நிலக்கோடியில் சில தினங்கள் - 1



14.03.2024 வெள்ளிக்கிழமை


கோடை என்பது குதூகலத்தின் மறுபெயர். தேர்வுக்காக பல நாட்கள் கண் விழித்து படித்த மாணவர்களும், தங்கள் குடும்பத்திற்காக உழைத்து ஓடாய் தேய்ந்து கொண்டிருக்கும் பெற்றோர்களும் ஒருங்கிணைந்து குடும்பமாய் தங்களுக்குரிய இளைப்பாறல்களை தேடி பயணப்படும் நேரம் அது. எனவே கோடையும் சுற்றுலாவும் இரட்டை பிறவிகள். 


அங்கு செல்லலாம், இங்கு செல்லலாம் என பற்பல திட்டங்கள் தீட்டினாலும் நாம் எங்கு செல்ல வேண்டும் என்பதை அந்த கோடையே தீர்மானிக்கிறது. அப்படி ஏதேதோ திட்டங்கள் தீட்டி, அவையெல்லாம் கை கூடாத நிலையில் தானாகவே அமைந்து, இந்தக் கோடையின் துவக்கத்தில் அதை வரவேற்க குடும்பத்துடன் நாங்கள் மேற்கொண்ட ஒரு பயணத்தின் அனுபவங்களே இக்கட்டுரை.


கதிரவனே கோடையின் நாயகன். எனவே காலையில் கண் விழிக்கும் அவனை உற்சாகமாய் வரவேற்கவும், அவன் தன் வழக்கப்படி பகல் முழுவதும் சுட்டெரித்த பின் மாலையில் அவனை மகிழ்ச்சியுடன் வழி அனுப்பி வைக்கவும் ஏற்ற இடம் என்பதால் இந்தக் கோடை எங்களுக்காக தேர்ந்தெடுத்த இடமே அந்த நிலக்கோடி நகரம். பொதுவாக அனைத்து ஊர்களிலும் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் இரண்டுமே காணக் கிடைத்தாலும் அவை இரண்டுமே அந்த ஆழியின் மடியில் நிகழ்வது நிலக்கோடியில் மட்டுமே… அதனால்தான் நிலக்கோடியில் உள்ள ஊர்கள் (Cape cities) அனைத்தும் தனித்துவம் வாய்ந்தவை.  


ஆப்பிரிக்காவின் தென்கோடி நகரமான நன்னம்பிக்கை முனை என்று அழைக்கப்படும் கேப்டவுன் (Cape of good hope - Capetown) மற்றும் ஆஸ்திரேலியாவின் வட முனை  நகரமான குயின்ஸ்லாந்து (Cape of Capricorn) ஆகிய புகழ் பெற்ற நிலக்கோடி இடங்களை போலவே ஆசியாவின் அணிகலனாக திகழ்வது நமது குமரிமுனை (Cape of Comorin)  அதிலும் கடக ரேகைக்கும் பூமத்திய ரேகைக்கும் நடுவில் மையம் கொண்டதால்  சூரியனின் கதிர்கள் செங்குத்தாகவும், விரைவாகவும் பூமியை அடைந்து சற்றுக் கூடுதலாக ஜொலிப்பதால் நமது குமரிமுனை எப்போதுமே கூடுதல் சிறப்பு வாய்ந்த ஒரு நகரமாகும்.


அத்தகைய சிறப்புமிக்க குமரிமுனையை காண, இன்று (14.3.2025) அதிகாலை 5:20 மணிக்கு சென்னை - நாகர்கோவில்  வந்தேபாரத் விரைவு வண்டியில் தாம்பரத்தில் இருந்து எங்கள் பயணத்தை துவக்கினோம். ரயிலில் ஏறியதும் தேநீர் மற்றும் பிஸ்கெட்கள் தந்தார்கள். ஒவ்வொரு இருக்கையிலும் செய்தித்தாள்கள் மற்றும் குடிநீர் பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்தன. ஒன்றரை மணி நேரத்தில் விழுப்புரத்தை தாண்டியவுடன் காலை உணவு இருக்கை எங்கள் தேடி வந்தது. மொத்தத்தில் விமானம் போல ஒரு சொகுசான பயணம். 



இந்தியாவின் நிலக்கோடி


என்னதான் இரவு முழுவதும் கண்விழித்து பணி செய்தாலும் பயணம் என்றவுடன் தூக்கம் என்ற‌‌ ஒன்று மறந்தும் பறந்தும் விடுகிறது. அதிலும் குறிப்பாக கடந்த இரண்டு மாதங்களாக எங்கும் செல்லாததால் இயற்கையாகவே உண்டான அதீத ஆர்வத்துடன் துவங்கிய பயணத்தில் கோவில்பட்டி தாண்டியதும் நீல வானில் வெண்மேக பின்னணியில் தெரிந்த காற்றாலைகள் கண்களுக்கு விருந்தாகின. ரயிலில் இருந்த அகலமான கண்ணாடி ஜன்னல்கள் வேடிக்கை பார்க்க வசதியாக இருந்தது. 


நாகர்கோவிலை நெருங்கும்போது வலப்புறம் தெரிந்த மலைகளின் காட்சிகள் மனதை மயக்குவதாக இருந்தது. கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் எனக்கு மிகவும் பிடித்த இந்த தடத்தில் பயணம் செய்தது மனதிற்கு மகிழ்ச்சியை தந்தது. ரயில் இந்தியாவின் தென்கோடியை நோக்கிச் செல்லச் செல்ல, மனமோ அளவில்லா மகிழ்ச்சியால் இமயம் அளவிற்கு சிறகடித்து உயரப் பறந்தது. நாகர்கோவிலுக்கு முன்பு வந்த காவல்கிணறு, ஆரல்வாய்மொழி, தோவாளை போன்ற ஊர்களின் பெயர்கள் தமிழ் மொழியின் பேரழகை பறைசாற்றியது. பிற்பகல் 1:50 மணி அளவில் நாகர்கோவிலை அடைந்தோம்.


சிறிய ஆட்டோக்களை விட பெரிய பேருந்துகளே வேடிக்கை பார்க்கவும் பிறருடன் பேசவும் உகந்தது என்பதால் நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி செல்லும் பேருந்தில் ஏறினோம். அதில உடன் பயணித்த பயணி ஒருவரிடம் அப்பகுதி ஊர்களையும் அதில் பார்க்க வேண்டிய இடங்களையும் பற்றி ஒரு சில தகவல்களை திரட்டினேன். இறுதியாக இறங்கும் முன் நன்றி கூறி, ‘பிரகாஷ்’ என்ற அவரின் பெயரை கேட்டு தெரிந்து கொண்டேன். நான் எங்கு சென்றாலும் ஏதாவது ஒரு வடிவில் உடன் வரும் நண்பன் பிரகாஷை மனதில் நினைத்துக் கொண்டேன்.


சுமார் 25 நிமிட பயணத்திற்கு பிறகு எங்களை அன்புடன் வரவேற்ற கன்னியாகுமரி நுழைவாயில் அருகில் இருந்த விவேகானந்தபுரத்தை அடைந்து, அங்கு ஹோட்டல் ஜெபசக்தியில் ஏற்கனவே முன்பதிவு செய்த அறையில் தஞ்சம் புகுந்து சற்று ஓய்வு எடுக்க ஆரம்பித்தோம். அங்கு சில மணி நேர ஓய்வுக்குப் பிறகு இலக்கை நோக்கியே எங்கள் பயணம் மீண்டும் துவங்கியது. 



சூரிய அஸ்தமன தரிசனம்



தீபகற்ப இந்தியாவின் தென்கோடியில் முதன் முதலாக சூரிய அஸ்தமனத்தை பார்த்து ரசிக்கும் அற்புத வாய்ப்பு இன்று கிடைத்தது. சூரிய அஸ்தமன இடம் (Sunset point) நகரின் மையத்திலிருந்து விலகி சற்று தொலைவில் அமைந்திருந்ததால் ஒரு ஆட்டோ மூலம் அந்த இடத்தை அடைந்தோம். அங்கு ஒருபுறம் அரைவட்ட வடிவில் அமைந்திருந்த கடற்கரையில் இருந்த பாறைகளின் மேல் மோதியும், பாறைகள் இடையில் வழிந்தும் பயணித்த நீரலைகள் வெள்ளி ஜரிகை போல ஜொலித்துக் கொண்டிருந்தன. மறுபுறம் வானில் சிறகு முளைத்தது போல் தோன்றிய மேகங்கள் தங்கள் அழகில் எங்களை கிறங்கடித்தது.


வெள்ளி போன்ற கடல் நீரை, நேரம் செல்ல செல்ல தனது ஆதிக்கத்தால் அங்கமெல்லாம் தங்கம் போர்த்தியது போல கொஞ்சம் கொஞ்சமாய் மஞ்சள் நிறத்திற்கு மாற்றிக் கொண்டிருந்தான் அந்த கதிரவன். இன்னும் சில நிமிடங்களில் தன்னுள் புதையப் போகும் தலைவனை சேரும் தலைவியைப் போல நாணத்துடன் அந்தக் கதிரவனை பார்த்து சிரித்தாள் கடல் மங்கை. அற்புதமான இந்த காட்சியை காண கரை எங்கும் மக்கள் வெள்ளம் பெருகிக் கிடந்தது. இன்னும் சில நொடிகளில் கடலில் விழுந்து மறைவான் என காத்திருந்த தருணத்தில் திடீரென மலைபோல் தோன்றிய மேகத்தின் பின்னால் மறைந்து சென்று வேடிக்கை காட்டினான் குறும்புக்கார கதிரவன். அந்தக் கண்கொள்ளா காட்சியை கண்டபோதே மேற்கொண்ட இந்த பயணத்தின் முழு பயனும் அடைந்தது போல ஒரு உணர்வு மனதில் தோன்றியது.


கதிரவன் மறைந்த பின் சிறிது நேரத்தில் மேற்கு திசையில் வானெங்கும் சூழ்ந்த ஊதா நிற பின்னணியில் அந்த நிலக்கோடி நகரமே வேறொரு பரிமாணத்தை அடைந்தது. அதை ரசித்துக் கொண்டே கடற்கரை ஓரம் ஒரு அழகான நடை பயணம் மேற்கொண்டோம். பௌர்ணமியின் மறுதினமான அன்று கிழக்கு திசையில் பந்து போல் தோன்றிய நிலவு அப்போது எங்களுக்கு வழியும் ஒளியும் காட்டியது. அந்த நிலவொளியின் பின்னணியில் விளக்கொளிகளால் ஜொலித்த திருவள்ளுவர் சிலையையும் புதிய கண்ணாடி பாலத்தையும் தூரத்திலிருந்தே பார்த்து, ரசித்து பின் அறைக்கு திரும்பினோம், அடுத்த நாளை எதிர்நோக்கி…



15.03.2024 சனிக்கிழமை 


சூரிய உதய தரிசனம்


தூண்டில் வளைவு


இன்று அதி அற்புத தினம். அதிகாலையிலேயே அலாரம் வைத்து எழுந்து, ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் நடந்து,  வழியில் உள்ள தேவாலயம் ஒன்றை கடந்தோம். அங்கு கடற்கரையில் சில படகுகள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன. அதை கடந்து சூரிய உதயம் காணும் இடத்தை (Sunrise point) அடைந்தோம். குமரிமுனையில் படகுத்துறை அருகே கடலின் அலைகளை தடுத்து, அதன் வேகத்தை குறைத்து, படகுகளை கரை சேர்க்க அமைக்கப்பட்ட தூண்டில் வளைவே சூரிய உதயம் பார்க்க மிகவும் பொருத்தமான இடம். கடற்கரையில் இருந்து கடலுக்குள் செல்லும் வகையில் மிகப்பெரிய பாறைகளை கொட்டி அமைக்கப்பட்டிருந்த அந்த தூண்டில் வளைவில் வெளிச்சம் இல்லா அதிகாலைப் பொழுதில் சற்று எச்சரிக்கையாக தான் நடக்க வேண்டும். 


யானை வரும் முன்னே மணியோசை வருவதே போல அந்த அதிகாலை நேரத்தில், தான் வரும் முன்பே தனது செங்கதிர்களை அனுப்பி வானில் பல ஓவியங்களை தீட்டிக் கொண்டிருந்தான் கதிரவன். இந்த ரம்மியமான சூழலில் அமைதியாக அமர்ந்து அலைகள் அடங்கும் ஓசையை கேட்டுக் கொண்டிருந்தால் மட்டுமே போதும். வேறு எதுவும் இந்த பிறவிக்கு தேவையில்லை என எண்ணத் தோன்றியது. பொங்கிய கடல் அலைகள் கரையை அடைந்ததும் அமைதியாய் அடங்குவதைப் போல மனதும் மெல்ல மெல்ல சமநிலையை அடைய ஆரம்பித்தது.


இன்னும் சிறிது நேரம் தான். விரைவில் அந்த சூரியன் உதயமாகி விடுவான் என எண்ணிய தருணத்தில் திடீரென கீழ் திசையில் வானெங்கும் கருமேகங்கள் சூழ்ந்து அந்தச் சூழலை முற்றிலும் வேறோன்றாக மாற்றி இயற்கை தன் நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருந்தது. அப்போது திடீரென உடலில் பட்ட ஒரு சில நீர் துளிகள் வானில் இருந்து வந்த மழையின் தூரலா அல்லது கடல் அலைகளில் இருந்து எதிரொலித்த அதன் சாரலா என தெரியவில்லை. அதைப்பற்றி சிந்தித்துக் கொண்டே இருக்கும் போது தான் அந்த அதிசயம் நிகழத் துவங்கியது.


தூக்கம் கலைந்து கண் விழித்ததும் தன்னை பார்த்து சிரிக்கும் மழலையை உடனே பாய்ந்து சென்று தூக்கி தன்னுள் அணைத்துக் கொள்ளும் தாயைப் போல கடலில் இருந்து கண் விழித்த கதிரவனை ஒரு சில நொடிகளிலேயே தன்னுள் ஏந்திக் கொண்டன அந்த கருமேகங்கள். வெறும் அரை நிமிடத்திற்குள்ளாகவே நிகழ்ந்த அந்த அற்புத சூரிய உதயக் காட்சி, ஆயுள் வரை மனதில் நிலைத்திருக்கும் நிரந்தர அனுபவத்தை தந்தது. எங்கள் விழிகள் அனைத்தும் பிறவிப் பயனை அடைந்தன. 


நிலக்கோடியில் எங்கள் முக்கிய இலக்கான சூரிய அஸ்தமனம் மற்றும் சூரிய உதயம் ஆகிய இரண்டையும் கண்ணார கண்டு, மனமார மகிழ்ந்த பின் பிற இலக்குகளை நோக்கி நகர ஆரம்பித்தோம். 


பகவதி அம்மன் கோயில் 


குமரி என்கிற பகவதி அம்மன்

சூரிய உதயம் முடிந்ததும் பகவதி அம்மன் கோவில் செல்லும் வழியில் பரபரப்பான  மீன் மார்க்கெட் பகுதியை கடந்தோம். அங்கு விதவிதமான பல வண்ண மீன்கள் சுட சுட கடலிலிருந்து பிடிக்கப்பட்டு வந்து ஏலம் விடப்பட்டுக் கொண்டிருந்தன. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த அசைவ பிரியர்களால் அந்தப் பகுதியில் கூட்டம் நிரம்பிக் கிடந்தது‌. அடுத்துள்ள விவேகானந்தர் பாறை செல்லும் படத்துறையிலோ காலை 7 மணிக்கே சுற்றுலா பயணிகள் வரிசைகட்டி நிற்க ஆரம்பித்தனர். படகு பயணத்தை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என எண்ணி, காலை உணவை முடித்தபின் அடுத்துள்ள பகவதி அம்மன் என்று அழைக்கப்படும் கன்னியாகுமரி அம்மன் கோயிலை அடைந்தோம். 


நீரையும் நிலத்தையும் பெண்களாய் போற்றி வணங்கும் இந்திய திருநாட்டில் திருமணம் ஆகாத கன்னிப் பருவத்தில் குமரியாக எழுந்தருளியதால் தான் இந்த ஊருக்கு கன்னியாகுமரி என பெயர் கிடைத்தது. ஊருக்கு பெயர் தந்த அம்மனுக்கு தாமரை பூவை சமர்ப்பித்து, உளமாற வழிபட்டு, அவளின் அருள் பெற்று அங்கிருந்து விடைபெற்றோம். 


காந்தி மண்டபம் 


காந்தி மண்டபம்


பகவதி அம்மன் தரிசனம் முடிந்ததும் அந்த குமரிக்கோடியில் அலை கடலுக்கு முன்பாக அமைதியான இடத்தில் அண்ணல் காந்தியடிகளின் நினைவாக அமைக்கப்பட்டு இருந்த மண்டபத்தை அடைந்தோம். அங்கு மகாத்மாவின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் புகைப்படங்களும், அவர் அந்த குமரி முனையை புகழ்ந்து எழுதிய வாக்கியங்களும் இடம் பெற்று இருந்தன. 


இந்த மண்டபத்தில் தான் அவரது அஸ்தி, குமரி கடலில் கரைப்பதற்கு முன்னால் இறுதியாக வைக்கப்பட்டு இருந்தது. மண்டபத்தின் மேல் மாடியில் சென்று அந்த நிலக்கோடி கடலை மீண்டும் ஒரு முறை ரசித்து விட்டு வெளியே வந்தோம்‌. காந்தி மண்டப வளாகத்தில் மகாத்மா காந்தியும் பெருந்தலைவர் காமராஜரும் அலைகடலோரம் சாவகாசமாய் உரையாடிக் கொண்டிருந்தது போல அமைக்கப்பட்ட சிலை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உத்தம தலைவர்கள் இருவரையும் வணங்கி விட்டு அங்கிருந்து விடை பெற்று அருகில் இருந்த முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தை அடைந்தோம்.


தொடரும்...



மேலும் சில புகைப்படங்கள் 


திருநெல்வேலி - நாகர்கோயில் வழித்தடம்


நாகர்கோயில் சந்திப்பு



சூரிய அஸ்தமன தரிசனம்


அரைவட்ட கடல் (சூரிய அஸ்தமன இடம்)


சூரிய அஸ்தமன இடம்


தகதகக்கும் கடல் 


வானில் ஒரு சிறகு முளைத்தது


கதிரவன் விடைபெறும் தருணம்


ஊதா நிற வானம் 



நிலவொளியில் நிலக்கோடி


சூரிய உதய தரிசனம்


அதிகாலையில் அமைதியான பொழுதில்


ஓய்வெடுக்கும் படகுகள்


தூண்டில் வளைவு


தூண்டில் வளைவு பாறைகள்


கடலில் பொங்கும் மேகம்



கண் விழிக்கும் கதிரவன்


நிலக்கோடியில் சூரிய உதயம்



மீன் மார்க்கெட்











காந்தி மண்டபம்



குமரி கடலை பற்றி மகாத்மாவின் வரிகள் 


மகாத்மா அஸ்தி வைக்கப்பட்டிருந்த இடம்


கடலோரத்தில் மகாத்மாவும் பெருந்தலைவரும் 



மேலும் சில புகைப்படங்கள்

நிலக்கோடி பாறைகள்


கடலோர தேவாலயம்


தாமரை மலர்


விவேகானந்தர் பாறையும் அய்யன் சிலையும்



அடுத்த பகுதி

நிலக்கோடியில் சில தினங்கள் - 2







Comments

  1. Your writing make me to read more blocks and pictures are awesome. Superb photos.

    ReplyDelete
  2. Thanks for the virtual tour,really amazing

    ReplyDelete
  3. Baskar, I enjoyed this blog. A few things that I liked. Your comparison of mother hugging the child that has just woken from its sleep. And other the lighter side Suda Suda fish from waters

    ReplyDelete

Post a Comment