகளை நடன வகுப்புக்கு எனது பைக்கில் அழைத்துச் செல்லும் போது அவள் எனது தோளில் சாய்ந்து பேசும் கதைகளுக்கும், அவள் போடும் செல்ல சண்டைக்கும் ஈடான ஓன்று இந்த உலகில் ஏதுமில்லை. மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு இறைவன் அளித்த வரம் இது. அதிலும் இந்த ஞாயிற்றுக்கிழமை மாலையில் மழை பெய்த காரணத்தினால் அவளுடன் இசையை ரசித்துக் கொண்ட காரில் சென்றது சுகமான அனுபவம். மழை பொழிந்தது வெளியில் மட்டுமல்ல… எனது மனதிலும் தான்.
வாசிப்புடன்
இப்போதெல்லாம் முன்பு போல படிப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை என்பதால் அலுவலகத்திற்கு சென்று வரும் போது மட்டும் ஆடியோ புத்தகங்களை கொஞ்சம் கொஞ்சமாக பழகிக் கொண்டேன். இருந்த போதும் அவை நாமே நமது கண்ணால் படித்து, மனதால் உணரும் அனுபவத்தை தருவதில்லை. அதுவும் தற்போது நடக்கும் டிஜிட்டல் உலகில் எழுத்தாளர்களே அச்சு புத்தகங்களை தாண்டி அடுத்த கட்டத்தை அடைந்ததால் நானும் எனது பங்கிற்கு எனது tabல் விகடன் செயலியை பதிவிறக்கம் செய்து அதிலேயே அந்த ஆனந்த விகடனை படிக்க முயற்சித்தேன். அதுவும் ஓரளவு நன்றாகவே இருந்தது.
இயற்கையுடன்
இப்படியாக எனது வார இறுதி நாட்களை சிறப்பாய் ரசித்து கரைத்த பின் இந்த திங்கட்கிழமை காலையில் கண்விழித்ததும் எதேச்சையாய் ஜன்னலை பார்க்க, மழைக்கு பிறகு வந்த இந்த நாளின் அதிகாலை நேரத்தில் கீழ்வானில் தனது செந்நிற கதிர்களால் ஜொலிக்க வைத்த சூரியன், எதிர்வரும் எனது இந்த வாரமும் சிறப்பாகவே இருக்கும் என்ற செய்தியை சொல்லாமல் சொல்லினான். அந்த சிறப்பான துவக்கத்தை மேலும் சிறப்பாக்கும் வண்ணம் ஒரு சிறிய நடையுடன் (Walking) நானும் உற்சாகமாய் இந்த வாரத்தை துவக்கினேன்.
உங்களின் இந்த வாரமும் சிறப்பாய் துவங்கட்டும்…
Nice. But I don't like vikadan.
ReplyDeletewhat a simple and Suttle thoughts to start our day at work. Nice thoughts
ReplyDeleteஅருமையான பதிவு!👏✨️
ReplyDeleteஅருமையாக இருக்கிறது இந்த வார இறுதி இல்லை துவக்கம்😊👍
ReplyDelete